தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு...

கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர்களாகிய நாம் பகுத்தறிந்து பார்ப்போம்” எனும் தலைப்பில் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் சிந்தனையாளன் இதழில் (அக்டோபர் 2011) தலையங்கம் எழுதியுள்ளார்.

I

அவர் திராவிடர் கழகத்தில் இருந்தபோது 1971இல் மன்னார்குடியில் அவர் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கம் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார். 1) அதன் பின்னணி பற்றி எல்லாம் இப்பொழுது எழுதுவது வீண் வேலை என்பது நமது கருத்து.

2)     அந்தக் கருத்தரங்கில் சொல்லப்பட்டதெல்லாம் சரி என்று தமது மனதுக்குப்பட்டு இருந்தால், அதற்குப் பின் இரண்டாண்டுகளுக்குமேல் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்த நிலையில், அவற்றைச் செயல்படுத்தியிருப்பார்.

3)     40 ஆண்டுகளுக்குப் பிறகு அதைப்பற்றி எழுத முயற்சித்திருப்பது - அவருக்கு எராளமான அளவு நேரம் தாராளமாகக் கிடைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

II

இடஒதுக்கீடு தொடர்பாகச் சில கருத்துக்களையும், தகவல்களையும் அவர் எழுதியிருப்பது வேடிக்கையாக வும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

“மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சியால் 19.8.1979 முதல் 7.10.1979 வரை அ.தி.மு.க. ஆட்சிக்குக் கொடுத்த அழுத்தத்தால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான 31 விழுக்காடு 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெறப்பட்டது” என்பதுதான் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் தமாஷான துக்கடா பகுதியாகும்.

பார்ப்பனர்கள் வரலாற்றைத் திரித்து எழுதுவார் கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்; இந்தத் திரிபு வேலையில் இப்படிப்பட்டவர்கள் ஈடுபடுவது - பார்ப்பனீயத்தின் தாக்கம் எவ்வளவு “வீறுகொண்டது” என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படிக் கிடைத்தது - அதன் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொண்டால்தான் தோழர் ஆனைமுத்து அவர் கள் எழுதியிருப்பதில் உள்ள உண்மையற்ற தன்மை எளிதாகப் புலப்படும்.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இடஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை கொண்டு வந்தாரே - அதன்மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குகளிலிருந்து பிரசவித்தது தான் 50 சதவிகித இடஒதுக்கீடு.

அந்த வருமான வரம்பு ஆணையை எதிர்த்ததில், மக்களைத் திரட்டியதில், போராடியதில் தோழர் ஆனைமுத்து அவர்களுக்கோ அவர் நடத்துவதாகக் கூறப்படும் அமைப்புக்கோ என்ன சம்பந்தம்? அவர் பங்கு என்ன? எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டார்கள்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை பற்றிய தகவல் ஏடுகளில் 1979 ஜூலை மூன்றாம் தேதி வந்தது என்றால் “பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடி” என்று அன்றைக்கே அறிக்கை வெளியிட்டவர் மான மிகு கி. வீரமணி அவர்கள்.

மறுநாளே முக்கிய கட்சிகளின் தலைவர்களை - ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை எல்லாம் பெரியார் திடலில் அழைத்து, வருமான வரம்பு ஆணை யில் உள்ள ஆபத்தை - விபரீதத்தை - சமூக நீதியின் வேரில் வைக்கப்படும் வெடியைப் பற்றி விரிவாக எடுத்து ரைத்தவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரே!

உடன் கூட்டறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டது (4.7.1979).

திராவிடர் கழகத்தின் சார்பில் கி. வீரமணி, தி.மு.க. சார்பில் துரை. முருகன், உழைப்பாளர் கட்சித் தலைவர் எஸ்.எஸ். ராமசாமி, காங்கிரஸ் சார்பில் திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.எல்.சி., என்.எம். மணிவர்மா, இரா. திருமாறன் (பார்வேடு பிளாக்), கே.சி. குமாரசாமி ரெட்டி (சேனைத் தலைவர்), பெரம்பூர் பாலசுந்தரம் (உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி), ஆர். பண்டரி நாதன், அய்.ஏ.எஸ். (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்), இரெ. பழனியப்பன் (வழக் குரைஞர்), கமாண்டர் வி.எஸ்.பி. முதலியார் (துளுவ வேளாளர் சங்கம்) கையெழுத்திட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

III

வருமான வரம்பு ஆணையை எரிக்கும் போராட் டத்தை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது (26.11.1979). ஆணைகள் எரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு - கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம் (14.7.1979), திருப்பத்தூர் (வ.ஆ. 18.7.1979), சென்னை (22.7.1979), புதுக்கோட்டை (2.8.1979), மதுரை (4.8.1979), இராசபாளையம் (12.8.1979), தருமபுரி (30.8.1979), திருநெல்வேலி (2.9.1979), காஞ்சிபுரம் (9.9.1979), தஞ்சாவூர் (17.9.1979) முதலிய இடங்களில் மாநாடுகளும், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக்களும் நடைபெற்று வருமான வரம்பு ஆணைக்கு எதிராக உணர்ச்சிகர மான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

14.8.1979 அன்று தமிழ்நாட்டின் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் எழுச்சிப் பேரணிகள் நடத்தப்பட்டு, வருமான வரம்பு ஆணையை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் களிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன.

தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி பொதட்டூர் பேட்டை - குமரி - சென்னை முதலிய இடங் களிலிருந்து தஞ்சையை நோக்கி கழகத் தோழர்களின் வழி நடைப்படை நடத்தப்பட்டு, வழியெங்கும் வரு மான வரம்பு ஆணையின் தீமைகள் பற்றி நாட்டு மக்கள் மத்தியிலே எடுத்துரைக்கப்பட்டன.

இவற்றின் முடிவில்தான் நவம்பர் 26இல் (1979) வருமான வரம்பு ஆணை எரிக்கப்பட்டு, மூட்டை மூட்டையாக சாம்பல் கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பட்டது (26.11.1979).

இன்னொரு ஆபத்து எம்.ஜி.ஆர். ஆட்சியில் வேலை வாய்ப்புகளில் காலியாகும் இடங்கள், பிற்படுத்தப்பட்டோ ருக்குக் காலாவதியாவதாக அறிவிக்கப்பட்டது. அதுவும் இரண்டாண்டுகளுக்கு முன்பிலிருந்தே அதாவது 1977 ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததாக (Retrospective effect) கருதப்படும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

தந்தை பெரியாராலும் திராவிடர் கழகத்தாலும் போராடிப் போராடி பெற்ற உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படத் தன்னை அர்ப்பணித் துக் கொண்டு போராடியது திராவிடர் கழகம்.

இத்தகு செயல்பாடுகளின் வரிசையில் ஒன்றே ஒன்றைத் தங்கள் பங்களிப்பு என்று தோழர் ஆனைமுத்து அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

1980 சனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதுவரை தேர்தலில் தோல்வி என்றால் இன்னது என்று அறியாத எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. வுக்கு மரண அடி விழுந்தது. 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியைத் தழுவியது.

தோல்விக்குக் காரணம் என்ன என்று ஆய்வு செய்தபோது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக் கீட்டில் வருமான வரம்பு ஆணையைத் திணித்தது தான் என்பதை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார்.

அவசர அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டத் தைக் கூட்டினார் முதல்வர் எம்.ஜி.ஆர். (21.1.1980).

அந்தக் கூட்டத்தில் பல கட்சித் தலைவர்கள் பேசி னாலும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்

கி. வீரமணி அவர்களின் கருத்துதான் முக்கியமாகக் கருதப்பட்டது. இந்தப் பிரச்சினையில் கூறப்படும் அத் தனை அய்யப்பாடுகளையும் கேள்விகளாக எழுப்பி, அவற்றிற்குப் பதில் சொல்லும் முறையில் ஆவணம் ஒன்றைத் தயாரித்துச் சென்று, அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டு, 40 நிமிடங்கள் விளக்கவுரை ஆற்றியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்; அவரது நியாயமான காரணங்கள் புரிந்து கொள்ளப்பட்டன. அந்தக் கூட்டத்தில் திருவாரூர் தங்கராசு அவர்கள் என்ன பேசினார் தெரியுமா? பெரியார் இருந்திருந்தால் ஒன்பது மாடிகளின் படிக்கட்டுகளில் ஏறிவந்து முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரைக் கட்டித் தழுவி இருப்பார் என்று பேசினார். கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், அல்லது வெளியேறியவர்கள் இப்படித் தடம் புரள்வதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து வெளியில் வந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். செய்தியாளர் களைச் சந்தித்தார்.

அந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் குறித்து வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். இடஒதுக்கீட்டில் அ.தி.மு.க. அரசு எதிராக இருப்பதாக நம்பும்படிச் செய்துவிட்டார்கள் என்றும் கூறினாரே!

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற மூன்று நாள்களில் வருமான வரம்பு ஆணை இரத்துச் செய்யப் பட்டதுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக் கீடு 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குறைந்தபட்சம் கலந்து கொள்வதற்காகவாவது தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில் லையே! அந்த அளவுக்குத்தான் அரசு பார்வையில் அவர் இருந்தார். அவரின் செயல்பாடும் இருந்தது.

உண்மை இவ்வாறு இருக்க, நமது தலைமுறை யில் நடந்த நிகழ்வுகளையே தலைகீழாகப் புரட்டி ஒருவரால் சொல்ல முடிகிறது என்பது எத்தகைய விந்தை! விபரீதம்!

எம்.ஜி.ஆர். அரசு பிறப்பித்த - பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து முன்னேறிய ஜாதிக்காரர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார். அந்த வழக்கில் திராவிடர் கழகம் தம்மையும் இணைத்துக் கொண்டு (Intervener) வாதாடியது (5.5.1981).

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதம் அளித்ததற்கான விளக்கம் (Criteria) அளிக்க ஆணையம் ஒன்றை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. திரு. அம்பாசங்கர், அய்.ஏ.எஸ். அவர்கள் தலைமை யில் அமைக்கப்பட்ட அந்த ஆணையம் சமூக நீதிக்கு விரோதமான பகிர்வுகளை வழங்கிய நிலையில், அந்த ஆணையத்தின் குழு உறுப்பினர் ஒவ்வொரு வரையும் சந்தித்து, தலைவரின் கருத்து ஒன்று - உறுப்பினர்களுடைய கருத்து இதற்கு எதிரானது என்ற நிலையை உருவாக்கியதில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களின் பங்கு மகத்தானது.

இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்னவென்றால், வருமான வரம்பு ஆணை எதிர்க்கப்பட்டு - அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் அம்பா சங்கர், ஆணையம் நியமிக்கப்பட்ட நோக்கத்தின் தன் மைக்கு மாறாக, பொருளாதார அளவுகோல் தேவை என்று கூறிய நிலையில், அதனை எதிர்த்து நீதி மன்றம் செல்லுவோம் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட் டார் (2.10.1983). பொருளாதார அளவுகோல் என்ற தம் கருத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று அம்பாசங்கர், கழகப் பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுதினாரே! (6.10.1983).

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிவடைந்தது என்பதைக்கூட திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தான் 25.9.1984 அன்று சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழி லாளர் மாநாட்டில் அரசுக்கு நினைவூட்டினார். அதன் விளைவாகத்தான் அவசர அவசரமாக அரசு செயல் படும் நிலை ஏற்பட்டது.

இதற்காகவே சென்னையில் தனி மாநாடு கூட்டப் பட்டது (13, 14.7.1985). அம்மாநாட்டுத் தீர்மானத்தின் படி 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான அம்பா சங்கர் ஆணையத்தின் கருத்து நிராகரிக்கப்பட்டு புது ஆணை பிறப்பிக்கப்பட்டு, அந்தக் கட்டத்தில் 50 சதவித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.

50 சதவீதத்திற்குமேல் இடஒதுக்கீட்டின் அளவு செல்லக்கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில், அப்பொழுதும் தமிழ்நாட்டின் 69 சதவிகிதத்துக்கு ஆபத்து வந்தது. வாய்ஸ் கன்ஷ்யூமர் கேர் கவுன்சிலின் சார்பில் வழக்குரைஞர் விஜயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத் தார்.

அதனையும் காப்பாற்றிட திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள்தான் புதிய மசோதா ஒன்றையே (31-சி) தயாரித்துக் கொடுத்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் அது நிறைவேற்றப்பட்டு (31.12.1993) நாடாளுமன்றத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு (76ஆவது திருத்தம்) 31-பியின் கீழ் ஒன்பதாவது அட்ட வணையில் இணைக்கப்பட்டுப் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் (13.7.2010) சிறப்பான தீர்ப்பினை வழங்கிவிட்டது. 69 சதவிகித ஒதுக்கீட்டுப் பிரச்சனையை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என்றும்; தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக புதுச் சட்டம் ஒன்றையும் கொண்டு வரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எஸ். கபாடியா, ராதாகிருஷ்ணன், அந்தேர்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கிவிட்டது!

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நீதியரசர் எம்.எஸ். ஜனார்ததனம் அவர்களின் தலைமையி லான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை யினை தமிழக அரசிடம் அளித்துவிட்டது (8.7.2011).

இதன் அடிப்படையில் 69 சதவிகித இடஒதுக் கீட்டை ‘உறுதிப்படுத்தி’ தமிழ்நாடு அரசு 11.7.2011 அன்று ஆணையையும் பிறப்பித்துவிட்டது.

IV

இவ்வளவு பெரிய நீண்ட வரலாற்றில், திராவிடர் கழகத்தின் பங்குதான் முதன்மையானது என்பதைத் தெரிவிக்கத் தேவையில்லை. அங்குலம் அங்குலமாகப் பொத்திப் பொத்தி 69 சதவிகித இடஒதுக்கீடு கழகத்தால் காப்பாற்றப்பட்டு, நிலைநிறுத்தவும் பட்டுள்ளது. முழு யானையை ஒரு பிடி சோற்றில் மறைத்த கதையாக, 19.8.1979 முதல் 7.10.1979 வரை அ.தி.மு.க. ஆட் சிக்கு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 31 விழுக்காடு 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெறப்பட் டது என்று தோழர் ஆனைமுத்து எழுதுகிறார் என்றால் இதைப்பற்றி என்னசொல்ல! ‘முரட்டுத்துணிச்சல்’ என் பார்களே, அது இதுதானோ! பெரியாரியல் பெயரைச் சொல்லிக்கொண்டு உண் மையல்லாத ஒன்றுக்கு உரிமை கொண்டாடலாமா? அதுபோலவே மண்டல் குழுப் பரிந்துரை அமல் ஆக்கத்திற்கும் உரிமை கொண்டாடி வருகிறார் தோழர் ஆனைமுத்து. 42 மாநாடுகளையும் 16 போராட்டங் களையும் நடத்தியது திராவிடர் கழகமே!

மண்டல் குழு பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து ஆணையிட்ட சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களே கழகப் பொதுச் செயலாளரின் பங்களிப்பை ஒப்புக்கொண்டு பல இடங் களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மண்டல் குழு பரிந்துரைகளில் காணப்படும் மேலும் பல உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு ஒருங் கிணைப்பாளராக இருந்து செயல்படுவதற்கு முற்றிலும் தகுதியானவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களே என்பதை டில்லி மவ்லங்கர் மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் (19.9.1995) கூறினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கிரீமிலேயர் எதிர்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதிலே முனைப்பு உள்ளிட்ட அனைத்து சமூகநீதித் திசையி லும் முன் வரிசையில் நிற்கும் திராவிடர் கழகத்தை இருட்டடிப்புச் செய்யலாம் என்று நினைப்பதேகூட பெரியாரியல் பற்றிப் பேசுவோர்க்கு அழகானதல்ல.

V

நெருக்கடி நிலையை ஆதரித்தவர் தோழர் ஆனைமுத்து; அதற்கு எதிரான நிலையை எடுத்து வெஞ்சிறை சென்றவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்! இந்த வேறுபாடு போதும் மக்கள் எடை போடுவதற்கு; எவ்வ ளவோ அவதூறுகளை உண்மைக்கு மாறான பல வற்றை பல முறை அவர் எழுதி வந்துள்ளார் - அவற்றை அலட்சியப்படுத்திப் தான் உள்ளோம். இதற்குமேலும் அண்டப்புளுகுக்குத் தயார் என்று வந்தபிறகு, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சிலவற்றை வெளிப்படுத்தித்தானே தீர வேண்டியுள்ளது. அதுவே இது!

‘விடுதலை’ 19-10-2011

 

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு, வே. ஆனைமுத்துவின் விளக்கம்

தி.க. பொதுச் செயலாளர் தோழர் கலி. பூங்குன்றன் அவர்களின் கட்டுரைக்கு விடை

தந்தை பெரியார் அவர்கள் 24.12.1973இல் மறைவுற்றார்.

அவர் மறைவதற்கு 4 மாதங்களுக்கு முன்னால், 17.8.1973இல் திருச்சிராப்பள்ளியில், டவுன் இரயில் வே நிலையச் சாலையில் எண்.12 உள்ள கட்டடத்தில் வே. ஆனைமுத்துவுக்குச் சொந்தமான “பாவேந்தர் அச்சகத்தை” அவர்தான் திறந்து வைத்தார். அந்த அச்சகத்தின் துணைகொண்டு, 17.8.1974இல் வே.ஆனைமுத்துவினால் - தொடங்கப்பட்டதுதான், “சிந்தனையாளன்” கிழமை இதழ். அது, இப்போது, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிக்குச் சொந்தமான, மாத இதழாகச் சிறப்பாக வெளிவருகிறது.

2011 அக்டோபர் “சிந்தனையாளன்” இதழின் தலையங்கக் கட்டுரை,“பகுத்தறிவாளர்களாகிய நாம் பகுத்தறிந்து பார்ப்போம்” என்று தலைப்பிடப்பட் டுள்ளது. அக்கட்டுரை முழுவதும் இந்த 2011 திசம்பர் இதழில் வாசகர்களின் பார்வைக்காக மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையைப் படித்து, அதற்கு விடையாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், தோழர் கலி. பூங்குன்றன். அவர் “விடுதலை” நாள் இதழில் (சென்னை 19.10.2011 / வெளியூர் 20.10.2011இல்) பக்கம் 8இல் “தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு” என்று தலைப்பிட்டு, ஒரு முழுப்பக்க அளவுக்குப் பல செய்திகளை மிக விளக்கமாக எழுதி யுள்ளார்.

தந்தை பெரியார் அவர்கள், “குடிஅரசு” வார இதழில் தொடக்கக் காலத்தில் எழுதிய கட்டுரைகளைக் கண்டித்தும், எதிர்த்தும் திரு.வி.க., டாக்டர் பி. வரத ராசலு நாயுடு, போன்ற பெரு மக்கள் எழுதியவற்றை அப்படியே “குடிஅரசு” இதழில் முழுவதுமாக வெளி யிட்டு, அதற்கு உரிய விடைகளை விளக்கமாகவும் பணிவாகவும் தெரிவிப்பார்.

அதே முறையைப் பின்பற்றித்தான், இப்போது, “சிந்தனையாளன்” ஏட்டின் 2011 அக்டோபர் தலை யங்கக் கட்டுரையையும், அதன்பேரில், “விடுதலை” நாளிதழில் வெளிவந்த கட்டுரையையும், அதற்கு என் விடையையும் இந்த 2011 திசம்பர் இதழில் வெளியிட் டுள்ளேன்.

விடை எழுதுவதற்கு ஏற்ப, “விடுதலை”யில் வெளியான கட்டுரையை, I, II, III, IV, V என 5 பகுதிகளாகப் பிரித்துக் கொண்டது, நான். மூலத்தில் அப்படி இல்லை.

அன்புகூர்ந்து அந்த இரண்டு கட்டுரைகளையும் முதலில் பொறுமையாகப் படியுங்கள். அதன்பிறகு, இங்கே நான் எழுதியுள்ள செய்திகளைப் படித்து, நடு நிலையிலிருந்து சிந்தித்து, நீங்கள் ஒவ்வொருவரும் உண்மையான செய்திகளை உணருங்கள்.

“தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு” என்ற தலைப்பிலான கட்டுரையில், நான் குறித்துள்ள ஐ என் பதில் உள்ள செய்தி என்ன? அதில் உள்ள செய்திகள் இரண்டு.

1. “அவர் (வே.ஆனைமுத்து) திராவிடர் கழகத்தில் இருந்தபோது 1971இல் மன்னார்குடியில் அவர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார். அதன் பின்னணி பற்றியெல் லாம் இப்பொழுது எழுதுவது வீண் வேலை என்பது நமது கருத்து.”

2. “அந்தக் கருத்தரங்கில் சொல்லப்பட்டதெல்லாம் சரி என்று தமது மனதுக்குப் பட்டு இருந்தால், அதற்குப் பின் இரண்டாண்டுகளுக்கு மேல் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்த நிலையில், அவற்றைச் செயல்படுத்தியிருப்பார். 40 ஆண்டுகளுக்குப்பிறகு அதைப்பற்றி எழுத முயற்சித்திருப்பது - அவருக்கு ஏராளமான அளவு நேரம் தாராளமாகக் கிடைத் திருக்கிறது என்றே தோன்றுகிறது”

என்றும் இரண்டு செய்திகளை அக்கட்டுரை அடக்கியுள்ளது.

விடை எண்.1 : “கணபதி பேசும் போது, “நாம் பகுத்தறிவுவாதிகள். நம்மை நாம் சுயவிமர்சனம் செய்து கொள்வது எப்படிச் சரியாகும்? இதற்குத் தந்தை பெரி யார் எப்படி அனுமதி கொடுத்தார்” என்று காட்டமாகப் பேசினார்.

மேலே சொல்லப்பட்ட கருத்தரங்கில், தோழர் கணபதி நேரில் பங்கேற்கவில்லை.

நீடாமங்கலம் அ. ஆறுமுகம், அவருடைய இரு தோழர்கள் இராசையன், இன்னொருவர்; மற்றும் எடமேலையூர் அஞ்சல் நிலையத் தலைவர் பாலகுரு இவர்கள் பங்கேற்றனர். இவர்களுள் மூவர், இந்தக் கருத்தரங்கு மணியம்மையார்க்கும் வீரமணிக்கும் விரோதமாக நடத்தப்படுகிறது என்று, ஏற்பாட்டாளர் களுக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசினர் என்பதை - அன்று நடந்ததை - அப்படியே பதிவு செய்துள்ளேன்.

கருத்தரங்கு நடந்த வளாகத்துக்குத் தந்தை பெரியார் பிற்பகல் 2 மணிக்கே வந்துவிட்டார். ஆனால் அவர் முற்பகல் கருத்தரங்கு நடந்த கூடத்துக்கே வராமல், தனியே அமர்ந்து கொண்டார்.

கருத்தரங்கில் பேசப்பட்ட செய்திகளை நிரல்படுத்தி, ஓர் அறிக்கையாக எழுதி அவரிடத்தில் நான் தந்தி ருந்தேன். அவர் அதை முழுவதுமாகத் தனிமையில் படித்துவிட்டுத்தான், கட்டிலில் வந்தமர்ந்தார் என்ப தைக் குறிப்பிட்டுள்ளேன்.

அப்படிக் கூட்ட இடத்திற்குப் பெரியார் வருவதற்கு முன், மேலே நான் குறிப்பிட்டுள்ள கணபதியும், பால குருவும், அவரிடம் நேரில், “அய்யா, இந்த இரண்டு நாள்களாக இயக்கத்தைப் பற்றிப் பேசிப் பிய், பிய் என்று பிய்த்தெறிந்துவிட்டார்கள். இதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்?” என்று கேட்டுவிட்டுத்தான், அவர்களும் கூட்ட இடத்துக்கு வந்தார்கள். அவர்களுக்கு மறுமொழி யாக, ‘அப்படிங்களா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டு விட்டு, அதோடு பெரியார் நிறுத்திவிட்டார்.

அவ்விருவருள், கணபதி மட்டுமே பெரியாரின் முன்னிலையில் மேலே குறிப்பிட்டவாறு பேசினார்.

கணபதி அப்படிப் பேசிய பிறகுதான், பெரியார் அவர்கள், “இந்த ஏற்பாட்டைச் செய்தவர்களை மன மாரப் பாராட்டுகிறேன். இதை 5, 6 ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்திருக்க வேண்டும். இனிமேல், எல்லா மாவட்டங்களுக்கும் சென்று, இப்படிப்பட்ட விவாதங்களை இவர்கள் செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டுத், தொடர்ந்து உரையாற்றினார்”

என, என் கட்டுரையில் நான் குறித்துள்ளேன்.

அந்தக் கருத்தரங்கில் பேசப்பட்ட ஒவ்வொரு சொல் லையும் அப்போதே ஒலிநாடாவில் பதிவு செய்தவர் தோழர் திருச்சி து.மா. பெரியசாமி. அவர் அப்போதே அந்த நாடாவை இழந்துவிட்டார். இன்றும் அவர் நலமுடன் உள்ளார். நிற்க.

மேலே சொல்லப்பட்ட கணபதியும், நீடாமங்கலம் அ. ஆறுமுகமும் ஏன் அப்படிப் பேசினார்கள் என்பது ஒரு புதிர். அந்தப் புதிரை உரிய காலத்தில் தோலுரிப் பேன். அதற்கான போதிய நேரம் 2012 வரை எனக்கு வாய்க்காது.

விடை எண்.2 : “.... அதற்குப்பின் இரண்டாண்டு களுக்குமேல் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்த நிலையில் அவற்றைச் செயல்படுத்தியிருப் பார்...” என்று, தோழர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதியுள்ளது, தந்தை பெரியாரே அதைச் செய்திருக்க வேண்டும் - ஆனால் அவர் செய்யவில்லை - அப்படிச் செய்ய அவர் விரும்பவில்லை என்று கூறி, அவரையே பழிப்பதாகும்; அவர் பேரில் பழிபோடுவதாகும்.

“இதை நான் செய்வேன்” என்று, தந்தை பெரியார் அவர்கள் அக்கருத்தரங்கில் பேசவில்லையே!

“இனிமேல் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று இப்படிப்பட்ட விவாதங்களை இவர்கள் செய்ய வேண்டும்” என்று-அக்கருத்தரங்க ஏற்பாட்டுக்காரர்களான வே. ஆனைமுத்து, து.மா. பெரியசாமி, தோலி ஆர். சுப்பிர மணியம், சொரக்குடி வே. வாசுதேவன் ஆகியவர்களைக் குறிப்பிட்டு, அவர்களைத் தானே அவர் பணித்தார்!

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதே உண்மையான கேள்வியாகும். அவர்கள் நால்வருமே அக்கடமையைச் செய்யப் பணிக்கப்பட்டவர்கள். அவர் கள் ஏன் தொடர்ந்து செய்யவில்லை என்பது இன்னொரு பெரிய புதிர். அதுவும் உடைக்கப்பட வேண்டும் - பெரியாரின் கட்டளையை நிறைவேற்றிட - அவர் அளித்த அனுமதியைச் செயற்படுத்திட, விரைவில் அது நடந்தேறும். தந்தை பெரியார்,

“இதை 5, 6 ஆண்டுகளுக்கு முன் னாலேயே செய்திருக்க வேண்டும்” என, 4.4.1971 மாலை 5.30 மணிக்குக் குறிப்பிட்டார். அதாவது, “1965-66 இலேயே இப்படிக் கருத்தரங்குகளை நடத்தியிருக்க வேண்டும்” என்று அவர் கருதினார். அது ஏன்? இதுவும் ஒரு பெரிய வினா! என்னால் விடை தரப்பட வேண்டிய வினா. அதற்கு விடை தர ஆயத்தமாக உள்ளேன். உண்மையான பெரியார் தொண்டர்கள் இதற்கு எல்லாம் எனக்கு உதவிட முன்வாருங்கள் என, அன்புடனும் பணிவுடனும் கோருகிறேன்.

இனி, தோழர் கலி. பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரையில், நான் II, III, IV என எண்ணிட்டுக் கொண்டவை முழுவதும், ஒரே செய்தியைப் பற்றியவை. எனவே II என்கிற பகுதிக்கு நான் தரும் விடையே, III, IV என்பவற்றுக்கும் உரியவையாகும்.

II

“இடஒதுக்கீடு தொடர்பாகச் சில கருத்துக்களையும், தகவல்களையும் அவர் எழுதியிருப்பது வேடிக்கையா கவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது.”

“மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட அறிவார்ந்த முயற்சியால் 19.8.1979 முதல் 7.10.1979 வரை அ.தி.மு.க. ஆட்சிக்குத் தந்த அழுத்தத்தால், பிற்படுத் தப்பட்டோருக்கான 31 விழுக்காடு 1.2.1980இல் 50 விழுக்காடாக உயர்த்திப் பெறப்பட்டது என்பதுதான் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் தமாஷான துக்கடா பகுதியாகும்” என, கலி. பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “50 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படிக் கிடைத்தது - அதன் பின்னணி என்ன என்ப தைத் தெரிந்து கொண்டால் தான், தோழர் ஆனைமுத்து அவர்கள் எழுதியிருப்பதில் உள்ள உண்மையற்ற தன்மை எளிதாகப் புலப்படும்”

“முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணை கொண்டு வந்தாரே - அதன்மீது கடுமையாக மேற்கொள்ளப்பட்ட தாக்கு(?)களிலிருந்து பிரசவித்ததுதான், 50 சதவிகித இடஒதுக்கீடு” எனவும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்படித் திராவிடர் கழகம் தொடுத்த தாக்குதல்கள் எவையெவை என்பதை நான் முழுவதுமாக அறிவேன். ஏனெனில், 1981 வரையில் திருச்சிராப்பள்ளியிலிருந்த நான், நாள்தோறும் “விடுதலை” இதழைப் பெற்றுப் படித்தவன். இவர்களின் 1979-80 ஆம் ஆண்டைய போராட்டம் பற்றி அறிந்தவன்.

தோழர் கலி. பூங்குன்றனின் கட்டுரையில் என்னால் II, III, IV எனப் பகுக்கப்பட்டவை நமக்குத் தரும் செய்திகள் இரண்டு வகையின.

1.     “(3.7.1979க்கு) மறுநாளே முக்கியக் கட்சிகளின் தலைவர்களை - ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பிரதி நிதிகளை எல்லாம் பெரியார்திடலில் அழைத்து, வருமான வரம்பு ஆணையில் உள்ள ஆபத்தை - விபரீதத்தை-சமூக நீதியின் வேரில் வைக்கப்படும் வெடியைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தவர், திராவிடர் கழகப் பொதுச் செயலாளரே!”

“உடன் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது” (4.7.1979).

“வருமான வரம்பு ஆணையை எரிக்கும் போ ராட்டத்தை நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது (26.11.1979).ஆணைகள் எரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு - கோட்டைக்கு (சாம்பல்) அனுப்பி வைக்கப்பட்டது.”

திராவிடர் கழகம் தொடுத்த ஒரு தாக்குதல் பற்றிய செய்தி மேலே காணப்பட்டது. அதன் கோரிக்கை என்ன?

வருமான வரும்பு ஆணையை நீக்க வேண்டு மென்பது.

2.     10 மாவட்டங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன.

என்ன கோரிக்கை?

வருமான வரம்பை அரசு நீக்க வேண்டும் என்பது.

3.     26.11.1979இல் தமிழகமெங்கிலும், வருமான வரம்பு ஆணை எரிக்கப்பட்டது.

கோரிக்கை என்ன?

வருமான வரம்பு ஆணையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது.

4.     21.01.1980இல் அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.க.வின் கருத்து மிக விளக்கமாகக் கூறப்பட்டது.

அப்போது கோரியது என்ன?

வருமான வரம்பு ஆணையை நீக்க வேண்டும் என்பது.

மேலே குறிப்பிடப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளிலும், அறிக்கைகளிலும், மாநாட்டுச் சொற்பொழிவுகளிலும் முன்வைக்கப்பட்ட ஒரே கோரிக்கை என்ன?

வருமான வரும்பு ஆணையை நீக்க வேண்டும் என்பது மட்டுமே.

இங்கே நம் கேள்விகள் இரண்டு.

1.     இவ்வளவு நிகழ்ச்சிகளிலும் தி.க. அறிக்கைகளிலும், சொற்பொழிவுகளிலும், அனைத்துக் கட்சிக் கூட்ட றிக்கையிலும், அரசு நடத்திய அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும் - மருந்துக்காவது, பிற்படுத்தப்பட்டோ ருக்கு இப்போது அளிக்கப்படுகிற இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும் என்றோ, இவர்களுக் கான இடஒதுக்கீட்டை 31லிருந்து 60ஆக உயர்த்த வேண்டும் என்றோ என்றாவது திராவிடர் கழகத் தாரால் கோரிக்கை வைக்கப்பட்டதா?

2.     03.07.1979 முதல் 31.01.1980 முடிய உள்ள நெடிய காலத்தில் “விடுதலை” நாளிதழில் அல்லது “உண்மை” மாதமிருமுறை இதழில் அல்லது “கூhந ஆடினநசn சுயவiடியேடளைவ” ஆங்கில மாத இதழில் - “31 விழுக்காடு இடஒதுக்கீட்டை உயர்த்துங்கள்” என்று, என்றைக்காவது திராவிடர் கழகத்தினரால் எழுதப் பட்டதா?

அப்படி எழுதியிருந்தால் - எந்தெந்த நாளில், எந் தெந்த ஏட்டில், எத்தனையாவது பக்கத்தில் திராவிடர் கழகம், “பிற்படுத்தப்பட்டோருக்குக்கான இடஒதுக்கீட் டை 31 விழுக்காட்டிலிருந்து உயர்த்திடுக!” என்று, அரசுக்குக் கோரிக்கை வைத்தது என்று வெளியிட முடியுமா? சான்று உண்டா?

ஏன், அப்படிப்பட்ட கோரிக்கையைத் திராவிடர் கழகம் முன்வைக்கவில்லை?

அப்படிக் கோர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாததாலா? ஏன்? ஏன்? ஏன்?

எனவே, 1976க்குப் பிந்திய தமிழ்நாட்டு இடஒதுக் கீட்டு வரலாற்றில் மற்றும் இந்திய அரசு இடஒதுக்கீட்டு வரலாற்றில் எல்லாப் பங்களிப்புகளையும் செய்தவர் கள்-8.8.1976இல் முளைத்த மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினரும்; இவர்களின் முயற்சி யால் 19.8.1978இல நிறுவப்பட்ட அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவையினருமே என்ப தை நாம் மலைமுகட்டில் நின்று கூவலாம்.

இது சிலைமேல் எழுத்து.

இது எப்படி என்பதைப் பின்தரப்பட்டுள்ள உண்மை நடப்புச் செய்திகளை எல்லோரும் ஆர அமரப் படித்து உணருங்கள். உண்மை எது என்பதைப் பகுத்தறிவு உள்ளவர்கள் உணருவார்கள்; அப்போது ஒப்புக் கொள்ளுவார்கள்.

இதோ, உண்மை வரலாறு!

தமிழ்நாட்டு அரசு - எம்.ஜி.ஆர். ஆட்சியில், 3.7.1979இல், பிற்படுத்தப்பட்டோர் என்ற உரிமை யைப் பெற்றிட, 9000 ரூபா ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினருக்குத் தகுதி இல்லை என்று ஆணை பிறப்பித்தது.

திராவிடர் கழகமும் மற்றும் பல அமைப்புகளும் அந்த அரசு ஆணையை எரித்தன.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும், இந்திய தேசிய காங்கிரசும், தமிழ்நாடு உழைப்பாளர் பொது நலக் கட்சியும் திருச்சிராப்பள்ளியில் பாவேந்தர் அச்சகத்தில் கூடி, ஒரு நாள் முழுவதும் இச்சிக்கல் பற்றி விவாதித்தனர்.

தமிழ்நாட்டு அரசினர்க்கு இடஒதுக்கீடு பற்றிய உண்மையான வரலாறு, பிற்படுத்தப்பட்டோருக்குப் பொருளாதார வரம்பு ஏன் கேடானது என்பதன் உண்மை, 1979இல் 67 விழுக்காடு எண்ணிக்கையுள்ள பிற்படுத் தப்பட்டோருக்குக் குறைந்தது 60 விழுக்காடு ஒதுக்கீடு தர வேண்டும் என்பதற்கான விளக்கம் இவற்றை அடக்கிய ஆவணம் ஒன்றை உருவாக்கி, அதை அரசிடம் அளிப்பது; அதன்பேரில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது என முடிவெடுத் தோம்.

1979 ஆகஸ்டில் ஆவணம் ஆயத்தப்படுத்தப்பட்டது.

அந்த ஆவணத்தின் முகப்புப் பக்கமும், தூதுக் குழுவினர் பெயர்கள் பட்டியல் அடங்கிய பக்கமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

19.8.1979 காலை வே. ஆனைமுத்து, சேலம் அ. சித்தய்யன், சேலம் எம். இராஜு, திருச்சி நோபிள் கு. கோவிந்தராசலு, சீர்காழி மா. முத்துச்சாமி, டி.என். அனந்தநாயகி, வன்னிய அடிகளார் ஆகியோர், சென்னைக்கு வந்தோம்; எழும்பூரில் பீப்பிள்ஸ் லாட்ஜ் என்னும் விடுதியில் கூடிப் பேசினோம்.

வே. ஆனைமுத்து, சேலம் அ. சித்தய்யன், மா. முத்துச்சாமி, நோபிள் கு. கோவிந்தராசலு ஆகியோர் நேரில் முதலமைச்சர் அவர்களைக் கண்டு, ஆவணத் தை அளித்து விவாதிப்பது என முடிவு செய்தோம்.

சேலம் அ. சித்தய்யன் எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரிந்தவர்.

முதல்வருடைய சொந்தத் தொலைப்பேசி எண் அவரிடமிருந்தது. அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன்.

(உரையாடல்)

எம்.ஜி.ஆர். :     எம்.ஜி.ஆர். பேசுறேன். யாரது?

வே.ஆனைமுத்து : வணக்கம். திருச்சி ஆனைமுத்து பேசுகிறேன். சேலம் சித்தய்யன் தங்க ளுடன் பேச விரும்புகிறார்.

சித்தய்யன் :     வணக்கம்ங்.க. சேலம் சித்தய்யன் பேச றேன். நாங்கள் உங்களை நேரில் கண்டு பேச நேரம் ஒதுக்கிக் கொடுங்க.

எம்.ஜி.ஆர். :     எதுக்காகச் சந்திக்கணும், அண்ணே.

சித்தய்யன் :     பிற்படுத்தப்பட்டோருக்கு 9000 ரூபா வருமான வரம்பு ஆணை போட்டிருக் கிறீங்களே, அதைப் பத்திப் பேச.

எம்.ஜி.ஆர். :     ஏண்ணே, நீங்க வந்து பார்த்தாப்புலே, நான் அதை மாத்தப் போறனா?

சித்தய்யன் :     பார்க்க நேரம் கொடுங்க. செய்யறது உங்க விருப்பம்.

எம்.ஜி.ஆர். :     இல்லண்ணே! நீங்க நேரா வந்து மெ மோராண்டம் கொடுத்தாலும் - 9000 ரூபாயா இருக்கிறதை, பன்னிரண்டாயி ரமா மாத்துவனே தவிர, ஆணையை நீக்கமாட்டேண்ணே!

சித்தய்யன் :     நீங்க முதலமைச்சர். அப்படிச் சொல்லக் கூடாதுங்க. உங்களைப் பார்க்க நேரம் கொடுங்க.

எம்.ஜி.ஆர். :     இவ்வளவு தூரம் வரவேண்டாம்ண்ணே. கல்வி அமைச்சருக்கிட்டே கொடுத்துடுங்க! நான் பாத்துக்கிறேன். (பத்து மணித் துளி களுடன் தொலைப்பேசிப் பேச்சு முடிந்தது).

பகல் 12 மணிக்குத் தூதுக்குழுவினர், கல்வி அமைச் சர் அரங்கநாயகம் அவர்களைப் பார்த்தோம். அச்சிட்ட ஆவணத்தை அவரிடம் தந்தோம். அதைப் படித்துப் பார்க்காமலே, “வாய் மொழியாகக் கூறுங்களேன்” என்றார், அவர்.

எங்களின் கோரிக்கையைக் கூறியவுடன்,

“நீங்களெல்லாம் புதிய பிராமணாளாயிட்டிங்க சார்! உங்க கோரிக்கை ஏழைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது...” எனப் பேசிக் கொண்டே எழுந்து நின்றார்.

நாங்களே அவருடனான பேச்சை முறித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் தொலைப்பேசியில் பேசப்பட்டதை - அப்படியே, 1979 ஆகஸ்டு கடைசி வார “சிந்தனையாளன்” முகப்பு அட்டையில் அச்சிட்டேன். அதன் படிகளை எல்லா அமைச்சர்களுக்கும் அனுப்பி விட்டு, நாங்கள் தில்லிக்குப் புறப்பட்டோம்.

1979 செப்டம்பர் முழுவதிலும் தில்லியில் நானும் அ. சித்தய்யன் அவர்களும் தங்கி, தில்லியில் 1979 நவம்பரில் போராட்டம் நடத்துவது பற்றியும்; அதற் கான திட்டத்தை வகுக்க அக்டோபரில் சேலத்தில் அனைத்திந்திய மாநாடு நடத்துவது பற்றியும் உரிய பணிகளில் ஈடுபட்டோம்.

சேலம் மாநாட்டு ஏற்பாட்டுக்காக, இடையிலேயே சித்தய்யன் மட்டும் சேலத்துக்குத் திரும்பினார். நான் தில்லியில் 30.9.1979 வரை தங்கிவிட்டேன்.

நானும், இராம் அவதேஷ் சிங், எம்.பி.யும் 25.9.1979 மதியம், தலைமை அமைச்சர் சவுத்ரி சரண்சிங் அவர்களை அலுவலகத்தில் கண்டோம். “கலேல்கர் பரிந்துரைகளை, துறைவாரியான நிர்வாக ஆணைகள் மூலம் அமல்படுத்துங்கள்” என்று கோரிக்கை வைத்தோம். அவர் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் தந்தோம். ஆவணங்களும் தந்தோம். அக்கணமே, நாங்கள் அளித்த மெமோராண்டித்திலேயே - “To law minister for consideration” என எழுதிச் சட்ட அமைச்சருக்கு அனுப்பி விட்டார்.

அன்று மாலையிலேயே, சட்ட அமைச்சர் எஸ்.என். கக்கருடன் நாங்கள் தொலைபேசியில் பேசினோம். அவர் எங்கள் கோரிக்கையை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதாகவும் - தலைமை அமைச்சருக்கு அழுத்தம் தாருங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

சேலம் மாநாடுகள் 1979 அக்டோபரில் நடைபெற்றன. அம்மாநாடுகளுக்கு வர, உ.பி. முன்னாள் முதல்வர் ராம் நரேஷ் யாதவ், மத்தியத் துணை அமைச்சர் கரூர் கோபால், தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரும்; கேரளா, கருநாடகா, ஆந்திரா, பீகார் மாநிலங்களின் அனைத்திந்தியப் பேரவைத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலையில், சேலம் மாநாட்டுக்கு, அ.தி.மு.க. சார்பில், அமைச்சர் பண்ணுருட்டி எஸ். இராமச்சந்திரன் அவர்களை அழைக்க விரும்பி, நேரில் அவருடைய இல்லத்துக்கு நானும், சேலம் அ. சித்தய்யன் அவர்களும் 7.10.1979 காலை 9 மணிக்குச் சென்றோம். கீழ்த் தளத்தில் உட்கார்ந்திருந்த அவர், எங்களைப் பார்த்த வுடன் சீறி விழுந்தார். எங்களிடையே என்ன நடந்தது?

(உரையாடல்)

பண்ணுருட்டி இராமச்சந்திரன் : என்னங்க! ஒரு மட்டு மரியாதை இல்லாம, முதலமைச்சரோடு தொலைப் பேசியிலே பேசினதையெல்லாம் அப்படியே ‘சிந்தனை யாளன்’ முகப்பிலே போட்டுட்டீங்க! என்னங்க இது ஞாயம் என்று கூறிப் பொரிந்து தள்ளினார்.

நான்:அய்யா! நான் வெளியிட்டிருக்கிறது உண் மையா, பொய்யாண்ணு மட்டும் கேளுங்க. ஏன் போட் டீங்கண்ணு கேட்காதீங்க என, நானும் கடுமையான தொனியில் விடை சொன்னேன்.

அந்நேரம், எங்கள் மெமோரண்டத்தைப் பெற்றுக் கொண்ட அவர், கவனமாகப் படித்துவிட்டு, “மாடிக்குப் போய்ப் பேசுவோம் வாருங்கள்” என்றார்.

பண்ணுருட்டியார், அ. சித்தய்யன், நான் மூவரும் மாடிக்குச் சென்றோம்.

அமைச்சர் : எங்களிடம் 31% அய் 60% ஆக உயர்த்தச் சொல்லிக் கேட்கிறீர்களே. கலைஞர் இருந்தபோது ஏன் அவரிடம் கேட்கவில்லை?

ஆனைமுத்து : கலைஞர் 1976 சனவரியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நாங்கள் 60% கேட்பதற்கு ஆவணத்தில் இப்போது மேற்கோளாகக் காட்டியிருக்கிற தீர்ப்பு, 1976 கடைசியில்தான் வந்தது. அதுபற்றிய, சுருக்கத்தை இந்த ஆவணத்தில் பக்கம் 2இல் கண்டுள் ளோம்.

அந்தச் சுருக்கத்திற்கான, ஆங்கில வாசகத்தை அப்படியே படிக்கிறேன் : (ஆனைமுத்து படித்துக் காட்டு கிறார்).

“Suppose for instance, a State has a large number of B.Cs. of citizens which constitutes 80% of the population and the government, in order to give them proper representation, reserves 80% of the jobs for them, can it be said that it is bad and violates clause 4 of article 16? The answer must necessarily be in the negative” (State of Kerala versus N.M. Thomas A.I.R. 1976 : S.C. 490).

பிறகு, இதனை அமைச்சரும் படித்துப் பார்த்தார்.

அமைச்சர் : நீங்கள் சொல்லுவதை எப்படிச் சரி பார்ப்பது?

ஆனைமுத்து : தமிழ்நாட்டு அரசுச் சட்டத்துறைச் செயலாளரைக் கேளுங்கள்.

உடனே,

அமைச்சர் : (சட்டத் துறைச் செயலாளரிடம் தொலை பேசியில்) இதுபற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

சட்டத் துறைச் செயலாளர் : அந்த விவரம் சரி தான். ஆனால், அது, நீதிமன்ற அமர்வின் சிறுபான் மையினரின் கருத்து - அது தீர்ப்பு அல்ல.

ஆனைமுத்து : சட்டச் செயலாளர் சொல்லுகிறபடி, அது ஒரு கருத்துத்தான். அதை நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.

(அடுத்த செய்தி பற்றி),

அமைச்சர் : கேரளாவில் வருமான வரம்பு இருக் கிறதே; அதை எதிர்த்து அங்கே போய் ஏன் நீங்கள் போராடவில்லை?

ஆனைமுத்து : கேரளாவில், கல்விக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு உண்டு; வேலைக்கு இல்லை. ஆனால் நீங்கள் வேலைக்கும் சேர்த்து வருமான வரம்பு வைத்துவிட்டீர்கள். 1960 க்குப் பிறகுதானே பிற்படுத்தப்பட்டோர் படித்தார்கள். இவர்கள் இப்போது வேலைக்குப் போக முடியாமல் தடுக்கிறீர்களே!

இதுபற்றி, அதே சட்டத்துறைச் செய லாளரிடம் அமைச்சர் கேட்டார். அது பற்றித் தனக்குத் தெரியாது என்று செய லாளர் கூறிவிட்டார். (செயலாளரின் பெயரை இங்குக் குறிப்பிட நான் விரும்பவில்லை).

நீண்ட நேரச் சந்திப்புக்குப்பின், இடை யில், அ. சித்தய்யன் அவர்கள் “ஆனை முத்து உங்கள் வகுப்பைச் சார்ந்தவர் தான்; கடலூர் ஆ. கோவிந்தசாமியின் அண்ணன் மருமகன்” என, அவராகவே என் சாதி பற்றி அறிமுகப்படுத்தினார்.

எனக்கு அது ஒரு வகையில் கை கொடுத்தது.

உடனே, நான், “அய்யா நீங்களும் நானும் ஒரே வகுப்பு என்று அண்ணன் சொன்னார். நான் சோளமும் வரகும் விளைகிற காட்டிலிருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1946இல் படிக்கப் போனேன். காடாம்புலியூர் வன்னியர் கள் மணிலா, முந்திரி விற்ற காசு - முந்திரிப் பழம் தின்ற பன்றி விற்ற காசு என்று இலட்சக்கணக்கில் பணம் வைத் திருந்தார்கள். அவ்வளவு பணம் வைத் திருந்த அவர்கள், ஏன் அப்போது அங்கே படிக்க வரவில்லை?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள், பணம் வைத்திருப்பவன் படித்தவன், முன்னேறி யவன் என்பது இதில் சரியாக இல்லையே; அது சமூகப் பின்னடைவின் விளைவு என மளமள வெனக் கொட்டினேன்.

பிற்படுத்தப்பட்டோருக்கு 60% ஒதுக் கீடு தர வேண்டும் என்கிற திட்டவட்ட மான, கோரிக்கை, மெமோரண்டத்தின் பக்கம் 20 இல் உள்ளது. அதனை அப்படியே, இங்கு அச்சிட்டுள்ளோம்.

அப்பாடா!

அமைச்சர் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.

“உங்கள் மெமோரண்டத்தில் 10 காப்பிகளை, என் அலுவலகத்தில், மோகன்தாசிடம் இன்றைக்கு மாலையிலேயே கொடுத்துவிடுங்கள். நாளை காலை யிலேயே முதலமைச்சரைப் பார்த்துப் பேசுகிறேன்” என்று எங்களுக்கு உறுதி கூறி, விடை தந்த அமைச்சர். அதுதான் இறுதியில் வெற்றியாக முடிந்தது.

நாங்கள் 7.10.79 மாலையிலேயே, ஆவணத்தின் 10 படிகளை மோகன் தாசிடம் சேர்த்தோம். அவர் ஏற்கெனவே எங்களுக்கு நன்கு தெரிந்தவர்.

அவர் 8.10.1979 காலை அமைச்சர் பண்ணு ருட்டியிடம் ஆவணப்படிகளைத் தந்தார். முதலமைச் சரிடம் அவர் ஆவ ணத்தை நேரில் தந்து விவாதித்த செய் தியை, மோகன்தாஸ், மதியம் எங்களுக்குத் தெரிவித்தார்.

அப்போதும் எம்.ஜி.ஆர். மசியவில்லை.

உடனடியாக, நடைபெற்ற நாடாளுமன்றத் தேர் தலில், 39 இடங்களுக்கு 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுப் பின்னடைவு ஏற்பட்ட போதும், எம்.ஜி.ஆர். ரூ.9000 ஆணையை நீக்க முன்வரவில்லை. ஏன்?

இரண்டு பார்ப்பன உயர் அதிகாரிகள் - “இந்தப் பிற்படுத்தப்பட்டோர் பேரிலான வருமான வரம்பு ஆணை, ஒரு சமதர்மத் திட்டம்” என்று சொன்னதை - எம்.ஜி.ஆர். அப்படியே நம்பிவிட்டார். அதனாலேயே பிடிவாதமாக அவர் மறுத்து வந்தார்.

1980 மார்ச்சில், தமிழகச் சட்ட மன்றத்திற்குத் தேர்தல் வரப்போவதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுக் குழுவில், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நம் வேண்டு கோள் ஆவணத்தை முதலமைச்சரிடம் நினைவூட்டி, “அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அது சட்டமன்றத் தேர்தலுக்குக்கை கொடுக்கும்” என்று, தக்க நேரத்தில் வேண்டு கோள் வைத்தார்.

அதன் விளைவாகத் தான், நம் 24 பக்க ஆவண மான “பிற்படுத்தப்பட்டோர் பொதுநிலை விளக்க ஆவணம்” என்பதில், பக்கம் 20இல், நாம் பட்டியலிட்டுக் கோரியபடி,

3.7.1979 நாளிட்ட வருமான வரம்பு விதிக்கும் ஆணையை அ.தி.மு.க. அரசு 26.1.1980இல் இரத்துச் செய்தது.

‘நலம் பெற ஏற்ற நெறிகள்’ என்ற தலைப்பில் - (1) மாநில அரசுக் கல்வியில் 60 விழுக்காடு இடங்கள் ஒதுக்கித் தரப்பட வேண்டும் எனவும்; (2) மாநில அரசு வேலையில் 60 விழுக்காடு ஒதுக்கித் தர உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் நாம் முன்வைத்த தெளிவான கோரிக்கைகளைக் கொள்கை அளவில் ஏற்று, 60 விழுக்காடு என்பதற்குப் பதிலாக - 50 விழுக் காடு மாநில அரசுக் கல்வியிலும், மாநில அரசு வேலை யிலும், அ.தி.மு.க. அரசினால் 1.2.1980 ஆணையின் மூலம் வழங்கப்பட்டது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், தோழமை அமைப்புகளும் திட்டவட்டமான கோரிக்கை வைத்ததால் மட்டுமே - 31% இடஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட்டது. குருடனுக்கும் செவிடனுக்கும் ஊமை யனுக்கும் கூட, நாம் பட்டபாட்டை விளக்கிச் சொன் னால் புரியும். பகுத்தறிவு பேசுவோர் நாம் சொல் லாமலே - உண்மை வரலாற்றைப் படித்துப் பார்ப்பதன் மூலமே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகம் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்று தான் - வருமான வரம்பு ஆணை நீக்கம். அதற்கு அதிக விலையை தி.க. தந்தது. அதற்கான வெற்றியில் அவர்கள் பூரிப்படையலாம். அது மிகச் சரி.

ஆனால், 50% ஆக இடஒதுக்கீடு அளவு உயர்த் தப்பட்டதில் - அதன் பிரசவிப்பில், அவர்களின் பங்கு எதுவும் இல்லை என்பதை வெட்கத்தோடு அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அரசின் 01.02.1980 நாளிட்ட ஆணை பற்றி, “விடுதலை” நாளிதழில், 25.1.1980, 26.1.1980இல் அரைகுறை மனத்துடன் வெளியிடப்பட்ட முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக, “பாராட்டத்தக்க 50 விழுக்காடு இடஒதுக்கீடு உத்தரவை - தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்” என்று, ஒரு வழமையான பாராட்டுச் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளனர்.

இந்த 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டதில், தி.க. ஆற்றியதாக எந்தப் பங்களிப்பும் இல்லை. அதற்குப் பிறகும், அவர்கள் உரிமை கொண்டாடினால், அது ஊரையும் உலகத்தையும் ஏய்க்கும் பொய்யே! பெரும் புளுகே! நிற்க.

என்னால், V எனக் குறிக்கப்பட்ட செய்தி பின்வரு மாறு உள்ளது.

“நெருக்கடி நிலையை ஆதரித்தவர் தோழர் ஆனைமுத்து; அதற்கு எதிரான நிலையை எடுத்து வெஞ்சிறை

சென்றவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்.”

இதில் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.

1. “நெருக்கடி நிலையை ஆதரித்தவர் தோழர் ஆனை முத்து” என்பது, பவானி கெட்டிச் சமுக்காளத் தில் கறுஞ்சட்டைத் தோழர்களால் வடிகட்டி எடுக்கப் பட்ட முழுப் பொய்; பச்சைப் பொய்; வாய் கூசாத பொய்; நெஞ்சறிந்த - நஞ்சு கலந்த ஒரு பொய் வரலாறு. ஏன்? எப்படி?

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடனேயே, அடுத்த கிழமை நான் வெளியிட்ட “சிந்தனையாளன்” இதழில் தலையங்கம் என்ன தெரியுமா?

“ஸ்வதந்தர் மர்கயா”

என்பது மட்டுமே - இவ் இரண்டு சொற்கள் மட்டுமே தலையங்கம்.

இதையே தலைகீழாக அச்சிட்டேன்.

அது பார்ப்பன அதிகாரிகளின் கண்ணைக் குத்தியது.

அதற்கு அடுத்த வாரம் - நான் நெடுந்தொலை வில் அருப்புகோட்டையிலிருந்த போது, என் வீட்டில் இயங்கிய அச்சகத்தில் உளவுக் காவல் துறையினர் நுழைந்து, என் மனைவி மக்களை மிரட்டி, எல்லா இடங்களையும் சோதனை போட்டு, அவர்கள் விருப் பத்துக்கு என் ஏட்டின் இதழ்களையும், சில ஆவணங் களையும், “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (1974) நூலுக்கான படங்களின் எதிர்மங்களையும் (சூநபயவiஎநள) வாரிக் கொண்டு போய்விட்டனர். என் மூத்த மகள், அழுதுகொண்டே அருப்புக்கோட்டையிலிருந்த எனக்குச் அச்செய்தியைச் சொன்னாள். அப்படி வாரி எடுத்துச் சென் றவர்கள், அதற்கு எந்தப் பட்டியலும் தரவில்லை; எந்தத் துறையினர் என்றும் சொல்லவில்லை.

நான் ஊருக்குத் திரும்பிய பிறகு, வாரந்தோறும் சென்னைக்குச் சென்று, மத்திய அரசு அதிகாரிகளிடம் கட்டுரை மூலங்களையோ, மெய்ப்புகளையோ காட்டி, ஒப்புதல் பெற்றுவந்துதான் அச்சிட வேண்டும். அன் றைய என் நிலை அவ்வளவு துன்பமானது. என்னை விட அதிகத் துன்பத்துக்கு ஆட்பட்டவர்கள் - சிறை பிடிக்கப்பட்ட தி.க., தி.மு.க. தோழர்கள். அது ஓர் உண்மை.

பெரியாரின் பெருந்தொண்டர்கள், எந்த அமைப் பில் அல்லது எந்தக் கட்சியில் இருந்தாலும், உண்மை யை மறைக்கக் கூடாது; பிறர் பேரில் பொய்யை ஏற்றக் கூடாது; பிறரைப் போற்றுதல் செய்யாவிட்டாலும் தாழ்வில்லை-தூற்றுதல் செய்யக் கூடாது. “பகுத்தறி வாளர்களாகிய நாம் பகுத்தறிந்து பார்ப்போம்” என, 2011 அக்டோபரில், நான் எழுதியது - இன்றைக்கும், நாளைக்கும், மறுநாளும் மற்றும் என்றென்றும் வேண்டப்பட்ட ஒன்று. இம்மேலான பணியை, இனியும் தொடர்ந்து செய்வேன்.

- வே.ஆனைமுத்து 

Pin It