பொங்குமாங்கடலெனப் பொங்கியெழுந்தனர், பொறுப்புணர்ந்த தமிழக மாணவ மாணவியர்!பொறுப்பாகவும்அமைதியாகவம் போராடி,மகிந்த இராஜபக்சே கும்பலைக் குற்றக் கூண்டிலேற்றுவோம்!போர்க்குற்றத்துக்குத்துணைபோன இந்திய காங்கிரசு ஆட்சியை அகற்றுவோம்!

2009 மே, இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலையைக் கண்ட பின்னர், மனமுடைந்து ஏங்கித்தவித்து,நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த தமிழகத் தமிழரிடையே, 11.3.2013 அன்று, பீறிட்டுப் பொங்குமாங் கடலெனப் பொங்கியெழுந்தனர் பல இலக்கக்கணக்கான தமிழக மாணவ-மாணவியர்!

தன்னெழுச்சியாகத் திரண்டு,தாமே தலைமை யேற்றுத் தறுகணாளர்களாக ஆர்ப்பரித்தனர். தமிழக மாணவச் செல்வங்கள்!

சமூக அக்கறையில்லாதவர்களாக இன்றைய இளைஞருலகம் தடுமாறி நிற்பதாகக் கருதியவர்களின் புரிதல் குறைவைப் பொய்யாக்கிவிட்டு,“இனப்படுகொலை செய்த இராசபக்சேவைத் தூக்கிலிடு!”என்ற கோரிக்கையை முன்வைத்து,நகரந்தோறும், சிற்றூர்தோறும் எழுச்சியுடன் தெருவுக்கு வந்து போராடி,ஒரு புதிய வரலாற்றைப் படைத்துவிட்டனர், தமிழக மாணவ மறவர்கள்; மாணவிய மறத்திகள்!

தமிழகத் தமிழர் தன்னுரிமை அற்றவர்கள்.

இலங்கை வாழ் தமிழீழத் தமிழர் 1983முதல் 26 ஆண்டுக்காலம் ஆயுதம் ஏந்தி - நிறுவப்பட்ட இலங்கை அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

இந்தியாவிலுள்ள தமிழகத் தமிழரை அடிமைகளாக வைத்து -தமிழக ஆட்சியாளர்களை நல்ல அடிமைகளாகப் பெற்று,ஆணவங்கொண்டு,ஈழத் தமிழரை,இலங்கை சிங்களக் காடையர்க்கு -வங்கத்திலிருந்து இடைக்காலத்தில் ஈழத்தில் குடி யேறிய சிங்களவர்களுக்கு அடங்கித்தான் கிடக்க வேண்டுமென்று திட்டமிட்டு,இராசபக்சே அரசுக்கு வேண்டப்பட்ட ஆயுதங்கள், வானூர்திகள், படைத்தலைவர்கள், பொறிகளைப் பழுது பார்ப்போர், போர்ச் செலவுக்கான நிதி இவற்றை 2006 முதல் வாரித் தந்து, தமிழீழத் தமிழர் 1.41 இலட்சம் பேர் பதைக்கப் பதைக்கப் பட்டப் பகலில் கொன்றொழிக்கப்பட எல்லாம் செய்தது இந்திய காங்கிரசுத் தலைமையிலான - சோனியாவின் தலைமையிலான -அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்கிற அயோக்கியர்களின் கூட்டணி அரசு!

இலங்கையில்

(1) இனப்படுகொலை (Genocide);

(2) போர் நெறிக்கு மாறான போர்க்குற்றங்கள் (War-Crimes);

(3) அடைக்கலம் புகுந்தோரை அழித்தொழித்த குற்றம்;

(4) குடும்பத்தலைவனை இழந்த தமிழ்த் தாய்மார்களை, குடும்பப் பெண்களை, விடுதலைப் புலிப்படை வீராங்கனைகளைக் குதறிக் குதறிக் கொன்ற கொடியவர்கள் யார்? யார்?

முதலாவது குற்றவாளிகள் :

மகிந்த இராஜபக்சே

கோத்த பய இராஜபக்சே

பாசில் இராஜபக்சே

தளபதி பொன்சேகா

இரண்டாவது குற்றவாளிகள் :

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

அமைச்சர்கள் : எஸ்.எம். கிருஷ்ணா,

பிராணப் முகர்ஜி, ப. சிதம்பரம்

இதுவே உண்மை.

அதனால்தான்,2012இல் அய்.நா.மானுட உரிமைகள் அவையில் அமெரிக்காவினால் முன்மொழி யப்பட்ட பயனற்ற - போர்க்குற்றம் சாட்டும் தீர்மானத் தைத் திருத்துவது என்ற பேரால், மேலும் அதைப் பயனற்றதாக ஆக்கி, நீர்த்துப்போன-வெற்று வெட்டியான ஒரு தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது.

இப்போது, 2013 மார்ச்சில் அமெரிக்கரால் முன் மொழியப்பட்ட தீர்மான வாசகம், 2012இல் முன்மொழியப் பட்டதைவிடவும் கேடானது; கேவலமானது.

1.இலங்கை அரசு போர்க்குற்றம் செய்ததா என்பதை இலங்கை அரசே ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும் என்பது;

2.வரலாறு காணாத-போர்நெறிக்கு மாறான - மறு தடை செய்யப்பட்ட இரசாயனக் கொத்துக்குண்டுகளை வீசிக் கும்பல் கும்பலாக 2009 மே 17, 18, 19 ஆகிய நாள்களில் 41,000 தமிழீழத் தமிழர்கள் உயிரோடு கொல்லப்பட்டதைப் படம்பிடித்து உலகுக் குக் காட்டுவோரின் சாட்சியங்கள் புனையப்பட்ட வை என்று உலகுக்குக் கூறிவிட்டு, போர்க் காலத் துக்குப் பிறகு இந்திய அரசும் - இலங்கை அரசும் இணைந்து செய்துள்ள அற்பமான நிவாரண - மறுவாழ்வுப் பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவிப் பதே, 2013 அமெரிக்கத் தீர்மானம்.

போர்க்குற்றம் சாற்றப்பெற்று வழக்குத் தொடுக் கப்படுவதற்குள்,போர்க்குற்ற ஆவணச் சான்றுகளை அழித்து - இரசாயனம் கலந்து புதைக்கப்பட்ட கொலை யுண்ட தமிழர்களின் உடல்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் வரையில், உலக மக்களுக்குப் போக்குக் காட்டி,போர்க்குற்றத் தடயங்களை அழித்து விட வேண்டும் என்பதுதான் அமெரிக்கா - இலங்கை - இந்திய அரசுகளின் சதியில் அடங்கியுள்ள சூதான திட்டம்.

இவை பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள்!

தமிழகத் தமிழரும்,தமிழீழத் தமிழரும்,புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும் பிற தமிழரும் உணர்வோடு ஒன்றுபட்டு,உருப் படியான ஒரு வழியைக் கண்டு,உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.ஊ.ஊ.)வழக்குத் தொடுக்கப்பெற்று,இராஜபக்சே கும்பலினர் கைது செய்யப்பட்டுக், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட் டால்,“தாங்கள் போரை வெற்றியாக நடத்திடத் துணை நின்றவர்கள்இந்திய அரசினர்தாம்”என்று,உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், இராஜபக்சே கும்பலினர் சொல்லியே தீருவர். இது உறுதி.

எனவேதான்,இனப்படுகொலையையும் போர்க் குற்றத்தையும் இழைத்த முதலாவது குற்றவாளி,தனக்குத் துணைநின்ற இரண்டாவது குற்றவாளியாகிய தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்கிற ஒரே அச்சத் தால் -அந்த ஒரே காரணத்தால் தான்,இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் மேலும் மேலும் நீர்த்துப் போகச் செய்தது;இனியும் இந்தியா அதையே செய்யும்.

இப்படிப்பட்ட மாபெரும் இனப்படுகொலை,போர் மரபு மீறிய போர்க்குற்றம் புரியஇலங்கைக்குத் துணை போன இந்திய-சோனியா காங்கிரசின் தலைமையி லான கூட்டணி ஆட்சி இனி ஒரு கணமேனும் இங்கு நீடிக்கலாமா? நேர்மையும்! வீரமும்! அறிவும்! திறமும்!உள்ள தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியினரும்,அக்கட்சிக்குத் துணைபோனவர்களும் சிந்தியுங்கள்!

1.இராஜீவ்காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படை யால் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டது முதலில் நடந்தது.பல ஆயிரம் ஈழத் தமிழ்த் தாய்மார்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதுதான் முதலில் நடந்தது.

2.இந்திய அமைதிப்படை வீரர்களால் கடித்துக் குதறப்பட்ட தமிழ்ப் பெண்மணி தாணு இராஜீவ்காந்தியைக் கொன்றது இரண்டாவதாகத்தான் நடந்தது.

இராஜீவ்காந்தி உடல் மட்டும் தங்க மரம்.

தமிழச்சி தாணுவின் உடல் மரக்கட்டையா?

இராஜீவின் உயிர் கோடி கோடி பெறும்.

தமிழீழத் தமிழர்களின் உயிர் சுடப்பட்ட மயிரா? சாம்பலா?

ஓர் இராஜீவின் உயிர் போனதற்காக -சண்டாளக் காட்டுமிராண்டி -புத்தமதக் கோலம் பூண்ட கொலை காரன் இராஜபக்சேவுக்குத்,துணைக் கொலையாளி யாகப் போவதற்காகவா, இந்தியாவை காங்கிரசுத் தலைமையிலான அணி ஆள வேண்டும்?

காமராசர் ஆட்சியை அமைப்போம்” எனக் கழறும் கற்றுக்குட்டித் தமிழகக் காங்கிரசுத் தோழர்களே!

பெருந்தலைவர் காமராசரை வீழ்த்திய நன்றி கொன்ற காங்கிரசு நாயகி யார்? இந்திராகாந்தி அம்மை யார் அல்லவா?

1966இல் தன்னைப் பிரதமராக ஆக்கிட எல்லாம் செய்த மாபெருந்தலைவர் காமராசரின் ஈகத்தை - தகைசான்ற/தலைமையை எப்படி வீழ்த்தினார் இந்திராகாந்தி?

தந்தை பெரியார் அவர்கள் 31.7.1969இல் குட லிறக்கம், மூத்திரக் குழாய் பழுதுநீக்கம் கருதி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அறுவை செய்து கொண்டார்.

அதுசமயம் நடைபெறவிருந்த குடிஅரசுத் தலைவர் தேர்தலுக்கு உரிய காங்கிரசுக் கட்சி வேட்பாளராக, நீலம் சஞ்சீவி ரெட்டியை முன்மொழிந்தவர், இந்திராகாந்தி.

அதே இந்திராகாந்தி,கட்சிக் கட்டுப்பாட்டை அடியோடு மீறி, வி.வி. கிரி என்கிற மூன்றாந்தரப் பார்ப்பனரை வேட்பாளராக நிறுத்தினார்.

எப்படியாவது காங்கிரசுக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உறுதிபூண்ட காமராசர், 11.8.1969 அன்று, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்து, தந்தை பெரியாரைக் கண்டு நலம் உசாவிவிட்டு,நீலம் சஞ்சீவி ரெட்டி வெற்றிக்கு உதவியாக, சட்டமன்ற தி.மு.க.உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுத்தரும்படி,பெரியாருக்கு வேண்டு கோள் வைத்தார்.பெரியார்தி.மு.க.தலைவர் கலைஞருக்குத் தூது போக்கினார்.அய்யாவுக்கு அகில இந்திய அரசியல் பற்றித் தெரியாது.இதில் தலையிட வேண்டாம்...”என்பது தான்     தூதுபோனவர் மூலம், பெரியார் பெற்ற விடை.

முடிவு என்ன?காமராசர் 11.8.1969இல் பெரியா ரை அணுகினார்.அதை அறிந்த இந்திராகாந்தி, 16.8.1969 இரவு கலைஞர் கருணாநிதியை நேரில் நாடினார். அவரும் இந்திராகாந்தி வயப்பட்டார்.

சட்டமன்ற தி.மு.க.வாக்குகள் மட்டுமே சஞ்சீவி ரெட்டியை வீழ்த்தின.... இல்லை; காமராசரை வீழ்த்தின.அதே இந்திராகாந்தி தான்-கலைஞரைக் கொண்டு காமராசரை 1969இலேயே வீழ்த்திவிட்டு,31.1.1976இல்கலைஞரை வீழ்த்தினார்;பொய்க் குற்றஞ்சாட்டி வீட்டுக்கு அனுப்பினார்.

இப்படி வீழ்த்தப்பட்ட தமிழகக் காங்கிரசு எத்த னை ஞானசேகரன்கள் வந்தாலும்,எத்தனை இளங் கோவன்கள் கதறினாலும் - இனி, தமிழ்நாட்டில் குப்பைகொட்ட முடியாது.

இனி இந்தியாவில் காங்கிரசுக் கட்சி ஆட்சி புரிய வழிவிடுகிற எவரும் தமிழர் - தமிழ்நாடு - தமிழ் நலம் காப்பவர் ஆக மாட்டார்.அதேபோல் தமிழ் ஈழத் தமிழர் நலம் காப்பவர் ஆகமாட்டார்; ஆகவும் முடியாது.

இப்படி எழுதுகிற நான், யாரோ அன்று. தலைவர் காமராசரை நன்றாக அறிந்தவன். 2.10.1975 மதியம் மறைந்த அத்தலைவரிடம், 30.9.1975 மாலையில் நேர்காணல் செய்து, பெரியாரைப் பற்றியும், பெரி யாரின் சுயமரியாதை இயக்க எதிர்காலம் பற்றியும் அவருடைய கருத்தை முதன்முதலில் பதிவு செய்த வன், நான். நிற்க.

இன்று தமிழகத் தமிழர்,தமிழீழத் தமிழர்,உலகத் தமிழர் முன் உள்ள உயிரான சிக்கல்கள் எவையெவை?

1.தமிழீழத் தமிழரை இனப்படுகொலை செய்த - உலக மரபு மீறிய போர்க்குற்றங்களைச் செய்திட்ட மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே, பாசில் இராஜபக்சே, தளபதி பொன் சேகா ஆகிய கொலைகாரர்களை “இனப்படுகொலை”செய்தது-போர்க்குற்றங்கள் இழைத்தது என்பதற்காக உலக நீதிமன்றங்களில் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கப்பட ஆவன செய்ய வேண்டும்.

2.தமிழீழத் தமிழர்க்குத் தன்னுரிமைத் தமிழீழம் வந்துசேர நம்மாலான எல்லாம் செய்தல் வேண்டும்.

முதலாவது குறிக்கோள் நிறைவேற்றப்பட, எந்த நீதிமன்றத்தை அணுகுவது?

உலகஅளவில் அய்க்கிய நாடுகள் அவையினால்,1945இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமைக் கப்பட்டது “அனைத்து நாடுகளுக்கான நீதிமன்றம்”(International Court of Justice - ICJ)

இம்மன்றம் 15 நீதிபதிகளைக் கொண்டது. ஒவ் வொரு நீதிபதியின் பதவிக்காலம் ஒன்பது ஆண்டுகள்.இந்த நீதிமன்றத்தில், ஒரு நாடு என்பது தான் வழக்கைப் பதிவு செய்ய முடியும்.

நமக்கென உள்ள தமிழ்நாடு -சட்டப்படி ஒரு நாடன்று.இந்தியாவே சட்டப்படி நமக்கும் நாடு.தமிழீழத் தமிழருக்கும் இன்று ஒரு நாடு இல்லை;இலங்கையே இன்று அவர்களின் நாடு.

தமிழகத் தமிழரின் நாடான இந்தியா வழக்குத் தொடுக்கலாம்.ஆனால் உண்மையில் நாம் சாற்றும் குற்றத் தைச் செய்த இரண்டாவது போர்க்குற்றவாளியான இந்தியாவிடம்.நாம் -நம் கொலைகாரனிடமே நியாயம் கேட்கிறோம். அது நமக்குள்ள புரியாமை.

இன்னொரு நாடான பிரிட்டன் அல்லது கனடா வழக்குத் தொடுக்கலாம்.இது பற்றியெல்லாம் எந்தத் தமிழ்த் தலைவரும் சிந்திக்கவில்லை. அவ்வளவு வீரம் ( ! ) செறிந்த  கேடர்கள் தமிழர்களாகிய நாம்.

அப்படியே வழக்குத் தொடுத்தாலும், (1) தீராத சிக்கல்களைத் தீர்த்து வையுங்கள் என்று ஒரு நாடு தான் வழக்குத் தொடுக்கலாம்.(Only States may be parties in contentious issues) என்பது விதி.

(2) அறிவுரை வழங்கக் கோரி தன்னுரிமை கோரும் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கலாம்.ஆனால் இந்த நீதிமன்றம் வழங்கும் அறிவுரை என்பது கொள்கை அளவில் ஓர் ஆலோசனையாக மட்டுமே இருக்கும். ஆனால் அந்த ஆலோசனை பெரிதும் மதிக்கப்படுவதாகவும் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கும் (In principle the court's advisory opinions are consultative in character, but they are influential and widely respected).

எனவே இந்த நீதிமன்றம்

(1)இனப்படுகொலைக் குற்றம்;

(2) போர்க்குற்றங்கள் பற்றிய வழக்குகளை நடத்தித் தீர்ப்பு வழங்க முடியாது. இந்நீதிமன்றம் அய்.நா.வின் ஓர் உறுப்பு.எனவே இதன் தீர்ப்பை அய்.நா.பாதுகாப்புக் குழுமம் (U.N.Security Council) இரத்துச் செய்ய அதிகாரம் உண்டு.

ஆகவே இது நமக்கு உதவ முடியாது. பின், யார்தான் உதவ முடியும்?

அனைத்து நாடுகள் குற்றவியல் நீதிமன்றம் (InternationalCriminal Court-ICC)என்பது நமக்கு உதவ முடியும்.

இது,1.7.2002இல் நிறுவப்பட்டது;நெதர்லேண்ட்நாட்டின் தலைநகரான TheHague -தி ஹேக் என்கிற இடத்தில் அமைந்துள்ளது; இது அய்.நா. - அவைக்குக் கட்டுப்படாதது.

“பொதுவாக அய்.சி.சி. (ICC or ICCt) என்று அழைக்கப்படும் அனைத்து நாடுகள் குற்றவியல் நீதி மன்றம் இனப்படுகொலை செய்ததற்காகவும்,மனித உரிமைகளை மீறியதற்காகவும், போர்க்குற்றங் களைச் செய்ததற்காகவும்,நாட்டின் மீது தாக்குதல் தொடுத்ததற்காகவும் தனிப்பட்ட நபர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்காகச் செயல் படுகிற (இதுபற்றி 2017 வரை நடவடிக்கை மேற்கொள்ள இயலாது) ஒரு நிரந்தர ஆணையம் ஆகும்.

(The International Criminal Court - commonly referred to as the ICC or ICCt is permanent tribunal to prosecute individuals for genocide, crimes against humanity, war crimes, and the crime of aggression ,although it cannot , until atleast 2017 , exercise jurisdiction over the crime of aggression ) என்பதே, இதன் அறிமுகத் தொடர்களாகும்.

இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகளைப் பற்றி -சீனாவும் இந்தியாவும் குறைகூறுகின்றன. அவ்வளவு தான்.

இதன் விதி 5 (article 5) கூறுவதாவது :

ரோமானியச் சட்டவிதிகள் எனப்படும் விதி 5என்பது-நான்கு வகையான குற்றங்களுக்காக நடவடிக் கை எடுக்க அதிகாரம் படைத்தது.அனைத்துலக மானுடத்துக்கு எதிராகக் குற்றம் செய்வது மிகவும் கொடுமை யானது என்றும்,அக்குற்றங்களாவன இனப்படு கொலைக் குற்றம், மானுட உரிமைக்கு எதிரான குற்றம்,போர்க்குற்றங்கள், மற்றும் அந்நிய நாட்டினைத் தாக்குதல் போன்றவையாகும்....இனப்படுகொலைக் குற்றம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் அது ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்ற (தீய நோக்குடன்) திட்டமிட்டுச் செய்யப்படுவதாகும்..... என்றும் அவ்விதி கூறுகிறது.

இவ்வளவு பாரிய-கொடிய குற்றங்களை இழைத்த உண்மையான குற்றவாளிதான் மகிந்த இராஜபக்சே என்பது, 100க்கு 200 பங்கு உண்மையாகும். ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன்,ஈழத் தமிழ்ப் பொது மக்களைக் கொன்று குவித்த கொடியவன் இராஜபக்சே. எனவே இக்குற்றங்களுக் காக அவனைக் கைது செய்யவும், கூண்டில் நிறுத்தி விசாரிக்கவும், உரிய தண்டனை அளிக்கவும் இந்த ஒரு நீதிமன்றத்துக்கே அதிகாரம் உண்டு.

இந்தக் குற்றத்தைச் சாற்றி வழக்குப் போடுவது யார்?

1.குற்றம் புரிந்தவர் ஒரு நாட்டைச் சார்ந்தவராக (State) இருக்க வேண்டும். அந்த நாடு இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுக்கொண்ட நாடாக இருக்க வேண்டும்.

2.குற்றம் இழைக்கபட்ட இடம் எந்த நாட்டைச் சார்ந்ததோ, அந்த நாடு இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்றுக்கொண்டதாக இருக்க வேண்டும்.

3.அப்படிப்பட்ட குற்றம் புரிந்ததைப் பதிவு செய்து விசாரிக்கும்படி அய்.நா. பாதுகாப்புக் குழுமம் U.N.Security Council உடை கோரலாம்.

மற்றும் எவரெவர், இதுபற்றி, இந்த நீதிமன்றத்தில் வழக்கிடலாம்?

இந்தநீதிமன்றத்தில் உள்ள கைது நடவடிக்கை அதிகாரிக்கு (Prosecutor)

*ஓர் அரசு வழக்குத் தொடுத்தால்;

*உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கருதி, அய்.நா. பாதுகாப்புக் குழுமம் நடவடிக்கை கோரினால்;

*விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னர் செயல் பட அதிகாரம் படைத்த (Pre-Trial Chamber) அமைப்பினர்-தாங்கள் தனிப்பட்டவர்கள் அல்லது அரசு சாராத நிறுவனங்கள் போன்றவை அளிக் கும் தகவல்களின் அடிப்படையில்,கைது செய்யும் அதிகாரம் படைத்தவரை அணுகி, விசாரணை நடத்திக் குற்றவாளியைக் கைது செய்யக் கோரினால் - அப்போது கைது செய்யும் அதிகாரம் படைத்தவர் நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

என் புத்திக்கு எட்டியவரையில்

(1) 2006 ஆகஸ்டு முதல் 19.5.2009 வரையில் உலகில் உள்ள ஊடகங்களில் இலங்கைப் போரைப் பற்றி வெளிவந்த செய்திகள்;

(2) 2009 மார்ச்சு 1 முதல் 19.5.2009 முடிய கிளி நொச்சி, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட கொடிய தாக்குதல்களும்,நடத்தப்பட்ட கொலைகளும் பற்றிய செயற்கைக்கோள் படங்கள்;

(3) பிரிட்டன் வெளியிட்ட சேனல்-4 படுகொலைக் காட்சிப் படங்கள்;

முதலானவற்றை, அய்.நா. மானிட உரிமைக்காப்பு அமைப்பு அல்லது உலக அளவில் உள்ள வேறு மானுட உரிமைக்காப்பு நிறுவனம் மூலம் விவரங்களைக் கூறி, அதன் பேரில் மகிந்த இராஜபக்சே கும்பல் மீது,கைது மற்றும் விசாரணை நடத்த முடியும் என நான் நம்புகிறேன்.

இவ்வளவு சட்டச் சிக்கல்களையும் எதிர்நோக்கி யுள்ள தமிழராகிய நாம்,நம் நாட்டுத் தமிழர்களுக்கு எழுச்சியையும் ஆத்திரத்தையும் எழுப்புவதற்கான செய்கைகளைச் செய்வது மட்டும் போதாது.

1.இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும்;

2.அய்ரோப்பாவின் எல்லா நாடுகளிலும்;

3.குறிப்பாகப் பிரிட்டனிலும், நார்வேயிலும், கனடாவிலும் உள்ள நாடாளுமன்றங்களுக்கும், நாடாளு மன்ற கட்சிகளின் தலைவர்களுக்கும்,மானுட உரிமைக் காப்பாளர்களுக்கும், தேசிய இன விடு தலைப் போராட்டக் குழுவினர்க்கும்,இவ்எல்லா நாடுகளின் அறிஞர்களுக்கும், ஊடகங்களுக்கும்,பொது மக்களுக்கும் தமிழீழ இனப்படுகொலை பற்றிய எல்லாச் செய்திகளையும் நாம் தமிழ் நாட்டுத் தமிழரும்,தமிழீழத் தமிழரும் தலை மேல் சுமந்து சென்று பரப்ப வேண்டும்.

ஈழத் தமிழரைக் கொன்று குவிக்க இராஜபக் சேவுக்குத் துணை போன காங்கிரசு அரசை உடனே அகற்ற வேண்டும்.

127 ஆண்டைய வரலாறு படைத்த - மாபெரும் அமைப்பான காங்கிரசுக்கு - எந்த ஈகமும் செய்தறி யாத ஓர் அந்நிய நாட்டுப் பெண்மணி தானைத் தலைவராக இருப்பது அவமானம், அநீதி என்பதை காங்கிரசுக் குருடர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.தமிழ்நாட்டில் காங்கிரசைத் துடைத்தெறிய  வேண்டும்.

“அண்ணன் எப்போது சாவான் - திண்ணை எப்போது காலியாகும்” என ஏங்கித் தவிக்கும் - இந்துத்துவக் கட்சிகள்,இந்தியாவில் எப்போதும் பதவிக்கும்,சமூகச் செல்வாக்குக்கும் உரியவர்களாக ஆகாமல் தடுத்தே தீரவேண்டும்.

இந்தியா ஒரே நாடு - இந்தியர் ஒரு தேசிய இனம் என்று கூவும் போலிப் பொதுவுடைமைக் கட்சிகளும்; பதவி, பணம், சாதிப் பெருமை காத்தல் இவற்றுக்காக உள்ள வாக்குவேட்டை கட்சிகளும் மக்களிடமிருந்து அப்புறப்படுத்தப்படும் பணியை -பொங்கு மாங்கட லெனப் பொங்கி எழுந்து போராடும் இன்றைய மாணவ இளைஞர்படை இன்றும், நாளையும், என்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

வாரீர்!வருங்காலத் தமிழகத் தலைவர்களே வாரீர்!என,நெஞ்சம் நிறைந்த பூரிப்புடன் இளைஞர்படையை அழைக்கிறோம்! வேண்டுகிறோம்!

Pin It