மீரட் சதிவழக்கு நடந்து கொண்டிருந்த காலம், உலக முதலாளித்துவம் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த காலமாகும், 1929-33, தேசிய விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரை, மூன்றாவது பேரலை வீசிய காலமாகும் (முதல் பேரலை 1905-10, இரண்டாவது பேரலை 1919-22).

1929இல் கல்கத்தா காங்கிரசு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்த - இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து வழங் கும் ஓராண்டுக் கெடு முடிவடைந்திருந்தது,

கோரிக்கைகளை ஏற்பதற்குப் பதிலாக, அரசாங்கம் அடக்குமுறைகளை மேலும் தீவிரமாக்குவதைக் கண்ட மக்கள், தேசிய எழுச்சியை மேலும் வீறுகொண்டெழச் செய்தனர், 1929 திசம்பர் 31இல் லாகூரில் கூடிய காங்கிரசு மாநாட்டில் “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்தும், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்தும் முழு விடுதலை என்பதே நமது இலட்சியம்” என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, மேலும் உரிய சமயத்தில் வரிகொடா இயக்கம் உட்பட சட்டமறுப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது, 1930 சனவரி 26ஆம் நாள் இந்தியா முழுவதும் முதன்முதலாகச் சுதந்தரதினம் கொண்டா டப்பட்டது.

1931ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்திற்காகத் தண்டியாத்திரை ஆரம்ப மானது, மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கில் ஆண் களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் இயக்கமானது ஒரு புரட்சிகர எழுச்சியாக உருவெடுத்தது.

1930 ஏப்பிரல் 18இல், சிட்டகாங் ஆயுதக்கிடங்கி லிருந்து, தேசியப் புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கைப்பற்றினர். பெஷாவரில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காகக் ‘கார்வாலி’ துருப்புகள் அனுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களோ முசுலீம்கள்; துருப்புகளோ கார்வாலி இந்துக்கள்.

ஆயினும் கார்வாலித் துருப்புகள் தங்களது முசுலீம் சகோதரர்கள் மீது துப் பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அதைத் தொடர்ந்து பெஷாவர் நகரம் பத்து நாள்கள் மக்கள் வசம் இருந்தது.

அதன்பிறகு, மீண்டும் பெஷாவரைக் கைப்பற்ற நேர்ந்தது. அதைப்போலவே காந்தியடிகள் 1930 மே 4ஆம் நாள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பம்பாய் மாகாணத்தில் ஷோலாப்பூரில் முழு வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இராணுவச் சட்டத்தை அமலாக்கி அந்நகரம் மே 12-இல் மீண்டும் கைப்பற்றப்பட்டது. இப்போராட்டங்களுக்கெல்லாம் மக்களின் பேராதரவு இருந்தது.

இந்த நிலை, ஒருபுறம் ஏகாதிபத்திய அரசை அச்சமடையச் செய்தது; மறுபுறம் காங்கிரசிலிருந்த வலதுசாரித் தலைவர்களைப் பீதியடையச் செய்தது, இதன்காரணமாக. 1931 சனவரி 26 அன்று காந்தி யாரும் காரியக் கமிட்டி உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அன்றைய வைஸ்ராய் இர்வினுடன் காந்தி ஒப்பந்தம் செய்துகொண்டார்.

ஆனால் காந்தி-இர்வின் ஒப்பந்தம் மூலம் எந்தவொரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உப்புச் சட்டம் கூட திரும்பப் பெறப்படவில்லை. பகத்சிங்கும் மற்றும் அவரது தோழர் களும், பிற அரசியல் கைதிகளும், கார்வாலி படை வீரர்களும், மீரத் கைதிகளும் சிறையில் வாடினர்.

ஆனால் சட்டமறுப்புப் போராட்டம் நிறுத்தி வைக்கப் பட்டது. காங்கிரசு, முன்பு புறக்கணித்த இலண்டன் வட்டமேசை மாநாட்டில், இப்பொழுது கலந்து கொள்வ தாக ஒப்புக்கொண்டது.

அந்நிலையில்தான் 1931 மார்ச்சு 29இல் கராச்சி யில் காங்கிரசு மாநாடு கூடியது, மாநாடு தொடங்கும் வேளையில். பகத்சிங். இராஜகுரு. சுகதேவ் தூக்கிலிடப் பட்டனர். அவர்களைக் காப்பாற்ற காந்தி தவறிவிட்டார் என்று கராச்சிக்கு அருகில் காந்திக்கு எதிராகக் கருப்பு மலர்களும், மாலைகளும் வைக்கப்பட்டன.

எனினும் மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இம்மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘வேலைத்திட்ட வரைவை’ப் (Draft Action Plan) பிரதிநிதிகள் மத்தியில் விநியோகித்தது.

இத்திட்டம் 1930இல் ஏற்கனவே ‘இன்பிரகாரில்’ வெளிவந்திருந் தது. இக்கொள்கைத் திட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிய வர்க்கம் பங்கு கொள்வது சாத்தியம் என்பது மறுக்கப்பட்டது.

சிங்காரவேலர்-பெரியார்-சுயமரியாதை இயக்கம்:

தென்னிந்திய இரயில்வேத் தொழிலாளர் போராட்டம் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த சிங்கார வேலர் 18 மாத கால சிறைத் தண்டனையை அனு பவித்துவிட்டு, 1930 ஆகஸ்டில் வெளிவந்தார், அப்பொழுது அவருக்கு அகவை 70.

அச்சமயம் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சுயமரியாதை இயக்கத்தோடு சிங்காரவேலர் தொடர்பு கொண்டார். அந்த இயக்கத் தின் பத்திரிகையாகிய ‘குடிஅரசில்’ பல தொடர் கட்டு ரைகளை எழுதினார். அவர் எழுதிய முதல் தொடர் கட்டுரை, ‘கம்யூனிசமும் மதமும்’ என்பதாகும்.

சிங்கார வேலர் சுயமரியாதை இயக்க மாநாடுகள் சிலவற்றில் கலந்துகொண்டார், அங்கெல்லாம் மார்க்சியத்தின் அடிப் படைக் கொள்கைகளை விளக்கினார். இது தமிழ் நாட்டில் கம்யூனிச இயக்க வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியது என்று சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள கே. முருகேசனும், சி.எஸ். சுப்பிரமணியமும் கூறுகின்றனர்.

பெரியார் ஈ.வெ.ரா. ரஷ்ய-அய்ரோப்பிய-இலங்கைச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6.11.1932-இல் தூத்துக்குடியை அடைந்து, 11.11.1932-இல் ஈரோட்டை அடைந்தார். அயல்நாடுகள் பயணத்துக்குப்பின், அவர் முதன்முதலாக விடுத்த வேண்டுகோள் குறிப்பில், ‘தோழர் என விளியுங்கள்’ என அனைத்து மக்க ளையும் கேட்டுக் கொண்டார்.

இலண்டனில் அவருக்கு அன்பளிப்பாகக் கிடைத்த சோவியத்தின் அய்ந்தாண் டுத் திட்ட ஆங்கில நூலைத் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.

மேலும் ஈரோட்டில் சென்னை மாகாணச் சுய மரியாதைத் தொண்டர்கள் பலரையும் அழைத்து 1932 திசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் அவரது புதிய சமதருமத் திட்டத்தை விளக்கினார்.

சிங்காரவேலரும் பெரியாருடன் இருந்து விளக்கமளித்தார். அத்திட்டத் தை விளக்கி மாவட்ட மாநாடுகள் பல நடைபெற்றன. எழுத்திலும் பேச்சிலும் அதிதீவிரப் பொருளாதாரப் புரட்சிக் கருத்துகளைப் பெரியார் வெளியிட்டார். இத்திட்டம் ‘ஈரோட்டுத் திட்டம்’ என்று பெயர் பெற்றது.

பெரியாருடைய தீவிர சமதருமப் பிரச்சாரத்தின் விளைவாக 1933இல் தமிழ்நாட்டில் சுமார் 460 சமதர்மச் சங்கங்கள் செயல்பட்டு அவரை ஆதரித்து நின்றன.

ஈரோட்டுத் திட்டத்தை ஏற்று அதனடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்குவதற்காக மாநாடு ஒன்றினைக் கூட்டும் ஆலோசனையும் இருந்தது.

ஆனால் அந்த மாநாடு நடைபெறவேயில்லை. அதற்கு முக்கியக் காரணம், சுயமரியாதை இயக்கத் தலைமையிலிருந்த ஒரு பிரிவினர் இத்திட்டத்தினை ஆரம் பம் முதல் எதிர்த்து வந்ததுதான்.

இதைத்தொடர்ந்து. “சுயமரியாதை இயக்கத்தின் எதிர்காலமும் அதன் இன்றைய நெருக்கடியும்” என்ற தலைப்பில் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ஈரோட்டுத் திட்டத்தின் அடிப்படையில் கட்சி அமைப்பினை உருவாக்க வேண்டியதன் அவசியத் தை வலியுறுத்தினார்.

ஆனாலும் சுயமரியாதை இயக்கத் தலைமை இந்த ஆலோசனைகளை நடைமுறைப் படுத்தவில்லை. இதனால் வெறுப்புற்ற ஒரு பகுதியினர் ப. ஜீவானந்தத்தைச் செயலாளராகக் கொண்டு, “சுயமரியாதைச் சமதர்மக் கட்சி”யைத் தொடங்கினர்.

இக்கட்சியின் மாநாடு ஒன்று மன்னார்குடியில் 1934 மார்ச் மாதம் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கான தலைமை உரையை சிங்காரவேலர் தயாரித்து அனுப்பியிருந்தார்.

சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை நடத்தி வந்த ஜீவானந்தம், அதனைக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி யோடு இணைத்திட ஒப்புக்கொண்டார்.

அதன்படி, திருச்சி யில் 1936 நவம்பரில் நடந்த மாநாட்டில், சுயமரி யாதைச் சமதர்மக் கட்சியை, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைத்தார்.

ஈரோட்டுத் திட்டத்தின் அடிப்படையில் கட்சி உருவாகி யிருந்தால், பெரியார் ஈ.வெ.ரா., ம. சிங்காரவேலரின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே வெகுவாக மாறியிருக்கும்.

- தொடரும்

Pin It