மாருதி கம்பெனியின் ஒரு மேலாளரைக் கொன்றுவிட்டதாக பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்ட 31 தொழிலாளர்களுக்கு குர்கான் மாவட்ட நீதிமன்றம் மார்ச் 18 அன்று தண்டனை விதித்திருக்கிறது. பதிமூன்று தொழிலாளர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 4 தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் 14 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் நியாயமற்ற, தொழிலாளர் விரோத இந்தத் தீர்ப்புக்கு எதிராக, குர்கான் மானேசர் பகுதியில் உள்ள மாருதி சுசூகியின் ஆறு தொழிற்சாலைகளில் உள்ள 20,000 தொழிலாளர்கள், 18 மார்ச் அன்று மாலையே 1 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செய்யாத ஒரு குற்றத்திற்காக அநீதியாக தண்டிக்கப்பட்டுள்ள தங்களுடைய தோழர்களுக்கு நீதி கோரும் தங்களுடைய போராட்டத்தை விட்டுக் கொடுக்க மாட்டோமென மாருதி சுசூகி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். தண்டிக்கப்பட்ட தொழிலாளர்கள் செய்த ஒரே “குற்றம்”, தொழிலாளர்களுடைய உரிமைகளைக் கோரியதும், தங்களுடைய மோசமான வேலை நிலைமைகளை மாற்றக் கோரியதும் ஆகும்.
நான்காண்டுகளுக்கு முன்னர், 148 மாருதி சுசூகி தொழிலாளர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து காவல் துறையினர் பிடித்துச் சென்றதை நாம் நினைவு கூறலாம். தொழிலாளர்களுக்கும், நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் அந்த அறையில் ஏற்பட்ட தீயில், அதனுடைய மனித வள மேலாளர் இறந்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். நீதி மன்றத்தின் முன்வைக்கப்பட்ட அத்தாட்சிகளிலிருந்து, கொலைக் குற்றமானது நிரூபிக்கப்படவில்லையென இறுதி விவாதத்தின் போது தொழிலாளர் தரப்பு வழக்குறைஞர்கள் சுட்டிக் காட்டினர். மேலாளர் இறந்ததற்குக் காரணமான அந்தத் தீயைத் தொழிலாளர்கள் தான் வைத்தனர் என்பதற்கு எந்தவித அத்தாட்சியும் இல்லை. கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளர்கள் பலர் அன்று அந்த வளாகத்தில் கூட இல்லை.
கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலரும், தொழிற் சங்கத்தின் தலைவர்களும், தீவிர உறுப்பினர்களும் ஆவர். மற்ற தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கொடுத்த பட்டியலிலிருந்து விருப்பம் போல பொறுக்கி எடுக்கப்பட்டத் தொழிலாளர்கள் ஆவர். எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி 117 தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதலாளித்துவ சுரண்டலதிபர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், தொழிலாளி வகுப்பு தன்னுடைய நலன்களுக்காக அணி திரளுவதைத் தடுப்பதற்காகவும் இருக்கும் நிறுவனங்களென மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசாங்கங்களும், நீதி மன்றங்களும், தங்களுடைய வகுப்புத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்துவதைத் தடுப்பதற்காக, குர்கான் மானேசர் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினரையும், துணைக் காவல் படையினரையும் அரியானா அதிகாரிகள் குவித்து வைத்திருந்தனர். மார்ச் 15 அன்று ஊரடங்குச் சட்டம் அங்கு போடப்பட்டிருந்தது. ஆயினும் இந்த நடவடிக்கைகளால், பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்கள் தங்களுடைய கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை.
நீதி மன்றம் தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர், மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற் சங்கத்தின் ஒரு தற்காலிக வேலைக் குழு, தீர்ப்புக்கு எதிராக ஆர்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு குர்கானில் உள்ள எல்லாத் தொழிற் சங்கங்களையும் கேட்டுக் கொண்டனர். எல்லா மாருதி தொழிலாளர்களுக்கும் நீதி கோருவதற்கு ஆதரவாக ஒன்றுபட்ட செயல்களில் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் மார்ச் 18 அன்று குர்கான் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக மார்ச் 19 அன்று குர்கான் – மானேசர் பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் மதிய உணவைப் புறக்கணித்தனர்.
மார்ச் 16 அன்று இந்தியாவெங்கும் கடைபிடிக்கப்பட்ட செயல்பாட்டிற்கான தேசிய நாளில், அரியானாவின் குர்கான்-மானேசர்-தாருஹிரா-பாவல் தொழிற்கூடப் பகுதியில் உள்ள பல தொழிற்சங்கங்கள், மாருதி சுசூகியின் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 20,000 தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சேர்ந்து கொண்டனர். அதில் ஹோண்டா மோட்டார் சைகிள் அன்டு ஸ்கூட்டர்ஸ், ஹீரோ மோட்டார் கார்ப், டைகின் ஏர் கண்டிஷனிங், பெல்சோனிகா ஆடோ காம்போனட்ஸ், கான்சாய் நெரோலாக் பெயின்ட்ஸ், ரிகோ ஆடோ ஒர்க்ஸ், ஓமாக்ஸ் ஆடோ, பஜாஜ் மோட்டார்ஸ், சன்பீம், முன்ஞால் கிரியு, சோனா கோயா ஸ்டீரிங், மைக்ரோடெக், ஆரெஸ்டி, பிரிகால், ஹெமா, நாப்பினோ, சத்யம் ஆடோ, ஜிகேஎன், மெட்ரோ ஆர்டெம், எப்சிசி, முன்ஞால் ஹோவா, டால்பிரோஸ், பெர்ஃபெடி, பிரிகோகிளாஸ், ஆர்கானிகா மெடிக்கல், என்கே, யுனிபுராடக்ட், ஆடோபிட், என்டியூரன்ஸ், ஆஸ்டி, எம்கே ஆடோ, ஹார்சோரியா, அமுல், மோசர் பியர் மற்றும் எல்ஜி ஆகியன உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் பங்கேற்றன.
சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த டயமண்ட் செயின், டிஐ சைகிள்ஸ், டியூப் இன்டியா புராடக்ட்ஸ், ஆன்லோட் கியர்ஸ் இனோவேட்டர்ஸ், சாய்மீரா, கேடர்பில்லர், சான்மினா, ஜேய் இன்ஜினீரிங், சாந்தி கியர்ஸ் மற்றும் சிஎன்எப் ஆடோமோடிவ் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆதரவு நடவடிக்கைகளில் பங்கேற்றனர். லூதியானா, பிலாய், ருத்திராபூர் ஆகிய இடங்களிலிருந்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கைகள் வந்துள்ளன.
இந்த அநீதியான நீதி மன்றத் தீர்ப்பையும், கொடூரமான தண்டனைகளையும் மாருதி தொழிலாளர்களுக்குக் கொடுத்திருப்பதன் மூலம் பெரு முதலாளிகள், தொழிலாளி வகுப்பு முழுவதற்கும் “உங்களுடைய உரிமைகளுக்காக போராட முன்வராதீர்கள். அல்லது, உங்கள் வாழ் நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும்!” என்று அச்சுறுத்த விரும்புகிறார்கள்.
இதற்கெல்லாம் அஞ்சி பின்வாங்க மாட்டோமென தொழிலாளி வகுப்பு உறுதியாக நிற்கிறது. மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான அநீதியான நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வீரமான, ஒன்றுபட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கின்றனர்.
எல்லா 31 மாருதி தொழிலாளர்களையும் விடுதலை செய். அவர்களுக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் பின்வாங்கு. இல்லையென்றால், இந்தியாவெங்கும் கோடிக் கணக்கான தொழிலாளர்களுடைய ஒரு மாபெரும் கிளர்ச்சியை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்!. இதுவே முதலாளி வகுப்பின் பயங்கவாதச் சதிகளுக்குத் தொழிலாளி வகுப்பின் பொறுத்தமான பதிலாக இருக்கும்.