முக்கனியில் முதற்கனியே!

தித்திக்கும் தீங்கனியே

மாலைவெய்யில் பொன்நிறத்தை

மாங்கனியே பெற்றாயோ?

கோவைக்கனி மூக்கழகே!

கொஞ்சும்மொழி பேச்சழகே

பச்சைவண்ண நெல்வயலின்

பட்டுடுத்தி வந்தாயே?

சிவந்தநிற செம்பருத்தி

சிரிக்கின்றாய் காலையிலே

கடலில்தோன்றும் செங்கதிரைக்

கண்டோநீ சிவப்பானாய்?

கொடிமலரே! கருவிளையே!

கொள்ளைகொள்ளும் பேரழகே!

நீலவான் ஆடைகண்டோ

நீலஉடை உடுத்திக் கொண்டாய்?

மலர்களிலே முதன்மலரே!

மணம்பரப்பும் மல்லிகையே!

மார்கழியின் பனிநிறத்தை

மலரே நீ பெற்றாயோ?

மாங்குயிலே இசையரசி

மறைந்து நின்று பாடுவதேன்?

கார்முகிலின் கருநிறத்தை

கவிக்குயிலே பெற்றாயோ?

சித்திரையின் கத்திரியே

செடியில்பூக்கும் கவின்மலரே

வானவில்லின் ஊதாவை

வாங்கிவந்தோ நீபூத்தாய்?

Pin It