லஞ்சமும் தன்னலமும்
விடுதலைபெற்ற இந்தியாவின்
விலக்கமுடியாத கொள்கைகளாகிவிட்டன
படிக்கும் வரை
வேலையில் சேர்வது இலக்கு
வேலையில் சேர்ந்தபின்
வேலை செய்யாமலிருப்பது பேரிலக்கு
அப்படிச் செய்யவேண்டுமானால்
“கையூட்டி”க் கவனிக்க வேண்டும்
வேலையில் சேருவதற்கும்,
அதில் பதவி உயர்வு பெறுவதற்கும்
கட்டாயத் தேவை “சான்றிதழ்கள்” மட்டுமே
அவற்றின் தேவையை உணர்ந்த
கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும்
சான்றிதழ் கடைகளைச்
சரமாரியாய்த் திறந்துவைத்துள்ளன
நேர்காணலோ, தகுதித்தேர்வோ
ஒருமுறை தேறிவிட்டால்
ஒரு தலைமுறைக்கு
உட்கார்ந்து உடுக்கையடித்துக் கொள்ளலாம்
வேலையில் சேருவதற்கும்
தொடர்ந்து அவ்வேலையில் இருப்பதற்கும்
பதவி உயர்வதற்கும் தேவையானது
‘சான்றிதழ்’ மட்டுந்தானே தவிர
‘சான்றாண்மை’ அல்ல!
ஒரு மூன்று, நான்கு ஆண்டுகள் படித்து
வேலையை வாங்கிவிட்டு
அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு
அரசாங்கத்தையும் சமூகத்தையும்
அதிகாரத்தோடு ஏமாற்ற முடிகிறது
ஏதாவது பிரச்சனை என்றால்
இருக்கவே இருக்கிறது
சங்கம், சாதி, அரசியல்
கல்வி... வேலைக்கா? வாழ்க்கைக்கா?
என்ற பட்டிமன்றத்தில்
தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை
கடமையைச் செய்வோரின் எண்ணிக்கைக்
கணிசமாகக் குறைந்துபோயிருப்பது
கவலையளிக்கிறது
சான்றிதழ்களில் மட்டுமே
தேறிக்கொண்டிருக்கும் சமூகம்
சான்றாண்மையில் தேறுவது எப்போது?

Pin It