தென் ஆப்ரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைகளுக்கு எதிராக அறவழியிலும் பின்னர் ஆயுதமேந்தியும் போராடிய போராளியும் – கருப்பின மக்களாட்சியை நிறுவியவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மாண்டேலா தன் 95 ஆவது வயதில் 5.12.2013 அன்று இரவு காலமானார் என்ற செய்தி உலகெங்கிலும் உள்ள விடுதலையாளர்களின் நெஞ்சில் பேரிடியாய்த் தாக்கியது. வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தில் ஈடுபட்ட நெல்சன் மாண்டேலா, தன் இறுதிக் காலத்தில் நுரையீரல் தொற்று நோயுடனும் ஓராண்டுக் காலமாகப் போராடியே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
 
nelson mandelaதென் ஆப்ரிக்காவின் டிரான்ஸ்கி பகுதியில் உள்ள மேவிசோ என்ற கிராமத்தில், நோன்கு வாப்கி நோஸ்கேனி – நிகோசி மேப்ரோகான்யிஸ்வா ஆகிய தம்பதியினரின் மூன்றாவது மகனாக 18.7.1918 அன்று நெல்சன் மாண்டேலா பிறந்தார். இவரின் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் கிறித்துவ முறைப்படி இவருக்கு நெல்சன் எனப் பெயர் சூட்டினார்கள். கலகக்காரன் என்ற பொருள் பொதிந்த ரோலிஹ்லாலா என்ற பெயரைத்தான் இவரது பெற்றோர்கள் இவருக்குச் சூட்டினார்கள்.
 
கருப்பின மக்கள் விலங்கினும் இழிவாக நடத்தப்பட்டார்கள். வீதியில் நடக்கவும், வெள்ளையர்களுடன் சமமாகப் பழகவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 80 விழுக்காடாகக் கருப்பர்கள் அங்கு வாழ்ந்தாலும் 13% நிலங்களைத்தான் அவர்கள் பெற்றிருந்தார்கள். பள்ளி, நூலகம், பூங்கா, மருத்துவமனை என எந்தப் பொது இடத்திலும் இவர்கள் நுழையவே முடியாது. புறாக்கூண்டு போன்ற ஓலைக்குடிசைகளில் பகலிலும் இரவிலும் சிறைக் கைதிகளாகத்தான் அந்த மக்கள் வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தனர். இத்தகைய அடிமைச் சமூகத்தில் பிறந்த மாண்டேலா தன் தந்தையை 9 வயதிலேயே இழந்தார். ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டுதான் தொடக்கக்கல்வியை மாண்டேலா கற்றார்.
 
தனது தந்தை – அங்குள்ள தெம்பு இன மன்னரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றியதால் – அந்த மன்னர் மாண்டேலாவைத் தத்தெடுத்து உயர் கல்விபெற உதவினார். போர்ட் ஹாரி பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டம் படித்தபோது, சகமாணர்களின் உரிமைக்காகப் போராடியதால், பல்கலைக்கழக நிர்வாகம் அவரை அங்கிருந்து வெளியேற்றியது. இதன்பின் தென் ஆப்ரிக்கப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டத்தையும் மீண்டும் போர்ட் ஹாரி பல்கலைக் கழகத்திலேயே எம்.ஏ. பட்டமும் படித்து மாண்டேலா வெற்றி பெற்றார். இவரது விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடுகள் நடந்ததால், மாண்டேலா ஜோகன்ஸ்பர்க் நகருக்குச் சென்று அங்கு சுரங்கத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். இதன்பின்னர் தனது சிறை வாழ்க்கையிலேயே சட்டக்கல்வியைக் கற்று தேர்ந்தார்.
 
தனது 24 வயதில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட அவர், 1944 ஆம் ஆண்டில் கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த ஆப்ரிக்க தேசியக் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். வெள்ளை நிறவெறி அரசுக்கு எதிராக, அடக்கப்பட்டுக் கிடந்த கறுப்பின மக்களை அணிதிரட்டினார். தொடக்கத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என அமைதி வழியில், அறவழியில் சமத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை மாண்டேலா நடத்தினார். ஆப்ரிக்க தேசியக் காங்சிரசில் இளைஞர்களை அணி திரட்டி, தன் அமைதிவழி அறப்போரை எழுச்சியுடன் தொடர்ந்தார். ஆனால் நிறவெறி பிடித்த வெள்ளை ஆதிக்க அரசு, நியாயமான அவர்களின் உரிமைப்போரை அடக்குவதிலேயும் அரசபயங்கரவாதத்தினால் அவர்களைச் சித்ரவதை செய்வதிலேயும் முழுவீச்சில் ஈடுபட்டது.
 
எட்டு ஆண்டுகளாக அமைதி வழியில் அணிதிரண்டு உரிமைக்காகக் குரல்கொடுத்ததை வெள்ளை இன வெறி அரசு அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல, அவர்கள்மீது அடக்குமுறைகளையும் ஏவிவிட்டு கொடுமைப்படுத்தியது. போராட்டம், வழக்கு, விடுதலை என அவரது பொதுவாழ்க்கை அடுத்த கட்டத்திற்குச் சென்றது. தலைமறைவு வாழ்க்கை என்ற புதிய பாதையில் மாண்டேலாவின் போர்ப்பயணம் தொடர்ந்தது. 1956 ஆம் ஆண்டில், தேடப்படும் போராளியாக அவர் அரசினரால் அறிவிக்கப்பட்டார். தேச துரோகக் குற்றச்சாட்டையும் அவர்மீது சுமத்தி நான்கு ஆண்டுகள் அவர் அலைக்கழிக்கப்பட்டு – அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார். நீதிமன்றம் நிரபராதி என ஒரு கட்டத்தில் இவரை அறிவித்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் விடுதலைப்போரை அறவழியில் மாண்டேலா தொடர்ந்தார்.
 
இந்நிலையில் வெள்ளை நிறவெறி அரசு, 1960 ஆம் ஆண்டில் கறுப்பின மக்களுக்குச் கடவுச்சீட்டு பெறுவதில் புதிய கெடுபிடிகளைச் சுமத்தி, அவர்களை உள்நாட்டிலேயே கட்டிப்போட்டது. வெளிநாடுகளில் சென்றாவது சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கலாம் என நினைத்த கறுப்பின மக்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த புதிய நடைமுறைகளைக் கைவிட வலியுறுத்தி ஷார்ப்வில்லே பகுதியில் 21.3.1960 அன்று அமைதிப் பேரணிக்கு மாண்டேலா அழைப்பு விடுத்தார். பல்லாயிரக்கணக்கான கறுப்பின மக்கள் வீதிக்கு வந்து உரிமைக்காகக் குரல் எழுப்பினார்கள். இந்த அமைதிப் பேரணியில் காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு காரணமாக 69 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அமைதிவழி போராட்டத்தினைத் தொடர்ந்தால் – தமது இனமே முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த மாண்டேலா ஆயுதம் ஏந்திப் போராடுவது என முடிவெடுத்தார். உம்கொண்டாவி சிஸ்வி என்ற போராளிக்குழுவை உருவாக்கி, கொரில்லா தாக்குதலை மாண்டேலா தொடர்ந்தார்.
 
அரசு அலுவலகங்கள் மீதும் ராணுவ நிலையங்கள் மீதும் கொரில்லா தாக்குதலைத் தீவிரவாதக்குழுக்கள் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளாக இவர்கள் தொடுத்த போராட்டத்தினால் ஆட்சியாளர்கள் அளவற்ற சினம் கொண்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சகலவழிகளிலும் அரசு ஈடுபட்டது. 5.8.1962 அன்று மாறுவேடத்தில் இருந்த காவல் துறை மாண்டேலாவையும் அவரது பத்துத் தோழர்களையும் சுற்றி வளைத்துத் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி ஆயுள் தண்டனை வழங்கியது. நாசவேலை, அரச துரோகம், வன்முறை என அடுக்கடுக்கான குற்றம் சாட்டப்பட்ட மாண்டேலா 20.4.1964 அன்று உச்சநீதிமன்றத்தில் நிகழ்த்திய பதில்உரை, உலகையே தன்பக்கம் ஈர்த்தது.
 
“நான் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றங்களுக்கெல்லாம் காரணம் இதுதான்'' என்று கூறி மாண்டேலா தன் வாக்குமூலத்தை வழங்கிய போது, இளம்பருவத்தில் எங்கள் இனத்தின் பழங்காலப் பெருமைகளையெல்லாம் கதைகளாகக் கேட்டு வளர்ந்தவன் நான். எங்கள் மூதாதையர் தங்கள் மண்ணைக் காப்பதற்காக ஈடுபட்ட போர்களைப்பற்றி, அந்தக் கதைகளுக்கிடையே எங்களுக்கு சொல்லப்பட்டது. இதையெல்லாம் கேட்டபிறகு எனது மக்களுக்காகப் பணியாற்றவும் அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடவும் வாழ்க்கை எனக்கு வாய்ப்பு வழங்கும் என நம்பினேன். இதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்து என்னைச் செலுத்தியது என்றும் தன் விடுதலை வேட்கையைச் சுட்டிக்காட்டினார்.
 
இளமை முதலே விடுதலைக்காக அமைதி வழியில் போராடிய மாண்டேலாவின் போராட்டம் ஏன் ஆயுத வழிக்குச் சென்றது? இதற்கு காரணத்தை நீதிமன்றத்தில் போட்டு உடைத்தார் மாண்டேலா. எனது தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான, லுட்டுலி இப்படிச் சொன்னார். திறக்கவே திறக்காத வகையில் மூடப்பட்டிருந்த கதவை பொறுமையுடனும் கண்ணியத்துடனும் தட்டுவதில் என் ஆயுளில் 30 ஆண்டுகளை நான் வீணடித்திருக்கிறேன். மதவாதத்தின் பலன்தான் என்ன? நமது உரிமைகளையும் முன்னேற்றத்தையும் நசுக்கும் விதத்திலான சட்டங்களைத்தான் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம். கடைசியில் நமக்கென்று எந்த உரிமையும் இல்லாத நிலைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்ற வாசகத்தை நினைவுபடுத்தினார். 50 ஆண்டுகளின் அகிம்சை போராட்டம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட அமைப்பையும் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையையும் நோக்கி எங்களைத் தள்ளியது. வன்முறையை தவிர்த்து போராடுமாறு நாங்கள் சொன்னோம். எனினும் அகிம்சைக் கொள்கையில் தொண்டர்களும் மக்களம் நம்பிக்கை இழக்கத் தொடங்கினார்கள். என்றும் நிலைமையை விளக்கினார். எல்லாவற்றிற்கும் மேலாகச் சரிசமமான அரசியல் உரிமைகள் எங்களுக்கு வேண்டும். ஏனெனில் அவை இல்லாவிட்டால் எங்கள் ஊனங்களெல்லாம் நிரந்தரமாகிவிடும். இந்த நாட்டில் உள்ள வெள்ளையர்களுக்கு இது ஏதோ கலகச்சிந்தனைபோலத் தோன்றக்கூடும். இதனால்தான் ஜனநாயகத்தைக் கண்டு வெள்ளையர்களுக்கு அச்சம் என்றும் தங்கள் விடுதலைக்குரலின் நியாயத்தை வலியுறுத்தினார்.
 
“என் வாழ்நாள் முழுவதும் ஆப்ரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். எல்லாரும் ஒற்றுமையாக வாழக்கூடிய எல்லாருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகபூர்வமான சுதந்திரமான சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்திற்காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்திற்காகத்தான்'' என்று நீதிமன்றத்திலேயே அஞ்சா நெஞ்சுடன் அரிமாவாய் முழக்கமிட்டார் மாண்டேலா!
 
நெல்சன் மாண்டேலாவின் இதயக்குரல் ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதில் விழவே இல்லை. விளைவு... ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். 46 வயதில் தீவுச்சிறையின் உள்ளே நுழைந்த மாண்டேலா 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். அவரது கைதி எண் 46664. இந்த எண்ணிற்கே மாண்டேலாவினால் மகத்துவம் கிடைத்தது. தனது அன்புத்தாயார் மறைந்த போதும், ஆசை மகன் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தபோதும் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. எதனைப் பற்றியும் கவலைப்படாமல் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக மனஉறுதியுடன் சிறை வாழ்க்கையை மாண்டேலா தொடர்ந்தார்.
 
நெல்சன் மாண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும், ஆப்ரிக்க தேசிய காங்கிரசுக் கட்சியின் தடையை நீக்க வேண்டும், கறுப்பர்களுக்கும் வாக்குரிமை தந்து மக்களாட்சி முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுக்க நாள்தோறும் அறப்போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கறுப்பின மக்களுக்கு வெள்ளையர்கள் இழைத்துவரும் கொடுமைகள் உலகின் பார்வைக்குச் சென்றதால் உலக நாடுகள் எல்லாம் தலையிட்டு நீதிக்காக குரல் கொடுத்தன. மக்களாட்சியை நிறுவ மறுத்தால் பொருளாதார தடை, புறக்கணிப்பு ஆகிய நெருக்கடிகளை ஏவிவிடுவோம் என்றும் வெள்ளையர் அரசுக்கு அச்சுறுத்தலையும் ஏவிவிட்டன.
 
21.3.1960 அன்று 69 கறுப்பின மக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையும், அடுத்த நாளில் கேப்டவுன் அருகில் உள்ள லங்கா என்ற ஊரில் கறுப்பின மக்கள் போலீசாரால் கொல்லப்பட்டதையும் கண்டித்து நமது நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஜாலியன் வாலாபாத் கொடுமைக்கு நிகரானது இது என்று உரையாற்றினார். இந்தியாவின் ஐ.நா. பிரதிநிதி சி.எஸ்.ஜா 1.4.1960 அன்று ஐ.நா. பாதுகாப்பு அவை கூட்டத்தில் நிறவெறி பிடித்த வெள்ளை தென் ஆப்ரிக்க அரசைக் கட்டுப்படுத்துவதே ஐ.நா.வின் முதல் கடமை என்று வலியுறுத்தினார். பாதுகாப்புசபையில் அப்போது இந்தியாவுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. ஆனாலும் ஆப்ரிக்க, ஆசிய நாடுகளோடு இந்தியாவும் எதிர்க்குரல் எழுப்பியது. அடுத்த ஆண்டில் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்குத் தென்ஆப்ரிக்க பிரதமர் எச்.எப். வெர்வோர்ட் நேரில் வந்து தங்கள் நாட்டைக் காமன்வெல்த் அமைப்பில் இணைக்க முறையிட்ட போது, பிரதமர்நேரு கடும் கண்டனர் தெரிவித்தார். மலேசிய பிரதமர் துங் அப்துல் ரகிமான் அவர்களிடம் இதனை எதிர்க்குமாறு நேரு கேட்டுக் கொள்ள அவரும் கண்டித்தார். இறுதியில் ஆதரவு இல்லாத நிலையில், தனது கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வெளியேறினார் தென்ஆப்ரிக்க பிரதமர்! 
 
இவ்வாறு உலகம் முழுவதிலும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் ஆப்ரிக்க அரசு, மாண்டேலா தன் வன்முறை செயலுக்கு மன்னிப்புத் தெரிவித்ததால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று அறிவித்தது. ஆனால் நெல்சன் மாண்டேலா உறுதியுடன் மறுத்தார். அதன் பின்னர் வேறு வழியின்றி – உலக நாடுகளின் நெருக்கடியிலிருந்து தப்பிக்க மாண்டேலாவை 11.2.1990 அன்று விடுதலை செய்தது. சிறை வாயிலில் இலட்சக்கணக்கான மக்களின் வரவேற்புக்கிடையில் உரையாற்றும்போது, என்னுடைய விடுதலை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அடித்தளம் ஆகாது. இனவெறி ஆட்சியைத் தனிமைப்படுத்த சர்வதேசச் சமூகம் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். நிறவேறுபாடு இல்லாமல், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின்மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும் அதுவரை தொடர்ந்து போராடுவோம்.'' எனத் தாயக விடுதலைக்கான தன் இலட்சியக் குரலை மாண்டேலா ஓங்கி ஒலித்தார்!
 
இதனைத் தொடர்ந்து அவரது கட்சியின்மீது இருந்த தடை அகற்றப்பட்டது அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆப்ரிக்க தேசிய காங்கிரசு வாகை சூடியது. நெல்சன் மாண்டேலா அதிபராக பொறுப்பேற்றார். 18 ஆண்டுகாலம் ராபென்தீவு சிறையில் சுண்ணாம்புப் பாறைகளை உடைக்கச் செய்து அதனால் கண்பார்வை பாதிக்கப்பட காரணமான சிறை அதிகாரியைப் பதவிஏற்பு விழாவின் சிறப்பு விருந்தினராக அழைத்து தனது மன்னிக்கும் பெருந்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார் மாண்டேலா! ஆயுள் தண்டனை பெற்றுத் தந்ததோடு மரண தண்டனை பெற்றுத் தரவும் முனைப்புடன் வாதிட்ட வழக்கறிஞரையும் பதவி ஏற்பு விழா விருந்து அளித்து, இன்னா செய்தாரையும் நாணிடச் செய்தார் மாண்டேலா! 
 
நிறவெறியை ஏவிவிட்டுச் சித்ரவதை செய்த வெள்ளையர்களைப் பழிவாங்குவதற்குப் பதிலாக அவர்களையும் திருத்தி, கசப்புணர்வை தவிர்த்து நாட்டு நலனுக்காக அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள, உண்மை, நல்லிணக்க ஆணையம் என்ற அமைப்பை நிறுவினார். அதனைப் பயன்படுத்தி ஜனநாயக மாண்புகளை வளர்த்தெடுத்தார். தங்கள்மீது அடக்குமுறையை ஏவிவிட்ட அன்றைய அதிபர் எப்.டபிள்யூ கிளார்க் அவர்களைத் தமது அரசின் துணை அதிபராகவே நியமித்து மறப்போம் மன்னிப்போம் என்பதைச் செயலில் காட்டினார்.
 
தென் ஆப்ரிக்காவின் கோய்சன் என்ற பழங்குடி இனத்தில் பிறந்த அழகு மங்கைதான் சாரா பார்ட்மன். இங்கிலாந்து கப்பலில் ஆப்ரிக்கா வந்த வில்லியம் டன்லப் என்ற மருத்துவர் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தைகூறி இங்கிலாந்து அழைத்துச் சென்றான். அங்கு ஊர் ஊராக அவளை அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி வெள்ளைமிருகங்கள் கைதட்டி மகிழ்ந்து கூத்தாடச் செய்தார். கறுப்பினப் பெண்தானே என்ற அலட்சியம். அவளைப் பலர் சீண்டி மகிழ்ந்தனர். லண்டனிலிருந்து பிரான்சுக்கும் அவள் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கும் அவளுக்கு அதே கொடுமை. பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு நோயில் விழுந்து அவள் தன் 25 ஆம் வயதிலேயே மாண்டு போனார். அவளது உடலை அடக்கம் செய்வதிலும் இழிவு நடந்தது மட்டுமல்ல, மறைவுக்குப்பின்னர் 160 ஆண்டுகளாக அவரது உடல் உறுப்புக்களையும் காட்சிப் பொருளாக்கி அவர்கள் அவமானப்படுத்தினார்கள். மனித உரிமை அமைப்புகள் இதனை எதிர்த்து போராடியதன் விளைவாக 1974 ஆம் ஆண்டில் பிரான்சு அரசு இதற்கு தடை விதித்தது. அந்த சகோதரியின் எஞ்சிய உடல் பாகங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையே, பிரான்சு அரசிடம் பெற்று 9.8.2002 அன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தும், அவரது கல்லறையை தேசிய சின்னமாக அறிவித்தும் சாதனை செய்தார் அதிபர் நெல்சன் மாண்டேலா.
 
தனது அமைச்சர் அவையில் புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கும் மாண்டேலா வாய்ப்பளித்தார். இந்தியர்களின் எண்ணிக்கைக்கு அதிக அளவில் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிலர் எதிர்ப்புக் காட்டியபோது, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் அதிக
அளவில் பங்களிப்புச் செய்ததைப் பதிலாகச் சொல்லி அவர்களைச் சமாதானம் செய்தார். பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய இந்திய மொழிகளைக் கற்பிக்கவும் மாண்டேலா ஆணையிட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததும் இரண்டாவது முறையும் போட்டியிட உறுதியுடன் மறுத்துவிட்டது மட்டுமல்ல, 2004 ஆம் ஆண்டின் பொதுவாழ்க்கையிலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்த கண்ணியம் நிறைந்த பண்பாளர்தான் நெல்சன் மாண்டேலா.
 
அவர் காராக் கிரகத்தில் அடைக்கப்பட்டிருந்த வேளையில், கட்சியைத் தொய்வின்றி நடத்தியவர். விடுதலைப்போரைத் தொடர்ந்தவர் அவரது மனைவி வின்னி மாண்டேலா. அவர் மாண்டேலாவின் அமைச்சரவையில் இடம் பெற்று அதிகாரப் போதையில் ஆட்டம் போட்டபோது, ஊழலில் ஊறித்திளைத்தபோது, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காத நேர்மையாளர் மாண்டேலா. மாண்டேலாவுக்கு 2 மகன்கள் 4 மகள்கள், மனைவி, உறவினர் எனப் பெரும் குடும்பம் இருந்தும் இவர்களில் எவரையும் கட்சியிலோ, ஆட்சியிலோ புகுத்தி வாரிசுரிமையை நிலைநாட்டாத வியக்கத்தக்க தலைவர் என்பதை நிரூபித்துக் காட்டினார். 
 
ஐந்துமுறை முதல் அமைச்சர், நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர் என்ற முழக்கத்தினை செயலாக்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள், கட்சியில், ஆட்சியில், மகனுக்கு, மகளுக்கு, குடும்பத்தினருக்குப் பதவிகளை அள்ளித்தந்து குடும்பமயமாக்கும் தலைவர்கள் மலிந்து கிடக்கும் இன்றைய உலகில் நெல்சன் மாண்டேலா தனித்துவம் மிக்க அதிசயத் தலைவர் அல்லவா? பொதுவாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற நம் இலட்சிய முழக்கங்களின் விளக்கம் நெல்சன் மாண்டேலா என்றால் அது மிகை அல்ல. இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது, சமூக நீதியும் ஏற்றத் தாழ்வும் நீடிக்கும்வரை ஒரு நாடு வளம்பெற முடியாது என்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கும் மண்டல் ஆணையை பரிந்துரைகளைப் பாராட்டுவதாகவும் நெல்சன் மாண்டேலா குறிப்பிட்டதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூறுவோம்.
 
வாழ்க நெல்சன் மாண்டேலா!
 
வெல்க சமத்துவத்திற்கான விடுதலைப் போராட்டம்!
Pin It