“காலம்பற காத்தாலே என்னடி எதிர்த்த வீட்டுக் காரிக்கிட்ட பல்லை இளிச்சுக்கிட்டு நிக்கிறே” என்ற மாமி யாரின் கோபக் குரல் கேட்டு செண்பகம் பயந்த படி திரும்பிப் பார்த்தாள்.

பத்ரகாளி மாதிரி முகத்தைக் கோரமாக வைத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்த வாறு மல்யுத்தம் போடத் தயாராக உள்ள வீரனைப் போல நின்று கொண்டிருந்த அவளுடைய மாமியாரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வராது?

“இல்ல... அத்தை... இப்பத்தான் வீட்டைப் பெருக்கி, வாசல்லே கோலம் போட்டேன். இனிமேதான் மத்த வேலைகளைப் பாக்கணும். அந்த அக்கா எத்தனாவது மாசம்னு கேட்டாங்க... அதுதான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்று விழுங்கி விழுங்கிப் பதில் சொன் னாள் செண்பகம்.

“என்னடி அத்தை சொத்தைன்னு கதை விடுற... மாட்டைப் பிடிச்சுக் கட்டல... பண்டம் பாத்திரங்களை விளக்கலே... ஏரோட்டப் போயிருக்கிற கருப்பனுக்குக் கஞ்சி கொண்டு போகணும்.. நீ என்னடின்னா ஊர் வம்பு பேசிக்கிட்டு இருக்கிறே” என்று செண்பகத்தைப் பார்த்துச் சத்தமிட்டவாறே வீட்டுக்குள் போய்விட்டாள் மாமியார்.

சேலையிலே சிறுநீர் கழிந்துவிடும் போலிருந்தது, பயத்தில் செண்பகத்துக்கு! செண்பகம் இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து ஒரு வருடம் ஆகின்றது. கட்டியவன் அவளைக் கர்ப்பவதியாக்கிவிட்டுப் பிழைக் கப் போய்விட்டான், பர்மா தேசத்துக்கு. கொழுந்தனும் அவன் கூடவே போய்விட்டான்.

அந்த ஓரிரு மாதங்கள் வாழ்ந்த வாழ்க்கையில், அவள் இன்று நிறைமாதக் கர்ப்பிணி.

அவள் வாழவந்த கிராமத்திலிருந்து முப்பது கல் தூரத்திலிருந்தது அவளது பிறந்த ஊர். ஆடியிலே விதைத்தாலும் ஐப்பசியில் அறுத்தாலும் அரை வயிற் றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறந்தபடி தண்ணீர்க் குடம் சுமக்கும் தாய்மாமன் கிராமம், என்பதற்கிணங்க, வறண்ட பூமிதான் அவள் பிறந்த பூமி. சாமிக்குக் ‘கொடை’, ‘திருவிழா’ என்று ஏதாவது செய்தாலும் வானம் எப்பொழுதாவதுதான் கண்ணைத் திறக்கும். மற்றபடி அந்தக் காய்ந்த பூமியிலே மாடு மேயக் கூடப் புல் முளைப்பது அரிது.

அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் கொஞ்சம் பரவா யில்லை. ஒரு அடிக்கு ஒரு அடி வேற்றடி என்பது போல் மண்வளம் மிக்க ஊர். வெள்ளாற்றின் வெள்ளப் பெருக்கால் முப்போகம் இல்லாவிட்டாலும் ஒரு போக மாவது நன்கு விளையும். இருந்தாலும், ஆண்மக்கள் எல்லாம் வெளியேறிப் பிழைக்கப் போய்விடுவதால் பெண்மக்கள்தான் காணிகரையைக் காப்பாற்றி விவ சாயம் செய்வார்கள்.

1876இல் வந்த தாது வருடப் பஞ்சத்துக்குப் பின்பு ஏற்பட்ட வறுமையின் கோரத்தாண்டவத்தால் பரதேசம் போய்த்தான் பொருள் தேட வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட காரணத்தால், செண்பகம் வீட்டு ஆண்மக்களும் நாடு விட்டு நாடு போக வேண்டியதாகிவிட்டது.

செண்பகம் பிறந்த வீட்டில் அவளோடு சேர்த்து நான்கு பெண் குழந்தைகள். அவள்தான் தலைக்குழந்தை. தலைக்குழந்தை பெண்ணென்றால் லெட்சுமியென் றும், சீதேவியென்றும் பெயருக்குத்தான் சொல்வார் கள். அடுத்தடுத்து பெண்ணென்றால் யாரும் ஏறெ டுத்துக் கூடப் பார்க்கமாட்டார்கள்.

அன்னையின் தாலாட்டுக் கேட்டு ஆசைமகள் தூங்காவிட்டால் - இந்த மண்ணை விட்டு மறையும் வரை மகளிர்க்கு நிம்மதியாக உறங்கக்கூட நேரம் வாய்ப்பதில்லை. தான் பிறந்த வீட்டிலேயே, புகுந்த வீட்டுக்குப் போனால் என்னென்ன அல்லல்களை எல்லாம் சந்திக்க வேண்டுமோ என்ற ஒத்திகைகள் அனைத்தும் ஆரம்பமாகிவிடும். புகுந்த வீட்டில் நுழைந்த தும் சந்திக்கும் துயரங்களை எழுதுவதெனில் இதிகாசங் களின் பக்கங்களைவிட அதிகப்பக்க எண்ணிக்கைகள் தேவைப்படும்.

‘குழந்தை பிறப்புக்கான கருவிதான் பெண்’ணென்று இந்தக் காலத்திலேயே கருதப்படும் போது, அந்தக் காலத்தின் கொடுமைகள் எப்படி இருந்திருக்குமென்று எழுதத் தேவையில்லை.

மாமியாரின் மிரட்டலால் மிரண்டுபோன செண்பகம் நிறைமாதத்தோடு செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரமாய் செய்ய ஆரம்பித்தாள். மாமியாரின் முணுமுணுப்பு ஒரு பக்கம் அவள் காதுகளை உத்திரங் களில் கூடுகட்டும் வண்டின் இரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெள்ளாற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பு அணை கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. என்னதான் வேலை கவனமான கண்காணிப்பில் நடந்து கொண்டி ருந்தாலும், பாலம் மீண்டும் மீண்டும் இடிந்து விழுந்து கொண்டே இருந்தது. வேலையை எடுத்து நடத்துகின்ற ஒப்பந்தக்காரர் (காண்டிராக்டர்) என்ன செய்வதென்று புரியாமல் தலையில் கைவைத்தபடி புலம்ப ஆரம்பித்து விட்டார். வேலை செய்யும் கூலியாட்களுக்கு வேறு வசவுகளும் அடிகளும் கிடைப்பது வாடிக்கையாகிவிட்டது.

பாலம் இடிந்து விழுவதைத் தடுப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களை யாரும் சிந்திக்காமல், ஒவ்வொருவரும் பலவிதமான காரணங்களை அலச ஆரம்பித்துவிட்டனர். முனியோட்டமென்றும், அம்மனுக் குச் செய்ய வேண்டிய முறைகளைச் சரியாக செய் யாததன் விளைவே இதுவென்றும், கருப்புச்சாமியின் கோபத்தால் ஏதோ பலி கேட்கிறதென்றும், ஆள் ஆளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

பாலம் கட்டுவதை மேற்பார்வை இடுவது முன் சீஃபு செம்புலிங்க முதலியாரின் பொறுப்பாக இருந்தது.

முன்சீஃபு ஆழ்ந்த யோசனைக்குப் பின்னால் ஒப்பந்தக்காரரை அழைத்து, நெற்றியைத் தடவியபடி ரகசியம் பேசுவது போல ஏதோ சொன்னார்.

அதைக்கேட்ட ஒப்பந்தக்காரர் மிரண்டே போனார்.

“முதலியாரே... இது எனக்கு நியாயமாப் படலை. அப்படிச் செஞ்சா பாலம் இடியறது நிண்ணுடுமா?” என்று கேட்டார்.

“நீ என்னப்பா இதைப் போய் பெரிசா எடுத்துக் கிறே...? இது எல்லாம் காலம் காலமா நடக்கிறது தான்... அந்தக் காலத்து ராசாமாரு காலத்திலேயே இதெல்லாம் நடந்திருக்கு.”

“இருந்தாலும், இது வெள்ளைக்காரன் காலம்... ஏதாவது எக்குத்தப்பா தெரிஞ்சு போனா என் வாழ்க் கையே முடிஞ்சு போயிடுமே.”

அடப்போப்பா...! நான் முன்சீஃபுன்னு ஏன் இருக் கேன்...? நான் பாத்துக்கிறேன்பா...

‘சரி.... ஆளுக்கு எங்கே போவோம்..? நீங்க சொல்ற மாதிரி ஆளு எங்கே கிடைக்கும்?

“அதெல்லாம் தேடுனா கிடைக்கும்பா... பணத் துக்கு மசியாத ஆளா இருக்கு” என்று குரூரமாகச் சிரித்தார் முன்சீஃபு.

ஊருக்கு ஊர் காதும் காதும் ரகசியம் வைத்தது போலத் தேட ஆரம்பித்தனர். எங்கெங்கோ தேடியும் ஆள் கிடைக்கின்ற பாடாய் தெரியவில்லை. கடைசி யில் ஒருவன் வந்து முன்சீஃபிடமும், ஒப்பந்தக்காரரி டமும் துப்புச் சொன்னான்.

முன்சீஃபு அவனைக் கூர்ந்து பார்த்து, “நீ சொல்றது வாஸ்தவமா?” என்று கேட்டார்.

“சாமி சத்தியமாச் சொல்றேன்... நான் சொல்றது முக்காலும் சத்தியம். எசமானுகளா... அந்த மாமியா காரி பொல்லாத ராட்சஸி, மருமகளைக் கரிச்சுக் கொட்டுறா. அவ வந்த நேரம் சரியில்லாததால்தான் பசி, பஞ்சம்னு கஸ்டம் வந்ததா சொல்றா.

முன்சீஃபு உதட்டுக்குள்ளேயே கபடச் சிரிப்பு சிரித்த வாறே, “மீனு தூண்டில்ல சிக்கிக்கிட்டுருச்சி” என்றார்.

துப்புச் சொன்னவன், பல்லை இளித்துக் கொண்டே, “என் பங்கைக் கொஞ்சம் பார்த்துக் கொடுத்துருங்க” என்றான்.

‘சரிடா... எல்லாம் நல்லபடியா முடியட்டும்’ என்றார் முன்சீஃபு.

அன்று பௌர்ணமி நாள். கதிரவனிடம் இருந்து கடன் வாங்கிய ஒளியை நிலமகளுக்கு வள்ளல் குணத்துடன் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தது முழு மதி. ஆந்தை ஒன்றின் அலறல் ஒருவிதப் பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தொலைதூரத்திலிருந்து வந்த நரியின் ஊளை இரத்தத்தை உறைய வைத் தது. வாடைக் காற்றின் தீண்டலில் பனை ஓலைகள் சலசலத்தன. பாம்பொன்றின் பசிக்கு இரையாகிப் போன தவளையின் கதறல் மரண ஓலமாக அச்சுறுத் தியது. ஏதோ நடக்கக் கூடாதது நடப்பதற்கான அறி குறியாய் அந்த மயான அமைதி திகைப்பூட்டியது.

தொலைவில் இரண்டு மாட்டு வண்டிகள் வரு வதற்கு அடையாளமாய் மணியோசை கேட்டது. காளை மாடுகளின் கழுத்து மணியோசை அந்தச் சூழலுக்கு அபாயகரமான பின்னணி இசையாய், காற்றில் மிதந்து வந்தது. அணைக்கட்டு கட்டுமிடத்தில் வந்து மாட்டு வண்டிகள் நின்றன. இரண்டு வண்டி களிலும் இருந்து ஏழெட்டு ஆட்கள் மளமளவென்று இறங்கினர்.

ஒரு வண்டியிலிருந்து துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு உருவத்தை நான்கைந்து பேர் தூக்கி வந்து தரையில் கிடத்தினர்.

பூசாரி ஒருவன் தேங்காய், பழம், மாலையெனப் பூசைப் பொருள்களைக் கீழே இறக்கினான்.

பூசாரி பக்கத்தில் கிடந்த சுள்ளிகளை ஒன்றுசேர்த் துத் தீ மூட்டினான். கொண்டு வந்திருந்த சாம்பிராணி யை அதில் போட்டான். வெற்றிலையில் திருநீறு வைத்து அதில் சூடத்தை ஏற்றினான். அருகில் இருந்த அனை வருக்கும் திருநீறு கொடுத்து பூசிக் கொள்ளச் சொன்னான்.

சாம்பிராணி புகை பரவியதும், படுக்க வைத்தி ருந்த உருவம் அசைந்தது. பூசாரி மாலையொன்றை எடுத்து அந்த உருவத்தை நெருங்கிச் சென்றான். அதற்குள் மயங்கிக் கிடந்த உருவம் எழுந்து உட்கார்ந் தது. அந்த உருவம் நிறைமாதக் கர்ப்பிணியான செண்பகம்...!?

“அடப்பாவிகளா... என்னை ஏண்டா இங்கே தூக்கி வந்தீங்க...? என்று அந்த வனாந்திரப் பகுதியை யே குலுங்க வைப்பது போல அலறினாள் அவள்.

மயக்க மருந்து போட்டுத் தூக்கி வந்திருப்பார்கள் போலும். மயக்கம் தெளிய, சுயநினைவுக்கு வந்து விட்டாள்.

நான்குபேர் ஓடிப்போய் அவளது கால்களையும், கைகளையும் பிடித்து வாயைப் பொத்தினர்.

செண்பகம் அதையும் மீறித் திமிறினாள். நிறை மாதக் கர்ப்பிணியாதலால் அவளால் எதிர்த்துப் போராட இயலவில்லை.

பூசாரிக்குத் திடீரென்று அருள்வந்தது. நடுங்க வைக்கும் குரலில் ஏதேதோ சத்தமிட்டவாறு அவள் அருகே போய் திருநீரை அள்ளி அவள் முகத்தில் வீசினான்.

“நான்தான் மகமாயி. இந்த அணை இடிஞ்சு இடிஞ்சு விழுகுது. எனக்கு உயிர்பலி வேணும். நிறைமாசக் கர்ப்பிணியா வேணும். அடியே உன்னை நான் என் னோட சேத்துக்கப் போறேன். நீ சாகப் போறதில்லே. தெய்வமா ஆகப்போறே. இந்த ஆத்தாளோட ஆத்தாளா சேரப் போறே...ம்...ம்...ம்...” என்று கூறியவாறு, செண்பகத்தின் கழுத்தில் மாலையைப் போட்டு, நான்கு பேரும் திமிர முடியாமல் பிடித்திருக்க ஒரே வெட்டாக வெட்டினான்.

அருகில் இருந்த அனைவர் முகங்களிலும் செங் குருதி தெறித்தது.

“அடக்கடவுளே நீ எங்கடா போனாய்?” என்று அவளில் இருந்து வந்த சப்தம் அவளுக்குள்ளேயே அமுங்கிப் போனது.

பாஞ்சாலிக்கெல்லாம், உரிக்க உரிக்கத் துகில் கொடுத்த பரமாத்மா, அந்த நேரத்தில் எங்கேதான் தொலைந்து போனானோ?

குறிப்பு : வரலாற்றின் பக்கங்களில் மன்னர்கள் மட்டுமே கதையாக்கப்படுகின்றார்கள். சாமான்யர் களுக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு. அது உழைப் பாளர் வெற்றியின் வரலாறு கூறுவதில்லை. சோகத் தால் நிரப்பப்படும் கண்ணீர் காவியமாகவும் உள்ளது. இந்தக் கதைக்கு ஆதாரமான நாட்டுப் பாடல் இதோ :-

ஊருக்கு நேர் கிழக்கே

அம்மா

ஊருக்கு நேர் கிழக்கே

கட்டுறாங்க கம்மாகரை

கட்டக்கட்ட இடியுதம்மா

கட்டக்கட்ட இடியுதம்மா

கட்டி முடிக்க முடியாமயம்மா

கதறுரானே காண்ட்ராக்டரு

பார்க்க வந்த முன்சீப்பிடம்

அம்மா

பதறுரானே காண்ட்ராக்டரு

பதற வேணாம் அய்யா

நீங்க பலி கொடுத்தாப்

போதுமிங்கே

பத்து மாச கர்ப்பிணியா

நீங்க தலசம் புள்ளைக்

காரியா

பலிகொடுத்தா போதுமய்யா

பதஞ்சொல்வார் செம்புலிங்கம்

பத்தாயிரம் கொடுத்தா அய்யா

பலிகிடைக்குமென்பான் முன்சீப்

காருமேலு காருவச்சு அம்மா

காருமேலு காருவச்சு

காததூரம் அலையுறாங்க

அம்மா

கண்டுக்கிட்டா மாமிதாணும்

மெட்டியைக் கழட்டுறாங்க

என் மெட்டியைக் கழட்டுறாங்க

என் மச்சினன் இங்கிருந்தா

இந்த படுமோசம்வந்திருக்காதே

மூக்குத்தியைக் கழற்றுராங்க

என் மூக்குத்தியைக்

கழற்றுராங்க

என் மூத்தாரு இருந்திருந்தா

இந்த மூளித்தனம்

வந்திராதே.

Pin It