அடடா! எம் மாணவர்கள் அசத்தி விட்டீர்

அடலேறு நாங்களெனக் கொதித்து விட்டீர்

எடடா! எம் பகைவர்காள் ஓட்டம் என்றே

எத்தனித்துப் போர்க்களத்தில் புகுந்து விட்டீர்

அடங்காத நெருப்பெங்கள் நெஞ்சம் என்றே

அணிதிரண்டு அவனிக்குக் காட்டி விட்டீர்

முடங்காது ஒருபோதும் தமிழர் வீரம்

முரசறைந்து செவிப்பறையைக் கிழித்து விட்டீர்

அலைஅலையாய் திரண்டுவந்து தெருவில் நின்றீர்

ஆர்ப்பரித்தீர் முழக்கமிட்டீர் அடியும் பட்டீர்

குலைநடுங்க வைத்தகொடும் ராஜ பக்சே

குற்றமெல்லாம் உலகுக்குப் புரிய வைத்தீர்

தலைகவிழ்ந்து நின்றுஅவன் வெட்கிச் சாகத்

தக்கநேரம் ஒன்றுபட்டீர் குரல்கொ டுத்தீர்

உலைக்களத்து நெருப்புகளே! உறங்கா நீங்கள்

உண்ணாநோன் பிருந்தும்மை வருத்திக் கொண்டீர்

அன்றொருநாள் அருந்தமிழர் நாட்டுக் குள்ளே

ஆரியத்து இந்திதனைத் திணித்த போது

வென்றிடுவோம் பகைதன்னை என்றே சொல்லி

வீரமுடன் மாணவர்கள் கிளர்ந்து நின்றார்

இன்னுயிர்கள் பலதந்து இந்திப் பேயை

இங்கிருந்து விரட்டிவிட்டார்! வெற்றி கண்டார்

இன்றுமது போலன்றோ இனத்தைக் காக்க

ஈகங்கள் பலசெய்யத் துணிந்து விட்டார்.

மானமின்றி மதுவுக்கும் மயக்கும் காதல்

மடமைக்கும் வெண்திரைக்கும் அலைபே சிக்கும்

மாணவர்கள் திசைமாறிச் சென்றா ரென்று

மனதுக்குள் ஒருவருத்தம் இருந்த துண்டு

ஈனமானம் அற்றவர்கள் அல்ல எம்முள்

இருக்கிறது உணர்வென்று காட்டி எம்மை

வானளாவப் புகழவைத்தீர் இனிமேல் இங்கு

இனம்வாழும் மொழிவாழும் ஈழம் வாழும்

Pin It