உற்பத்திக்கான உழைப்புச் செயலின் ஊடாக மொழி தோன்றியது; வளர்ந்தது என்பது மார்க்சியக் கோட்பாடு. பேச்சு மொழி தோன்றி, பல ஆயிரமாண்டு களுக்குப்பிறகே அம்மொழி எழுத்து வடிவம் பெற்றது. இன்றும் எழுத்து வரி வடிவம் பெறாமல், பேச்சு மொழியாகவே எண்ணற்ற மொழிகள் உள்ளன.

ரிக் வேதப் பாடல்கள் இயற்றப்பட்ட போது சமற் கிருத மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை. மிகவும் பிற்காலத்தில்தான் சமற்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது. ‘சமற்கிருதம்’ என்ற சொல்லுக்கு, ‘செய்யப்பட்ட மொழி’ என்று பொருள்.

ஒரு மொழிக்கு எழுத்துவடிவம் உருவாக்கப்பட்ட பிறகே, அதில் இலக்கியங்கள் - நூல்கள் படைக்கப் பட்டன. ஒரு சமுதாயம், தனக்கு முற்பட்ட காலத்திலும், தன் காலத்திலும் உருவான அறிவை - அனுபவத்தை - தத்துவத்தை வருங்காலத் தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்கும் கருவிகளாக நூல்கள் விளங்கின - விளங்குகின்றன.

கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் உலகம் முழு வதிலும் நிலவுடைமைச் சமூகம் கால் கொண்ட பிறகு, சமூகத்தில் மதக்கட்டுப்பாடுகள் மேலோங்கின. மத ஆதிக்கம் வளர்ந்தது. அரசின் துணையுடன் மதம் ஒரு ஒடுக்குமுறைக் கருவியாயிற்று. அந்நிலையில் புரோகித வர்க்கம் அறிவும், கல்வியும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஆக்கிக்கொண்டது. சமூகத்தில் அறிவு வளர்ச் சியை - ஆராய்ச்சி மனப்பான்மையை முடக்கியது. அய்ரோப்பாவில் கிறித்தவ குருமார்களும், இந்தியாவில் பார்ப்பனர்களும் பெரும் அதிகார மய்யங்களாக வளர்ந்தனர்.

அலெக்சாண்டர் (கி.மு.356-323) இந்தியா வரை படையெடுத்துத் திரும்பியபின், அலெக்சாண்டரின் படைத் தளபதியாக இருந்த சிலியோமீனிஸ் என்பவர், இப்போது துருக்கியின் தலைநகரமாய் உள்ள இஸ்தான்புல் என்ற இடத்தில், அலெக்சாண்டரின் வெற்றிப் புகழை நிலைநாட்டும் நோக்குடன் அலெக்சாண்டிரியா என்ற நகரை அமைத்தார். அலெக்சாண்டிரியா நகரில் மாபெரும் நூலகம் அமைக்கப்பட்டது. அய்ந்து இலட்சம் நூல்கள் இடம்பெற்றிருந்தன. எபிகூரஸ், டெமாக்ரிடஸ், ஹிராக்லிடஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் முதலான கிரேக்க அறிஞர்களின் நூல்கள் இந்நூலகத் தில் இடம்பெற்றிருந்தன. ஆர்க்கிமிடிஸ் போன்ற புகழ் பெற்ற கிரேக்க அறிஞர்கள் இதில் படித்தனர். உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் நூலகம் இதுவே யாகும்.

ரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியை ஆட்சி செய்த அரசன் கான்ஸ்ட்டன்டைன் என்பவர் கி.பி.4ஆம் நூற்றாண்டில் கிறித்துவ சமயத்தைத் தழுவினார். அதனால் அலெக்சாண்டிரியா என்ற அந்நகரின் பெயர் கான்ஸ்ட்டான்டின் நோபில் என்று மாறியது. கிறித்துவ சமயக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட நூல்கள் அந்த நூலகத்தில் இருப்பதாகக் கூறி, சிலர் நூலகத்தைத் தாக்கினர். கி.பி. 529இல் ஜஸ்ட்டி னியன் ஆட்சிக்காலத்தில் அம்மாபெரும் நூலகம் மூடப் பட்டது. முகமது நபியின் தளபதியாக இருந்த அமீர் கி.பி.660இல் கான்ஸ்ட்டான்டின் நோபில் நகரத்தின் மீது படையெடுத்தார். குரானுக்கு எதிரான நூல்களைக் கொண்டிருப்பதாகக் கூறி அமீர் அம்மாபெரும் நூலகத் தைத் தகர்த்தார்.

அலெக்சாண்டிரியா நூலகத்திலிருந்து கையால் எழுதி, படி எடுக்கப்பட்ட நூல்களும், அந்நூலகம் மூடப் பட்ட பின், அங்கிருந்து களவாடி எடுத்துச் செல்லப்பட்ட கிரேக்க அறிஞர்களின் நூல்களும் 15ஆம் நூற்றாண் டின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை யாக விளங்கின என்பது மனங்கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

பதப்படுத்தப்பட்ட ஓலைகள், தோல், துணி முதலா னவற்றின் மேல் எழுதும் முறையே நீண்டகாலம் இருந்தது. எனவே அரசர்களிடமும், மதங்களின் மடங் களிலும், சில பெரிய செல்வர்களிடமும் மட்டுமே நூல்கள் இருக்கும் நிலை இருந்தது. காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் மை கொண்டு கையால் நூல்களை எழுதும் நிலையே இருந்தது.

1450களில் செருமானியரான ஜொகானஸ் கட்டன் பர்க் என்பவர் முதலாவது அச்சு எந்திரத்தை உருவாக் கினார். இலத்தீன் மொழியில் பைபிள் முதலாவதாக அச்சிடப்பட்டது. அதன்பின் அய்ரோப்பாவில் அந்தந்த நாடுகளின் தாய்மொழியில் பைபிள் அச்சிடப்பட்டது. இலத்தீன் மொழியில் மட்டுமே பைபிள் தேவாலயங் களில் படிக்கப்பட்ட நிலை மாறி, அவரவர் தாய்மொழி யில் படிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்தியாவி லோ பார்ப்பன ஆதிக்கத்தின் காரணமாக இன்றளவும் இந்துக்களின் ‘தெய்வபாஷையாக’ - வழிபாட்டு மொழி யாக - வாழ்வியல் சடங்குகளின் மொழியாக சமற்கிரு தமே இருந்து கொண்டிருக்கிறது.

நூல்களும் - நூலகங்களும் தனிமனிதர் வாழ்வில், சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை - புரட்சிகளை உண்டாக்கியிருக்கின்றன. பிரான்சில் வால்டர், ரூசோவின் எழுத்துகள் பிரெஞ்சுப் புரட்சிக்கு உந்துவிசையாக விளங்கின. ஆபிரகாம்லிங்கன், இளமையில், தான் படித்த நூல்கள் எவ்வாறு தன் வாழ்க்கையைச் செதுக் கின என்று எழுதியிருக்கிறார். ஆப்பிரகாம் லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவரான பின், வெள்ளை மாளிகையில் தன் படுக்கை அறையில் நூலகத்தை ஏற்படுத்தினார்.

இலண்டனில் அருங்காட்சியகத்தில் உள்ள மாபெரும் நூலகத்தில் காரல் மார்க்சு பல ஆண்டுகள் அயராது படித்ததால்தான், மூலதனம் எனும் மாபெரும் நூலை உருவாக்க முடிந்தது. மேதை அம்பேத்கரும் இதே நூலகத்தில், காலையில் நூலகம் திறந்தது முதல் மூடும் வரையில் பல நாள்கள் படித்தார். பட்டினி கிடந்து பணத்தை மிச்சப்படுத்தி நூல்களை வாங்கிப் படித்தார். நூல்கள் வாங்கிய வகையில் ஏற்பட்ட பெருங்கடனை அடைக்க மும்பையில் ‘சார்மினார்’ என்ற தன் வீட்டை யே விற்றார். அதேபோன்று பெரிய நூலகம் அமைக்க வேண்டும் என்பதற்காகவே ‘இராஜகிரஹ’ என்ற பெரிய வீட்டைக் கட்டினார். இந்தியத் தலைவர்களிலேயே நூல்கள் வாங்கிய வகையிலான கடனை அடைக்க வீட்டை விற்றவர் - நூலகம் அமைப்பதற்காகவே வீட்டைக் கட்டியவர் மேதை அம்பேத்கர் ஒருவரேயாவார். மாபெரும் படிப்பாளியாக - நுண்ணிய அறிவாற்றல் கொண்டவராக - திண்ணிய நெஞ்சுரம் உடையவராக அம்பேத்கர் திகழ்ந்ததால்தான், இந்துமத இதிகாச, புராணங்களை, சாத்திரங்களை நார்நாராகக் கிழித் தெரிந்தார். திலகரும் காந்தியாரும் போற்றிய பகவத் கீதை யைப் ‘பைத்தியக்காரனின் உளறல்’ என அறைந்தார்.

தமிழ்நாட்டில் சொந்தமாக நூலகத்தை உருவாக்கி யவர்களில் முதன்மையானவர் மறைமலையடிகளே யாவார். பெரியாரின் பாசறையில் முதலாவது பெரிய பட்டம் பெற்றவராக - படிப்பாளியாக உருவானவர் சி.என். அண்ணாதுரை. இவர் தொடர்ந்து நிறைய நூல்களைப் படித்துக் கொண்டே இருப்பார். அதனால் இவர் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டார். அண்ணா வாங்கிய நூல்கள் ஒரு நூலகமாக அமைக் கப்பட்டதாகத் தெரியவில்லை. தி.மு.க. 1967இல் ஆட்சிக்கு வரும்வரை, ஊர்தோறும் சிறிய படிப்பகங்களை ஏற்படுத்தி, இளைஞர்களிடையே படிக்கும் ஆர்வத் தையும், முற்போக்குச் சிந்தனையையும் வளர்த்தது. 

அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி தி.மு.க. அரசு, கோட்டூர்புரத்தில், எட்டு ஏக்கர் பரப்பில், எட்டு மாடி கொண்ட, நவீன வசதிகள் கொண்ட, முழுவதும் குளிர்சாதனங்கள் அமைக்கப்பட்ட, அழகிய பெரிய நூலகத்தை அமைத்தது. பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதற்கான, எழிலார்ந்த, இனிய, அமைதியான சூழல் இங்குள்ளது. 180 கோடி உருவா செலவில் கட்டப்பட்டஇந்நூலகத்தில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. 2010 செப்டம்பர் மாதம் இந்நூல கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அருகில், அண்ணா பல்கலைக்கழகம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் போன்ற பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. வேலை நாள்களில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1200 பேர் இந்நூலகத்திற்கு வருகின்ற னர். விடுமுறை நாள்களில் 2000 பேர் வருகின்றனர். இந்நூலகத்தைப் பார்ப்பதற்காக ஒரு நாளில் குறைந்தது மூன்று பள்ளிகளின் மாணவர்கள் கல்விச் சுற்றுலா வாக வருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள கையெழுத் துப்படி நூல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வசதி இல்லை என்பதால், அண்ணா நூற்றாண்டு நூலகத் திற்கு அவற்றை மாற்றிட உள்ளனர். எல்லாத் துறை களிலும் அண்மைக்காலம் வரை வெளிவந்துள்ள நூல்கள் இடம்பெற்றுள்ளன. கணினியில் உலகம் முழுவதும் வெளிவரும் ஆய்வு இதழ்களைப் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து கொண்டுவரும் நூலைப் படிப்பதற்கென்று தனிப்பிரிவு உள்ளது. போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் இப்பிரிவில் இடம்பிடிக்க நூலகம் திறப்பதற்கு முன்பே வந்து காத்திருக்கின்றனர். ஒரு முறை இந்நூலகத் திற்குள் அமர்ந்து படிப்பவரின் உள்ளத்தில், தொடர்ந்து இங்குவந்து படிக்க வேண்டும் என்ற பேராவல் இயல் பாக எழுகிறது என்று பலரும் கூறுகின்றனர்.

கோட்டூர்புரத்தில், இவ்வாறு எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூல கத்தை, நுங்கம்பாக்கத்தில், நெரிசல் மிகுந்த - அமைதி யான சூழல் இல்லாத பள்ளிக் கல்வி இயக்குநரக வளாகத்திற்கு மாற்றிவிட்டு, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை, உயர் சிறப்புக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றி அமைக்கப் போவதாக முதலமைச்சர் செயலலிதா 2.11.11 அன்று அறிவித்தார்.

எழுத்தாளர்களும், சமூகநல ஆர்வலர்களும், அறிஞர்களும், மாணவர் அமைப்புகளும் கோட்டூர்புரத் தில் தற்போதுள்ள இடத்திலேயே அண்ணா நூற் றாண்டு நூலகம் நீடிக்க வேண்டும்; தமிழக அரசு தன் முடிவைக் கைவிட வேண்டும் என்று கோருகின்றனர். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அ.தி.மு.க. அரசு இம் முடிவை எடுத்திருப்பதைப் பலரும் கண்டித்துள்ளனர்.

முதலமைச்சர் செயலலிதா, கோட்டூர்புரத்தில் அமைந் துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றிட எடுத்துள்ள முடிவைக் கைவிட வேண்டும். எழும்பூரில் சீரழிந்துவரும் குழந்தைகள் மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இலவசமாகத் தம் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளைப் பெறும் வகையில் நவீன வசதிகள் அனைத்தும் கொண்டதான - புதியதாக குழந்தைகள் மருத்துவமனையை வேறோர் இடத்தில் உருவாக்க வேண்டும்.

தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் குடியேறிய பிறகு, பெரியவர் முதல் சிறுவர் வரை, படிக்கும் பழக்கம் வேகமாகக் குறைந்து வருகிறது. எனவே எல்லா ஊர்களிலும் உள்ள நூலகங்களை, மக்கள் விரும்பி நாடி வரும் தன்மையில் தரம் உயர்த்த வேண்டும்.

எல்லோரும் சென்னைக்குச் சென்று படிக்க முடியாது. எனவே ஒவ்வொரு மாவட்டத் தலைநகரி லும், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற நூலகத்தை அமைக்க வேண்டும். அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தைச் சமைத்திட இது இன்றியமையாத் தேவையாகும்.

Pin It