திருச்சி து.மா. பெரியசாமி துறையூரில் வாழ்ந்து, திருச்சிக்குக் குடியேறியவர். தமக்கென ஒரு நிரந்தரத் தொழிலைப் பெற்றிருந்தவர். துறையூர் பி.ரெங்கசாமி ரெட்டியார் என்கிற வழக்குரைஞரின் உதவியாளராகத் திறம்படச் செயல்பட்டவர்;வழக்குரைஞரும் பெரியாருக்குத் தெரிந்தவர்.

எனவே து.மா. பெரியசாமி முனைப்பாக இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட, வழக்குரைஞரும் துணையாக இருந்தார்.

1957 நவம்பர் 26 சட்ட எரிப்புப் போராட்டத்துக்கு முன், திருச்சியில், தேவர் மன்றத்தில் நடைபெற்ற தி.க. மாணவர் மாநாட்டில்தான் நாங்கள் இருவரும் நன்கு அறிமுகம் ஆனோம்.

1963இல் என் பொறுப்பில் திருச்சியில் தமிழ்நாடு தனிப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை நிறுவினேன்.தெப்பக்குளம் வடகரையில் என் கல்லூரி;மேற்குக் கரையில் நோபிள் கு. கோவிந்தராசலு அச்சகம்;பக்கத்து வடக்கு ஆண்டார் தெருக்கோடியில் பெரியசாமியின் வீடு. எனவே நாங்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து இயக்கம் பற்றிப் பேசுவோம்.

அப்போதெல்லாம்,ஒருவரின் மேடைப் பேச்சைப் பதிவு செய்வது என்பது அதிகம் பரவவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சலிப்பின்றிப் பெரியாரின் பேச்சுகளைப் பதிவு செய்து, (தம் சொந்தச் செலவில்) ஒரு மதிப்பு மிக்க ஆவணத்தை உருவாக்கிய முதலாமவர் அவர் தான். அது ஓர் ஈடற்ற பணி.

அதேபோல்,“பெரியாரைத் தலைப்புவாரியாகப் பேசச் செய்ய வேண்டும்”என்ற நோக்கத்திலும், அவற்றைத் திரட்டி நூலாக வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளோடும் 7.3.1970இல் உருவாக்கப்பட்டது- தான் “திருச்சி சிந்தனையாளர் கழகம்”. வே. ஆனை முத்து, து.மா. பெரியசாமி, ச. சோமு, நோபிள் கு.கோவிந்தராசலு ஆகியோரே அதன் நிறுவனர்கள். அதன் தலைவராக சே.மு.அ.பாலசுப்பிரமணியம்,செயலாளர்களாக து.மா.பெரியசாமி, வே.ஆனைமுத்து, பொருளாளராக நோபிள் கு. கோவிந்தராசலு ஆகியோர் செயல்பட்டோம். உறையூர் கோ. முத்துகிருஷ்ணன், பெரியார் மாளிகை ச. சோமு, தேவதானம் தி.க. சுப்பய்யா, உறையூர் இரா. கலியபெருமாள் ஆகியோர் முனைப்போடு செயல்பட்டோம். சே.மு.அ.பா. மறைவை அடுத்து, பொறிஞர் கு.ம. சுப்பிரமணியன் தலைவர் ஆனார்.

இவர்கள் எல்லோரும் ஈடு இணையற்ற உழைப்பை ஈந்து,அன்பில் பெ.தருமலிங்கம் துணையுடன், பெரியாரின் பூரிப்பான ஒப்புதலுடன் “பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்” நூல் - 1.7.1974இல் வெளியிடப்பட்டது.

பெரியாரின் மூன்று நிகழ்ச்சிகளிலான இறுதிச் சொற்பொழிவுகளைப் பொறுப்புடன் -பதிவு செய்ததி லிருந்து எடுத்தெழுதித் தந்து,அவற்றை முதன் முதலில் “பெரியார் சிந்தனைகள்” நூலில் வெளியிட வாய்ப்பைத் தந்த நல்ல தொண்டினை ஆற்றியவர் து.மா.பெரியசாமி ஆவார்.

தம் முதலாவது துணைவி, எதிர்பாராமல் ஒரு நேர்ச்சிக்கு ஆளாகி மறைந்ததினால், மறுபடி இரண்டாம் திருமணம் பெற்றார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு,சிறிது காலம் பெரியார் சமஉரிமைக் கழகத்தில் செயல்பட்டார். நாங்கள், இரண்டாவது தடவையாக,வடக்குநோக்கி பீகாருக்குப் பயணம் போனபோது, 14.9.1978 முதல் 23.10.1978 முடிய பீகார் பரப்புரைப் பயணத்தில் தோன்றாத துணையாக விளங்கினார்.

பின் திராவிடர் கழகத்தில் முழுமூச்சாகச் செயல் பட்டாலும், அவரும் நானும் தாம் திருச்சி சிந்தனையாளர் கழகச் செயலாளர்கள்;கட்சி வேறுபாடுகளை நாங்கள் சிறிதும் கருதவில்லை.

பெரியாரை நிலைக்க வைத்திட-பெரியாரின் பேச்சை முழு உருவில் கேட்டிட,தமிழர்க்கு அவர் செய்துள்ள தொண்டு அளப்பரியது.

அன்னாரின் இழப்பால் துன்பத்துக்கு ஆளாகியுள்ள அவர்தம் துணைவியார் பத்மா, மூத்தமகன் தமிழ்மணி,இளைய மகன்கள்,மகள் ஆகியோர்க்கும் தி.க.தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை மா.பெ.பொ.க.சார்பிலும்,என் குடும்பத்தார் சார்பிலும் கசிந்த மனத்துடன் உரித்தாக்குகிறேன்.

வளர்க து.மா. பெரியசாமி புகழ்!

Pin It