தொடக்க காலப் பண்டைப் பொதுவுடைமைச் சமூகக் காலத்திலிருந்து இன்றைய தனியுடைமைச் சமூகக் காலம் வரை மண், மரபு, மொழி, பண்பாடு, இனம், பழக்கவழக்கம் இவற்றின் அடிப்படைகளில் எண்ணற்ற விழாக்களும், திருவிழாக்களும், பண்டிகைகளும் உலகெங்கும் இருக்கும் மாந்த இனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது தவிர இனக் குழு தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களுக்கான விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இப் படிக் கொண்டாடப்படும் விழாக்களில் சில விழாக்களுக்கு அறிவுப்பூர்வமான விளக்கம் தரப்படும். பல விழாக்களுக்கு வெறும் உணர்ச்சிப்பூர்வமான விளக் கங்கள் மட்டும் தரப்படும்.

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும் மொழியி னரும் பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாளை (Harvest Festival) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மனித இனத்திற்கு மிக அடிப்படைத் தேவையான உணவுப்பொருள்களின் உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கின்ற இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாகத்தான் கொண்டாடுகிறார்கள்.

இதுபோன்ற விழாவினை ஒரு நாடு கொண்டாடும்போது இன்னொரு நாடு கொண்டாடுவதில்லை. இயற்கையான பருவநிலை, நில அமைப்பு முறைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தமிழர்களாகிய நாம் இயற்கை வளங்களை வாரி வழங்கும் பருவமான வசந்த காலத்தை வரவேற்கும் தைத்திங்களில் பொங்கல் விழா என்ற பெயரில் கொண்டாடுவது போல், பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர் களில் அறுவடைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, அரேபியா போன்ற பழமை வாய்ந்த நாடுகளில்கூட, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. வடஇந்தியாவில் லகோரி, அஸ்ஸாமில் போகாலி பிகு, உத்திரப்பிரதேசம், குஜராத், மராட்டியம், பீகார் போன்ற இடங்களில் மகர சங்கராந்தி, ஆந்திராவில் போகி, கேரளாவில் மகரஜோதி என்ற பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.

ஊடாடிப் பார்த்தால் மேற்சொன்ன விழாக்கள் எல்லாம் ஏற்பட்டது என்னவோ மனிதக் கூட்டம் தம்மைப் புதுப்பித்துக் கொள்ள, ஒன்றுபடுத்திக் கொள்வதற் காகத்தான் இருந்திருக்கும்.

 பெரியார்கூட, “மக்களுக்கு விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன் னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளா வுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசை, பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவை களை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகின்றோம்” என்கிறார்.

ஆனால் அறுவடை விழாக் களில் கூட கடவுள், மதம், மொழி, இனம், சாதி போன்ற அடிப்படை வாதங்கள் கலந்திருக்கிறன என்பதை மறுக்க முடியாது.

விழாக்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என்று எதை எடுத்தாலும் அதில் பாட்டாளிகளின் வியர்வை யும் உழைப்பாளிகளின் குருதியில்தான் நனைந்தபடி இருக்கும். மன்னர்கள் காலத்திலிருந்து மக்களாட்சிக் காலம் வரை இன்னும் இதை உணரவில்லை நாம்.

அதனால்தான் பாவேந்தர், “சித்திரச்சோலைகளே! உமை நன்கு திருத்த இப்பாரினிலே; முன்னர் எத்த னைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ, உங்கள் வேரினிலே...” என்று பாடினார். வரலாறு நெடுகிலும் மனித உழைப்பு மதிக்கப்படவே இல்லை.

மன்னனால் நடந்தது; மகேசனால் விளைந்தது; எல்லாம் அவன் செயல்; அவனன்றி ஓர் அணுவும் அசையாது; விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்று காலங்காலமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்களின் நடுமண் டையில் ஆணி அடித்தாற்போல், இவர்களின் சீழ் பிடித்த சிந்தனையில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் ஒரு நாள் வந்தது. அதுதான் 1886 மே 1.

1760களுக்குப் பின் பெரிய இயந்திரங்கள் மூல மான முதலாளிய உற்பத்தி முறை ஏற்பட்டு, வளர்ச்சி யடைந்த காலத்தில், சூரியன் உதிக்கும் போது தொடங்கிய உழைப்பு அது மறைந்த பின்னும் தொடரும். தூங்கும் நேரம் போக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதுதான் அன்றைய உழைப்பாளர்களின் நிலை. முடியாதவர்கள் மடிந்தார்கள்; நிமிர்ந்தவர்கள் ஒழிந் தார்கள்.

ஆமைகளாகவும், ஊமைகளாகவும் இருந்து உதிரம் சிந்தியவர்கள் எத்தனை நாட்கள்தான் பொறுப் பார்கள்? 1830-அமெரிக்காவில் தொழிலாளர் தோழர் களால் முதல் கலவரத் தீ மூட்டப்பட்டது.

அது உலகெங் கும் ஆங்காங்கே அவ்வப்போது எரிந்துகொண்டே வந்தது. உலகிலேயே முதன்முதலாக 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து, 1856இல் ஆஸ்திரேலிய நாட்டின் கட்டடத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பெரும் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் ஆங்காங்கே உருவான சிறு சிறு தொழிலாளர் இயக்கங்கள் 1866 ஆகஸ்ட் 20 அன்று ஒன்றாக இணைந்து ஒரு பேரமைப்பாக உருவா கின்றது. அதன் பெயர் தேசியத் தொழிலாளர் சம்மேளனம் (National Labour Union). அதை சுருக்கமாக NLU என்பர்.

அவ்வமைப்பு பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துகிறது. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடுவது நாளுக்கு நாள் அதிகமாகிறது. 1886 மே 1-ஆம் நாள் நாடு முழுவதுமான தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தேசியத் தொழிலாளர் சம்மேளனம் அறிவிக்கிறது.

தொடர்ந்து மே 3-ஆம் தேதி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். கூட்டம் நடக்கிறது. பொறுத்துக்கொள்ள முடியாத காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். அதில் 4 தொழிலாளர் பலியாகின்றனர்.

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாத தொழிலாளர்கள் அடுத்த நாளான மே 4-ஆம் நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

ஹெய் மார்க்கெட் (Hay Marke) சதுக்கத்தில் எண்ணற்ற தொழிலாளர் ஒன்றுகூடி அமைதியான முறையில் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அக்கூட்டத்தில் யாரும் எதிர்பாரா வகையில் ஒரு டைனமைட் குண்டு வெடிக்கிறது. அதில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழக்க, போலீசார் தொழிலாளரைத் தாக்குகின்றனர்.

மிகப்பெரிய கலவரமாக மாறுகிறது. அச்சம்பவமானது நீதிமன்ற வழக்காக மாறி, தொழிற் சங்கத் தலைவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. நடந்த இத்துயரமான நிகழ்வுக்குப் பிறகு 8 மணிநேர வேலை நேரத்தினை வேறு வழியில்லாமல் அரசு அறிவிக்கிறது.

1889 ஜூலை 14 அன்று சர்வதேச தொழிலாளர் மாநாடு ஃபிரான்சில் கூட்டப்பட்டது. அம்மாநாட்டில் உலகமெங்கிருந்தும் தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் எங்கல்சு கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில்தான் உலகமெங்குமுள்ள தொழிலாளர்கள் மே 1-ஆம் நாளை அடுத்த ஆண்டு முதல் உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் குருதி தோய்ந்த உழைப் பாளரின் உரிமை மீட்டெடுக்கப்பட்ட, உணர்ச்சிப்பூர்வ மான இந்நாளை இன்று வெறும் சம்பிரதாய நாளாக ஆக்கிவிட்டார்கள். அதுதான் காலக்கொடுமை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். பன்னெடுங்காலமாக உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருந்த உழைக்கும் மக்களின் விடுதலைக்கு விதை போட்டு, அதற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மேதையைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்கவில்லை யென்றால், நன்றி கொன்ற மனிதர்களாவோம்; நாயினும் இழிவான பிறவிகளாவோம்.

ஆமாம். மாந்தகுலத்தின் வறுமையை விரட்டிட, வாழ்நாளெல்லாம் வறுமையில் வாடிய மேதை; புரட்சிக்காரனுக்கு மரண மில்லை என நிரூபித்த அந்த மாமேதைதான் மார்க்சு என்கிற கார்ல் ஹென்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx).

 மே நாள் புரட்சிக்கு வித்திட்ட அந்த மேதை பிறந்ததும் அதே மே மாதம் 5-ஆம் தேதியில்தான் என்பது சிறப்புகளின் சிறப்பல்லவா?

மே 1-ஆம் நாள் கொண்டாட்டத்திற்கான தினமல்ல. போராட்டத்திற்கான தினம். மார்க்ஸ் பிறந்த நாளான மே 5 உலக மக்களால் கொண்டாடப்படக்கூடிய நாள்.

மே நாளின் வரலாற்றை வாசிக்கும் வேளையில் அறிவுலக ஆசான் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

மார்க்சு, எங்கெல்சு ஆகியோர் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்வதற்கான ஒரேவழி-அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி-பாட்டாளிகளுக் கான அரசை அமைப்பதேயாகும் என்ற தத்துவத்தை உருவாக்கி அளித்தனர். இதுவே மார்க்சியம் எனப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம் கொண்ட சனாதனம் அழிந்து போகும் நாளில்தான் மார்க்சியமும் மலரும். அந்நாளில்தான் சுரண்டப்படும் நம் தொழிலாளர் வாழ்வில் ஒளிவரும். நசுக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் கையில் விடுதலை வந்து சேரும்.

அந்நாள் தானாக வருமா? கண்டிப்பாக வராது. அதற்கு சாதி ஒரு தடை; அதை அரவணைத்துப் பாது காக்கும் மதம் ஒரு தடை; இரண்டையும் இணைத்து வைத்திருக்கும் சாஸ்திரம், இந்துக் கடவுள் ஒரு தடை; இவைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பார்ப்பனியம் ஒரு தடை; இவர்களுக்கு உற்ற தோள் கொடுக்கும் முதலாளித்துவ அரசமைப்பு முதன்மையான தடை; இதை முட்டுக்கொடுத்து காப்பாற்றிக் கொண் டிருக்கும் இந்திய நாடாளுமன்றம் மிகப்பெரிய தடை.

இவ்வளவு தடைகளையும் உடைத்தெறிந்து வரும் நாளில் உண்மையான மார்க்சியத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் வாக்கு அரசியல் இதற்கு வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்சியம் என்பது பாட்டாளிகளுக்கான விடுதலை மட்டுமன்று. சரிபாதி எண்ணிக்கை கொண்ட பெண்ணினத்திற்கும், பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்டோருக்கும், அய்ந்தில் ஒரு பங்கிருக்கும் தலித் மக்களுக்கும் மார்க்சியம் விடுதலை பெற்றுதரும்.

அந்த வகையிலே சிந்திப்போம்!

அந்தப்பாதையிலேபயணிப்போம்!!

Pin It