மீண்டும் அறப்போர்

சுயமரியாதை இயக்கத்தின் பேராலும், நீதிக் கட்சியின் பேராலும், திராவிடக் கழகத்தின் பேராலும் பலமுறை, பல இடங்களில் மாநாடு கூடியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உயர்ந்ததாகவும், திராவிட மக்கள் பெருமைப்படக் கூடியதாகவும் இருந்தாலும், ஈரோட்டில் இந்த மாதம் 23-24ஆம் நாள்களில் கூடிய 19ஆவது திராவிடக் கழகத் தனி மாகாண மாநாடு, எல்லாவற்றைக் காட்டிலும், நாட்டு வரலாற்றில் எவரானாலும் முக்கியமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்று, உண்மையிலேயே தனிமாநாடு என்றே யாவரும் சொல்லத்தக்க விதமாய்ப் பெருஞ்சிறப்போடு நடந்து முடிந்திருக்கிறது.

இந்தத் தனிமாநாடு, மிக மிக அவசரமாய், விரைவில் நடத்தியாக வேண்டும் என்ற முடிவோடு விரைவாக அறிவித்து, விரைவாகவே ஒவ்வொரு காரியங்களும் செய்யப்பட்டது என்றாலும், மாநாட்டு நிர்வாகிகளுக்கு மழை ஒரு பெருந்தொல்லையையும் கஷ்டத்தையும் கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால் தொடங்கிய மழை, பெருமழையாகி, எந்த அளவுக்கு கஷ்டத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்கும் அறிவிப்பதைப் போல, 23ஆம் நாள் மாலையிலும் மழைபெய்து நின்றுவிட்டது.

இந்தத் தனி மாநாட்டின் அவசியத்தையுணர்ந்து, இதைக்கூட்ட எண்ணிய பெரியாரவர்கள், மழையை ஒருபுறம் எதிர்பார்த்தார்கள் என்றாலும் 50,000, 60,000 என்று சொல்லத்தக்க விதத்தில் பெருங்கூட்டத்தை எதிர்பார்க்கவேயில்லை, அய்ந்தாறு மாதங்களுக்கு முன்னால் நடந்திருக்கும் தூத்துக்குடி மாநாட்டையும், இயக்கத் தோழர்களின் இயற்கையான வறுமை யையும் எண்ணி, 5000 அல்லது 10000க்கு மேற்பட முடியாதென்றே அவர்கள் எதிர்பார்த்தார்கள்,

இப்படியாக மழை ஒரு பக்கம் தொல்லை கொடுத்து, எதிர்பார்க்காத நிலையில் வந்துகூடிய தோழர்கள் பெருகிவிடவே, வந்திருந்த இயக்கத் தோழர்கள், முக்கியமாக உணவுக்குச் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்ட தென்றாலும், பெரியார் அவர்களின் பேருரைக்குப்பின், அவர்கள் குறைகளை மறந்துவிட்டார்கள் என்றே குறிப்பிடலாம்.

நாள்தோறும் உழைத்தே வாழ வேண்டிய பட்டாளித் தோழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திராவிடக்கழக மாநாட் டிற்கு-மாநாட்டு நிர்வாகிகள் மழையின் தொல்லையை அறிவித்து, வருகையைக் குறைத்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருந்தும் - பொருள் நஷ்டத்தை எண்ணாமல் - உடல் கஷ்டத்தைக் கருதாமல் 50000க்கு மேற்பட்ட இளங் காளைகளும் 10000க்கு மேற்பட்ட தாய்மார்களும் வந்து கூடினார்கள் என்றால் இதற்கு அர்த்தமென்ன? இதனை வெறும் உணர்ச்சி வேகம் என்றுதான் எப்படி எண்ண முடியும்?

நிறுத்தப்பட்ட போராட்டத்துக்கிடையே, அதாவது இயக்கம் போர்க்களப் பாதையில் பலிபாகு படலத்தில் திருப்பப்பட்டிருக்கும் வேளையில், “இதுதான் நாம் ஒருவருக்கொருவர் பயணம் சொல்லிக் கொள்ளும் மாநாடு” என்ற படைத்தலைவரின் அறிவிப்பைக் கேட்டு விட்டும், இளமையும் ஆர்வமும் நிரம்பிய இளைஞர்களின் பெருங்கூட்டம் வந்து கூடியதென்றால், அதுவும் படைத்தலைவர் எதிர்பார்க்காத முறையில் மாபெருங்கூட்டமாய்க் கூடியதென்றால், உண்மை நிலைமையையுணர்ந்து, செயலாற்றும் தீரமிக்கவர்களாய், வாழ்வு அல்லது சாவு என்ற முடிவுக்கு வந்தவர்களாகவே கூடினார்கள் என்பது நிச்சயம்,

இப்பேர்ப்பட்ட உணர்ச்சியும், உத்வேகமும் நிரம்பிய இந்த மாநாட்டில், செய்யப்பட்ட முடிவுகள் ஒவ்வொன்றும், செயலுக்கு வரவேண்டும் என்கிற தீர்மானங்கள் ஒவ்வொன்றும், இந்த அடிப்படையிலேயே நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை,

ஹைதராபாத் நெருக்கடியின் பேரினால் ஓமந்தூ ராருக்குப் பெரியாரவர்கள் அளித்த வாக்குறுதியின் காரணமாக, நம் அறப்போர் நாள் குறிப்பிடாமல் நிறுத் தப்பட்டது. அந்த நெருக்கடி தீர்ந்தவுடனே அதாவது மறு வாரத்திலேயே அறப்போர்என்கிற நிலையுண்டாகி விட்டது. அமைதியான முறையில் அறப்போர் நிகழ்த்து வதற்குரிய பக்குவம் ஏற்பட்டுவிட்டாலும், பள்ளிகளுக்கு விடப்பட்ட “தசரா” விடுமுறை குறுக்கே நின்று தடைப் படுத்தியதால், “மீண்டும் அறப்போர் எப்போது?” என்கிற கேள்வியே எங்கு பார்த்தாலும் இருந்து வந்தது.

இந்தக் கேள்விக்கு தனி மாநாடு அளித்த பதில் இது தான்.

“ஹைதராபாத் போராட்டத்தின் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தி எதிர்ப்பு மறியலை மீண்டும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் துவக்கி நடத்த வேண்டுமென்று இம் மாநாடு தீர்மானிக்கிறது.”

மாநாட்டின் மூன்றாவது தீர்மானமான இந்தப் பதில் பிரதமர் ஓமந்தூராருக்குப் பிடிக்காததாயிருக் கலாம். அமைச்சர் அவினாசியாருக்கு, ஆக்ரோஷத்தை உண்டாக்கலாம். ஆனால் என்ன செய்வது? பார்ப்பன ஆப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையால் “வாலாட்டம்” காட்டிய மந்திரிகள், ஆப்பு நழுவிய பிறகு அவஸ் தைப்பட்டுத்தானே தீரவேண்டும். இந்த இருவருக்கும் மாநாட்டின் 6ஆவது தீர்மானம் மேலும் கசப்பை யுண்டு பண்ணலாம்.

“இந்தி நுழைவால் இந்நாட்டுக்கலையும், பண்பும், நாகரீகமும் கெடுவதோடு சிறு குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கே இம்முறைகேடு பயக்கும் என்று மிக மிக வணக்கமாகக் கூறப்பட்டிருந்தும், பிடிவாதமாக இந்தி நுழைப்பை வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஓமந்தூர் மந்திரி சபையை நாம் வெறுக்கிறோமென்பதற்கு அறி குறியாக, பிரதமரும், கல்வி மந்திரியும் வெளியூர்களில் சுற்றுப்பிரயாணம் செய்யும் காலத்தில் கருப்புக்கொடி காட்டிப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று இம்மாநாடு பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறது.”

இந்த ஆறாவது தீர்மானம். மாநாட்டில் எழுந்த ஒரு எதிர்ப்பை அடக்கி நிறைவேற்றப்பட்டதாகும். தீர்மானம் கூடாது என்கிற எதிர்ப்பு அல்ல! “மந்திரிகளிலே இருவருக்கு மட்டும்தானா கருப்புக்கொடி? ஏன் எல்லோருக்குமே கருப்புக்கொடி காட்டக் கூடாது? தீர்மானத்தைத் திருத்துங்கள்! எல்லோருக்கும் கருப்புக்கொடி என்று செய்யுங்கள்!” இவைதான் தீர்மானத்தை எதிர்த்தவர்கள் கூறியது. இருப்பினும், இந்த விவாதங்களுக்குப் பெரியார் அவர்கள் பதில் கூறியபின், எந்தவிதமான திருத்தமுமில்லாமல் அசல் தீர்மானமாகவே இது நிறைவேறி விட்டது.

மந்திரிகளைப் பகிஷ்கரிக்கும் போக்கில், இந்த மாநாட்டில் செய்யப்பட்ட சிறு மாறுதலை, இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோரைக் காட்டிலும் மந்திரிகள் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் மந்திரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அவைகளை எதிர்ப்பது தான் திராவிடக் கழகத்தின் போக்கு என்பதாகக் கொஞ்சமும் நாணயமோ, யோக்கியதையோ இல்லாத முறையில், பொறுப்புள்ள காங்கிரஸ் மந்திரிகள் ஒவ்வொருவருமே சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அறப்போர் தொடங்கிய பிறகு அதுவும் ஆங்காங்கே கழகத்தின் வேண்டுகோளின்படி பொது மக்கள் மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்ட ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு மந்திரிகளும் மிரண்டுபோய், இன்னது தான் பேசுகிறோம் என்கிற நிதானமின்றி, தங்களின் இலாக்கா என்ன? தாங்கள் மக்களிடம் விளக்க வேண்டியது எவ்விஷயம்? என்பதான கவலை கொஞ்சமுமில்லாமல் இந்தி எதிர்ப்பைப் பற்றி ஒரு முகாரிபாட வேண்டு மென்பதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அதுவும் கட்டுப்பாடாக, காங்கிரஸ் மேலிடத்தின் கட்டளைப்படி செய்து வந்திருக்கிறார்கள்.

எல்லா மந்திரிகளுக்கும் இந்தியைப் பற்றிப் பேச வேண்டிய அவசியத்தையுண்டு பண்ணியிருக்கிறோம் என்பதினால் நாம் ஒரு பக்கம் பெருமையடைந்தாலும், நாட்டின் வெவ்வேறு பிரச்சனைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருக்கும் அவர்கள், கூலிக்கு மாரடித்து அழுதாலும், பொதுமக்கள் முன் தங்கள் கடமைகளை மறைத்து விடுகிறார்களே, அதாவது தேவையான பிரச்சனைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஏமாற்றிவிட்டுச் சென்று விடுகிறார்களே என்பதை எண்ணும் போது நம்மில் யாரும் வருந்தாமலிருக்க முடியாது.

மேலும், நமது மந்திரிகளின் ‘கோயபெல்ஸ்’ பொய்ப் பிரச்சாரத்தை-விஷம வேலையை வெட்டவெளிச்சமாக்க வேண்டிய பொறுப்பும் நம் மீது விழுந்திருக்கிறது. காங்கிரசின் ஆலயப் பிரவேசத் திட்டத்திற்கு, அதற்கு முன்னாலிருந்தே நாம் வளர்த்துப் பெருக்கி வந்த ஆதரவையும், சட்டமான நேரத்தில் தளராமல் காட்டி வந்த ஆதரவையும் யாரும் மறந்துவிட முடியாது. அதுபோலவே ஜமீன் ஒழிப்பு இனாம் ஒழிப்பு மசோதா ஏட்டளவில் அவர்கள் கொண்டுவந்த நேரத்தில், “அவர்கள் கொண்டு வந்தார்களே” என்ற அசூயை இல்லாமல், நாம் அதை ஆதரிக்கச் சிறிதும் பின்வாங்க வில்லை என்பதையும், நெடுஞ்காலத்திற்கு முன்னாலிருந்தே நாம் அதைத் திட்டமாகக் கொண்டிருக்கிறோ மென்பதையும் அவர்கள் அறிவார்கள். அப்படிப் பல ருடைய ஆதரவிருந்தும், நிறைவேற்ற வேண்டிய அவசியமிருந்தும், வடவர்களின் மிரட்டலுக்கும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும் பயந்து போய், இனாம்களை விட்டுவிட்டோம் என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.

மேலும் மாகாண முழுவதும் மதுவிலக்குத் திட்டம் என்ற போது நாம் அதைப் பாராட்டாமல், வரவேற்காமல், ஆதரிக்காமல் இல்லை. ஆனால் மதிமிக்க நிர்வாகத் திறமை காட்டப்படுவதில்லையே என்றுதான் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இப்படியாக மக்களுக்கு நன்மையைக் கொடுக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் நாம் வரவேற்றும், ஆதரித்தும் வந்திருக்கிறோம். அதே நேரத்தில் அவர்களின் பிற்போக்கான - இலாபப்பங்கு கோரும் திட்டங்களை - அடிமை முதிர்ச்சியில் ஆக்கிய திட்டங்களை - அடியோடு ஒழிய வேண்டு மென்று சொல்லவும் தவறவில்லை. இப்படி நாம் சொல்லுகிற நேரத்தில்தான் அதை மறுக்கத் திறனற்ற இவர்கள், காங்கிரஸ் விரோதிகள், அரசியல் விரோதிகள், கருஞ்சட்டையினர் என்பது போலச் சம்பந்தா சம்பந்த மில்லாமல் மக்கள் முன் பித்தலாட்டமாகப்  பேசிக் கொண்டு வருகிறார்கள். இப்போதைய நிலையில் மக்கள் அவர்களுக்குக் காட்டுகிற, கருப்புக்கொடி இதற்கு ஒரு காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இன்னும் சொல்லப் போனால், இந்தி மந்திரிகளான கல்வி மந்திரி, பிரதமர் ஆகிய இருவர்தான், இந்தப் பேடித்தனமான கட்டாய இந்தி நுழைப்புக்குக் காரணஸ் தர்களாயிருக்கிறார்கள் என்று, அவ்விருவரை மட்டுமே இந்தக் காரியத்தை முன்னிட்டு பகிஷ்கரிக்கின்றார்கள் என்பதை மற்றவர்களும் நன்றாய் உணர்ந்துகொள்ள, பகிஷ்கரிக்கும் திட்டத்தில் இந்த மாநாடு செய்திருக்கும் மாற்றம், நல்லதொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்த மாறுதலினால் - அதாவது பகிஷ்கரிக்கும் முறையில் ஒரு குறுகிய எல்லையை வகுத்துவிட்ட தினால், இந்தி மந்திரிகள் திக்குமுக்காடக் கூடிய வகை யில், அவர்கள் எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் பகிஷ்காரம் வெற்றியோடு நடக்கும் என்று எண்ணுவ தால், இந்த மாறுதலை நாம் வரவேற்கிறோம்.

இந்த மாநாடு, அறப்போருக்கு வேறு பல முனை களையும் திறந்துவிட்டிருக்கிறது. திறந்து விட்டிருக்கிறது என்று சொல்லுவதைக் காட்டிலும், திறந்து விடும்படி யான அவசியத்தை ராமராஜ்ய சர்க்கார் உண்டாக்கி விட்டது என்று சொல்வதே பொருத்தமாகும்.

ஆச்சாரி சர்க்கார், அட்வைசரி சர்க்கார், வைதீக நீதிக்கட்சி சர்க்கார் ஆகிய இத்தனை சர்க்காருக்கும் முன்னாலேயேயிருந்து நடிக்கப் பட்டு வந்த இரணியன் நாடகத்திற்கு, இந்த ஓமந்தூர் சர்க்காரில் தடை. பல வருஷங்களாய் நடிக்கப்பட்டு வந்த போர்வாள் நாடகத்திற்கு இப்போது தடை. இராவண காவியம் என்ற ஒப்பற்ற பெருநூலுக்கு, இந்த ராமராஜ்ய சர்க்காரில் தடை! இதைக்காணுகிற போதுதான், இவர்கள் சொந்தப் புத்தியோடு இவைகளுக்குத் தடை விதிக்கவில்லை; பார்ப்பனர்களின் சொற்புத்தி கேட்டுத் தடைவிதித்திருக் கிறார்கள் என்று நாம் வற்புறுத்திச் சொல்லி வர வேண்டி யிருக்கிறது. ஏன் அப்படிக் கூறுகிறோமென்றால், இப்போ தைய மந்திரிகளில் யாருமே இராவண காவியம் முழுவதையும் படித்திருக்க முடியாது என்பதையும், அப்படி ஒரு வேளை அதற்காக ஒரு மாதம், 2 மாதம் செலவழித்து ஒரு சிலர் படிக்க முயன்றிருந்தாலும், அவர்களுக்கு அர்த்தம் விளங்காத பகுதிகள் அநேகமுண் டென்பதையும் நாம் நிச்சயமாகக் கூறுவோம். தமக்கு விளங்கா ஒன்றுக்கு, புரியாத ஒன்றுக்குத்  தடைவிதிக்கத் துணிந்தார்கள் என்றால், அது சொந்தப் புத்தியோடு செய்த காரியமா? சொற்புத்தியால் செய்த காரியமா?

சர்க்காரின் இந்த நடத்தையைக் கண்டித்து, மாநாடு சர்க்காருக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.

“11. (அ) மேற்கண்ட (போர்வாள், இரணியன்) நாடகங்களின் பேரிலும், இலக்கியத்தின் பேரிலுமுள்ள தடையை உடனடியாகச் சென்னை அரசாங்கம் நீக்கா விடில், தடை நீக்குவதற்கான நேரடி நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தமான நிலைமை திராவிடர் கழகத்திற்கு ஏற்படுமென்று இம்மாநாடு அரசாங்கத் தாருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.”

இந்த எச்சரிக்கையைத்தான் அறப்போரில் மற்றொரு போர்முனை என்று நாம் குறிப்பிடுகிறோம். எச்சரிக் கையைக் கேட்டு, இந்தச் சர்க்கார் நல்ல போக்கைக் கைக்கொள்ளாது என்பதும், கைக்கொள்ளக் கூடிய நிலையில் அதற்குச் சுயமான போக்கு இல்லை என் பதையும் மாநாட்டுப் பிரதிநிதிகள் அறிவார்கள். அறிந் திருந்தும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்றால், அதனுடைய பின்விளைவு எப்படியிருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை என்று கூறிவிட முடியாது.

இன்று ஒரு திருவத்திபுரத்திலே நாடகமும், ஒரு கடலூரிலே ஒத்திகையும் என்ற நிலை இருக்கிறதே, அது எத்தனை திருவத்திபுரங்களாக, எத்தனை கடலூர் களாக ஆகவேண்டும் என்கிற கேள்விதான் இந்த எச்சரிக்கை! நாளை வீதிகள் தோறும் இராவண காவி யங்கள்-அதனுடைய சில ஏடுகள் விலை கூவி விற்கப்பட்டால், விளையப்போவது என்ன என்கிற கேள்விதான் இந்த எச்சரிக்கை! இந்த எச்சரிக்கையால், பின் எடுக் கப்படும் நேரடி நடவடிக்கைகள் எப்படி எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இப்போது நாம் விளக்கத் தேவை யில்லை.

மற்றொரு போர்முனைதான், வடநாட்டான் மறியல், புராண சினிமா மறியல். இந்த மறியலுக்கான திட்டங் களை வகுத்துக் கொடுக்குமாறு, தலைவர் பெரியார வர்களை மாநாட்டுப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது 4ஆவது தீர்மானமாக மாநாட்டில் நிறை வேற்றப்பட்டிருக்கிறது.

வடநாட்டான் மறியலைக் குறித்து நாம் சென்ற வாரம்கூடக் குறிப்பிட்டிருந்தோம். புராண சினிமா மறியலின் அவசியத்தைப் பற்றியும் நாம் விளக்கி வந்திருக்கி றோம். ஆகவே அவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடாமல் தலைவர் பெரியாரவர்களை, மாநாட்டுப் பிரதிநிதிகள் வேண்டிக் கொண்டிருப்பதைப் போல, நாமும் வேண்டிக் கொள்ளுகிறோம், இதற்கான திட்டங்களை விரைவில் அளியுங்கள் என்று.

ஆக, வேறு 2, 3 போர்முனைகளுக்குப் போக வேண்டிய அவசியத்தை - வீரத்தோடு போராடியாக வேண்டிய முக்கியத்துவத்தை-சர்க்கார் நமக்குக் கொடுத் திருக்கிறார்கள் என்பதும், அவற்றை நாம் உணர்ந்திருக் கிறோம் என்பதை சர்க்காருக்கும் மக்களுக்கும் அறிவிக்கவும், உருவான திட்டங்களை வகுக்கவும் இந்தத் தனி மாநாடு காரியங்களை ஆற்றி, பெரியாரவர்கள் குறிப்பிட்டது போல், “ஒருவர்க்கொருவர் பயணஞ் சொல்லிக் கொள்ளும் மாநாடாகவே” இந்த மாநாடு ஆகியிருக்கிறது.

நவம்பர் 1-ஆம் தேதி மீண்டும் அறப்போர் என்று மாநாட்டுப் பிரதிநிதிகள் முடிவுகட்டியிருந்தாலும், அந்த நாளில், மதமில்லாத நமது சர்க்காரை “கிரகணம் பிடித்துக் கொண்டுவிட்டது; அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை” என்று கூறப்படுவதால் 2ஆம் தேதி முதல் மீண்டும் அறப்போர் என்கிற அறிவிப்பைப் படைத் தலைவர் பெரியாரவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஆதலால், நவம்பர் 2ஆம் தேதி முதல் சென்னை முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூலின் முன் மீண்டும் மறியல் தொடங்கிவிடும். அன்று முதலே இந்தி மந்திரிகள் பகீஷ்காரமும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும். பிறகு படிப்படியாக, மாநாடு நிறைவேற்றிய ஒவ்வொரு திட்டங்களும், ஒன்றன்பின் ஒன்றாகத் தன் இறுதி இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து நடைபெறும்.

வாழ்வு அல்லது சாவு என்ற நிலையில் துணிந்து, போர்க்களத்தில் இறங்கிய போர் மறவர்களைப் பாராட்டுகிறோம். இழிவை மறக்கும் அடிமை மோகத்தை, இந்த நாட்டிலிருந்து துரத்த இப்பொழுது காலம் நெருங்கி விட்டது என்பதை வற்புறுத்திக் கூறுகிறோம்.  இப்போது சர்க்கார் என்ன செய்யப் போகிறது? மீண்டும் அறப் போரே நடக்கட்டும் என்றால் நமக்குத்தான் என்ன தடை? ஆம்! மீண்டும் அறப்போர்! அது நவம்பர் 2.

(குடிஅரசு, 30-10-1948)

முற்றும்

குறிப்பு : இந்தத் தொடர் கட்டுரை இத்தோடு நிறைவடைகிறது. இதன் இரண்டாம் பகுதி தனி நூலாக வெளிவரும்.

Pin It