உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு இராசிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்ப்போம்

இராசிவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக் கப்பட்ட கைதிகளுக்கு அத்தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இருக்கிறது. மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது மட்டுமே தேவை.

இத்தகைய உரிமை அரசமைப்புச் சட்டத்தின் விதி 161 இன்படி மாநில அரசுக்கு இருந்தும் 2009க்கு முன்னரோ 2011க்குப் பின்னரோ தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தவர்கள் இதுபற்றிக் கவலையேபடவில்லை.

இந்தச் சூழலில் எதிர்பாராத் தன்மையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுவின் மீது, சாதகமாக முடிவெடுக்க இந்திய அரசு வேண்டுமென்றே இடம் கொடுக்காமல் இருந்தது.

இதற்குக் காரணம் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் இராசிவ்காந்தியின் கொலைக் குற்றத்துக்கு ஆளானவர்கள் என்பதாலும் அவர் காங்கிரசின் தலை வராக இருந்தார் என்பதாலும் பழிவாங்கும் எண்ணத்துடன், காங்கிரசு அரசு செயல்பட்டதனால்தான் பிரதீபா பாட்டீல் அவர்களோ, பின்னர் வந்த பிரணாப் முகர்ஜி அவர்களோ மய்ய அரசின் பரிந்துரை இல்லாமல் வாழ் நாள் தண்டையாகக் குறைக்க முடிவெடுக்க முடியாமல் பதினொரு ஆண்டுகளுக்குமேல், மறுதலித்தார்கள்.

அண்மையில் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை விண்ணப்பத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்திய அரசும், குடியரசுத் தலைவரும் பதினொரு ஆண்டுகள் காலத்தாழ்வு செய்தது அடிப்படை மானிட உரிமைக்கு எதிரானதாகவும் தூக்குத் தண்டனைக் கைதிகள் நாள்தோறும் செத்து செத்துப் பிழைக்கின்ற பயங்கரமான நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டதையும் கணக்கில் எடுத்துக் கொண்டும் மேலே கண்ட மூவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்ட னையாகக் குறைத்துத் தீர்ப்பு வழங்கினர்.

இந்த வழக்கில் வெள்ளையர் கால வழக்கப்படி, 14 ஆண்டுகள் முடிவிலேயோ அல்லது இருபது ஆண்டு கள் முடிவிலேயோ வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட இந்தக் கைதிகளை விடுதலை செய்வது பற்றி, தமிழ் நாட்டு மாநில அரசு சிந்திக்கவும், முடிவெடுக்கவும் உரிமை உண்டு.

அந்த உரிமையப் பயன்படுத்தித்தான் சரியான முறையில் தமிழக அமைச்சரவையில் முடிவெடுத்து, சட்டமன்றத்தில் அறிவித்து ஒப்புதல் பெற்று, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு 72 மணி நேரத்தில் மய்ய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டதுதான். இது ஒரு சாதாரண வழக்கப்படியான நடவடிக்கைத்தான். இதில் சட்ட சிக்கல் எதுவும் இல்லை. மானுட உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற செய்தி மட்டுமே இதில் உள்ளதாகும்.

பதினொரு ஆண்டுக்காலம் தாமதத்திற்கு தகுந்த காரணம் சொல்ல முன்வராத இந்திய அரசு, எல்லா மக்களுக்குமான அரசு என்று கருதாமல், காங்கிரசுக் கட்சி அரசு என்று மட்டும் கருதி, காங்கிரசுத் தலைவர் இராசிவ்காந்தி கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை எப்போதும் விடுதலை செய்யக்கூடாது என்ற வன்னெஞ்சத்துடன், தமிழ்நாட்டு அரசின் முடிவை எதிர்த்து வேண்டுமென்றே உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத்தது காங்கிரசு அரசு.

இந்திய அரசின் இந்தப் போக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் செய்ய இயலாது. இந்திய அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்கவும் இயலாது.

இத்தகைய கையறு நிலையில்தான் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, இக்கைதிகளுக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணத்தில், சட்டத்தின் முன்னாலும், நியாய உணர்வுள்ள உலகத்தின் முன்னாலும், மானிட உரிமைக்காப்பு உணர்வு உள்ள மக்கள் முன்னாலும், அரசமைப்புச் சட்ட அதிகாரம் படைத்த அமர்வுக்கு இந்திய அரசின் மறுஆய்வு விண்ணப்பத்தைச் சில குறிப்புகளுடன் பரிந்துரைத்துள்ளது.

அசரமைப்புச் சட்ட அமர்வில் பங்கேற்கும் அய்ந்து நீதிபதிகள், கைதிகளின் அன்றாடம் செத்துப் பிழைக்கும் கொடூரமான உணர்வு நிலையையும் 23 ஆண்டுகள் தண்டனை அனுபவித்ததைக் கருத்தில் கொண்டும் நியாய உணர்வின் அடிப்படையிலும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் கைதிகளாக இன்றுள் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான தமிழ்நாட்டு அரசின் முடிவை ஏற்றும், நியாயமான தீர்ப்பை வழங்கு வார்கள் என்று மார்க்சியப் பெரியாரியப் பொதுவு டைமைக் கட்சி மனமார எதிர்பார்க்கிறது.

வெள்ளையன் காலத்தில் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேரில்கூட இத்தகைய-நியாயத் திற்கு விரோதமான-வன்னெஞ்ச நடவடிக்கை மேற் கொள்ளபடவில்லை என்பதை நாம் தமிழ்நாட்டு மக் களுக்கும் இந்திய மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும்.

- வே.ஆனைமுத்து

Pin It