முத்தமிழ்ச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார்” என்னும் தலைப்பில் அவர் பற்றிய ஒரு கருவூலத்தை, ஆவணத்தை ஒரு நூலாகத் தந்துள்ளார் ஆசிரியர் கலைமாமணி பூங்கொடி பராங்குசன்.

இரா. திருமுருகர் பெரியார் பற்றாளர்; சிறந்த பகுத்தறி வாளர். முத்தமிழையும் முறையாகக் கற்றுக் கரைகண்ட திரைக்கடல் நிகரானவர். தன் உடலைப் பொது மருத்துவ மனைக்கு ஈந்தவர்.

“மொழிப்போர் மறவர், இலக்கயச்சுடர், தீந்தமிழ்க் காவலர்” போன்ற சிறப்பு விருதுகள் அளித்துச் சிறப் பிக்கப் பெற்றார். இச்சிறப்புமிக்க இவரிடந்தான் புலவர் பூங்கொடி பராங்குசன் தமிழ் கற்றுத் தேர்ந்தார்.

இரா.திருமுருகரைப் பற்றிய இந்நூல் அவருடைய தமிழ்ப்பணி-தமிழியக்கம்-இலக்கண, இலக்கிய, இசைத் தமிழ்த் துறைகளில் அவர் அளித்துள்ள அளப்பரிய பங்களிப்புகளை விளக்கமாகவே விளக்கியுள்ளது. பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தம் வாழ்த்துரையில் “திருமுருகனார் மேற் கொண்டிருந்த தமிழ் வாழ்வை இதனினும் அழகுறப் படம் பிடிக்கும் வேறு நூல் இல்லை” என்கிறார். இந்நூலைப் படிப்பவர்கள் முற்றாக இவர் கூற்றை ஏற்பர்.

“முத்தமிழ் மூதறிஞர்” என்னும் சிறப்பு இரா. திருமுருகருக்கே நூற்றுக்கு நூறு பொருந்தும் என்றும் பாட்டறிஞர் புலவர் இலக்கியன் வாழ்த்துரையில் கூறியுள்ள வை நூற்றுக்கு நூறு உண்மையாம். ஆம். முத்தமிழிலும் அத்துணைத் தேர்ச்சியும் தெளிவும் பெற்றவர். அவர்தம் நூல்களைப் படித்துணர்ந்து அந்நூல்களையும் அந்நூலுள்ள எடுத்தாண்ட பிற நூல்களையும் துணையாகக் கொண்டு எழுதியுள்ளார் நூலாசிரியர்.

‘என்வாழ்நாள் விருப்பங்கள்’ எனத் திருமுருகர் எழுதிய வற்றை இணைத்துள்ளார். வரவேற்கத்தக்க விருப்பங்கள்.

தமிழ் கற்கும் மாணாக்கர்களுக்கு இசைத்தமிழ், நாடகத் தமிழர்களின் அடிப்படை நுட்பங்கள் கற்பிக்கப்பெறல் வேண்டும் என்பதற்காகப் பாடத்திட்டம் ஒன்றை வகுத்துப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளேன். பல்கலைக்கழகப்பாடக் குழுவினரும் துணைவேந்தரும் இப்பாடத் திட்டத்தைப் பயன்பாட்டுக் கொணரல் வேண்டும்; நமது எதிர்பார்ப்பாகும்.

தாளமுள்ள வண்ணப்பாவுக்கு “வண்ணச்சரபம்” தண்டபாணி அடிகளாரும், சந்தப்பாவுக்கு வீரபத் திரரும் இலக்கணம் யாத்துள்ளனர். சிந்துப்பாவுக்குத் திருமுருகரே இலக்கண நூல் படைத்துள்ளார்.இவை இசைத் தமிழ்க் கல்விக்குப் பயன்படுத்தலாம். உருப்படிக்கு (கீர்த்தனைக்கு) இலக்கணம் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்கிறார் முத்தமிழ்ச்சுடர்.

இசைத்தமிழ் நூல்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பனுவல்கள், திருப்புகழ் திருவருட்பா, காவடிச்சிந்து போன்றவற்றிற்கு யாப்புக் குறிப்பு, பண், தாளம், நடை முதலியவற்றுடன் மறுபதிப்புச் செய்ய வேண்டும். இசைக்குறிப்பு (Notation) எழுதி முறைப்படி பாடுதற்குப் பயன்படுத்த வேண்டும்.

தொல்காப்பியமும் பின்வந்த இலக்கண நூல்களும் விரிவாக விட்ட எழுத்து மயக்கத்தை ஆய்ந்து வெளியிட்டால் தமிழ்ஒலி மரபைக் காக்கவும், தமிழிற்கலந்துள்ள அயல்மொழிச் சொற்களை அகற்றவும் பயன்படும். இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். நிறை வடைந்தால் மனநிறைவடைவேன். பன்மொழியறிவும் இலக்கண அறிவும் அமைந்த அறிஞர்கள் அமர்ந்தாய்ந்து அகரவரிசை தொகுக்கப்படல் வேண்டும். இப்பயனுள்ள பெரும் பணியைச் செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு முடிப்பது மொழிக்காப்புப் பணியாகும். மேற்காண் விருப்பங்கள் தன் நலம் தவிர்த்து தமிழ்நலம் தழுவியுள்ளவற்றை நோக்கலாம்.

“ஒரு சிறிய கூழாங்கல் கூட பெரிய வெள்ளத்தின் விரைவை ஓரளவு தடுக்க முடியும் என்று நம்புகிறவன் நான்” என்கிறார் (பக்.71). எத்துணை மனஉறுதி. தன் பட்டறிவை அகர, ககர வரிசைகளில் ஆத்தி சூடிபோல் அழகுற அமைத்துள்ளார் (பக்.72). “அன்னைத் தமிழே முன்னறி மொழியாம்”, “ஊரார் மொழிக்கு முன் சீரார் தமிழ்படி”, “கால்கை பிடித்தே மேல்வர நினையேல்”, “கூனிக் குழைதல் மானிக் கில்லை” (பக்.72).

இந்நூலாசிரியர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து கொண்டு இந்நூலில் பாதியளவு எழுதிக் கொடுத்திருந்தாலே பட்டத்தை எளிதாகப் பெற்றிருக்லாம். அத்துணை உழைப்பை நூல் முழுவதும் காணமுடியும். அதனால் அணிந்துரையில் கலைமாமணி அரங்க. நடராசர் “இதனை நூல் என்பதை விட திருமுருகனார் பற்றிய ஆய்வேடு என்பதே பொருந்தும்” எனப் பொருந்துமொழி புகன்றுள்ளார்.

“இயற்றமிழ்ச்சுடர்”, “இசைத்தமிழ்ச் சுடர்”, “இலக்கணச் சுடர்” என முப்பெருந்தலைப்புகளும் இருநூற்று முப்பது உள்தலைப்புகளும் கொண்டு நூல் அமைந்துள்ளது. “தொகுப்புரை” இறுதியில் அமைந்து ஒவ்வொரு தலைப்பில் உள்ள செய்திகளைத் தொகுத்துரைத்திருப்பது மிகத் தேவை யான ஒன்று. திருமுருகரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் பயன்பாட்டு நூல் என்று நூலாசிரியர் எழுதியுள்ள தன் உண்மையை நூலைப் படிப்பவர் உணரலாம்.

Pin It