தமிழ்நாட்டு அரசுப் பொதுப் பணித்துறையில் தலைமைப் பொறியாளராக விளங்கி ஓய்வு பெற்ற எஸ். மணவாளன் அவர்கள் தம் 91ஆம் வகையில் சென்னை அண்ணா நகரில் தம் இல்லத்தில் 3.4.2014 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க மிகவும் வருந்துகிறோம்.

அவர் “சிந்தனையாளன்” இதழை விரும்பிப் படித்து, காவிரி நீர்ச்சிக்கல் பற்றிய முழு விவரங்களை எனக்கும் மற்றும் நம் ஆசிரியர் குழுவினர்க்கும் இரு தடவை விளக்கிச் சொன்னார்.

காவிரி நீரைப் பெறும் உரிமை தமிழ்நாட்டு அரசினரால் 1974இல் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குக் கருநாடக அரசு வேண்டுமென்றே அடாவடியாக மறுத்தது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1976க்கு முன், முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள கருநாடக அரசு முன்வந்தது. ஆனால் காலங் காலமாக 500 டி.எம்.சி. அளவுக்கு மேல் தந்துவந்த நீரின் அளவைக் குறைத்து, அதைத் தமிழ்நாட்டு அரசு ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது.

அப்படிக் குறைந்த அளவு நீரைப் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் போட்டால், எதிர்க்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை அம்பலப்படுத்துவார் என்று அஞ்சியே கலைஞர் கருணாநிதி அப்போது கையெழுத்திட மறுத்துவிட்டார். இது முதலாவது சறுக்கல்.

1981க்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளக் கருநாடக அரசு முன்வந்தது.

அப்போது கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பந்தம் போட ஒத்துக்கொண்ட அளவைவிட 100 டி.எம்.சி. குறைத்து நீர்விட மட்டுமே கருநாடக அரசு முன்வந்தது.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசுத் தலைமைப் பொறியாளர் என்கிற தகுதியில் எஸ். மணவாளன் அவர்களும் எம்.ஜி.ஆருடன் சென்றிருந்தார். அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் படி முதல்வர் எம்.ஜி.ஆரிடம், எஸ். மணவாளன் கூறினார்.

அப்படிக் கையெழுத்துப் போட்டால், அதை வைத்து, எதிர்க்கட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி அ.தி.மு.க.வை அம்பலப்படுத்தி விடுவார் என்று அஞ்சி எம்.ஜி.ஆர். கையெழுத்துப் போடவில்லை. அவர், ‘நீங்கள் கையெழுத்துப் போடுங்கள்’ என்று எஸ். மணவாளனிடம் கூறினார்; ஆனால் முதல்வர் கையெழுத்துப் போடாமல் தான் கையெழுத்துப் போட முடியாது என மணவாளன் மறுத்துவிட்டார்.

இந்த இரண்டு திராவிடக் கட்சிகளின் போட்டி, பொறாமை காரணமாக ஏற்பட்ட வரலாற்றுச் சறுக்கல்களால், காவிரி நீர்ப்பங்கீடு சிக்கல், தமிழகத்துக்குக் கேடு தருவதாக அமைத்துவிட்டது என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மணவாளன் என்னிடம் கூறி மிகவும் வருத் தப்பட்டார்.

காவிரி நீர்ச் சிக்கலை மேலும் சிக்கலாகாமல் தடுத்திட இவர் சொன்ன ஆலோசனையை அ.தி.மு.க. அரசினர் ஏற்றிருந்தால், இன்று கைபிசைந்து நிற்க வேண்டிய ஈனநிலை நமக்குத் தோன்றியிராது.

அப்பெருமகனாரை, 6 மாதங்களுக்கு முன் வீட்டில் நேரில் பார்த்தேன். யார், எவர் என்று புரிந்து கொண்டு பேச முடியாமல் அவர் தடுமாறினார். மனத்துன்பத் தோடு விடைபெற்றேன்.

காவிரிச் சிக்கல் பற்றிய வழக்கின் ஒரு உற்ற சான்றினராக விளங்கிய எஸ். மணவாளன் அவர்களின் மறைவு தமிழகத் தமிழர்க்கு ஒரு பேரிழப்பாகும்.

- வே.ஆனைமுத்து

Pin It