ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு பண்பாடு அடையாளமாக இருந்து வருகிறது. சமூகத்தின் இயங்கியலுக்கு பண்பாடு அடையாளமாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது.
தமிழர்களின் பண்பாடு திணை சார்ந்ததாக, பண்டைத் தமிழகத்தில் இருந்தது. அறம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்களைத் தன்னுள் அடக்கியிருந்தது சங்க இலக்கியம். பின்னாளில் ஆரியர் ஆதிக்கம் காரணமாக, வருணாசிரமக் கோட்பாடு தலைதூக்கியது. தமிழர்களின் ஒற்றுமை சிதைக்கப்பட்டது. தமிழர்கள் ஜாதிகளாய்ப் பிரிந்தனர். ஜாதி சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் கவனம் பெறத் தொடங்கின. என்றாலும் தமிழர்களை ஒன்றிணைக்கும் பண்பாட்டு அடையாளங்கள் இல்லாமல் போகவில்லை. அதனைத் தமிழருக்கு உணர்த்தி, தமிழரைத் தலைநிமிரச் செய்ததே பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி. பெரியாரின் அத்தகைய பணிகளை விவரிப்பதே இந்நூலின் நோக்கமாக அமைந்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தந்தை பெரியாரைப் பற்றி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆற்றிய சொற்பொழிவே இந்நூலாக வடிவம் பெற்றுள்ளது. தமிழினத்திற்குத் திராவிடர் என்ற அடையாளத்தை வழங்கியதே பெரியாருடைய பண்பாட்டுப் புரட்சியின் தொடக்கம் என்கிறார் நூலின் ஆசிரியர்.
மானுடப் பற்றையே முதன்மையாகக் கொண்ட பெரியார், திராவிடர், தமிழர், தமிழர்தம் மொழி, பண்பாடு ஆகியவை குறித்துப் பேசியது சுயமுரண்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் அளித்துள்ளது இந்நூல்.
”ஒரு மனிதனை அவனிருக்கும் சிறையிலிருந்து விடுதலை செய்துகொண்டு வர வேண்டும் என்று விரும்பும் எவரும், முறைப்படி அவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அதே வழியில், அதே வழியின் மூலம்தான் வெளியே கொண்டு வர வேண்டும். அதை விடுத்து வேறு வழிகளில் வந்தால் அந்த விடுதலை அவனுக்கு நீடிக்குமா? நிலைக்குமா?” எனவேதான் பண்பாட்டுப் புரட்சி என்பது அவசியமாகிறது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்து, அவற்றின் அவசியத்தைத் தமிழருக்கு உணர்த்தியவர் பெரியார். அறிவுக்கு ஒவ்வாத ஆபாசக் கதைகளைக் கொண்ட தீபாவளியினைத் தமிழர்கள் கொண்டாடுவதைக் கைவிட்டு, உழைப்பின் அருமையை உணர்த்தும் அறுவடைத் திருவிழாவான பொங்கலைக் கொண்டாடச் சொன்னார் பெரியார்.
புராணக் குப்பைகளை ஒதுக்கி வைக்கச் சொன்ன பெரியார், திருக்குறளைக் கொண்டாடினார். திருக்குறள் மாநாடு நடத்தினார். புலவர் வீட்டுப் புத்தக அலமாரியில் இருந்த திருக்குறளைத் தமிழர்கள் இல்லந்தோறும் கொண்டு போய்ச் சேர்த்தார். இசை மேடைகள் அனைத்தும் பார்ப்பனர்களால் ஆதிக்க்ம் செலுத்தப்பட்டபோது, தமிழிசையை வளர்ப்பதே தமிழர் கடமை என்ற பிரச்சாரத்தைக் கையில் எடுத்தார்.
சுயமரியாதைத் திருமணங்கள் என்ற புதிய முறையைப் புகுத்தி, அடிமைத்தனம் ஊட்டும் பார்ப்பனியச் சடங்குகளில் இருந்து தமிழர் மீட்சி பெற வழிவகை செய்தார். இதுதான் பெரியார் நிகழ்த்திய பண்பாட்டுப் புரட்சி. அது ஜாதி, மதங்களைத் தாண்டிய புரட்சி! தமிழர் என்ற அடையாளத்தை மீட்டெடுத்த புரட்சி! இவற்றைக் குறித்து விரிவாக விளக்கும் இந்நூலை நாம் அனைவரும் படித்துப் பயனுற வேண்டும்.
நூல் : பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி
ஆசிரியர் : கி. வீரமணி
வெளியீடு : பெரியார் சிந்தனை உயராய்வு மையம்.
விலை : ரூ.100