பணப் புழக்கம்

ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட்டு, அதை மக்களிடையே கொண்டு செல்ல ஏதுவாக, அதன் தேசிய வங்கிகள் மூலம் பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி விதிகளின்படி பொருளாதாரத்தில் இறக்கி விடுகிறது. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல், பொருள்கள் மற்றும் சேவைகளைப் பரிமாற்றம் செய்து கொள்வது, அரசு முலமாக மானியங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக வங்கிகளின் பணம் மக்களிடையே பரிவர்த்தனைகளாகப் புழங்குகிறது.

//எங்க மாமா கிளம்பிட்டீங்க?

இந்தியன் பேங்க் வரைக்கும் மருமகனே.

என்ன ஓய்வூதியப் பணமா மாமா?

இல்ல மருமகனே என்னுடைய பேத்தி திருமணத்துக்காக என்னுடைய வைப்பு நிதியை எடுக்கலாம்னு போறேன். நல்லது மாமா. பத்திரமா போயிட்டு வாங்க. //

reserve bankமேற்சொன்ன உரையாடலில் தொழிலாளர்களின் வாழ்நாள் ஊதியத்தில் ஒரு பகுதி, அதாவது ஒவ்வொரு தொழிலாளியின் அடிப்படை ஊதியத்தில் 12% விழுக்காட்டை அரசு சம்மந்தப்பட்ட தொழிலாளரின் கணக்கில் வைப்பு நிதியாக பிடித்துக் கொள்கிறது. அதாவது ஒருவருக்கு 50,000 ருபாய் அடிப்படை ஊதியம் என்றால், அதில் 12% அதாவது 6000 ருபாய் மற்றும் நிறுவனம் கொடுக்கும் இன்னொரு 6000 என 12000 ரூபாய் அவரது கணக்கில் வைக்கப்படும். அதற்கு வங்கிகள் வட்டியாக ஒரு தொகையை ஆண்டுதோறும் செலுத்தும். இந்தியாவில் சுமார் 2 கோடி வைப்பு நிதிக் கணக்குகள் உள்ளன. அவைகளின் மொத்தப் பணமும் வங்கிகளிலேயே சுழல்கின்றன.

எப்படி என்றால்...

சுமார் 1 இலட்சம் ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒருவர் அதை முழுவதுமாக செலவு செய்து விடுவதில்லை. மாறாக தனது குடும்பத் தேவைகள் போக, மீதமுள்ள பணத்தை வங்கிகளிலேயே சேமிக்கிறார். அதற்கு ஒரு வட்டியையும் பெறுகிறார். இப்படி பெறப்படும் பணத்தை வங்கிகள் தொழில் தொடங்குபவர்களுக்கு நீண்ட நாள் மூலதனமாக வட்டிக்குப் பணம் கொடுக்கின்றன. தொழில் முனைவோர்களும் அவர்களுடைய உற்பத்திப் பொருள்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தில் வட்டியையும், அசலையும் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துகின்றனர். வங்கிகள் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அதிக வட்டியிலிருந்து ஒரு குறைந்த வட்டியை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருப்பவர்களுக்கு செலுத்துகின்றன. ஆக இதுவும் ஒரு கந்து வட்டி வியாபாரம் எனலாம்.

பண இருப்பு விகிதம்

ரிசர்வ் வங்கி, தேசிய வங்கிகளுக்கு பணம் கொடுக்கிறது என்பது சரி. ரிசர்வ் வங்கிக்கு பணம் எப்படி வருகிறது என்கிற கேள்வி வருகிறதல்லவா? ரிசர்வ் வங்கி தாமாகவே பணத்தை அச்சிட்டு, மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கிறது. எந்த அடிப்படையில் மற்றும் எவ்வளவு பணம் இந்த வங்கி அச்சிடும் என்கிற உங்களின் கேள்வி புரிகிறது. நமது நாடு சுதந்திரம் பெற்ற பின்பு, 1956 ஆம் ஆண்டு முதல் குறைந்த பட்ச இருப்பு (Minimum Reserve System) அமைப்பு முறையைப் பின்பற்றுகிறது. பொருளாதாரத்தில் அதிகரிக்கும் பரிவர்த்தனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பண விநியோகத்தை விரிவுபடுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். அதாவது குறைந்த பட்ச இருப்பு நம்பிக்கையின் அடையாளமாக இந்த நாட்டின் பணத்தேவைகள் அச்சிடப்பட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மூலமாக வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி சுமார் 200 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் அந்நியச் செலாவணி இருப்பை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இந்த 200 கோடியில் 115 கோடி தங்க நாணயம் அல்லது இன்ன பிற தங்கப் பொருள்களாகவும், மீதமுள்ள 85 கோடியை அந்நியச் செலாவணி இருப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று பொருள்.

அப்படியென்றால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாமா? ஆம் அடித்துக் கொள்ளலாம். அதற்கு இந்த ரிசர்வ் வங்கிக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. பிறகென்ன பணத்தை அடித்து பொருளாதாரச் சிக்கலை தீர்க்கலாமே என்கிற உங்களின் உடனடிக் கேள்வி எனக்கு கேட்காமலில்லை. ஒரு நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு இணையாக மட்டுமே பணப்புழக்கம்  பயணிக்க வேண்டும் என்பது உலகப் பொருளாதார நியதி.  ஆகவே அதிகப் பணம், பொருளின் மதிப்பைக் குறைந்து விடுவதோடு (தொடர் ஒன்றைப் படிக்க), அதிகப் பணம் குறைந்த பொருளை துரத்தவும் ஆரம்பிக்கும். இதனால் பணவீக்கம் ஏற்படுவதோடு கட்டுப்பாடற்ற பணப் புழக்கம் அதன் மதிப்பை இழந்துவிடும். புரியும்படி சொல்ல வேண்டுமானால் கட்டுப்பாடற்ற பணம் குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விளையாடுவதற்குக் கூட பயன்படாது. அதாவது காகிதக் கப்பல் செய்யத் தேவையான காகிதத்தின் மதிப்பைக் காட்டிலும் பணம் தன்னுடைய மதிப்பை இழந்து விட்டிருக்கும். ஆகையால், எந்த ஒரு நாடும் அளவிற்கு அதிகமாக பணத்தை அச்சடித்து தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளாது என்க!

ஒரு முறை பணத்தை விநியோகித்து விட்டால் போதுமா என்றால் போதாது. பணத் தேவை பல வழிகளில் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒருவருக்கு மாத ஊதியம் அதிகரிப்பதால் அவரின் வாங்கும் திறன் அதிகரிக்கிறது. அதனால் சந்தையில் பொருள்களின் அளவும் கூடுகிறது. ஆகவே இங்கே தேவைக்கும், அளிப்பிற்கும் இடையேயான பரிவர்த்தனை செயல்களை சந்திக்க பணம் தேவைப்படுகிறது.  மக்கள் தொகைப் பெருக்கம், வருவாய் பெருக்கம், அதனால் விளையும் மொத்த உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம் என இன்றியமையாத காரணிகளால் புதிய பணம் தேவைப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி விகிதம் மற்றும் இறக்குமதி விகிதம் முதலானவற்றைக் கணக்கில் கொண்டு புதிய பணத் தேவையை தீர்மானிக்கிறது.

  சரி இப்பொழுது ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்க்கலாம். இந்தியன் வங்கி 1000 ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் சுமார் 10% பண இருப்பு விகித முறையில் கடனாக வாங்குவதாகக் கொள்வோம். அப்படியெனில் 1000 ரூபாயில் 10% பணத்தை ரிசர்வ் வங்கியில் இருப்புப் பணமாகக் கொடுத்து, மீதமுள்ள 900 ரூபாயை இந்தியன் வங்கி பெற்றுக் கொள்ளும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியிடம் ரூபாய் 100 திரும்ப வந்து விட்டது.

இந்தப் பணத்தை ஒரு கார் தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதாகவும், டாடா நிறுவனம் இந்தப் பணத்தை மீண்டும் கட்டுமானப் பணிகளுக்காக எல் & டி நிறுவனத்திடம் கொடுப்பதாகவும் கொண்டால்; எல் & டி நிறுவனம் தாம் இந்தியன் வங்கியில் வாங்கிய கடனுக்கு இணையான வைப்புத் தொகையாக இந்தப் பணத்தை கொடுப்பதாகக் கொண்டால்...... மீண்டும் 900 பணத்தில் 10% பண இருப்பு ரிசர்வ் வங்கிக்கு சென்று விடுவதோடு மீதம் 810 ரூபாய் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் தற்போது ரிசர்வ் வங்கியிடம் 90 ரூபாய் மீண்டும் வந்துவிட்டதைப் பாருங்கள்.

இந்தியன் வங்கி மீண்டும் இந்தப் பணத்தை தொலைக்காட்சி தயாரிக்கும் ஒனிடா நிறுவனத்திற்கு கடனாகக் கொடுப்பதாகவும், கடன் பெறும் ஒனிடா நிறுவனம் விடியோகான் நிறுவனத்திடம் தொலைக்காட்சி "கேதோட் ரே டியூப்" வாங்கியதற்கான கடனுக்கான வைப்புத் தொகையாக கொடுப்பதாகவும் கொண்டால்; மீண்டும் 810 பணத்தில் 10% பண இருப்பு ரிசர்வ் வங்கிக்குச் சென்றுவிடுவதோடு மீதம் 729 ருபாய் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியிடம் 81 ருபாய் மீண்டும் வந்துவிட்டதைப் பாருங்கள்.

ஒருபுறம் கடன் தொகை குறைந்து கொண்டே வருவதையும், மறுபுறம் சீராக ரிசர்வ் வங்கியில் பண இருப்பு விகிதம் உயர்வதையும் கவனியுங்கள். இப்படியே பணப்புழக்கம் தொடர்ந்து நடைபெற்று, இறுதியில் ஒரு புள்ளியில் நின்று விடுவதோடு வங்கியிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் மீண்டும் வங்கிகளுக்கே திரும்ப வந்து விடுகிறது. இதை எளிமையாகப் புரிந்துகொள்ள ஏதுவாக அட்டவணையைப் பாருங்கள்.

"லோன்" எனும் நெடுவரிசையில் முதலில் 1000 என்றிருந்தது. பிறகு 900, 810, 729, 656, 590, 282...... என்று குறைவதையும்; "டெபாசிட்" எனும் நெடுவரிசையில் முதலில் 100 என்றிருந்தது பிறகு 90, 81, 73, 66, 59, 28...... என்று சிறிது சிறிதாக கூடிக் கொண்டே வருவதையும் கவனியுங்கள். இவ்வாறு கூடிக் கொண்டே வந்து பிறகு ஒரு புள்ளியில் "லோன் " தொகை இல்லாமலும் வங்கியின் இருப்புத் தொகை மீண்டும் வங்கிக்கே திரும்ப வந்துவிட்டதையும் பாருங்கள். இதுதான் பணஇருப்பு விகிதம் என்க.

வாங்கிய கடனை நிறுவனங்கள் ஒழுங்காக திருப்பிச் செலுத்தினால் இந்த வரவு சாத்தியம் என்பதோடு பொருளாதாரமும் நிமிர்ந்து கம்பீரமாக நிற்கும். ஆனால் வங்கிகள் திருப்பிச் செலுத்தவில்லையானால் என்னவாகும் பாருங்கள்........ வங்கியின் இருப்புத்தொகை குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும் என்பதோடு, திரும்பப் பெற முடியாத கடன் தொகையை வங்கிகள் செயல்படாத சொத்து (Non-Performing Asset) என்று அறிவித்து அந்த நட்டத்தையும் வங்கியுடனேயே இணைத்துவிடும். இதனால் நாடே நட்டத்தில் தள்ளாடும் என்பது உறுதி!

LOAN

% CRR

DEPOSIT

 

வங்கிக் கடன்  (ரூ)

பண இருப்பு விகிதம் (ரூ)

 ரிசர்வ் வங்கியில் வைப்புத் தொகையாக (ரூ)

 
 
 

1000

10%

100

 

900

10%

90

 

810

10%

81

 

729

10%

73

 

656

10%

66

 

590

10%

59

 

282

10%

28

 

254

10%

25

 

229

10%

23

 

206

10%

21

 

185

10%

19

 

167

10%

17

 

150

10%

15

 

135

10%

14

 

122

10%

12

 

109

10%

11

 

98

10%

10

 

20

10%

2

 

18

10%

2

 

16

10%

2

 

15

10%

1

 

0

 

1000

 

பணம் திரும்ப வங்கியில் வந்து சேர்ந்து விட்டது.

 
 
 

மீண்டும் பேசுவோம் இந்தியப் பொருளாதாரம்

- பார்த்திபன்.ப

Pin It