இன்னும்
எரிந்து கொண்டுள்ளது
அந்தத் ‘தீ’
அணைக்கப் படாமலேயே
இரண்டாயிரத்து ஐந்நூறு
ஆண்டுகளுக்கு முன்
மூட்டப் பட்டதாகச்
சொல்கின்றார்கள்
புலவர்கள் கவிஞர்கள்
அறிஞர்கள் தலைவர்கள்
புரட்சியாளர்கள்
என்று பெரிய படையே
அதை அணைக்க
முற்பட்டும்
எரிந்து கொண்டுதான்
உள்ளது அந்தத் ‘தீ’
இமயம் தொடங்கி
குமரி வரை
பற்றி எரிகின்ற
அந்தத் ‘தீ’யால்
வெந்து மடிந்தவர்
ஆயிரம் ஆயிரம்
சுதந்தரத்துக்குப் பின்னால்
அந்தத் ‘தீ’ அணைக்கப்பட்டு
சமத்துவத் தென்றல்
நம் வீட்டுச்
சாளரங்களை
எட்டிப் பார்க்கும்
என்றார்கள்
சுதந்தரத்துக்குப் பின்தான்
முதுகுளத்தூர் வெண்மணி
என்று அந்தத் ‘தீ’
தன் கோர முகத்தைக்
காட்டியது கொடுமையாக
அந்தத் ‘தீ’யின்
ருத்ர தாண்டவத்தைக்
கண்டு களிக்கவென்றே
சனாதனம் தாளமிசைக்கின்றது
‘பூரி’ மடம்
போதிக்கின்றது
அந்தத் ‘தீ’யை
அணைக்கவே கூடாதென்று
காஞ்சியின்
தெய்வத்தின் குரல்
சொல்கின்றது
பிரம்மன் வைத்த ‘தீ’யை
அணைக்க யாருக்கும்
உரிமையில்லை என்று.
பெரியாரின் பகுத்தறிவையும்
அம்பேத்கரின் அறிவாயுதத்தையும்
நாம் கரங்களில்
ஏந்தி
அணைத்திடத் துணிவோம்
அந்தத் ‘தீ’யை
ஆம்! தோழர்களே
சாதித் ‘தீ’யை!

Pin It