மய்ய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கினால் பொருள்களின் விலை ஏற்றம் என்பது இங்கு நாளும் நடக்கும் நிகழ்வாகிவிட்டது. இப்போது இதன் பாதிப்பை இன்னும் கடுமையாக்கும் வகையில் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள பேருந்துக் கட்டண உயர்வும், ஆவின் பால், மின் கட்டணம் மற்ற பொருள்களின் விலை உயர்வும் அமைகின்றன்.

நாட்டின் பொது விலைக்குறியீடு (Common Price Index - CPI) இரண்டு இலக்க எல்லையைத் தாண்டி 11%, 12% என்ற அளவில் உயர்ந்து கொண்டே போகிறது. இதிலும் மோசமாக, உணவுப் பொருள்களின் விலை குறியீடு அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. அதன் விளைவாகப் பொருள்களின் சரியான மதிப்பு விலை களைவிடப் பெரும் அளவு அதிக விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும். இந்தப் பணவீக்கம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது.

ஆனால் அதேநேரத்தில் வேளாண் தொழில், நெசவுத் தொழில் போன்ற தொழில் சார்ந்த ஏழை, நடுத்தர அமைப்புச்சாரா உழைப்பாளி மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அடிப்படைப் பணி களில் உள்ள அமைப்புச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் பெரிதும் குறைந்த நிலையிலேயே உள்ளது. அது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் 20%, 30% அளவில் மட்டும் உயர்ந்து வருகின்றது. இவர்கள், நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.26, ரூ.32 செலவு செய்ய இயலுபவர்களாக மய்ய அரசாலேயே அறிவிக் கப்பட்டுள்ள 70-80% மக்களுள் அடங்குவர்.

இவ்வாறான பணவீக்கம் மற்றும் குறைந்த வரு வாயால் பாதிக்கப்பட்டுள்ள வெகுமக்களின் வாங்கும் திறன் வலுவற்று வருகிறது. அது எந்த அளவுக்குச் சென்றுள்ளதென்றால், மக்கள் கையில் பணத்தை எடுத்துச் சென்று பைகளில் பொருட்களை வாங்கி வந்த நிலை, இப்போது முற்றிலும் தலைகீழாகி, பை களில் பணத்தை எடுத்துச் சென்று கைகளில் மட்டுமே பொருள்களை வாங்கி வருகின்ற கீழான, கேடான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். இதனால் வெகுமக் களாகிய நடுத்தர ஏழை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே எண்ண முடியாத அளவுக்கு இன்னலுற்று வருகின்றார்கள்.

இந்தக் கேடான நிலை ஏற்படுவதைத் தவிர்த்துப் பொருள்களின் விலையை, வெகுமக்களின் வாங்கும் திறன் எல்லைக்குள் ஓரளவுக்கேனும் வைக்க வேண்டும். மற்றும் தனியாரின் கொள்ளை இலாபத்தைக் கட்டுக் குள் வைத்து, மக்கள் சுரண்டப்படாத வகையில் பொருள் களின் விலையை முன்காட்டாக மட்டுக்குள் வைத்து நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத் துடன் உருவாக்கப்பட்டவைதான் அரசின் பொதுத் துறை நிறுவனங்கள். ஆனால் இங்கு நடப்பது என்ன!

இதில் வியப்பென்னவென்றால் மய்ய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் இன்றிய மையாத் தேவைக்கான பொருள்களின் விலைகளை அவ்வப்போது உயர்த்துவதையே வேலையாகச் கொண் டிருப்பதால், முதலாளியத் தனியாரின் கொள்ளைக்குத் தூபம் போடுவதாக உள்ளது. சென்ற 2010-11ஆம் ஆண்டில் மட்டும் பத்துத் தடவைகள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக டீசல் விலையேற் றம் மக்களின் அடிப்படைத் தேவைக்கான பொருள் களின் விலையேற்றத்திற்கு வித்திடுகிறது. அதாவது உணவுப் பொருள் முதற்கொண்டு மூலப்பொருள்கள் மற்றும் அனைத்துப் பொருள்களும் உற்பத்தியாகும் இடங்களிலிருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொருள் மாற்றம் செய்யப்பெற்று மறுபடியும் மக்களின் கைகளில் வந்தடைவதற்குப் பயன்படுத்தப்படும், சுமையுந்துகள், சரக்குத் தொடர் வண்டிகளின் இயக்கங்களுக்கு அடிப்படையான தேவை டீசல்.

2011 மே திங்களில் செயலலிதா தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. அரசு ஏழை, எளிய விவ சாய மக்களுக்கு ஆடு, மாடு வழங்குதல் என்ற திட்டத் தைச் செயல்படுத்தி வருகின்றது. இதனுடன் மாண வர்களுக்கு மடிக்கணினிப் பொறி, குடும்பங்களுக்கு மாவு அரைக்கும் பொறி, மிக்சிப் பொறி, மின் விசி றிகள் வழங்கல் என்று பல்லாயிரங்கோடி உருபா கணக்கில் செலவாகும் திட்டங்களையும் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இவைகளினால் நிலைத்த தொடர் பயன்கள் விளையுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குறிப்பாக 2000, 3000 கோடிச் செல வில் வழங்கப்படும் கணிப்பொறிகளை முறையாக இயக்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் போதுமான பயிற்சியும் தெளிவும் ஏற்படுத்தப்படாத நிலையில் இதற்கான செலவினம் முறையானதுதானா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் இவைகள் வெறும் மிரட்சியூட்டும் காட்சிப்பொருள்களாக மாறிடும் அவலம் ஏற்படலாம். இவைகள் யாவும் பயனாளிகளுக்கு எவ்வகை யிலும் வருவாய் ஈட்டித் தரத்தக்கவையாக அமையாது.

இவ்வரசு அமைந்த ஆறு திங்கள் கடந்த நிலையில், ஒரே நாளில் (19.11.2011), ஒரே நேரத்தில் தொலைக் காட்சி வழியாக முதலமைச்சர் செயலலிதா பேருந்துக் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு உடனடி யாக நடைமுறைக்கு வரும் என்று தடாலடியாக அறிவித்துவிட்டார். அப்போதே மின்சாரக் கட்டண உயர்வையும் அறிவித்துவிட்டு, இன்னும் சில நாட் களில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை அதிகாரக் குழு இசைவளித்தவுடன் அது நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துவிட்டார். இந்தக் கட்டண விகித உயர்வு களும் 50%, 100%, 150% என்ற அளவில் அதிகமான செலவை ஏற்படுத்தும் என்று தெளிவாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இதனால் வெகுமக்களாகிய ஏழை, எளிய, உழைப்பாளி மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வரசின் இச்செயல்பாடு கொடுப்பதுபோல் வலக்கையால் கொடுத்துவிட்டு-உடனே இடக்கையால் பறித்துக்கொண்டது போலாகி விட்டதுமின்றி மேலும் அன்றாடம் தொடர் இன்னல்களை விளைவித்து வரு கின்றது.

பேருந்துக் கட்டண உயர்வு : நடைமுறைக்கு வந்துள்ள இப்பேருந்துக் கட்டண உயர்வு, அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் ஏறக்குறைய 2 கோடி மக்களைக்-குறிப்பாக ஏழை, பாழைகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகும். மேலும் பிற வகைகளில் தொடர் விலை ஏற்றத்தை ஏற்படுத்தும். இக்கட்டண உயர்வுக்குக் காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இதுவரை மொத்தமாக ரூ.6150 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது எனச் சொல்கிறார், முதலமைச்சர். இது- வன்றி தொடர் வண்டிக் கட்டணம் உயர்த்தப்படவுள் ளது என்ற நிலையில் அதற்கு முன்பே பேருந்துக் கட்டண உயர்வு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் ஒராண்டுக்கு இழப்பு ரூ.2200 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை முற்றிலுமாக ஈடுகட்ட இப்பேருந்துக் கட்டண உயர்வால் ரூ.2100 கோடி அதிக வருவாய் பெறப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இக்கட்டண உயர்வு விழுக்காட்டைச் சற்று உற்று நோக்கினால், இந்த அரசு உச்சச் சொகுசுப் பேருந்து களில் பயணிப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவில் வெறும் 35% அளவுக்குத்தான் அதிகக் கட்டணம் விதித்துள்ளது. ஆனால் பொதுப் (சாதாரண) பேருந்துக் கட்டணம் 50%, 58%, 75% என்று பெரும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகையில் பொதுப் பேருந்து களில் பயணிக்கும் வெகுமக்கள் மீது பெரும் சுமை யைச் சுமத்திவிட்டு, வசதி படைத்தவர்கள் பயணிக்கும் உச்சச் சொகுசுப் பேருந்துக் கட்டணம் குறைந்த அளவே உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொன்னது போன்று, அரசுக்குக் கிட்டும் ரூ.2100 கோடி அதிக வருவாய் போன்ற அளவில் தனியார்பேருந்து நிறுவனங்களும் வெகுமக்களைச் சுரண்ட வழிவகுத்துவிட்டது இவ்வரசு.

பால் விலை உயர்வு : பொதுவாக, மக்களின்-குறிப் பாகக் குழந்தைகளின் மிகவும் இன்றியமையாத அன் றாடத் தேவையான பால் விலையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. லிட்ட ருக்கு ரூ.17.75 என்றிருந்த ஆவின் பால் விலையை ரூ.6.25 அளவுக்கு உயர்த்தி ரூ.24 என்றாக்கிவிட்டது. இவ்வாறு அதிகமாக உயர்த்திய தொகையிலிருந்து ரூ.2 மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்குக் கொள்முதல் விலையில் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு லிட்டர் ஆவின் பால் விற்பனையில் ரூ.4.25 மிகை வருவாயாக அரசுக்குக் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் ஒன்றேகால் கோடி லிட்டர் பால் உற்பத்தியில் அரசு 22 இலக்க லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. பாலிலி ருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருள் களின் விலையும் பலவாறு உயர்த்தப்பட்டுள்ளது. இவ் வகையில் அரசின் பால் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கும். தமிழ்நாட்டின் பால் உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு கொள்முதல் செய்து விற்பனை செய்துவரும் அரசுக்கே ரூ.500 கோடிக்கும் மேல் அதிக வருவாய் கிட்டும் போது, எஞ்சிய பால் உற்பத்தியில் பகுதி சொந்தப் பயன்பாட் டுக்குப் போக மீதியைத் தனியார் கையாளும் வகை யில் ரூ.2000 கோடிக்கும் மேலாக இலாபம் ஈட்டுவர். ஆவின் பால் வளையத்திற்குள் வரும் மக்களை விடுத்து அதற்கு வெளியில் உள்ள பெரும் பகுதி வெகுமக்கள் தனியார் நிறுவனங்களின் பாலையும், பால் பொருள்க ளையும் வாங்கும் வகையில் விலையேற்றத்தால் வதைபடுவர். இந்த விலை ஏற்றத்தைத் தமிழக அரசே முன்னின்று செயல்படுத்திவிட்டது.

மின்சாரக் கட்டண உயர்வு : மின்சாரக் கட்டண உயர்வுப் பட்டியலை தமிழ்நாடு மின்வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 24-11-11 அன்று அளித்துள்ளது. பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டு, 90 நாள்களுக்குப் பின், கட்டண உயர்வு முறையாக அறிவிக்கப்படும். தற்போது மின்நுகர்வோர்கள் ஐந்து தொகுப்பாகப் பிரிக்கப்பட்டுக் குறைந்த அளவில் மின் சாரம் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் யூனிட் டுக்கு 75 காசு, 85 காசு, ரூ.1.85, ரூ.2.20 என்ற அளவிலும்; அதிக அளவிலான 600 யூனிட்டுக்குமேல் பயன்படுத்துவோருக்கு மட்டும் யூனிட்டுக்கு ரூ.4.00 என்றிருந்தது. ஆனால் இப்போது தமிழக அரசு முதல் மூன்று தொகுப்பில் இருந்த ஏழை, எளிய மக்களை ஒரே தொகுப்பின் கீழ்க் கொண்டுவந்துள்ளது. மின் கட்டணத்தை ஒரே அளவாக யூனிட்டுக்கு ரூ.2 என உயர்த்த, அவ்வகையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டது. இதனால் முதல் இரண்டு தொகுப்பிலிருந்த மின்நுகர்வோர் பயன்படுத்தும் கட்டணம் யூனிட்டுக்கு முறையே 267%, 235% அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 150% அதிகம் செலுத்த வேண்டும். தற்போது ரூ.100 மின்கட்டணம் செலுத்துவோர் ரூ.250 செலுத்த வேண்டும். ஆனால் 600 யூனிட்டுக்கு மேல் நுகர்வோரை ஒரே பிரிவாகக் கொண்டிருந்ததை இப்போது 201-500 யூனிட் வரை பயன்படுத்துவோரை ஒரு பிரிவாகவும், 500 யூனிட் அளவுக்குமேல் பயன்படுத்துவோரை ஒரே பிரிவு என்றும் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மின்கட்டணம் 50% அளவிலேதான் அதிகமாகக் கட்டவேண்டும். தற்போது இருக்கும் தொகுப்பில் 101-200 யூனிட் பயன்படுத்து வோர் மட்டும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தின்படி 33% மட்டும் அதிகம் செலுத்த வேண்டும். பெரும் அளவில் மின்சாரம் பயன்படுத்துவோர் ஒப்பீடு அளவில் பொருளாதார அளவில் உயர்மட்டத்தில் இருப்பவர் களாக இருக்க நேரிடும். ஆனால் கட்டண உயர்வால் அவர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டிய மின்கட்ட ணம் மிகக் குறைந்த அளவே. ஆனால் இவ்வரசு வெறும் 100 யூனிட் வரை பயன்படுத்துவோராக உள்ள ஏழை மக்களைக் கடுமையான பாதிப்புக்கு உள் ளாக்கி 150% அளவுக்கு அதிகம் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களாக்கியுள்ளது. இதில் வீட்டுக்கு ஒரு விளக்கு, ஏழை விவசாயிகளின் விவசாயப் பயன்பாட் டுக்கான மின்சாரத்திற்கு இப்பொழுதுள்ளது போல் இலவய மின்சாரம் தொடர்ந்து தரப்படுமென்றுள்ளது தான் சற்று ஆறுதல் அளிப்பதாகும். இம்மின்சாரக் கட்டண உயர்வு, மின்சாரம் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விலையெல்லாம் இதைக் காரணம் காட்டி, தாறுமாறாக உயர்த்தப்பட்டு மக்கள் மேலும் பல வழிகளில் பொருளாதார இன்னலுக்குள் ளாவர்.

அண்மையில் பெட்ரோல் விலையேற்றம் செய்யப் பட்ட போது, மன்மோகன்சிங்கின் மய்ய அரசை மக்கள் விரோத அரசு என்று கடுமையாகச் சாடிய செயலலிதா, தன் பங்கிற்கு இந்த விலையேற்றத்தைக் கொண்டு வந்து ஏழை பாழைகளின் வயிற்றில் அடித்துவிட்டார்.

அதாவது இந்தச் செயலலிதா அரசு மக்கள் மீது தொடுத்துள்ள இம் மும்முனைத் தாக்குதல் - மக்களின் மிகவும் இன்றியமையாத் தேவைகளான பால், பயணம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு விலை, கட்டண உயர்வு செய்தது வெகுமக்களைப் பெரிதும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் இவ்வரசு பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கங்களைப் பொய்த்து போகச் செய்து அதற்கு நேர் மாறாக நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியதுடன் தனியார் நிறுவனங்கள் பேருந்துக் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்துவதற்கு ஊக்குவித்து விட்டது. இந்தப் பேருந்து, பால் வழங்கல், மின்சாரம் ஆகிய மூன்றும், மக்கள் சேவைத் துறைகளின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவது என்ற பெயரில் ஒரே நேரத்தில் கட்டண உயர்வை மேற்கொண்டது மிகவும் கொடூரமான செயலாகும்.

மாறாகக் குறைந்தது ஆறு திங்கள் இடைவெளியில் இந்த ஒவ்வொரு சேவைத் துறையின் நிதி வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டிருந்தால் வெகுமக்களுக்கு ஒரே நேரத்தில் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டிருக்காது. மேலும் ஒரே நேரத்தில் 50%, 100%, 150% என்ற அளவில் கட்டண விலையை உயர்த்தியிராமல், சற்றுக் கால இடைவெளி அனுமதித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியிருந்தால் வெகுமக்கள் கடுந்துன்பத்திற்கு ஆளாகியிருக்கமாட்டார்கள்.

இன்னும் மிகவும் முதன்மையாக, ஒவ்வொரு சேவைத் துறையின் வருவாய் இழப்பை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு அந்த இழப்பை ஈடுகட்டும் வகை யில் விலை உயர்வு மேற்கொள்வதை விடுத்து பதிவுத் துறை, போக்குவரத்து வாகனப் பதிவுத் துறை, வீட்டு வரி, சொத்துவரி போன்றவற்றின் வாயிலாய் அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு இவ்வரசு முயன்றிருக்க வேண்டும். இதனால் அவரவர் வசதிக்கேற்றவாறு அரசின் வருவாயை உயர்த்துவதற்குப் பங்களித்திருப்பார்கள். இச்சேவைத் துறைகளின் இழப்பை மேற்சொன்ன வரு வாயின் மூலம் ஈடுகட்டிக் குறைத்துக் கொண்டிருந்தால் இந்தக் கட்டண விலை ஏற்றத்தைத் தவிர்த்திருக்கலாம். ஏழை, எளிய மக்களை துன்புறுத்தியிருக்க வேண்டாம்.

இந்த மய்ய, மாநில அரசுகளின் முதலாளியக் கொள்ளைப் போக்கை வெறும் குறையாக எடுத்துக் கூறிகொண்டு இருப்பது வெகுமக்களுக்கு எந்தப் பயனும் விளையாது. மாறாக வெகுமக்களான பாட்டாளி மக்களை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அரசுக்கு எதிரான ஒருமித்த ஒன்றுபட்ட வலுவான தொடர் போராட்டங்களைச் செய்து இந்த மக்கள் விரோத மய்ய, மாநில அரசுகளைச் சற்றேனும் பணிய வைக்க வேண்டும். அதன்மூலம் அரசின் சேவைத் துறைகளின் பொய்யான போலி யான வருவாய் இழப்பு என்ற பெயரில் அவைகளின் சேவைகளுக்கு விலை கூறி விலை உயர்வு செய்து வெகு மக்களைத் துன்பப்படுத்துவதிலிருந்து காப்பாற்ற லாம்.

இக்கருத்தைச் செயல்படுத்தும் வகையில் மா.பெ.பொ.க. அவ்வம் மாவட்டங்களிலுள்ள முற்போக்கு அமைப்பு களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட ஆட்சி யர்கள் அலுவலகங்கள் முன்பாக (கடலூர்-காட்டு மன்னார்கோவில்) இந்த மூன்று கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி 21-11-11 இல், ஆர்ப்பாட்டக் கூட்டங்கள் நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த மும் முனை விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி களம் கண்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

எனவே பொதுச் சிக்கலை எதிர்த்து ஒத்த திட்டம் வகுத்து அனைத்து முற்போக்கு அமைப்புகளுடன் செயல்படுவதுடன் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் இவ்விலையேற்றத் திற்கெதிரான அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் மா.பெ.பொ.க. ஆதரவாகவும் அணியமாகவும் இருக்கும் என்றும், கட்டண விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை அனைவரும் கூட்டு இயக்கம் நிகழ்த்திடுவோம்.

போராடுவோம், போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி பெறும்வரை போராடுவோம்!

Pin It