1801ஆம் ஆண்டிற்குமுன், நிலவியல் அடிப்படையிலோ அல்லது அரசியல் அடிப்படையிலோ ‘இந்தியா’ என்று அழைக்கப்பட்ட நாடு ஒன்று இருந்ததில்லை.

கி.மு.323இல் அலெக்சாண்டர் இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் படையெடுத்த காலம் முதல், கி.பி.1756இல், நாசிக்கிற்கு வடக்கே இருந்த முகலாயப் பேரரசு சிதைவுற்ற காலம் வரை யில் - மற்றும் கிபி. 1310இல் தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவுற்றது வரையில் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் பல இருந்தன.

கி.பி.1640 முதல் 1801க்குள்ளாக, இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நிலவியல் மற்றும் அரசியல் அடிப் படையில் ‘இந்தியா’வை ஒருநாடு என உருவாக்கியது.

1801க்கும் 1861க்கும் இடைப்பட்டக் காலத்தில், இந்திய நாட்டிற்கான வருவாய்த் துறை, நீதித்துறை, முப்படைகளைக் கொண்ட இராணுவம் முதலானவை பிரித்தானியப் பேரரசின் கீழ் கட்டியமைக்கப்பட்டன.

முகலாயர் காலத்தில் ஆட்சி மொழியாக இருந்த பாரசீகம், பிற பகுதிகளில் இருந்த தாய்மொழிகள் ஆகிய அனைத்தும் 1835ஆம் ஆண்டில் அகற்றப்பட்டு, ஆங்கிலம் ஆட்சிமொழியாக அரியணை ஏற்றப்பட்டது. இந்தியர் அனைவருக்கும் 6ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரையில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி யாக்கப்பட்டது. ஆங்கில வழியில் அரைகுறையாகக் கல்வி பெற்றவர்கள் ஒரு தனிப் பிரிவினர்; எழுத்தறி வற்ற உழவர்கள், வேளாண் தொழிலாளர்கள், நெச வாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் முதலான உழைக் கும் மக்கள் கீழான தனிப்பிரிவினர் என்ற பாகுபாடு ஏற்பட்டது.

கல்வி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானதாக இருந்தது. 1900 வரையில், மேலசாதியினரும், மேட்டுக் குடியினரும் மட்டுமே தொடக்கக் கல்வியையும், இடை நிலைக் கல்வியையும் பெறும் வாய்ப்பு இருந்தது. 1947 ஆகசுட்டில் வெள்ளையர் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, இந்தியர்களில் 16 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். இந்த 16 பேர் களில், 10 பேர் பார்ப்பன, சத்திரிய மற்றும் உயர்சாதி யினர்களாக இருந்தனர். இந்து மேல்சாதியினர், முசுலீம் களில் உயர் பிரிவினரான சையத், ஷேக் மற்றும் பார்சிகள் சேர்த்து, 1947இல் இந்தியாவில் மொத்தம் இருந்த 33 கோடி மக்களில் இவர்கள் 25 விழுக்காடாக இருந்தனர். மீதி 75 விழுக்காடாக இருந்த இந்து, இஸ்லாம், சீக்கியம், கிறித்துவம் ஆகிய மதங்களைச் சார்ந்த இடைப்பட்ட - கீழ்நிலைச் சாதிகளைச் சேர்ந்த வர்களில் 2 முதல் 5 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர்.

பெரும்பான்மை மக்களுக்குத் திட்டமிட்டுக் கல்வி தரக்கூடாது என்றிருந்த மனுநீதிக் கொள்கை, 1950க்குப் பின், சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களாலும் அப்படியே பின்பற்றப்பட்டது. சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகும், முன்பு ஆண்ட ஆங்கிலேயரிட மிருந்த ஏகாதிபத்திய ஆளும்வர்க்க மனநிலையையும் சிந்தனைப் போக்கையும், இந்திய ஆட்சியாளர்கள் அப்படியே வரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பொது மக்களிடமிருந்து தனித்த - உயர்பிரிவினராகத் தங் களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

இந்திய அரசமைப்புச் சட்டமானது, நிருவாகம், நீதித் துறை, கல்வி, படை ஆகிய அதிகாரங்களை நடுவண் அரசு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கு அளித்துள்ளது.

தேவநாகரி வரிவடிவம் கொண்ட இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இன்றுவரை யில், ஆங்கிலம் துணை ஆட்சிமொழியாக நீடிக்கிறது. ஆனால் விரைவில் ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழி என்ற நிலை ஏற்படும். அந்நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகள், தொடர்வண்டி, வானூர்தி, அஞ்சல், தொலைவரி, வரு மானவரி, உற்பத்தி வரி, வங்கி, காப்பீடு முதலான நடுவண் அரசுத் துறைகளின் அன்றாட அலுவல்கள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே நடைபெறும்.

தமிழன், கன்னடியன், மலையாளி, தெலுங்கன், பஞ்சாபி, வங்காளி, ஒரியன், அசாமியன், காஷ்மீரியன் முதலான இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத எவராயினும், நடுவண் அரசில், எழுத்தர் பணி முதல், உயர் அதிகாரி வரையிலான பதவிகளில் அமருவோர் இந்தி மட்டுமே ஒரே ஆட்சிமொழி என்கிற காரணத் தால், இந்தியில் மட்டுமே அலுவலகப் பணிகளைச் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, அராபி, பங்கள, காஷ்மீரி போன்ற மற்ற தேசிய மொழிகளுக்கும், இந்தியாவில் சில பகுதிகளில் பரவலாகப் பேசப்படும் உருதுமொழிக்கும் நெடிய - புகழ்வாய்ந்த வரலாற்றுப் பெருமை உண்டு. ஆயினும் இம்மொழிகள் பேசப்படும் மாநிலங்களிலும், பகுதிகளிலும் உள்ள - மேலே குறிப்பிட்டுள்ள நடுவண் அரசின் எந்தவொரு அலுவலகத்திலும் இம்மொழிகளில் எதுவும் அலுவல் மொழியாக இருக்காது.

ஒரு மாநிலத்தில் உள்ள எல்லா நடுவண் அரசு அலுவலகங்களிலும் அம்மாநில மக்களின் தாய்மொழிக்கு அலுவல் மொழியாக இருக்க உரிமை இல்லை என்றால், அம்மக்களின் தாய்மொழி உரிமை பறிக்கப்படுகிறது என்பதுதானே உண்மை.

இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கலாக இது இருந்து வருகிறது. இந்தி பேசும் பகுதிகளில் பிறக்கும் குடிமகனுக்கு மட்டுமே இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள எல்லா நடுவண் அரசின் அலுவலகங்களிலும் வேலைகளில் சேருவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 343 முதல் 351 வரை உள்ள விதிகளில், நடுவண் அரசின் எந்தவொரு அலுவலகத்திலும் மற்றும் எல்லா அலுவலகங்களிலும் இந்தியை மட்டுமே ஆட்சி மொழி யாக்குவதற்கான முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, இந்தி பேசாத இந்தியக் குடிமகனின் தாய்மொழி உரிமையையும், தனித்த அடையாளத்தையும் பறிப்ப தாகும். அவன் முழுமையான குடியுரிமை பெறாமல் தடுக்கின்ற - சனநாயகத்திற்கு எதிரான இந்நிலையை முதலில் ஒழிக்க வேண்டும்.

அடுத்ததாக, நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளிலும் உள்ள முதல்நிலை முதல் நான்காம் நிலை வரை உள்ள பணிகளுக்கு ஆண்களும், பெண்களும் எவ்வாறு தெரிவு செய்யப் படுகிறார்கள் என்பதைக் காண்போம்.

இந்திய ஆட்சிப் பணி (I.A.S.), இந்தியக் காவல் பணி (I.P.S.), இந்திய அயலுறவுப் பணி (I.F.S.), இந்திய வனத்துறைப் பணி (I.F.S.), இந்திய இரயில்வே பணி (I.R.S.), இந்தியக் கல்விப் பணி (I.E.S.), இந்தியப் பொருளாதாரப் பணி (I.E.S.), இந்திய வருவாய்த் துறைப் பணி (I.R.S.) ஆகிய பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் முழுவதும் நடுவண் அரசிடம் உள்ளது. இதற்காக நடுவண் அரசின் முகவராக, நடுவண் அரசு பணித் தேர்வாணையம் (U.P.S.C.)  சிறப்பு அதிகாரம் வாய்ந்ததாகச் செயல்படுகிறது.

இரும்பு மனங்கொண்ட மனிதர் என்று கூறப்பட்ட வல்லபாய் பட்டேல் 1947 அக்டோபரில் அப்போதிருந்த மாகாண முதலமைச்சர்களின் (பிரதமர்கள்) கூட்டத் தைத் தில்லியில் கூட்டினார். அக்கூட்டத்தில், அதுவரை நடப்பில் இருந்த இந்திய சிவில் சர்வீஸ் (I.C.S.) பதவி களை ஒழித்துவிட்டு, இந்திய ஆட்சிப்பணி (I.A.S.) என்கிற முறையை ஏற்படுத்துவதாக அறிவித்தார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார், மாகாணங்களின் மாவட்ட ஆட்சியர், அரசுச் செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் மாகாண அரசுகளுக்கே இருக்க வேண்டும் என்றுகூறி, இந்திய ஆட்சிப் பணி என்கிற ஏற்பாட்டை அக்கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார். “மற்ற மாகாணங்களின் முதல மைச்சர்கள் இந்திய ஆட்சிப்பணி ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் மட்டும் எதிர்ப்பது கூடாது” என்று அதிகாரமாக அதட்டி ஓமந்தூர் இராமசாமியை அடக்கினார் பட்டேல்.

எனவே, தற்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (I.A.S.) என்ற தகுதி பெற்றவர்கள் மாநிலங்களை ஆட்சி செய்கின்றனர். ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணி அதி காரியும் ‘மாவட்ட ஆளுநராகச்’ செயல்படுகின்றனர். “ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் என்பவர் அம்மாவட்டத் தின் ஆளுநராவார்” என்று நிலை ஆணைக்குழு (B.S.O.) அறிவித்துள்ளது.

சனநாயகத்திற்கும், கூட்டாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரான அமைப்பாக - வெள்ளை யானை போன்ற நடுவண் ஆட்சி பணித் தேர்வாணையத்திடம் இந்தியா வில் உள்ள 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் இருப்பது அநீதியானதாகும்.

தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கருநாடகம், ஒடிசா, மகாராட்டிரா, பீகார், உ.பி., மேற்குவங்கம் முதலான மாநிலங்களுக்கு, தங்கள் மாநிலங்களுக்கான மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகளைத் தங்கள் மாநிலத் தேர்வாணையம் மூலமே தெரிவு செய்துகொள்ளும் அதிகாரம் இருக்க வேண்டும்.

நடுவண் அரசுப்பணித் தேர்வாணையம் ஒழிக்கப் பட நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் எல்லைக்குட்பட்ட எல்லா ஆட்சிப் பணிகளுக்கும் ஆட்களைத் தேர்வு செய்தற்கான முற்ற திகாரம் இருக்க வேண்டும். ஒரு சுதந்தர நாட்டில், அரச மைப்பு அலகு ஒவ்வொன்றுக்கும், எல்லா நிலைகளிலும் முழுமையான இறையாண்மை கொண்ட அதிகாரம் இருக்க வேண்டும்.

ஒரு மொழி பேசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். அது கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகச் செயல்படும்.

கூட்டாட்சி அரசிடம் - அது நடுவண் அரசு என்ற பெயராலோ அல்லது வேறு எந்தப் பெயராலோ அழைக் கப்பட்டாலும், இந்திய அளவில் பாதுகாப்பு, நாணயம், அச்சடிப்பு, தொலைத்தொடர்பு ஆகியவற்றை மட்டுமே நிருவாகம் செய்யும் அதிகாரம் தான் இருக்க வேண்டும்.

வேளாண்மை, கல்வி, மக்கள் நலவாழ்வு, தொழில் கள், எரிஆற்றல், காடுகள், இரயில்வே, அஞ்சல், வரு மானவரி, உற்பத்தி வரி முதலான எல்லாத் துறை களின்-எஞ்சிய அதிகாரங்கள் உட்பட, எல்லா அதி காரங்களும் மாநிலங்களுக்கே முற்றதிகாரத்துடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்தின் குடிமகனும் முதலில் அம் மாநிலத்தின் குடிமகனாவார். இரண்டாவதாக இந்தியக் கூட்டாட்சியின் குடிமகனாக இருக்க உரிமை உடையவர் ஆவார்.

தனியான அரசமைப்புக் கொண்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தற்காப்புப் படையை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறாக, முழுமையான தன்னாட்சி அதிகாரங்கள் பெற்ற-மொழி அடிப்படையில் அமைந்த இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் - சற்றொப்ப 30 மாநிலங்கள் தாமாக விரும்பி மேலே குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு, நாணயம் அச்சடிப்பு, தொலைத்தொடர்பு ஆகிய மூன்று அதிகாரங்களை மட்டுமே நடுவண் கூட்டாட்சி அரசுக்கு அளிக்கும்.

தற்போதுள்ள இந்தியாவை - உயர் அதிகாரங்கள் நடுவண் அரசில் குவிக்கப்பட்டுள்ள இந்தியாவை, மேலே குறிப்பிட்டள்ள தன்மையில் உண்மையான கூட்டாட்சி உடைய ஒரு நாடாக மாற்றி அமைத்திட நாம் அயராது பாடுபட வேண்டும்.

நம்முடைய அரசியல் கொள்கையைத் தெளிவாகப் புரிந்து கொள்வோம்; அதை உயர்த்திப் பிடிப்போம்.

நம் வாழ்நாள் காலத்திற்குள்ளாகவே, இந்தியாவை, சோசலிச மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசுகளைக் கொண்ட உண்மையான ஒரு கூட்டாட்சியாக மாற்றி அமைப்பதையே உயிரான கொள்கையாகக் கொண்டு செயல்படுவோம். (பெரியார் ஊழி (PERIYAR ERA) 2011 திசம்பர் இதழில் தோழர் வே. ஆனைமுத்து எழுதிய ஆசிரிய உரையின் தமிழாக்கம். தமிழாக்கம் : க.முகிலன்)

Pin It