ஆதிக்கச் சாதியினர்

ஊர்வலத்திற்கு

அரசு மரியாதை!

தாழ்த்தப்பட்ட மக்களின்

சாலை மறியலில்

தடியடிப் பிரயோகம்!

அன்று பாடினான் பாரதி

காக்கை குருவி எங்கள் சாதி என்று

உயிரினங்களை அவன் நேசித்ததால்!

இன்று பாடுகிறான் ஒரு பஞ்சமன்

காக்கை குருவி எங்கள் சாதி என்றே!

தம்மின மக்களை அரசு எந்திரம்

காக்கை குருவியாய்ச்

சுட்டுத் தள்ளுவதால்!

கூலி உயர்வு கேட்ட மக்களைக்

குடிசைக்குள் தள்ளித்

தீ வைத்துப் பொசுக்கியது, கீழ் வெண்மணி!

சாதி வெறி தலைக்கேறி

குடியிருப்புகளைச் சூறையாடிக்

குடிதண்ணீரில் நஞ்சைக்கலந்த

கொடுமையில் கொடியங்குளம்!

ஈவு இரக்கமற்ற

மனித உயிர்க் கொலைதான்

மாஞ்சோலை

மனிதனின் வாயில்

மலம் திணித்த வக்கிரம்

மிருக வெறியை மிஞ்சியது

திண்ணியம்

ஒடுக்கப்பட்ட மக்களின்

உரிமைப் போராட்டத்தில்

அடித்தே கொன்ற அரசுவன்முறை

பரமக்குடி.

இதுதான்

மக்களாட்சித் தத்துவத்தின்

நிகழ்வுகள்!

மனுநீதி (அ) தர்மத்தின்

விளைவுகள்!

வாழ்க சனநாயகம்!!

- பெ.அய்யனார், திண்டுக்கல்

Pin It