‘மார்க்சியமும் சாதியச் சிக்கலும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பாபாசாகேப் அம்பேத்கர் தொடர்பாக நான் கூறிய சில பகுதிகளைச் சுட்டிக்காட்டி, மும்பையிலிருந்து வெளிவரும் தலித் நாளேடு ஒன்று, பெரும் விவாதத்தைக் கிளப்பியிருப்பதுடன், தலித்து களின் உணர்வுகளை உசுப்பேற்றி இருக்கிறது. அந் நாளேட்டின் செய்தி உண்மைக்கு முற்றிலும் எதிரான தாகும். ஆயினும் அம்பேத்கர் எத்தன்மையவர்? அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் அம்பேத்கரை எத்தன்மையில் பார்க்கிறார்கள்? என்ற வினாவுக்கு விடை காண வேண்டிய தேவையை இச்செய்தி வலியுறுத்துவதாக நான் கருதுகிறேன்.

தலித் அரசியல்வாதிகள் தங்களுடைய தகிடுதத் தங்களை நியாயப்படுத்துவதற்காகவோ, தலித் அறி வாளிகள் தங்கள் அறியாமையாலோ அல்லது ஆளும் வர்க்கத்திடம் நல்ல பெயர் வாங்குவதன் மூலம் ஆதாயம் பெறுவதற்காகவோ, உணர்ச்சியற்ற ‘கடவுளின்தலை’ என்ற நிலைக்கு அம்பேத்கரைத் தாழ்த்திவிடுகின்ற னர்; வெறும் வழிபாட்டுக்குரியவர் என்று ஆக்கிவிடு கின்றனர். இதனினும் இழிவான தன்மையில், புதிய அறிவுத்தேடலுக்குத் தடையான தன்மையில் - அம்பேத்கரைச் சித்திரிக்கின்றனர்.

அம்பேத்கரைப் பக்தியுடன் வழிபடும் கலாச்சாரத் தால் வீறுடன் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செயல் பட்ட தலித் இயக்கம், இன்று சீரழிந்து கிடக்கிறது; தலித் மக்களின் துன்ப துயரங்கள் அப்படியே தொடர்கின்றன; அதேசமயம் தன்னலம் விழையும் பிற்போக்கு மேல் தட்டுத் தலித் கும்பல் அதிகரித்துள்ளது. இதன்விளை வாகத் தலித் மக்களிடம் நம்பிக்கையற்ற மனநிலை மேலோங்கியுள்ளது. அம் ‘மீட்பரை’ எதிர்நோக்கும் கையறு நிலையில் இருக்கின்றனர். பிற்போக்கான - குழப்பமான - கேடான இச்சூழல் மேலும் பரவாமல் தடுத்திட, அம்பேத்கர் உண்மையில் எத்தன்மையா னவர் என்ற புரிதலைப் பெறுவதும், அம்பேத்கரை மறுவாசிப்புச் செய்வதும் காலத்தின் கட்டாயமாகும்.

அம்பேத்கரின் கருத்துகளில், அவர் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற போது அவருக்குப் பேராசியராக இருந்த ஜான் தெவே என்பவரின் தாக்கம் இழையோட்டமாக இலங்கு வதைக் காணலாம். இதையே கே.என். கதம் என்கிற ஆய்வாளர், “ஜான் தெவேவைப் பற்றி நாம் ஓரள வேனும் புரிந்து கொள்ளாவிடில், டாக்டர் அம்பேத் கரைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியாது” என்று அவருடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜான் தெவே வின் தாக்கம் அம்பேத்கரின் எழுத்துகளிலும், அவர் கையாண்ட நடைமுறை உத்திகளிலும் ஊடுருவி உள்ளன.

‘கருத்துகள் மாற்றமற்றவை’ என்று உடும்புப்பிடி யாகக் கருதாமல், பட்டறிவின் அடிப்படையிலும் அறிவுக்குப் பொருத்தமான முறையிலும் சிக்கல்களை அணுக வேண்டும் என்பதே ஜான் தெவேவின் கோட் பாடாகும். எனவேதான் அம்பேத்கர் மயிர்பிளக்கும் தத்துவ விவாதங்களில் மட்டும் மூழ்கிக்கிடக்காமல், தலித்துகளின் முன்னேற்றத்திற்கான வாழ்வியல் நடைமுறை உத்திகளுக்கு முதன்மை தந்து செயல் பட்டார். ஜான் தெவே, “அனைத்து அறிவும், தத்துவக் கருத்துகளும் மாறுதலுக்குட்பட்டவைகளே; ஆகவே எக்கருத்தும் நீடித்த நிலைத்த தன்மை உடையதன்று” என்று கருதினார். இக்கோட்பாடு மாபெரும் தத்துவ மான மார்க்சியத்தையும் மறுதலிக்கிறது.

ஜான் தெவேவின் தத்துவக் கோட்பாட்டை அம்பேத்கர் அவருடைய மாபெரும் அறிவாற்றலைக் கொண்டு இந்தியச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தினார். அவருடைய செயற்களத்தில் இதற்கான சான்றுகள் பலவற்றைக் காணலாம்.

1952 சூன் மாதம் அம்பேத்கரே, “என்னுடைய அறிவாற்றலும் அதன் செழுமையும் ஜான் தெவேவிட மிருந்து பெற்றவைகளாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஜான் தெவேவின் கோட்பாடு வரலாற்று வளர்ச்சியை - அதன் முன்னேற்றத்தை வரலாற்றுப் பொருள் முதல் வாதத் தத்துவ அடிப்படையில் விளக்கு வதற்கு எதிரானதாக உள்ளது. ஆயினும் அம்பேத்கர், சமூகத்தை அடித்தளமாகக் கொண்ட ‘சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பதே தன் இலட்சிய முழக்கம் என்று தன் வாழ்நாள் முழுவதும் கூறிவந்தார். இது புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் (1789) முழக்கமாகும். ஆனால் இம்முழக்கத்தைப் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எடுக்கவில்லை. இம்முழக்கத்தின் மூலவரான புத்தரிடமிருந்து எடுத்ததாக அம்பேத்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் முதலாளிய-பூர்ஷ்வா வர்க்கத்தின் முழக்கமான இதை ஏற்க அம்பேத்கரின் மனம் ஒப்பவில்லை. எனவே இவ்விழு மிய கோட்பாடு பவுத்தத்தில் பொதிந்திருப்பதாகக் கூறினார். இந்தியச் சமூகத்தின் தனித்த தன்மைகளை மனதிற்கொண்டு அம்பேத்கர் இவ்வாறு கூறினார். இதன் அடிப்படையில், மார்க்சு முன்மொழிந்த பொது வுடைமைத் தத்துவத்திற்கு இணையானதாக பவுத் தத்தை முன்னிறுத்த முயன்றார். ஆனால் மார்க்சியம் அறிவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இந்தியச் சமூகத்தை மாற்றியமைப்பதற்கு மாபெரும் தடையாகச் சாதியமைப்பு இருப்பதைக் கண்டார். எனவே சாதியமைப்பை ஒழிப்பதையே தன் முதன்மையான குறிக்கோளாக வரித்துக் கொண்டார். சோசலிசமே தன்னுடைய இரண்டாவது குறிக்கோள் எனக் கண்டறிந்தார். சனநாயகத்திற்கான அடித்தளமாகச் சோசலிசம் திகழும் எனக் கருதினார்.

ஆனால் அம்பேத்கர் காண விரும்பிய சோசலிசம், ஃபேபியன் சோசலிசம் (Fabian Socialism) போன்ற தாகும். அமெரிக்காவில் ஃபேபியன் சோசலிசவாதியாக இருந்த தெவேவிடமிருந்தே இக்கருத்தோட்டத்தை அம்பேத்கர் பெற்றார். ஃபேபியன் சங்கத்தின் (Fabian Society) தாயகமான இங்கிலாந்தில், அம்பேத்கர் உயர்கல்வி பெற்றபோது, ஃபேபியன் சோசலிசக் கருத்து அவரிடம் மேலும் வலுப்பெற்றது. (ஃபேபியன் சங்கம் என்பது இங்கிலாந்தில் சமூக சமத்துவத்தையும் சனநாயகத்தையும் கொள்கையாகக் கொண்ட படிப் பாளிகளாலும் அறிவாளிகளாலும் சேர்ந்து தொடங்கப் பட்ட ஒன்றாகும். இச்சங்கத்தில் பெர்னார்ட்ஷா, எச்.ஜி. வெல்ஸ் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இச்சங்கத்தினர் முன்மொழிந்த கருத்தே ஃபேபியன் சோசலிசம் எனப்பட்டது - மொழிபெயர்ப்பாளர் குறிப்பு).

மார்க்சின் அறிவியல் அடிப்படையிலான சோசலி சத்திற்கு மாறாக, அம்பேத்கர் முன்மொழிந்த சோசலி சம் என்பது நடுத்தர வர்க்கத்தினர்க்கு அறிவு கொளுத்துவதன் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்து வதாகும்; நிலத்தின் மீதும் தொழில் மூலதனத்தின் மீதும் ஆளும்வர்க்கம் கொண்டுள்ள ஆதிக்கத்தை ஒழிப்பதாகும்.

1936ஆம் ஆண்டு அம்பேத்கர் அமைத்த அரசியல் கட்சியின் பெயர் “சுதந்தரத் தொழிலாளர் கட்சி” என்பதாகும். இங்கிலாந்தில் இதேபெயரைக் கொண்ட கட்சியை ஃபேபியன்கள் ஆதரித்தனர். சுதந்தரத் தொழிலாளர் கட்சி, சோசலிசமே தன் குறிக்கோள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தது. சிவப்பு வண்ணக் கொடியைப் பெருமிதத்துடன் தன் கட்சியின் கொடியாக ஏற்றுக் கொண்டிருந்தது.

பின்னாளில், நாடாளுமன்றத்தால் மாற்ற முடியாத தன்மையிலான ‘அரசு சோசலிசம்’ (State Socialism) என்கிற திட்டத்தை அரசியலமைப்பு அவை யிடம் அளித்தார். அம்பேத்கர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் பவுத்தத்தைத் தழுவியதுகூட சோசலிசத் தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகவே கருதினார். பவுத்தம், மார்க்சியம் இரண்டின் இறுதிக் குறிக்கோள் ஒன்றே என்று அம்பேத்கர் கருதினார். மார்க்சியத்தின் வன்முறை வழியையும் சர்வாதிகார ஆட்சி முறை யையும் மார்க்சிய நடைமுறையில் உள்ள குறைபாடுகள் என்று கூறினார்.

அம்பேத்கரின் இறுதியான அறிவுரை:

அம்பேத்கர் கூறியுள்ள - அவர் விட்டுச் சென்றுள்ள கருத்துகள், இவ்வுலகத்தை விளக்குவதாகவோ அல்லது வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என்று உரைப்பதாகவே போன்றதான முறையான ஒரு தத்துவ இயலைக் கொண்டிருக்கிறதா? தலித்துகளின் மேம்பாட்டுக்கான - விடுதலைக்கான அடையாளக் கோட்பாடு என்பதைத் தவிர, இந்தத் தேசிய வினாவுக்கு ‘இல்லை என்பதே நாணயமான விடையாக இருக்க முடியும். இதற்கு மாறாக விடைகாண முயல்வது அவருடைய அடிப்படையான கருத்தோட்டத்தையே சிதைப்பதாக அமையும்.

அம்பேத்கரின் வாழ்க்கையை ஆழ்ந்து ஆராய்ந் தால், அவர் அவ்வப்போது மாறிய சூழ்நிலைக்கு ஏற்பத் தன் செயல்முறைகளையும், உத்திகளையும் மாற்றியமைத்துக் கொண்டேயிருந்தார் என்பதைக் காணலாம். அம்பேத்கரின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான சிந்தனைப் போக்கும் செயல்பாடு களும் ‘அம்பேத்கர் ஏன் இவ்வாறு திடீர் திடீரென்று பல்டி அடித்திருக்கிறார்?’ என்று ஒருவரை அதிர்ச்சிய டையவும் செய்யக்கூடும்! ஆனால், ‘மாறாமலிருப்பது என்பது கழுதைக்கு வேண்டுமானால் பெருமையாக இயல்பாக இருக்கலாம்’என்று ஒரே வரியில் இந்த வினாவைத் தவிடுபொடியாக்கி விடுகிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரிடம் காணப்படும் இத்தகைய மாறுபட்ட மாற்றங்கள் நடை முறைசார்ந்த முன்னேற்றத்திற்கான தத்துவமாகும். அம்பேத்கர் ‘நான் இந்துவாகச் சாக மாட்டேன்’என்று அறிவித்திருந்தார். இந்து மதத்திலேயே தலித்துகள் தொடர்ந்து நீடித்திருந்தால் அவர் களின் இயலாமைகளும் இழிவுகளும் ஒருபோதும் ஒழியாது எனக்கருதியே அம்பேத்கர் இவ்வாறு அறி வித்தார். இருபது ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் நடப்பில் அறியப்படாத மதமாக இருந்த பவுத்த மதத்தில் சேர்ந்து தன் சூளுரையை நிறைவேற்றினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேறிய பின்னர், அரசியல் உத்தியாகக் கூட எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்ள அரசமைப்பு வழங்கியுள்ள சட்ட நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி னார். ஆனால், மிக விரைவிலேயே இந்த அரசமைப் புச் சட்டம் யாருக்கும் பயன் தராது என்று வெளிப் படையாக அறிவித்தார். “அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதில் நான் ஒரு வாடகைக்காரன் போல் பயன் படுத்தப்பட்டேன். இதை எரிக்கின்ற முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று 2-9-1953 இல், மாநிலங் கள் அவையில், முழங்கினார்.

எனவே, அம்பேத்கர் நடைமுறை சார்ந்த செயற் பாட்டாளராக மட்டுமே இருந்தார். ஆனால் தத்துவ நிலையில், “அம்பேத்கரியம்’ என்று சொல்லத்தக்க வகையில் ஒரு முறைப்படுத்தப்பட்ட தத்துவ நெறியை அளிக்கவில்லை. ஏனெனில் மாற்றத்திற்கு இடமளிக்காத ஒரு தத்துவ இயலை அவர் ஏற்கவில்லை. ஆயினும் அவர் உயர்ந்த கண்ணோட்டத்தை, குறிக்கோளை நாம் பின்பற்றுவதற்கான ஒப்பற்ற முன்மாதிரியான வாழ்க்கையை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

அம்பேத்கர் தன்னுடைய நெறியாக - இறுதியான அறிவுரையாக - “கற்பி, போராடு, ஒன்றுபடு” என்ற முழக்கத்தை முன்மொழிந்துள்ளார். இது ஃபேபியன் சங்கத்தின் குறிக்கோளைக் குறிக்கும் முழக்கமாகும். இம்முழக்கத்தை ‘பகிஷ்கிரித் பாரத்’ இதழின் தலைப்பு முழக்கமாக அம்பேத்கர் அச்சிட்டிருந்தார். இதுபோல் இத்தாலி நாட்டின் பொதுவுடைமையாளரான அந் தோனியோ கிராம்ஷி, ‘புதிய நெறி (The New Order) என்ற முழக்கத்தை முன்னிறுத்தியிருந்தார்.

அம்பேத்கரின் இம்முழக்கம், நடைமுறையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன என் பதையும், அம்மாற்றங்களைத் தெளிவாக அறிந்து, அவற்றை எதிர்கொண்டு வெல்லும் வகையில் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. “சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பி! தீமைகளுக்கு எதிராகப் போராடு! அத்தீமைகளை அழிப்பதற்காக அணிதிரள்க!” என்பதே அம்பேத்கரின் முழக்கத்தின் பொருளாகும். அம்பேத்கர் தன்னுடைய முடிவுகளையோ, வழிமுறைகளையோ அவரைப் பின்பற்றியவர்கள் மீது திணிக்கவில்லை. மாறாகத், தன்னுடைய தொண்டர்கள் அவர்கள் வாழுகின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ற தன்மையிலான போராட்ட நடைமுறைகளையும் உத்திகளையும் வகுத் துக் கொள்ளுகின்ற வகையிலான அறிவார்ந்த மக்களாக உருவாக வேண்டும் என்று அம்பேத்கர் எதிர்பார்த்தார்.

அம்பேத்கரைப் பின்பற்றுதல்:

அம்பேத்கரைப் பின்பற்றுதல் என்பது, அவர் காண விரும்பிய, ‘சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்கிற அடிப்படையிலான சமூகத்தைச் சமைத்திட உறுதிபூண்டு, ‘கற்பி, போராடு, ஒன்றுபடு’ என்று அவர் கூறிய அறிவுரையின்படி செயல்பட்டு, அவருடைய குறிக்கோள்களான சாதி ஒழிப்பையும், சோசலிசத் தையும் வென்றெடுப்பதே ஆகும். இதற்கான நம் அறிவுத்தேடலைப் பெருக்கிப் புத்தொளி பெறவேண்டும். மாறாக, கண்ணை மூடிக்கொண்டு பக்திப்பாடல்களைப் பாடும்பசனை செய்வோராக இருக்கக்கூடாது. தன்னுடைய தலைவரை உயர்வாக மதித்துப் போற்றுவதில் தவறில்லை. ஆனால் அவரைக் கடவுளாகக் கருதி வழிபடல் கூடாது. இதை அம்பேத்கரே கண்டித்திருக் கிறார்; எச்சரித்துள்ளார்.

“தன் தலைவரிடம் எல்லையற்ற அன்பையும் மரியாதையையும் கொண்டிருப்பது இயல்பான ஒன்றெனக் கருதலாம். ஆனால் தலைவரின் கட்டளைக் குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுச் செயல்படுவது என்பது வேறு. இரண்டாவது நிலையால் கேடான விளைவுகள் உண்டாகும். உயர்வான எதையும் மதிப்பது நல்ல பண்பாகும். அத்தன்மையில் உயர்ந்த கொள்கைகளையும் பண்பையும் கொண்டுள்ள மனி தனை மதிப்பது தேவையானதுதான். அதற்காக அவரி டம் கண்மூடித்தனமான விசுவாசியாக இருக்கக்கூடாது. தன் சுயமரியாதையை இழந்து தலைவரை வழி படுவது என்பது தன்னையே இழிவுபடுத்திக் கொள்வ தாகும். தலைவரை மதிப்பது என்பது தன் சுய அறிவு டன் சுதந்தரமாகச் செயல்படும் உரிமையை இழக்காத ஒன்றாக இருத்தல் வேண்டும். கண்மூடித்தனமாக வழிபடுதல் என்பது ஒருவனை முழு முட்டாளாக - அடிமையாக ஆக்கிவிடும்.”

“என்னுடைய அறிவுரைகளை ஆராய்ந்து பார்க் காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்; உங்கள் அறிவின் மூலம் தெளிவுபெறுங்கள்” என்று புத்தர் தன் சீடர்களிடம் கூறுவது வழக்கம். புத்தரைப் போலவே அம்பேத்கரும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் - மகாத்மாவாக இருந்தாலும் அவருடைய போதனைகளை - முடிவுகளை ஆராய்ச்சிக்கு உட் படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று தன் தொண்டர்களுக்குக் கூறினார்

“எந்தவொரு உயர்ந்த மனிதனும் தன்னுடைய போதனைகளை அல்லது முடிவுகளைத் தன்னுடைய சீடர்கள் மீது திணித்து அவர்களது அறிவை முடமாக்க மாட்டான். அவ்வாறு திணிக்காமல் இருப்பவரே மிகச் சிறந்த தலைவராவார். அத்தகைய தலைவர் தன்னுடைய தொண்டர்களிடம் பொதிந்துள்ள ஆற்றல் களுக்கு மேலும் பட்டைதீட்டி ஒளிரச் செய்து, எழுச்சியுடன் அவர்கள் தொடர்ந்து செயல்படுமாறு செய்வார். இதனால், சீடர்கள் தம்முடைய தலைவரிடம் அவரு டைய வழிகாட்டுதலை மட்டுமே பெறுவார்கள். சீடர்கள் தலைவரின் முடிவுகளைக் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. தலைவரின் கருத்துகளை அல்லது முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாத தாலேயே தலைவரிடம் மரியாதையும் மதிப்பும் கொண்டிருக்கவில்லை என்று கருதிட முடியாது. அந்நிலையிலும் சீடர் அல்லது தொண்டர் தன் தலை வரிடம் மிகுந்த மதிப்பைக் கொண்டிருப்பார் - ‘என்னுள் உறங்கிக்கிடந்த உணர்ச்சியைத் தட்டி எழுப்பி, அறிவு கொளுத்தி, எழுச்சியுறச் செய்தீர்கள்; அதற்காக நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்ற அளவில் மட்டும்! தலைவனுக்கு இதற்குமேல் பெறு வதற்கு உரிமை இல்லை. தொண்டனும் இந்த நன்றி உணர்ச்சிக்குமேல் தலைவனுக்குக் கடமைப்பட்டவன் அல்லன்” (இரானடே, காந்தி, ஜின்னா என்ற தலைப்பில் அம்பேத்கர் ஆற்றிய சொற்பொழிவு).

எனவே அம்பேத்கர் தன்னுடைய தொண்டர்கள் தன்னை வழிபடும் பக்தர்களாக இல்லாமல், அறி வார்ந்த முறையில், தாமாகவே சிந்தித்துச் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று கருதினார்.

ஆனால் இன்று அம்பேத்கரியவாதிகள், அம்பேத் கரின் இக்கோட்பாட்டிற்கும் - எதிர்பார்ப்புக்கும் எதிரா கவே செயல்படுகின்றனர். அம்பேத்கரியவாதிகள் அவருடைய கருத்துகளை மதிக்காத - புறக்கணிக் கின்ற தன்மையிலேயே செயல்படுகின்றனர். அம்பேத் கரின் முதன்மையான கொள்கைகளான சாதிஒழிப்பை யும், சோசலிசத்தையும் புறக்கணித்துவிட்டு, சாதி அடை யாளத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுகின் றனர். சிலை வணக்க மறுப்பாளராக வாழ்ந்த அம்பேத் கருக்கு, சிலைகளை நிறுவுவதில் போட்டிபோட்டுக் கொண்டு அடிமைப்புத்தியை வளர்க்கின்றனர். அம் பேத்கரிய வாதிகள் குறுகிய நோக்கங்கொண்ட மதவாதி களைப் போல அப்பழுக்கற்ற தூயவடிவான மாபெரும் கடவுளாகக் காட்ட முயல்கின்றனர். அவர்கள் உருவாக்கிய கோயில்களின் கருவறைக்குள் அம்பேத்கரை அடைத்து விட்டனர். அதன்மூலம் எதிர்காலத் தலைமுறையினர் உண்மையான அம்பேத்கரை அறிய முடியாமல் செய்துவிட்டனர்.

இதைப்பற்றி அம்பேத்கரே ஒருமுறை சொன்னார் : “சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் அல்லது மற்ற எவரிடமிருந்தும் நல்ல கருத்துகளை எடுத்துக்கொள்ள நான் எப்போதும் அணியமாக இருக்கிறேன். நான் தவறே செய்யாதவன் என்று நான் கூறமாட்டேன். ஒரு முறை புத்தர் சொன்னார் - தவறு செய்யாத மனிதனோ பிழையில்லாத கருத்து என்பதோ இல்லை; மாற்றமில்லாதது-இறுதியானது என்பது இல்லை; எல்லாமே ஆய்வுக்கு உட்பட்டதுதான் - என்று!”

அம்பேத்கரிய வாதிகள், தங்களுடைய சொகுசான சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, தங்களுக்கு ஆதாயம் தரும் தன்மையிலான ‘’அம்பேத்கரியத்தை’க் கூறுவதற்கு முன்னால், அம்பேத்கரைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான சரியான நேரம் இதுவேயாகும்.

(இக்கட்டுரையின் ஆசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டெ. இவர் மார்க்சிய - அம்பேத்கரிய ஆய்வறிஞர். இவர் எழுதியுள்ள ‘அம்பேத்கருக்குப் பின் தலித் இயக்கங்கள், ‘ஏகாதிபத்திய-எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’(தமிழாக்கம் எஸ்.வி. இராசதுரை) என்கிற நூல்கள் கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை. ஆனந்த் டெல்டும்ப்டெ குறிப்பிடு கின்ற அம்பேத்கரிய வாதிகளைவிட, பெரியாரியல் வாதிகளில் பெரும்பகுதியினர் தங்கள் தன்னலத்திற் காகப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், பெரியாரைக் குறுக்கியும், திரித்தும் காட்டி, உண்மையான பெரியாரைப் புரிந்துகொள்ளவிடாமல் தடுக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டி யதாகும்-மொழி பெயர்ப்பாளர்)

நன்றி : Economic and Political Weekly, May 11, 2013, தமிழாக்கம் க. முகிலன்

Pin It