தமிழகர்களை உணர்வு பிழம்புகளாக மாற்றிய தமிழர் பெரும்படை

தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. படை யில் கலந்து கொள்வோருக்குக் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழர் பெரும்படைக்கான அமைச்சர் மணவை ரெ. திருமலைசாமி தொண்டர்கள் அனுசரிக்க வேண்டியவைகளை (நிபந்தனைகளை) 29.7.1938 விடுதலை ஏட்டில் அறிவித்தார். அவை யாவன :

1. அவசியமான (எளிய) ஆடை முதலியன அவர்களே கொண்டுவர வேண்டும்.

குறிப்பு : அதிகமான துணிகள் கொண்டுவரப்படாது. இடுப்பில் ஒரு வேஷ்டி, உடம்பில் ஒரு சொக்காய், தோளில் போட்டுக் கொள்ளவும் தலையில் கட்டிக் கொள்ளவும் இலாயக்குள்ளதான ஒரு வஸ்திரம் ஆக 3 உருப்படிகளுக்கு மேல் ஒரே காலத்தில் ஒரு தொண்டர் மீது இருக்கக்கூடாது. அதேபோல மற்றொரு ஜதை அதாவது 3 உருப்படிகள் மட்டும் கையிருப்பில் இருக்க வேண்டும். சொக்காய்க்குள் பனியன் உபயோகப் படுத்திக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை.

2. கட்டாயமாக லங்கோடு கட்டிவர வேண்டும். மொத்தம் 2 லங்கோடுகள் கொண்டு வரலாம்.

3. பாதரட்சை அணிந்து வரவேண்டும். துணிக் குடையும் கொண்டுவரலாம்.

4. புகையிலை, பொடி, பீடி, சிகரெட்டு, சுருட்டு முதலியவை உபயோகிக்கும் கெட்ட பழக்கம் எதுவும் இருக்கக்கூடாது.

5. ஒவ்வொருவருக்கும் சிறு (சிவப்பு) ரெட்டுப்பை ஒன்று கொடுக்கப்படும். அதில் அவரவர் சாமான்களை வைத்து எடுத்து வரவேண்டும். படுக்கை கிடைக்காத விடங்களில் அந்தப் பையைத் தலையணையாகவும், மேல் வஸ்திரத்தை விரிப்பாகவும் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

6. ஒரு நீண்ட மூங்கில் கழி கொடுக்கப்படும். அதன் உச்சியில் கொடி கட்டிக் கொள்ள வேண்டும். கையிலுள்ள சிவப்புரெட்டுப் பையை கழியில் கோர்த்து தோளில் போட்டுக் கொள்ள வேண்டும்.

7. படைக்குள் பிரச்சாரக் கமிட்டி, கூட்ட ஏற்பாட்டுக் கமிட்டி, விளம்பரக் கமிட்டி, பத்திரகாசிரியக் கமிட்டி, சுகாதாரக் கமிட்டி, பண்டக சாலைக் கமிட்டி, பாதுகாப்புக் கமிட்டி, சாப்பாட்டுக் கமிட்டி, பொருளாதாரக் கமிட்டி என்ப தாகப் பல கமிட்டிகளும் அவற் றிற்குத் தனித்தனியே காப்டன் களும் தேர்ந்தெடுக்கப்படுவார் கள். சேனாதிபதி இடும் வேலை களைக் கமிட்டியைச் சேர்ந்தவர் கள் அந்தந்தக் காப்டன்கள் மூலம் முணுமுணுக்காம லும் பின்வாங்காமலும் செய்துவர வேண்டும்.

8. கிடைக்கும் ஆகாரத்தை உண்டு, திருப்தி கொள்ள வேண்டும். ஆகாரத்தில் தலைவர் - தொண்டர் என்கிற வித்தியாசம் கிடையாது.

9. படை முகாம் செய்துள்ள விடுதியை விட்டு, உற்றார் உறவினரைப் பார்க்கப் போவதென்னும் பேரால் வருவது, போவது கூடாது. தள்ளமுடியாத அவசியம் ஏற்பட்டால் தலைவரின் அனுமதி கோரி அவர் உத்திரவுப்படி நடந்துகொள்ள வேண்டும்.

10. எல்லோரும் இராணுவக் கட்டுப்பாடுகளுக் குட்பட்டு (பேச்சு-நடத்தை) சீரிய ஒழுக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

11. அவரவர் உடைகளையும் பாத்திரங்களையும் அவரவரே சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

12. படை, போய்க் கொண்டிருக்கும் போதே காரணங் கூறாமல் எந்தத் தொண்டரையும் படையைவிட்டு விலக்கும் அதிகாரம் இராணுவ மந்திரிக்கு உண்டு.

இவ்வளவு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு தான் தமிழர் பெரும்படையில் சேர்ந்து பணியாற்ற 485 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 101 பேர் தேர்வு செய்யப்பட்டு, படை அமைக்கப்பட்டது.

தமிழர் படைக்கு வழிநெடுகிலும் வரவேற்பு கொடுங்கள்; தொண்டர்களை உபசரியுங்கள்; பண முடிப்பு உதவுங்கள் என்று மணவை ரெ. திருமலைச் சாமி தமிழர்களுக்குத் தனிப்பெரும் விண்ணப்பம் விடுத்தார். (விடுதலை 30.7.1938). இப்போதைய ஏற்பாட்டின்படி படை 01.8.1938ஆம் நாள் புறப்படும். 9.9.1938இல் சென்னையை சென்றடையும். அடியிற் கண்ட தேதி காலவிவரப்படி அந்தந்த ஊர்களில் படைத் தங்கிச் செல்லும்; படைக்கு இடவசதி, உணவு வசதி செய்து கொடுத்து பொதுக் கூட்டம் கூட்டிப் படையை வரவேற்க விரும்பும் தமிழ் அன்பர்கள் அடியிற்கண்ட அட்டவணையை அனுசரித்து ஏற்பாடு செய்யக் கோருகிறேன்.

படையோடு கலந்து வருவோர் தொகை 101. இந்த நூற்று ஓர் பேர்களும் தங்க இடவசதியும் அடியிற் குறிப்பிட்ட 60 ஊர்களிலும் வேண்டும். சாதாரண உணவு போதும். தொண்டர்கள் உட்காருவதற்கும் உறங்குவதற்குமான உபயோகப்படக்கூடிய பெரிய ஜமக்காளம் அல்லது பாய் அல்லது சரக்குப் படுதா முதலிய ஏதாவது விரிப்பு உதவினால் நல்லது. கிடைக்காத பட்சத்தில் கவலை இல்லை.

படையின் கால வரையறை :

உதாரணம் திருச்சி டவுன் ஹால் வழி அனுப்பு உபசாரக் கூட்டம் 1-ந் தேதி இரவு 10 மணிவரை நடக்கும். அன்று இரவு தென்னூர் தோழர் பழனிச் சாமி பிள்ளை அவர்கள் பங்களாவில் தொண்டர்கள் தங்கியிருப்பார்கள். 2-ந் தேதி காலை 4.30 மணிக் கெல்லாம் புறப்பட்டு இரவு சுமார் 7 மணிக்குத் திருவளர் கோலையை அடைவார்கள். விட்டு 3-ந் தேதி காலை 5 மணிக்குப் புறப்பட்டு 3-ந் தேதி மாலை 4.30 மணிக்கு அடுத்த ஊராகிய கோயிலடிக்குப் போய்n சரும். இப்படியே அட்டவணையில் குறிப்பிட்ட ஊர்களில் படை தங்கித் தங்கிச் செல்லும் என்று வரையறைச் செய்திருந்தனர்.

திட்டமிட்டபடி தமிழர் பெரும்படை வழியனுப்பு உபச்சார விழா திருச்சி பொதுமக்கள் சார்பில் 01.8.1938 அன்று மாலை டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈ.வெ.ரா. அக்கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கினார். சுமார் 7000 பேர் அங்கு திரண்டிருந்தனர். சில பார்ப்பனர்களும், சில காங்கிரஸ்காரர்களும் கலகம் செய்ததை ஈ.வெ.ரா. தம் தலைமையுரையில் கண்டித்தார்.

பெரியாரின் தலைமையுரையின் ஒரு பகுதி வருமாறு :

தோழர்களே!

“இன்றையக் கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத் துக்கு ஆக செல்லும் படையை வழியனுப்புவதற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப் பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தன மாகும். இந்தக் கூட்டத்தில் இரண்டொருவர் “காந்திக்கு ஜே” போடுவதும் “இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தைக் கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கியிராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்தச் சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத் தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலீபுல்லா சாயபு கேட்டபோது கைதூக்கிய எண்ணிக் கையிலிருந்தே இத்தொல்லைக்காரர்களின் யோக்கிய தை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரி தும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரி கிறது. இம்மாதிரி காலித்தனத்தால் இன்னும் எவ்வ ளவு நாள்களுக்கு இப்பார்ப்பனர் வெற்றிபெற முடியும்?

நாங்கள் உண்மையிலேயே இந்தியை எதிர்ப்ப வர்கள். இந்தி பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆக புகுத்தப் படுவது என்பதை இக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர் களே மெய்யாக்கி விட்டார்கள். தமிழ் மக்கள் வயிறு எரிந்து, மனம் நொந்து கிடக்கும் காலத்தில் அதுவும் பிரிந்து ஆதரவற்றுக் கிடக்கும் இந்நாளில் ஏதோ சில கூலிகள் தங்கள் வசத்தில் இருப்பதாகக் கருதி எங்கள் முயற்சிகளை இப்படி அடக்கப் பார்ப்பது தர்மமா என்று கேட்கின்றேன்.

எதிரிகள் சூழ்ச்சி :

எங்களுடைய சேதிகளைப் பொதுப் பத்திரிகை எனச் சொல்லும் பார்ப்பனப் பத்திரிகைகள் கேலி செய்து, கிண்டல் செய்து மறைத்துத் திரித்து கூறுகின்றன. சில அடியோடு அடக்கிவிடுகின்றன. எங்கள் ஒற்றுமை யைக் கலைக்க சூழ்ச்சி செய்கின்றன. மக்கள் அநீதி யாகச் சிறைப்பிடித்துக் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்.

எங்களுக்குள்ளாகவே துரோகிகள் கற்பிக்கப்படு கிறார்கள். கீழ்மக்களைச் சுவாதீனம் செய்து அவர்கள் மூலமாக நம் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்யப் படுகின்றது.

இந்தி எதிர்ப்பு ஜஸ்டிஸ் கட்சியின் மற்றொரு அவதாரம் என்னும்பழி சுமத்தப்படுகிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்குச் சட்டசபையில் உள்ள இரண்டு தலைவர்களும் பார்ப்பனத் தாசர்களாய் இருக்கும் போது இது எப்படி ஜஸ்டிஸ் கட்சி காரியமாக இருக்க முடியும். இந்தி எதிர்ப்பு பார்ப்பன துவேஷத்துக்கு ஒரு கருவி என்று சொல்லப்படுகிறது. தோழர்கள் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி, கே.நடராஜன், வி.எஸ்.சீனி வாச சாஸ்திரி, சி.வி.விஸ்வநாத சாஸ்திரி, உ.வே.சாமி நாதய்யர், பாவஸ்து ஆச்சாரியர், கே.பாஷயம் அய்யங்கார், கே.பாஷயம் அய்யங்கார், வி.பாஷ்யம் அய்யங்கார், வி.வி.சீனிவாசய்யங்கார் குன்ச்ரு, டில்லி நிர்வாகசபை வர்த்தக மெம்பர் சர்.மகம்மது யாகூப் இவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா? “சென்டினல்” “அமிர்தபஜார்” மாடர்ன் ரிவ்யூ” ‘சோஷியன் ரிபார்மா”, “லீடர்” “சர்வெண்ட் ஆப் இந்தியா” முத லாகிய பத்திரிகைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைகளா? அல்லது பம்பாயிலும், சென்னையிலும் உள்ள பிரஜா உரிமைச் சங்கங்கள் ஜஸ்டிஸ் கிளைச் சங்கங்களா? அடக்குமுறையை ஒன்று இரண்டு தடவையாவது கண்டித்து எழுதிய “சுதேசமித்திரன்” ஜஸ்டிஸ் பத்திரி கையா? இப்படியெல்லாம் இருக்க தமிழ் மக்கள் கண் களில் மண்ணைப்போட்டு அவர்களை அடிமைகொள் ளச் செய்யும் இம்மாதிரியான சூழ்ச்சியும் கொடுமையும் நியாயமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

சில்லறைச் சேஷ்டை செய்வது நியாயமா?

நாங்கள் சொல்லுவதும் செய்வதும் தப்பானால் நாளை இங்கு கூட்டம் போட்டுப் பாருங்கள், உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். மற்றபடி பொய்யாகவாவது கூட்டத்தில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டது என்று எழுதுவதற்கு ஆகவே இங்கு விஜயம் செய்திருக்கும் சில அயோக்கிய நிருபர்களுக்குச் சேதி கொடுக்க வேண்டுமென்று கருதி சில்லறை சேஷ்டைகள் செய்வது நியாயமா என்று கேட்கிறேன்.

இன்றைய ஆட்சியில் தங்கள் அபிப்பிராயம் சொல்லக் கூடவா இடமில்லை? இந்த கூட்டத்தில் ‘காந்திக்குஜே’ ஏன் போடவேண்டும்? இவர்கள் காந்தியை யோக்கியர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா அல்லது தங்களை யாவது காந்தி சிஷயர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா? நான் பார்த்தேன் ஒருவன் மண்ணைவாரி இரைத்துக்கொண்டு “காந்திக்கு ஜே” போட்டான் முதுகில் இரண்டு அப்பளம் விழுந்தவுடன் அறுத்துவிட்ட கழுதைகள்போல் பலர் ஒட்டமெடுத்தார் கள். இந்த சமயம் நான் பயந்துவிட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ நம் ஆள்களுக்கோ பந் தோபஸ்தில்லை என்று நான் கவலைப்படவில்லை, ஆத்திரத்தோடு கை கலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும். அப்புறம் இந்தி எதிர்ப்புக்காரர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்லுவதா? எவ் வளவு கஷ்டப்பட்டுப் பலாத்காரம் ஏற்பட இருந்ததை இப்போது அடக்கவேண்டியதாயிற்று. போலீசார் கூட் டத்திற்குக் காவல் அளிக்கவேண்டியதில்லை என்றா லும் காலிகளுக்காவது காவல் அளிக்கவேண்டாமா? இன்று இவ்வூர் போலீசு தண்டோரா அடிக்கக் அனுமதி கொடுக்கவில்லை. நோட்டீசு அச்சடிக்க அச்சாபீசுகள் பயப்படுகின்றன.

இந்த கிளர்ச்சிக்குப் பணம் வசூல் செய்வதைத் தடுக்கப் பல போக்கிரித்தனமான அற்பத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?

தொண்டர்களுக்குத் தண்டனையா?

தொண்டர்களைச் சிறைபிடிப்பதையும், தண்டிப்பதையும் அவர்களை நடத்துவதையும் சற்று பாருங்கள். 150 பேர்களைச் சிறைபிடித்து தண்டித்துவிட்டு இப்போது அந்தக் காரியத்துக்கு சிறைபிடிப்பது நிறுத்தப்பட்டுப் போய்விட்டது என்றால் இதுவரை பிடித்தது ஒழுங்கா, நியாயமா நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப்பற்றிக் காங்கிரஸ் காரியக்கமிட்டி “தப்பு அபிப்பிராயத்தின் மீது அக் கிளர்ச்சி நடப்பதால் அதை விளக்கக் காங்கிரஸ் தலை வருக்கு அதிகாரமளித்திருக்கிறது” என்று தீர்மானித் திருக்கிறது.

அப்படியானால் அபிப்பிராயப் பேதத்தினால் நடத் தும் காரியத்துக்கு 6ம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் கடின காவலா என்று கேட்கின்றேன். இதுதான் ஜன நாயகமா? இதுதான் அபிப்பிராய சுதந்திரமுள்ள பிரஜா உரிமை ஆட்சியா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்த அரசாங்கம் இந்தி எதிர்ப்புக் கமிட்டியைச் சட்டம் மீறுவதற்கும் ஆயிரக்கணக்கான மக்களைச் சட்டம் மீறித்தீரவேண்டுமென்று கட்டாயப்படுத்தவும் தூண்டச் செய்கிறது. இதில் சர்க்காருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்று கேட்கிறேன்.

அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்து போவது அவமானம் என்று மக்கள் கருதும்படி செய்கின்றது.

நாம் என்ன செய்வது, கிளர்ச்சி கூட செய்யக் கூடாதா? தோழர் சத்தியமூர்த்தியார் இந்திக் கிளர்ச்சிக் காரரை ராஜத்துரோகச் சட்டப்படி வழக்குத் தொடுத்துத் தூக்கில் போடும்படி சர்க்காருக்கு யோசனை கூறு கிறார். இப்போது நடத்தும் சட்டமே கொடுங்கோலாட்சி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அதைக் கையாளும் பார்ப்னர்கள் யோக்கியதையும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் என்பது ஆக விட்டுப் படைத் தொண்டர்களுக்கு ஈ.வெ.ரா. செய்த உபதேசமாவது:

தொண்டர்களுக்கு உபதேசம் :

“இப்படையை நடத்துகிறவர்கள் பொறுப்புள்ள பெரியார்கள். இவர்கள் நடத்தையில் படை வெற்றி கரமாய் முடிவுபெறும் என்றே கருதுகிறேன். ஒற்றுமை, சிக்கனம், சமரச எண்ணம் ஆகியவை தலைவர் களுக்கு வேண்டும். தொண்டர்களுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் தன்மை ஆகியவை வேண்டும்.

எதிரிகள் பல சூழ்ச்சி செய்வார்கள். சிறியதைப் பெரியதாக்கி பழிகூற பல எதிரிகள் இருக்கிறார்கள். எதிரியிடம் கூலி வாங்கிக் கொண்டு நம்மைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பல ஈனர்கள் நமக்குள்ளாகவே இருந்து குடிகெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்கத்துக்குக் கேடுவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எவ்வளவு பழி சுமத்தினாலும் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் இவற் றை எவ்வளவு பேர் நம்பினாலும் நான் மாத்திரம் களைத்துப் பின்வாங்குகிறவனல்ல. எனக்கு எனது இலட்சியம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதற் காகவே உயிர் உள்ள அளவும் பாடுபட்டுத்தான் சாவேன். யார் என்ன சொன்னாலும் வெட்கப்படப் போவதில்லை. யார் என்ன மோசம் செய்தாலும் சரி, துரோகம் செய்தாலும் சரி, வாழ்நாள் முடிகிறவரை கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு காரியம் செய்கிற தென்ற முடிவில்தான் இருக்கின்றேன். ஆகவே தோழர்களே! இம்மாபெரும் இலட்சியத்திற்குத் தொண் டாற்றும் வேலையை யாவரும் தங்கள் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் இலட்சியத்துக்கு தங்களால் கூடுமானவரை தொண் டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பெரியாரின் தலைமை உரைக்குப் பின் தி.பொ. வேதாச்சலம் நன்றி கூறினார். தங்களால் கூடுமான வரை தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

(குடிஅரசு 7-8-38)

தொடரும்

Pin It