ncct rallyரொறன்ரோ: ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிகத் தாமதமின்றி தமிழினப் படுகொலை விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கனடியத் தமிழர்கள் பேரணி நடாத்த உள்ளனர். 

திகதி: நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை

இடம்:

1. மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் (வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்).

2. பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.

3. 360 யுனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும். 

1948 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் உள்ளடக்கி இலங்கை அரசாங்கத்திற்கெதிரான விசாரணை செய்ய கனடிய அரசு வலியுறுத்த வேண்டும் என கனடியத் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

மார்ச் 2021 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானம் 46/1, உள்நாட்டில் விசாரணையை முன்னெடுப்பதில் உள்ள தோல்விகளையும் தொடர்ச்சியாக இலங்கையில் நடாத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களையும் வெளிச்சமிட்டுக் காட்டின. அதே தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் தொடர்ச்சியாக தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து ஒருங்கிணைத்து பாதுகாத்து வைக்க வேண்டியும் வலியுறுத்தியது. அத்தோடு மனித உரிமை ஆணையாளர் சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

வரலாற்று ரீதியாக, கடந்த ஏழு சகாப்தங்களாக தமிழ் தலைவர்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தும் இலங்கை அரசினால் இறுதியில் தவிடுபொடியாக ஆக்கப்பட்டே வந்துள்ளன. இலங்கை அரசாங்கம் தமிழர் தேசத்துக்கு எந்த விதமான ஒரு நிரந்தரத் தீர்வையும் பெற்றுத் தருவார்கள் என்றோ அல்லது உண்மையான நீதியை முன்னெடுப்பார்கள் என்றோ நாங்கள் நம்பவில்லை. எனவே உலகமெங்கும் உள்ள மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் முழுமையான விசாரணையை முன்னெடுத்து உண்மையான நீதியை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம். 

இலங்கைத் தீவில் பல சகாப்தங்களாக தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வந்துள்ளனர். கனடாவில் வெவ்வேறு மட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் பிரதிநிதிகளும் தமிழ் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு பாரிய அளவிலான மனிதப் படுகொலை நடாத்தப்பட்டபோது 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை சான்று பகிர்கிறது. இதன் அடிப்படையில் தன்னிச்சையான சர்வதேச விசாரணை இலங்கையில் நடாத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்தத் தீர்மானத்தின் அடங்கி இருக்கும் எந்த சரத்தில் உள்ள விடயங்களிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

ஈழத்தமிழர்கள் வெகு நீண்ட காலமாக நீதிக்கான காத்திருப்பை மேற்கொண்டுள்ளார்கள். தங்கள் அடிப்படை உரிமையான சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவும், தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் இனப்படுகொலைக்கு நீதியை எதிர்பார்த்தும் வெவ்வேறு வகையிலான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். சர்வதேச அழுத்தம் இலங்கை அரசுக்கு எதிராக சரியான முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தியம் ஒரு நீதி மறுக்கப்பட்ட மோதல்கள் நிறைந்த பகுதியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

மேலதிக விபரங்களுக்கு: 416.830.7703 | மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

- கனடியத் தமிழர் தேசிய அவை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.