சகோதரர்களே!

நான் இதுவரை எந்த தொழிலாளர் சங்கத்திலும் பேசியதேயில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இரண்டொரு சங்கங்களுக்குப் போயிருக்கிறேன். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மகாநாட்டில் உபசரணைத் தலைவராக இருந்து இரண்டொரு வார்த்தைகள் பேசியிருக்கிறேன்.

தொழிலாளர் சங்கம்

பொதுவாய் தொழிலாளர்சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுவதில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதை தங்கள் நன்மைக்கும் கீர்த்திக்கும் ஏற்படுத்திக்கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளிகளே கிடையாது.

தொழிலாளர் யார்?

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான் . தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டுமக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி. நீங்கள் அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளியின் கீழ் தினக்கூலிக்கமர்ந்து, உங்களுக்கு எவ்வித சுதந்திரமுமில்லாமல் முதலாளி சொல்லுகிறபடி செய்துவிட்டு, அதன் பலன் முழுவதையும் அவனே அடையும்படி செய்து, உங்கள் ஜீவனத்திற்குக் கூட போதுமானதாயில்லாத கூலியை வாங்கிப் பிழைக்கிறீர்கள். ஒரு முதலாளிக்குக் கீழ் வேலை செய்து கூலி வாங்குபவன் எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும் அவன் கூலிக்காரன்தான்; அடிமைதான்.

தொழிலாளியும் தொழிலும்

தொழிலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் பலனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் அருமை உங்களுக்கு ஏதாவது தெரியுமா? காலையில் பட்டறைக்குள் போய் புகுந்தால் மாலை வரை அவன் சொல்லுகிறபடி உழைக்க வேண்டியது; வாரத்திற்கொருமுறை கூலி வாங்கிக்கொள்ள வேண்டியது. தெருக்களில் கூலிக்கு மூட்டை தூக்கி அவ்வப்போது கூலிவாங்கும் நபருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் தங்களுக்கு கூலி போதாது, அதிக பாரமாயிருக்கிறது, இன்னும் சேர்த்துக்கொடு என்று முதலாளியைக் கேட்பதற்கும் நீங்கள் சங்கம் என்று பெயர் வைத்துக்கொண்டு செய்யும் தீர்மானங்களுக்கும் என்ன வித்தியாசம்? சில சமயங்களில் கூலிக்காரனாவது தான் தூக்கும் பாரத்தையும், தூக்கிக்கொண்டு செல்லும் தூரத்தையும் அறிந்து கூலி அதிகம் கேட்கிறான். நீங்கள் அதுகூடயில்லை. உங்கள் தொழிலின் அருமை இன்னதென்று கூட உங்களுக்குத் தெரியாமல் முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே, நீ இவ்வளவு சுகப்படுகிறாயே என்கிற பொறாமையின் மேல், ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக்கூடாது என்று பல்லைக் கெஞ்சுகிறீர்கள். தனித்தனியாய் கெஞ்சுவதற்குப் பதிலாய் நாலு பேர் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிலாளர் சங்கம் என்கிறீர்கள். அதுவும் உங்களுக்குக் கெஞ்சிக் கேட்க சக்தியில்லாமல், உங்கள் தொழிலிலோ உங்கள் கஷ்டத்திலோ கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒருவரை உங்கள் சங்கத்தலைவராயும் காரியதரிசியாயும் சில சமயங்களில் நிர்வாகஸ்தர்களாயும் வைத்துக் கொண்டு கூலியை உயர்த்தும்படி கேட்கிறீர்கள்.

தற்காலத் தலைவர்களால் பயனில்லை


ஒரு முதலாளியிடம் வேறொருவன் போய் “ஐயா! உங்களிடம் உள்ள கூலிக்காரர்களுக்கு கூலி போதவில்லை, கொஞ்சம் சேர்த்து கொடுங்கள்” என்று சொன்னால் அந்த முதலாளிக்கு கூலிக்காரர்களிடம் என்ன மதிப்பு இருக்கும். அதுபோலவே உங்கள் சவுகரியத்திற்கு வேறு ஒருவன் போராடுகிறான் என்றால் உங்களுக்கு உங்களுடைய தேவை இன்னதென்று கூடத்தெரியவில்லை என்பதுதானே பொருள். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் உபாத்தியாயரிடம் போய் “எனக்கு வயிறு வலிக்கிறதென்று எங்கள் தாயார் சொன்னார்கள். ஆதலால் இன்றைக்கு லீவு கொடுங்கள்” என்று கேட்பது போலவே நீங்கள் வேறொருவரை உங்கள் சங்கத்திற்கு தலைவராக வைத்துக்கொண்டு காரியங்களைச் செய்வதும், உங்களுக்கு சம்பந்தமில்லாதவைகளைப் பின்பற்றுவதுமாகும். வெளியிலிருந்து உங்களுக்குத் தலைவர்களாய் வருகிறவர்களுக்கு முதலாவது உங்கள் வேலையிலுள்ள கஷ்டமும், உங்களுக்கு இருக்கிற கஷ்டமும் அவர்களுக்கு எப்படித் தெரியும்? உதாரணமாக, இது சமயம் நமது நாட்டு தொழிலாளர் சங்கத்தலைவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். யாருக்காவது உங்கள் தொழிலின் அருமை தெரியுமா? உங்கள் கஷ்டத்தின் கொடுமை தெரியுமா? அவர் தனது கீர்த்திக்காக உங்களுக்கு தலைவராய் இருப்பார். அவர் ஒரு தொழிலும் செய்யாமல் மாதம் 500, 1000, 5000, 10000 என்று பொது ஜனங்களின் பணத்தை உங்கள் முதலாளிகளைப் போலவே கொள்ளை அடித்து சுகபோகமனுபவித்துக் கொண்டு, தனது சுயநலத்தை நாடிக்கொண்டிருப்பவராயிருப்பார். அவர்களால் உங்களுக்கு எந்தத் துறையில் அனுகூலம் கிடைக்கக்கூடும். அவர்களைக் கண் டால் உங்கள் முதலாளிமார்கள் எப்படி மதிக்கக்கூடும். இதே முகாந்தரங்களால் தான் நமது நாட்டு தொழிலாளர் சங்கங்கள் என்பது இதுவரை உருப்படியாகாமல் போனதற்குக் காரணம்.

வேலைநிறுத்தமும் தலைவர்களும் அநேக இடங்களில் வேலைநிறுத்தம், வெளியேற்றம் நிகழ்கிறது. இவைகள் ஏற்பட்டு என்ன பலன் கிடைத்தது? அதன் பலனாய் எவ்வளவு தொழிலாளிகளுக்கு வேலை போய் கஷ்டமுண்டாயிற்று? இவற்றை எந்தத் தலைவர் கவனித்தார்? பல தொழிலாளி, தலைவர்கள் வார்த்தையைக் கேட்டதின் பலனாய் வயிறாரக் கஞ்சியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களை நடத்தின தலைவர்கள் இன்றைய தினம் முன்னிலும் அதிகமான கீர்த்தியுடனும் வரும்படியுடனும் வயிறு வெடிக்கச் சாப்பிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். மற்றும் பல தலைவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உங்கள் முதலாளிமார்களிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதுபோல் வெளியார்களை உங்கள் சங்கத் தலைவர்களாய் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தொழிலாளரும் அரசியலும்

அதுமாத்திரமல்ல, உங்கள் சங்கதியே உங்களுக்குத் தெரியாமல் இப்படித்திண்டாடும்போது, சூதாட்டத்திற்குச் சமானமான அரசியல் கக்ஷிகளில் உங்கள் சங்கங்களை நுழைத்துக் கொள்ளுகிறீர்கள்; தனித்தனியாகவும் நுழைகிறீர்கள். கூலிக்காரனுக்கும் அரசியலுக்கும் வெகுதூரம். அரசியல் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வயிற்றுக்கு கூலி கேட்கவே உங்களுக்குத் தெரியவில்லையானால், உலகத்துக்கு தேவையை நீங்கள் அறிவதெப்படி? உங்களுக்கு இருக்கும் வியாதி இன்னதென்று கண்டுபிடிக்க உங்களால் முடியாமலிருக்கும்போது நீங்கள் ஊராருக்கு வைத்தியம் செய்வதென்பது சிரிப்பாயிருக்கவில்லையா? உங்களுடைய அரசியல் என்ன? முதலியாரை வண்டியில் வைத்து இழுக்கலாமா? நாயுடுவை வண்டியில் வைத்து இழுக்கலாமா? அய்யங்காரை வண்டியில் வைத்து இழுக்கலாமா? நாயக்கரை வண்டியில் வைத்து இழுக்கலாமா? என்பது போன்றவையும், யாரை சட்டசபைக்கு அனுப்பலாம், யாருக்கு ‘ஜே’ போடலாம்? யாருக்கு ஓட்டுச் செய்யலாம்? என்பது தானே. நீங்கள் வண்டி சவாரி செய்யலாமா? நீங்கள் சட்டசபைக்குப்போய் உங்கள் தேவைகளை கவனிக்கலாமா? என்கிற கவலையே உங்களுக்கில்லையே.

எப்பேர்ப்பட்ட உண்மைத் தலைவர்கள் மகாத்மா போன்றவர்கள் அரசியல் என்பதை உதறித் தள்ளிவிட்டு, ஏழைகள் கஷ்டத்தை நிவர்த்திக்க வேண்டும், ஒடுக்கப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தனியே இருந்து இரவும் பகலும் உழைக்கும்போது உங்களுக்கென்ன அரசியல் அழுகின்றது. இப்பொழுது அரசியலில் உழலும் யாருக்காவது விடுதலை என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? சுயராஜ்யம் என்றால் என்ன? தொழிலாளர் விடுதலை என்றால் என்ன? என்பது தெரியுமா? எப்பொழுதாவது வாயைத் திறந்து சொல்லியிருக்கிறார்களா? வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகத்திற்கும் ‘உரிமை’, ‘உரிமை’, ‘சுயராஜ்யம்’, ‘சுயராஜ்யம்’, ‘தொழிலாளர்’, ‘தொழிலாளர்’ என்று கத்தினால் நீங்களும் அதில் சேர்ந்துக் கத்துவதா? உங்கள் நிலைமையை இன்னதென்று அறியாமல் இப்படி மோசக்காரர்களுடன் சேர்ந்து அவர்களை உங்கள் தலைவர்களாக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் திரிந்தீர்களானால், நீங்கள் மற்றவர்களை வண்டியில் வைத்து இழுக்கவும், உங்கள் கழுத்தில் கயிறு கட்டி சந்தைகளில் கொண்டு போய் விற்கவும்தான் நீங்கள் ஆளாவீர்களே தவிர ஒருக்காலும் நீங்கள் மனிதர்கள் போல் வாழமுடியாது.

கண்டிப்பாய் அரசியலில் நீங்கள் சேரவே கூடாது. அரசியல் உங்களிடம் வந்து சேரட்டும். அரசியல்காரர் உங்களைத் தலைவர்களாகக் கொள்ளட்டும். அப்பேர்ப்பட்ட நாளை எதிர்பாருங்கள்.

சங்கங்களைப் புதுப்பியுங்கள்

உங்கள் சங்கங்களுக்கெல்லாம் நீங்களே தலைவர்களாகுங்கள். உங்கள் நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள். பிறகு தொழிலாளர் கக்ஷி என்று ஒரு பொதுக்கட்சியை ஏற்படுத்துங்கள். அதில் உங்கள் தொழிலின் பலன் முழுவதையும் நீங்களே அடையத்தக்கதாகவும் தொழிலாளர்களுக்கு வேண்டிய நன்மைகளையும், பொதுமக்களுக்கு வேண்டிய நன்மைகளையும் கொள்கையாக வைத்துப் பரப்புங்கள். அதில் எல்லோரையும் வந்து சேரும்படி செய்யுங்கள். தொழிலாளர் கட்சி நாட்டையாளும்படி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு எடுப்பார் கைக்குழந்தையாய்த் திரிவது தொழிலாளர் உலகத்திற்கே மானக்கேடு. உங்கள் நிலை என்ன? மாடு கன்றுகள் வளர்க்கிறவர்களாவது அவைகளிடம் வேலை வாங்கின பிறகு நிழலில் கட்டுகிறார்கள்; வேளாவேளைக்குத் தண்ணீர் காட்டுகிறார்கள். உங்களுக்கு அந்த சௌகரியம் கூட எங்கேயிருக்கிறது. பகலெல்லாம் உழைக்க வேண்டியது, கூலி வாங்க வேண்டியது, அதை குடிக்கோ, கூத்திக்கோ, சூதுக்கோ சிலவு செய்யவேண்டியது; பட்டினி கிடக்கவேண்டியது; பெய்யும் மழையும் அடிக்கும் வெய்யிலும் உங்கள் மேலேயே பட வேண்டியது என்கிற கேவல நிலைமையிலிருக்கிறீர்கள். உங்களில் இரண் டொருவர் சுகப்படுவதை நினைக்காதீர்கள். பெரும்பான்மையாய் எப்படியிருக்கிறீர்கள்? இதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. உங்கள் ஓட்டுகளுக்கு மாத்திரம் அதிக கிராக்கி. யாராவது பணம் கொடுத்து அல்லது யாருக்காவது பணம் கொடுத்து உங்கள் ஓட்டுகளை வாங்கி பதவியைப் பெற்று விடுகிறார்கள்.

நீங்களே தலைவராகுங்கள்

ஆதலால், இன்று முதல் அரசியலையும் அரசியல்காரரையும் மறந்து விடுங்கள். உங்கள் சங்கத்திற்கும் வருஷாந்திரக் கொண்டாட்டங்களுக்கும் தொழிலாளர்களையே தலைவர்களாய் ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு சக்தியில்லையே என்று குறைகூறாதீர்கள். அது உங்களுக்கு அவமானம். அதை விட மோசமானவர்களை நீங்கள் தலைவர்கள் என்கிறீர்கள். அயோக்கியர்களைவிட முட்டாள்கள் நல்லவர்கள் என்றே சொல்லுவேன். இருக்கிறவர்களை வைத்துக்கொண்டு காரியம் நடத்துங்கள். கூடிய சீக்கிரம் எல்லாம் சரிபட்டுப்போகும். நான் ஒரு சிறு கதை கேழ்விப்பட்டிருக்கிறேன். ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டுமென்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுள் ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அம்மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் எங்களுக்குக் கொடுத்த தலைவர் உபயோகமில்லையென்று வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அந்த பாம்பு தினமும் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கி தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி தங்கள் காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் தாங்களே பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல் உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரியதரிசியும், நிர்வாகிகளும் கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம். இந்த நிலையில் நீங்களும் சங்கம் வைத்து நடத்த சக்தியற்றவர்கள். உங்களுக்குள் தலைவர் ஏற்பட்டு நடத்த சக்தி வரும் வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள். வீணாக ‘குளத்தைக் கலக்கிப் பிராந்துக்கு விட்டது போல்’ உங்கள் உழைப்பால் உங்கள் முதலாளிமார் பிழைப்பதோடல்லாமல், உங்களால் மோசக்காரர் பிழைக்கும்படி செய்து நீங்கள் கஷ்டப்படாதீர்கள். நீங்கள் என்னைக் கூப்பிட்ட போதே இதைத்தான் சொல்ல நினைத்தேன். இதுதான் உங்கள் சம்பந்தமான என்னுடைய அபிப்ராயம்.

அடுத்தபடியாக நீங்கள் கதரை ஆதரிக்க வேண்டும். தொழிலாளரா யிருப்பவன் முதலாவது செய்ய வேண்டிய வேலை மற்றொரு தொழிலாளியை ஆதரிப்பதுதான். ஆதலால் கிராமத்து பெண்மணிகள், நமது சகோதரிகள் தொழிலற்று கூலியுமற்று தனக்கும் தனது பிள்ளைக்குட்டிகளுக்கும் ஆகாரமில்லாமல் பட்டினிகிடந்து, விபசாரம் செய்யத்தக்க நிலையில் இருக்கும்போது, நீங்கள் அவர்களை அலட்சியம் செய்து அவர்களது தொழிலை ஆதரிக்காமல் மல் துணிகளையும் மில் துணிகளையும் ஆதரிப்பதானது மிகவும் பாதகமான காரியமாகும். கதரை ஆதரித்தால் நீங்கள் காலக்கிரமத்தில் கூலிக்காரர்கள் என்கிற பெயர் மாறி உண்மையான தொழிலாளியாவீர்கள்.

(குறிப்பு:- நாகை தென் இந்தியா ரெயில்வே தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் 25.05.1926 ல் ஆற்றிய சொற்பொழிவு.)