“நீ...நீ...கன்னையா இல்லே?” ஆறுமுகம் ஆச்சரியத்துடன் கேட்டான். ‘நீ...நீங்கள் ஆறுமுகம் தானே?” நாக்கு குழறிக் கொண்டே கன்னையா கேட்டார்.

“ஆமாம்... அதென்னடா நீங்கன்னுட்டு? சின்னப் பிள்ளையிலே இருந்து ஃபிரண்ட்சா இருந்துட்டு என் னடா மரியாதை வேண்டிக் கிடக்கு?” ஆறுமுகம் உரி மையுடன் கன்னையாவைக் கடிந்து கொண்டார்.

“என்ன இருந்தாலும் நான் வாட்ச்மேன். நீ... நீங்க... ஃபிளாட் ஓனர். நான் எப்படி...?” கன்னையாவால் பேச்சைத் தொடர முடியவில்லை.

“எது எப்படி இருந்தாலும் நாம ஃபிரட்ஸ்ங்கிறது மாறாதுடா. இனி ஸ்கூல் பீரிட்லே மாதிரி வாடா போடான்னே கூப்பிடு” ஆறுமுகம் பழைய நட்பின் நினைவில் மகிழ்ச்சியுடன் கன்னையாவிற்கு அந்த உரிமையை வழங்கினார். இருந்தாலும் கன்னையா ஆறுமுகத்தை மற்றவர்களுக்கு முன்னால் மரியாதை யாகவும், தனிமையில் நட்புரிமையுடனும் பழகுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

ஆறுமுகமும் அவருடையமனைவி நாகலட்சுமியும் சென்னை, பெருங்குடி பகுதியில் உள்ள ஓர் அடுக்ககத்தை (Flat) வாங்கிக் கொண்டு புதிதாகக் குடிபோன போதுதான், அப்பெரிய அடுக்கக வளாகத்தில் காவல் காரராக இருந்த கன்னையாவைச் சந்தித்தார்கள்.

கன்னையாவும் ஆறுமுகமும் தொடக்கப் பள்ளியில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். ஆறுமுகம் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கல்லூரியில் பட்டப் படிப்பைத் தொடர்ந் தார். கன்னையா தன் குடும்ப நிலைமை காரணமாக ஒரு வருடம் படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. பின் வேறொரு கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்திருந்தார். ஆறுமுகம் பட்ட மேற்படிப்பு முடித்த பின் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வேலை கிடைத்து, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, சென்ற ஆண்டு துணைச் செயலராக இருந்த போது ஓய்வுபெற்றார். அவருடைய ஒரே மகன் முருகன் இன்று பிரபலமாக இருக்கும் கணினி / தகவல் தொழில்நுட்பப் படிப்புப் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறான். அவனுடைய மனைவி மேகலாவும் அதே நிறுவனத்தில் கணினி / தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேலை செய்துகொண்டு இருக்கிறாள்.

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆறுமுகம் ஓய்வு பெற்ற பிறகுதான் மூத்த தலை முறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே விரிசல் தோன்ற ஆரம்பித்தது. அன்றொரு நாள் முருகனும் மேகலாவும் மிகவும் பரபரப்பாக இருந் தார்கள். அவர்களுடைய அலுவலகத்தில் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலையை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டிய அவசரத்தில் இருந்தார்கள். அந்த அவசரத்தில் நாகலட்சுமி சமைத்த உணவு சுவைக்க வில்லை. சரியாகச் சாப்பிடாமல் புறப்பட்ட இருவரை யும் நிறுத்தி ஆறுமுகம் சாப்பிட்டுப் போகச் சொன்னார். ஆனால் மேகலா “சாப்பிடற மாதிரி இருந்தா சாப்பிடலாம்” என்று முனக, இருவரும் புறப்பட்டுவிட்டனர்.

தங்களுடைய அவசர மனநிலையில் சாப்பிடுகிற மாதிரி இல்லை என்று சொன்னார்களோ அல்லது உணவு சுவையாக இல்லை என்பதனால் சாப்பிடுகிற மாதிரி இல்லை என்று சொன்னார்களோ என்பது புரியாமல் ஆறுமுகமும் நாகலட்சுமியும் விழித்துக் கொண்டிருந் தனர். அப்பொழுது மேகலா திரும்பிவந்து மின்கட்ட ணம் கட்டுவதற்கு அன்று தான் கடைசி நாள் என்றும் தவறாமல் கட்டிவிடும்படியும் மாமனாரிடம் கூறினாள். ஆறுமுகமோ தனக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூற மற்ற வேலைகளை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் மின்கட்டணம் கட்டுவதற்குத் தவறிவிட வேண்டாம் என்றும் கூறிவிட்டு, ஆறுமுகத் தின் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டாள்.

இதுபோன்று, ஆறுமுகம் ஏதாவது செய்யலாம் என்று நினைத்து இருக்கும் பொழுது, அவசரமான வேலை என்றோ, முக்கியமான வேலை என்றோ கூறி, அவர் நினைத்தபடி செய்ய முடியாமல் போன நிகழ்வுகள் ஏழெட்டு தடவைகள் நடந்துவிட்டன. தலை மைச் செயலகத்தில் அதிகாரியாக இருந்து மற்றவர் களை விரட்டி விரட்டி வேலை வாங்கிப் பழக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு, மருமகள் மேகலா வேலை வாங்குவது, அதுவும் தான் செய்ய நினைத்த வேலைகளைச் செய்ய முடியாமல் தடுத்தும் வேலை வாங்குவது மனதை உறுத்தியது. எதிர் நடவடிக்கை எடுத்து மருமகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் உறவில் தேவையற்ற விரிசலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தோன்றியது. பின் நன் றாக யோசித்து, தன்னுடைய சேமிப்பு, கொடை யூதியம் முதலியவற்றில் இருந்து பெருங்குடியில் ஒரு அடுக்ககத்தை வாங்கி ஆறுமுகமும் நாகலட்சுமியும் தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். அங்குதான் ஆறுமுகம் தன் நண்பரான கன்னையாவைக் காவல்காரராகச் சந்தித்தார்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் பேசிக்கொள்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. ஆறுமுகம் தன் கல்லூரிப் படிப்பு முடிந்து அரசு வேலையில் சேர்ந்து ஓய்வு பெற்றது வரையான நிகழ்வுகளை ஓரளவு கூறினார். கன்னையா தான் பள்ளிப் படிப்பை முடித்த நேரத்தில் அவருடைய தந்தை இறந்துவிட்டதால் படிப்பைத் தொடர முடியாமல் ஓராண் டிற்குக் குழாய் பணி (Plumbing) வேலை செய்து குடும்பப் பொறுப்பைச் சுமந்துகொண்டு இருந்தார். ஆனால் கன்னையாவின் தாய் தன் மகன் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற மனஉந்துதலில், கூலி வேலைக்குப் போய் மகனைக் கல்லூரியில் சேர்த் தார். கன்னையாவும் படிப்பை முடித்து பட்டம் வாங்கி னார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. தாயார் கூலி வேலை செய்து கஷ்டப்படுவதைக் காணச் சகியாத கன்னையா, வேலை கிடைக்கும் வரை தனக்குத் தெரிந்த குழாய்ப் பணி வேலையைச் செய்யலானார்.

கன்னையாவின் தாயார் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளும்படியும் நல்ல வேலை கிடைத்துவிடும் என் றும் குழாய்ப் பணி வேலைக்குப் போக வேண்டாம் என்றும், இதுபோன்ற நிரந்தரமற்ற வேலை செய்வது தன் தலைமுறையோடு போகட்டும் என்றும் எவ்வள வோ மன்றாடிப் பார்த்தார்.

“நீ கஷ்டப்பட்டுட்டே இருக்கிறதென எத்தனை நாள்தான் பார்த்துட்டே இருக்கச் சொல்றே?” எனத் தன் அம்மாவைக் கன்னையா ஒருபுறம் கண்ணீரு டனும், இன்னொருபுறம் கோபமாகவும் கடிந்து கொண்டான்.

“இல்லேடா! இப்படி வேலைக்குப் போனா, இதிலேயே வாழ்க்கை பூராவும் போயிடும். அப்புறம் உன்னப் படிக்க வச்சு என்னடா புண்ணியம்?” தன் மகன் அதிகாரம் படைத்த உயர்ந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த தாய் குமுறினாள்.

“நான் பெரிய வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்லலியே? அந்த வேல கெடக்கிற வரைக்கும் எனக்குத் தெரிந்த பிளம்பிங் வேலை செஞ்சு உன்னோட பாரத்தைக் கொறைக்கணும்னுதானே சொல்றேன்?” தாயின் மீது பாசம் கொண்ட கன்னையாவும் குமுறினான்.

காலம் ஓடிக் கொண்டிருந்தது. கன்னையா திரு மணம் செய்துகொண்டு ஒரு மகனையும், ஒரு மக ளையும் பெற்றார். இருவரையும் நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். குழாய்ப்பணி வேலை யில் அவருக்கு நன்றாகவே வருமானம் வந்து கொண்டு இருந்தது. ஆனால் அவருக்கு 45 வயது இருந்தபோது, அவர் வேலை செய்துகொண்டிருந்த போது ஒரு கனமான குழாய் அவரது வலது கை மணிக்கட்டில் விழுந்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவம் செய்து குணம் அடைந்தாலும் கையில் பழைய வலு இல்லாமல் போயிற்று. ஆகவே குழாய்ப் பணி வேலையைத் திறம்பட செய்ய முடியாமல் போயிற்று. இந்நிலையில் தான், கன்னையா குழாய்ப் பணி வேலையை விட்டு, வாசல் காவல் (வாட்ச்மேன்) வேலையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கன் னையாவின் பொருளாதார வசதியில் விழுந்த அடியா னது, அவரது குழந்தைகளின் படிப்பிலும் எதிரொலித்தது.

தன் மகன் தான் படித்தும் அதிகாரம் படைத்த வேலைக்குப் போக முடியாததுபோல், பேரக்குழந்தை களாவது படித்துப் பெரிய வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த கன்னையாவின் தாயாருக்கும், மகனுக்கு நேர்ந்த விபத்து பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அந்த அதிர்ச்சி யில் இருந்து மீளாமலேயே காலமாகிவிட்டார்.

கன்னையா, வாசல் காவல் வேலை செய்து கொண்டே தன் குழந்தைகளைப் படிக்க வைக்க முயன் றார். அன்று கல்வி இலவசமாக இருந்த நிலையில் அவருடைய தாயார் கூலி வேலை செய்து கொண்டே பட்டப்படிப்பு படிக்க வைக்க முடிந்தது. இன்று கல்வி வணிகம் ஆகிவிட்ட நிலையில் கன்னையாவால் தன் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை. தன்னு டைய குழாய்ப் பணித்தொழிலையே தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டார். மகளை ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டார்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஆறுமுகம், இவ்வளவு காலம்தான் பார்த்த சுற்றுப்புறத்திற்கும், அதைத்தாண்டி உள்ள எதார்த்த உலகத்திற்கு நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தார்.

“சரி! உனக்கு கவர்மெண்டு வேலை தான் கெடைக்கலே. பிரைவேட்லெ நல்ல வேலையாத் தேடி இருக்கலாமே?” ஆறுமுகம் கன்னையாவிடம் கேட்டார்.

“பிரைவேட்ல நமக்கெல்லாம் நல்ல வேலை எங்கே கெடைக்குது ஆறுமுகம்? நல்ல சம்பளம் உள்ள வேலென்னா அது பார்ப்பானுங்களுக்குத்தான் கெடைக் குது. பிளம்பிங் வேலையிலே கிடைக்கிற பணத்தை விடக் கொறைச்சலான சம்பளத்திலே தான் வேலெ குடுக்கிறேன்னாக.” கன்னையாவின் பதில் ஆறுமுகத் தைக் கொஞ்சம் நெருடச் செய்தது. தனியார் நிறுவனங் களில் பார்ப்பனர்களுக்கு நல்ல வேலை கிடைக்கிறது என்பதும், மற்றவர்களுக்குக் குறைந்த ஊதிய வேலை களே கிடைக்கின்றன என்பதும் பொதுவான உண்மை யாக இருந்தாலும் தனக்கு இதுவரையிலும் உறைக் காமல் போனது பற்றி ஆறுமுகம் ஆச்சரியம் அடைந் தார். ஆறுமுகம் மட்டும் அல்ல; மக்களில் பலருக்கு இந்த உண்மை உறைப்பதே இல்லை.

இந்தத் தருணத்தில் ஆறுமுகத்திற்கு ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது. அவருடைய வீட்டிற்கு எதிரில் குடியிருந்த ஒரு பார்ப்பனரின் மகன் சரியாகப் படிக்க மாட்டான். அவனால் எட்டாவது கூட தேறமுடியவில்லை. அவனுக்கு இருபத்து மூன்று வயதான போது அவன் பள்ளியிறுதி வகுப்பைத் தனியாக எழுதும் விண்ணப் பத்தில் ஒரு அரசு அதிகாரியின் சான்றொப்பம் வேண் டும் என்று அவரிடம் கையெழுத்து பெற வந்திருந் தனர். அப்பையன் எப்படியாவது பள்ளி இறுதி வகுப்பு தேறிவிட்டால், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்களாம். ஆகவே அப் பையனைப் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வை எழுத வைக்கிறார்கள். அப்பொழுது ஆறுமுகம் ஒன்றும் கூறாமல் கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டார். ஆனால் இப்பொழுது கன்னையா தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கூறியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆறுமுகத்திற்கு இன்னொரு விஷயம் நெருடியது.

கல்வி அறிவு இல்லாத, படிப்பு வராத ஒரு பார்ப் பனப் பையன் எப்படியாவது (நன்றாகக் கவனிக்கவும் - எப்படியாவது) பள்ளி இறுதி வகுப்பு தேறிவிட்டால் போதும். அவனுக்கு வேலை உத்தரவாதம் இருக் கிறது. ஆனால் நன்றாகப் படிக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், பள்ளி இறுதி வகுப்பு என்ன.... பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து இருந்தாலும் அவர்கள் திறமை சாலிகளாக இருந்தாலும் வேலை இல்லை. என்ன கொடுமை இது?

இந்தச் சிந்தனையில் சிறிது நேரம் இருந்த ஆறு முகத்தின் மனம், கன்னையாவுடனான உரையாடலுக் குத் திரும்பி வந்தது. “அது சரி! நீ ஏன் உன் பைய னோட இல்லாம இப்படித் தனியா இருக்கே?” என்று ஆறுமுகம் கேட்டதற்கு “வாட்ச்மேன் இன்னா இங்கே வேலை பார்க்குறானோ அங்கே தானே இருக்கணும்? எனக்கு இங்கே வேலை இருக்கு. அதனாலே இங்கே இருக்கேன்” என்று கன்னையா பதில் அளித்தார்.

ஆனால் ஆறுமுகம் விடவில்லை; “அதில்லே கன்னையா! உன் பையன் தான் நல்லா வேலை பார்க்குறான்னு சொன்னியே! அப்ப நீ ஏன் கஷ்டப்படறே? பையனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் ஒத்தாசையா வீட்டிலேயே இருக்கலாமே?” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் கன்னையாவின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. “நான் படிச்சும் பிரயோஜனம் இல்லாமப் போச்சு. என் பையனைப் படிக்க வைக்க முடியலே. என் பேரக் குழந்தைகளாவது நல்லாப் படிக்கணும். அவங்க படிக்கணும்னா பணம் வேணும். நான் பையனுக்குப் பாரமா இருக்கிறதை விட ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சா பேரக் குழந்தைங்க படிப்புச் செலவுக்கு உதவும் இல்லே?” கன்னையா கர கரத்த குரலில் பதிலளித்ததைக் கேட்ட ஆறுமுகத்திற்கு என்னவோ போல் இருந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் படித்து முன்னேறுவதற்கு எவ்வளவு தடங்கல் கள்? தானும் தன்னைச் சுற்றி இருந்த நண்பர்கள் சிலரும் நல்வாய்ப்பாக முன்னேறியதை மட்டும் பார்த்து சமூகம் முன்னேறிவிட்டது என்று நினைத்திருந்தோமே?

ஆனால் எதார்த்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற முடியாதபடியான தடங்கல்கள் பல சமூகத்தில் உள்ள னவே. இந்த இலட்சணத்தில் கல்வியை வணிகமய மாக்கி விட்டார்களே, இதைப் பற்றிய உணர்வு சிறிதும் இல்லாமல் வாழ்க்கை முழுவதையும் வீணடித்துவிட் டோமே என்று தன்னையே நொந்துகொண்டார்.

இவ்வாறு ஆறுமுகம் தன்னைத்தானே நொந்து கொண்டு இருக்கையில் கன்னையா ஒரு வினாவைத் தொடுத்தார் “அது சரி! ஆறுமுகம்! நீ ஏன் உன் பையனை விட்டுத் தனியா வந்தே?” இதைக் கேட்டதும் ஆறுமுகத் தின் முகம் சட்டென்று மாறியது. தான் ஓய்வு பெற்ற பிறகு தன்னுடைய மருமகள் மரியாதையுடன் நடத்து வதில்லை என்றும், சில்லரை வேiலைகளை எல் லாம் உயரதிகாரியாகப் பதவி வகித்த தன்னைச் செய்யச் சொல்வதாகவும், அது பொறாமல் தனிக்குடித்தனம் வந்துவிட்டதாகவும் ஆறுமுகம் கூறியதைக் கேட்டு, கன்னையா மனதிற்குள் சிரித்துக் கொண்டார். அவர் சிரித்துக் கொண்டது வெளிப்படையாகத் தெரியாவிட்டா லும், தன்னுடைய செய்கையைக் கன்னையா அங் கீகரிக்கவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆனால் எதிர்வினா தொடுக்க முடியவில்லை.

இரண்டு மூன்று மாதங்கள் கழித்த பிறகு, பக்கத்து அடுக்ககங்களில் குடி இருந்தவர்களில் சிலர் கன்னையா வையோ அல்லது வேறு காவல்காரர்களையோ மின் கட்டணம் கட்டுவதற்கும், உணவுப் பங்கிட்டு அட்டை யில் சர்க்கரை வாங்கிக் கொண்டு வருவதற்கும் பயன் படுத்திக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்பொழுது அந்த அடுக்கக வளாகத்தில் இருந்த வயதானவர் களைச் சர்வ சாதாரணமாக இதுபோன்ற வேலை களுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.

ஒருமுறை அடுக்ககத் தாழ்வாரத்தில் நின்று கொண்டு இருந்தபோது, உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது. “ஈ.பி. பில் கட்றதுக்கு இன்னைக்குத்தான் கடைசி நாள். இன்னைக்குப் பார்த்து எந்தக்கிழங் கட்டையும் கண்லே படமாட்டேங்கிறான்” என்று இல்லத் தலைவி கூற, அவளுடைய கணவன் “ஏன்? கன்னையா கிட்டே சொல்ல வேண்டியதுதானே?” கேட்டார். “அவன் கிட்டே குடுத்தா இருபத்தி அஞ்சு ரூபா கேப்பான். இந்த கிழங்கட்டைங்க இன்னா “அங்கிள்”ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்” என்று இல்லத் தலைவி கூறிய தைக் கேட்டவுடன் அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட்டார்.

இரு நாள்கள் கழித்துத் தன் நண்பர் கன்னையா விடம் மெதுவாகப் பேச்சைக் கொடுத்தார் ஆறுமுகம். வயதானவர்களைத் தந்திரமாகச் சில்லரை வேலை களைச் செய்ய வைப்பதைப் பற்றித் தான் ஒட்டுக் கேட்டதைச் சொன்னார். தனக்கு இது தெரியும் என்றும், இந்த வளாகத்தில் ஓய்வுபெற்ற திடகாத்திரமான முதியவர்கள் வருவதற்கு முன்னால் தன்னிடம் அந்த வேலைகள் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது என்றும், அதன்மூலம் வருமானம் வந்து கொண்டு இருந்தது என்றும், இப்பொழுது அப்படி இல்லை என்றும் கன்னையா கூறினார். இதைக் கேட்டதும் ஆறுமுகத்திற்கு தன் மருமகளும் இதையே தானே செய்தாள்; அப்பொழுது ஏன் கோபம் வந்தது? என்று எண்ணமிடலானார். இப்படிப்பட்ட நினைவுகளில் அவர் மூழ்கி இருக்கையில் “செல்லிடத்துக் காப்பான் சினங் காப்பான்” என்று கன்னையா முணுமுணுத்தார். ஆறு முகத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன கன்னையா சொல்றே?” என்று ஆறுமுகம் கேட்க, “நீ உன் மரு களைத் தானே நினைச்சே?” என்று கன்னையா கேட்க, “ஆமாம்! உனக்கு எப்படி அது தெரிஞ்சது?” என்று ஆறுமுகம் கேட்டார்.

“இதென்னப்பா பெரிய பிரம்ம ரகசியம்?” இந்த மாதிரி வேலை செய்றதை மட்டமா நெனைச்சுத்தானே தனிக்குடித்தனம் வந்தே? இப்ப யார் யாரோ சம்பந்த மில்லாதவங்க உன்னை அதே வேலையெ வாங்கு றாங்க. இப்படி இருக்கிறப்போ மனசுலே வேறெ என்ன நெனப்பு இருக்க முடியும்.” கன்னையா தன் ஊகத் தைக் கூறினார்.

“நீ சொல்றது சரிதான். ஆனால் அவ கமாண்ட் பண்றா. அதுதான் பிடிக்கலே” என்று ஆறுமுகம் தன் செயலுக்கு வக்காலத்து வாங்குவது போல் கூறினார். கன்னையா மனதிற்குள் சிரித்துக் கொண்டார். “ஆமா! நீ என்கிட்ட பேசற மாதிரி கமாண்டிங்கா இன்னொரு வாட்ச்மேன்கிட்ட பேச முடியுமா?” என்று கேட்டவுடன் முடியாது என்று ஆறுமுகம் தலை அசைத்தார். “அப் படீன்னா நீ என்னை இன்சல்ட் பண்றியா?” என்று கேட்டவுடன், “என்னடா இப்படிப் பேசறே?” என்று ஆறுமுகம் அதிர்ந்து கேட்டார். உடனே கன்னையா வும் “ஆறுமுகம் நீ உன் மகனுக்குத் தந்தையாவும், மருமகளுக்கு மாமனாராவும் இருந்து யோசிச்சா எங்கேயும் எந்தத் தப்பும் நடக்கலேன்னு தெரியும். நீ பெரிய அதிகாரியா நெனச்சுப் பார்த்ததுலேதான் எல்லாப் பிரச்சனையும் வந்திருக்கு” என்று சிக்கலைத் தீர்த்து விளக்கியவுடன் ஆறுமுகத்திற்கு உண்மை புரிந்தது மீண்டும் மகன் வீட்டிற்கே குடிபோகத் தீர்மானித்து விட்டார். இந்த வீட்டை என்ன செய்வது என்ற யோசனை வந்த போது, அதைப் பற்றி மகனிடம் ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறினார்.

வீட்டில் பெரியவர் இல்லாத போது எழுந்த சில பிரச்சனைகளால், பெரியவர்கள் இருந்தால் நல்லது என்ற யோசனைக்கு வந்திருந்த முருகனும் மேகலா வும் இனி கட்டுப்பாடுடன் நடப்பதாகக் கூறி ஆறுமுகம் நாகலட்சுமி வருகையை விரும்பி ஏற்றார்கள்.

பெருங்குடி அடுக்ககத்தைப் பற்றிப் பேச்சு வந்த போது, அதை வாடகைக்கு விட்டுவிடலாம் என்றும் கன்னையாவின் பேரப்பிள்ளைகள் படிப்பு முடியும் வரை கன்னையாவே அந்த வாடகைப் பணத்தை வைத்துக் கொள்ளட்டும் என்றும் ஆறுமுகம் யோசனை கூற, சிறிது சலசலப்பான விவாதங்களுக்குப் பின் அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். ஒரு ஏழை நண்ப னுக்கு உதவி செய்கிறோம் என்ற மனநிறைவில் அவர்கள் இருந்தனர். ஆனால் இதுபோன்ற தனிப்பட்ட உதவிகள் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும், கல்வி அடிப்படை உரிமையாகவும், இலவச மாகவும் ஆனால்தான் சமூகம் முன்னேற முடியும் என்றும் அதற்கான விழிப்புணர்வும், பொதுக்கருத்தும், போராட்டமும் தேவை என்று உணரவில்லை.

Pin It