தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசுக் கட்சி மேடையில், திருப்பூரில், 1922இல், முதன்முதலாகப் “பார்ப்பனியத்துக்கும், நால்வருணத்துக்கும் உயிராக விளங்குகிற மனுநீதியையும், இராமாயணத்தையும் எரிக்க வேண்டும்” என்று பேசினார். அவருடைய அன்பான கொள்கை எதிரியான ஆச்சாரியாருக்கு, அன்று தான் ஈ.வெ.ரா.வின் உண்மை உருவம் தெரிந்தது.

1926 நவம்பர் தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. பனகல் அரசரைத் தவிர மற்றெல்லாத் தலைவர்களும் தோற்றார்கள். பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்துகிற புரோகிதத்தை - இந்துச் சமயச் சடங்குகளை டாக்டர் டி.எம். நாயரைத் தவிர, வேறு எந்தப் பார்ப்பனரல்லாத தலைவரும் கைவிடவில்லை. அவர்கள் அவற்றைப் பின்பற்றிக் கொண்டே, பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்திய சட்டமன்றப் பதவிகளையும், உயர்கல்வியையும், உயர் நிலை-கீழ்நிலை அரசு வேலைகளையும் பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டும் என்பதற்காக-உடலுழைப்பு, பொருள் செலவு, அறிவு ஈகம் எல்லாவற்றையும் 100க்கு 99 தலைவர்களும் செய்தார்கள். ஆதலால், “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை உணர்வு பெற வேண்டும்” என, 1926 நவம்பரில் ஈ.வெ.ரா. முடிவு செய்தார்.

அவருக்குத் துணை நின்றவர்கள் 1) பனகல் அரசர், 2) ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார், 3) எம்.டி.சுப்பிரமணிய முதலியார் முதலான மேதை களும் செல்வந்தர்களும் ஆவார்கள்.

ஈ.வெ.ரா.வுடைய வேண்டுகோளை ஏற்று, நீதிக் கட்சியினர், 26.12.1926இல், மதுரையில் “பார்ப்பனர் அல்லாதார் பத்தாவது மாகாண மாநாட்டை”க் கூட்டினர்.

அன்றுதான், “பார்ப்பனர் அல்லாதார் சுயமரியாதை இயக்கம்” தோற்றுவிக்கப்பட்டது. உடனே என்ன எதிர் விளைவு ஏற்பட்டது?

1848இல் மார்க்சும் - எங்கெல்சும் வெளியிட்ட, “பொது வுடைமைக் கொள்கை அறிக்கையை (Communist Manifesto)”க் கண்டு, உலக முதலாளிகள் அலறியது போலத், தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அலறினர். பொது வுடைமை அறிக்கையைக் கண்டு, வளர்ச்சி நிலை யிலிருந்த உலக ஆலைத் தொழிலாளர்களும் வேளாண் தொழிலாளர்களும் விடுதலை உணர்வு பெற்றது போல, தமிழ்நாட்டுச் சற் சூத்திரரும், சூத்திரரும், தீண்டப் படாதாரும் சுயமரியாதைக் கொள்கையைக் கைக் கொண்டு பிறவி வருணசாதி, தீண்டாமை, பார்ப்பனப் புரோகிதம் இவற்றை ஒழித்தே தீரவேண்டும் எனப் பொங்கி எழுந்தனர்; ஈ.வெ.ரா.வைப் பின்பற்றினர்.

மூன்று தென்மாவட்டங்களில் கோவில் நுழைவு உரிமை மறுக்கப்பட்ட நாடார் சமூகத்தைச் சார்ந்த ஊ.பு.அ. சவுந்தர பாண்டியன் மற்றும் ஜே.எஸ். கண் ணப்பர், செங்கற்பட்டு எம். கிருஷ்ணசாமி ரெட்டி, ஜெய ராம ரெட்டி, பி.டி. ராஜன், 1927-1929இல் முதலாவது அமைச்சராக இருந்த டாக்டர் ப. சுப்பராயன் ஆகிய பெரிய படிப்பாளிகளும் பெருஞ் செல்வந்தர்களும் 1929 பிப்ரவரி 17, 18இல் கூடி, “முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டை” செங்கற்பட்டில் நடத்தினர்.

“சுயமரியாதைக் கொள்கையின்-இயக்கத்தின் கர்த்தா - தோற்றுநர் ஈ.வெ.ரா.” என உலகுக்கு அறி வித்தனர்.

அருப்புக்கோட்டை சூரிய. ஆறுமுக. முத்து நாடார், தம் “நாடார் குல மித்திரன்” கிழமை ஏட்டில், 25.2.1929 இல், “ஈ.வெ. ராம சகாப்தம் 4” எனத் தலையங்கப் பகுதியில் பதிவு செய்தார்.

உடனடியாக ஈ.வெ.ரா. என்ன செய்தார்?

அதுசமயம் அவர் ஈரோட்டில் கட்டிய மாடி வீட்டில், மேல் தளத்தில், “இளைஞர்களுக்கான சுயமரியா தைப் பயிற்சிப் பாடசாலை” ஒன்றை சர்.ஏ. இராம சாமி முதலியார், டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டி யார் இருவரையும் அழைத்துத் தொடங்கி வைத்தார்.

இடையிடையே சில நாள்கள் பயிற்சி வகுப்பை நடத்தினார். 1944 முதல் 1949 முடிய, தொடர்ச்சியாக, கோடை காலத்தில், மாணவர் பயிற்சி வகுப்பை நடத்தி, அவர்களைக் கொண்டு சுயமரியாதைக் கொள்கை களை நாடெங்கும் பரப்பினார். பின்னர் 15 ஆண்டுக் காலம் நீண்ட இடைவெளி.

நான் 1964இல், என் தனிப் பயிற்சிக் கல்லூரிக் காக, சுயமரியாதை இயக்கத்துக்கு உரிய “தென்னூர் பெரியார் இல்லம்” என்பதைப் பெரியாரிடம் வாடகைக் குப் பெற்றேன்.

“நாம், இக்கட்டடத்தில் கொள்கைப் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்” எனப் பெரியாரிடம் வேண்டினேன். பயிற்சியாளர்களுக்கு வேண்டிய உணவுக்கான பொருள் களை வாங்கித் தந்தார்; என்னையே பொறுப்பாள னாக அமர்த்தினார்.

10 நாள்கள் அவரே இருந்து பயிற்சி அளித்தார்.

1964 முதல் 1972 முடிய பல ஊர்களில் இருவரும் பயிற்சி வகுப்பை நடத்தினோம்.

தந்தை பெரியார் மறைவுக்குப் பின், பல பிரிவு களாக இயங்கும் பெரியார் இயக்கத்தினர், தொடர்ந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.

மார்க்சியக் கட்சியினர், இந்துமத இயக்கத்தினர், காந்திய இயக்கத்தினர் திட்டமிட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.

அந்தந்தக் கொள்கையில் நாட்டமுள்ள கல்வி யாளர்களும், செல்வந்தர்களும் - பண உதவி, கற்பிக்கும் பணி உதவி இவற்றை மனமுவந்து அளிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் தூக்கித்தின்கிற அளவில்,

1) பார்ப்பனர்கள், ஒரு வேதம், புரோகிதம், சமற்கிரு தம் இவற்றை, இலவச உணவும் இடமும் கொடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பார்ப்பனச் சிறார்களுக்குக் கற்பிக்கும் “வேத பாடசாலை”களை நூற்றுக் கணக்கில், தமிழ்நாட்டில் நடத்துகின்றனர்.

2) இஸ்லாமிய, ஹசரத்கள், மவுல்விகள், செல்வந்தர் கள் ஆகியோர் “அரபிக் கல்லூரி”களை நிறுவி, 7 ஆண்டுகளுக்கு குர்-ஆன், ஷரியத், அரபி மொழி இவற்றைக் கற்றுத்தரும் மதகுரு பயிற்சியை அளிக்கிறார்கள்.

3) கிறித்துவர்கள் “இறையியல் கல்லூரி”களை நிறுவி, கிறித்துவத்தில் சான்றிதழ்ப் பயிற்சி முத லான பட்டயப் பயிற்சி, பட்டப்படிப்புப் (B.Theo.), (B.Div.) பயிற்சியை அளிக்கிறார்கள்.

இவற்றை உன்னிப்பாக உணருங்கள்!

“பெரியார்-நாகம்மை கல்வி அறக்கட்டளை” சார்பில், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி, மனங்கொண்டு அறிந்திட முன் வாருங்கள்!

1. புத்தர் 2650 ஆண்டுகளுக்கு முன்னர் நால்வரு ணத்தையும், வேள்வியையும் எதிர்த்தார்.

2. திருவள்ளுவர் 2050 ஆண்டுகளுக்குமுன் பிறவி யால் சுமத்தப்பட்ட மானிட இழிவையும், வேள்வி யையும் கண்டனம் செய்தார்.

3. காரல் மார்க்சு 1853இல் மனுநீதியின் அநீதியைக் கண்டனம் செய்தார். 1858இல் இந்தியர்கள் ‘பசு வணக்கம், அநுமார் வணக்கம்’ செய்வதைக் கண் டித்தார்.

4. 1865இல் வடலூர் வள்ளலார் வேதம், ஆகமம், சாதிஇவற்றை எதிர்த்தார்.

5. மகாத்மா புலே நால்வருணம், புரோகிதம், பெண் ணடிமை இவற்றை 1870இல் எதிர்த்து இயக்கம் நடத்தினார்.

6. 1882இல் அத்திப்பாக்கம் அ. வேங்கடாசல நாயகர் வேதம், புராணம், சாதி, சோதிடம் எல்லாவற்றை யும் கண்டித்தார்.

7. 1922 முதல் 1973 முடிய தந்தை பெரியார் நால் வருணம், தீண்டாமை, புரோகிதம், இராமாயணம், பெண்ணடிமை இவ்வளவையும் காக்கும் மனு நீதியை எதிர்த்தார்; இயக்கம் நடத்தினார்.

8. மேதை டாக்டர் அம்பேத்கர் 1927இல் மனுநீதியை எரித்தார்.

மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரியக் கொள்கை யாளர்கள் இன்றும், மேலே கண்டவாறு உள்ள எல்லா மேதைகளின் கொள்கைகளையும் இடைவிடாது பரப் புரை செய்கிறோம்.

இவற்றுள் எதில் எதில், எத்தனை விழுக்காடு வெற்றி கண்டோம் என நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இவ்வளவு இக்கட்டான சூழலில், “பெரியார் - நாகம்மை கல்வி அறக்கட்டளை” சார்பில், “சுய மரியாதை வாழ்வியல் சான்றிதழ்ப் பயிற்சி வகுப் பினை” 2015 ஆண்டு சூலை இறுதியில் தொடங் கினோம். 2016 ஆகத்து முடிய, 26 பயிற்சியாளர் களுக்கு, 40 ஞாயிறுகளில் பயிற்சி அளித்தோம்.

1. பௌத்தம், 2. வள்ளுவம், 3. மார்க்சியம், 4. லெனினியம், 5. காந்தியம், 6. பெரியாரியம், 7. அம்பேத்கரியம், 8. பாவேந்தம் ஆகிய எண் வகைத் தத்துவங்களையும்; 9. தமிழ்மொழித் திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும், 10. கணினி அறிமுகப் பயிற்சியையும் 40 ஞாயிறுகளில் பத்து வகையான பாடங்களை, தலைசிறந்த பேராசிரியர் களைக் கொண்டு கற்பித்துள்ளோம்.

பயிற்சியாளர்களுக்கும், பயிற்றுநர்களுக் கும் நண்பகல் உணவு, இருவேளை தேநீர் வழங் கும் கடமையையும் ஆற்றியுள்ளோம்.

மேலே கண்ட சான்றிதழ்ப் பயிற்சித் தேர்வில் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு, வரும் 17.9.2016 சனி அன்று, அறக்கட்டளை வளாகத் தில், தந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் பெருவிழாவில், சான்றிதழ்களையும், பயனுறு நூல்களையும் வழங்கிட உள்ளோம்.

எங்கள் அறக்கட்டளை 2016-2017க்கான பயிற்சி வகுப்பையும் உடனே தொடங்கிட உள்ளது.

நல்ல நூலகத்தையும், கடமை உணர்வுடன் கூடிய பயிற்றுநர்களாகப் பணிபுரியும் சிறந்த அறிஞர்களையும் கொண்டு மேற்கொள்ளப்பட் டுள்ள எங்களின் பணி சிறக்க, எல்லாத் தமிழ்ப் பெருமக்களும், செல்வந்தர்களும் மனமுவந்து நல்ல அளவில் நன்கொடை அளித்துப் பேருதவி புரிய வேண்டுகிறோம்.

Pin It