தொடர்புடைய படைப்புகள்

supreme court 365"பள்ளித் தலம் அனைத்தும் கோயில்கள் செய்குவோம்" என்று பாரதி பாடி இருக்க, அதை அப்படியே மாற்றி, கோயில் நிலமனைத்தும் பள்ளிகள் செய்வோம் என்று புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறது, நம் திராவிட மாடல் அரசு!

ஆம், கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக, கொளத்தூர் சோமநாத சாமி கோயில் நிலத்தினை 25 ஆண்டுகளுக்கு, கபாலீஸ்வரர் கோயிலுக்கு குத்தகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தில் கபாலீஸ்வரர் கல்வி நிலையத்தில் கட்டிடம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை முடிவு செய்தது !

ஆனால் அவ்வாறு கோயில் பணத்திலிருந்து, கல்லூரியில் கட்டிடம் கட்டக் கூடாது என்று பி.ஆர். ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கும் தள்ளுபடி ஆனது!

ஆனால் ரமேஷ் விடவில்லை. காரணம், அவர் ஒரு தனி மனிதர் இல்லை! அவருக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!

கடந்த ஆண்டிலிருந்து இந்த வழக்கு பல்வேறு நீதிமன்றங்களைச் சந்தித்தது. இறுதியாக, ரமேஷ் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்!

அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. கோயில் பணத்தை மக்களுக்காக - அதிலும் மக்களின் கல்விக்காகத் தானே செலவழிக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? அல்லது இதில் உங்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது என்று நீதிமன்றம் கேட்டிருக்கிறது!

அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கோயில் நிதியில் கல்லூரியில் கட்டிடம் கட்ட அனுமதியும் வழங்கி உள்ளது! வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ள எல்லா நீதிமன்ற நீதிபதிகளுக்கும், நம் வணக்கங்களையும், பாராட்டுகளையும் பதிவு செய்ய வேண்டும்!

கோயில்களுக்கு ஆதரவானவர்கள் போலத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இவர்கள், உண்மையில் மக்களுக்கு எதிரானவர்கள் ! கல்வியும் அறிவும் மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்று எண்ணும் மதவாதிகள்! இவர்களை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது. மக்களும் புறக்கணிக்க வேண்டும்!

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.