2016செப்டம்பர் 2 அன்று இந்தியாவில் உள்ள ஆங்கில நாளேடுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பெரியதாகவும், இந்தியாவின் முதலாவது பெரும் கோடீசுவரராவும், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத் தின் முதலாளியாகவும் இருக்கின்ற முகேஷ் அம்பானி ஜியோ (Jio) திட்டத்தை 1-9-16 அன்று அறிமுகப்படுத் திப் பேசிய படம் சிறியதாகவும் இடம்பெற்ற விளம் பரங்கள் வெளியிடப்பட்டன.

modi ambaniஅந்த விளம்பரத்தில், ஜியோவை இந்தியாவுக்கும் அதில் வாழும் 120 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்ப தாகவும், திரு.நரேந்திரமோடியின் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கவேண்டும் எனும் கனவை நிறைவேற்று வதாகவும் கூறப்பட்டிருந்தது. இதற்குமுன் எந்தவொரு முதலாளிய நிறுவனமும் நாட்டின் தலைமை அமைச் சரைத் தன்னுடைய விளம்பரத் தூதுவராக இந்த அளவுக்கு அப்பட்டமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. முதலாளிகளின் இலாப வேட்டைக்குத் தடையாக இருப்ப வற்றை அகற்றுவதற்காகத் தாராளமயம் தனியார் மயம் கொள்கையைக் கொண்டுவந்த பி.வி.நரசிம்மரா வோ, அதைத் தீவிரமாகச் செயல்படுத்திய மன்மோகன் சிங்கோ பிரதமர் பதவியில் இருந்தபோது இந்தியப் பெருமுதலாளிகளிடம் நெருக்கமாக இருப்பதாக வெளிப் படையாகக் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் நரேந்திர மோடியும் பெரு முதலாளிகளும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டுக் கொண்டு உலவுகின்றனர்.

ஜியோ (Jio) என்பது இந்தி மொழிச் சொல். இச்சொல் லுக்கு ‘வாழ்ந்துகொள்’ (வாழு) என்று பொருள். முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ என்பது VOLTE (Voice Over Long-Term Evaluation-VOLTE) எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட 4 ஜி-அகன்ற அலைக்கற்றைச் சேவையை வழங்குவது ஆகும். விலை உயர்ந்த தொடுதிரைக் கைப்பேசி (Smart Phone) மூலம இந்தச் சேவையைப் பெறலாம். ஜியோ திட்டத்தில் குரல் அழைப்புகளுக்கு (Voice Calls)) கட்டணம் இல்லை-இலவசம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அதேசமயம் இணைய இணைப்புக்கு (Data)க் குறைந்த கட்டணம் வாடிக்கையாளரிடம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 5-9-16 முதல் நடைமுறைக்கு வந்தது. ஜியோ சிம் (SIM) கார்டு பெறுவதற்காக ரிலையன்சு கடைகள் முன், மக்கள்-குறிப்பாக இளைஞர்கள் குவிந்து கிடக்கின்றனர்.

எனவேதான், “ஜியோ என்பது இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் புதிய தலைமுறைக் கான சேவை” என்று 1.9.2016 அன்று ஜியோ அறிமுக விழாவில் முகேஷ் அம்பானி முழங்கினார். மேலும் ஜியோ தொலைத்தொடர்புத் துறையில் மாபெரும் புரட்சி என்று கூறினார். காலப்பயணத்தில் வாழ்க்கை யில் மாபெரும் மாற்றத்தைத் தரும் பொன்னான நேரம் இது என்று புகழ்ந்தார். ஜியோவைப் போற்றி முகேஷ் அம்பானி கூறுவது உண்மையா? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே அவதாரம் எடுத்திருப்பதாக முகேஷ் அம்பானி கூறுவது இது முதல் முறை அன்று. நுகர்பொருள் வணிகத்தில் ஜவுளித் துறையில் ‘விமல்’ பிராண்டை அறிமுகப்படுத்திய போது, ஒவ்வொரு இந்தியனுக்கும் துணி வழங்குவதே எங்கள் குறிக்கோள் என்று அவர் கூறினார். பெட்ரோலிய எண் ணெய் மற்றும் எரிவளி வணிகத்தில் ஈடுபட்ட போது, எரிசக்தியில் இந்தியாவைத் தன்னிறைவு கொண்ட நாடாக ஆக்குவதே எங்கள் நோக்கம் என்றார். இப்போது இந்தியாவின் பெட்ரோலிய-கச்சா எண்ணெயின் தேவை யில் 70 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகிறது. கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் (KG-B) அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் எண்ணெய் துரப்பண நடவடிக் கையில் செய்த முறைகேடுகள், ஊழல்கள் ஊரறிந்த இரகசியம் ஆகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதில் 75 விழுக்காடு ரிலையன்சிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதில் உலகிலேயே ரிலையன்ஸ் இன்டஸ்ரீஸ் தான் மிகப்பெரிய நிறுவனம். கச்சா எண் ணெய் விலை குறைவால் சுத்திகரிப்புப் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. 2016 சூலை-செப்டம்பர் காலத்திற்கான காலாண்டில் இலாபத்தில் 23 விழுக்காடு குறைவு - அதாவது 720 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது (The Hindu, 21.10.2016). எனவே இதைவிடக் குறுகிய காலத்தில் கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் ரிலையன்சு நிறுவனம் ஜியோ திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜியோ திட்டத்தில் ரூ.1,50,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.10.2016 அன்று என்.டி.டி.வி. (NDTV) நிகழ்ச்சியில் பேசிய போது, முகேஷ் அம்பானி ரூ.2,00,000 கோடி முதலீடு செய்திருப்பதாகச் சிரித்துக் கொண்டே சொன் னார். இதை ரூ.2,50,000 கோடியாக உயர்த்தப் போவதாக 20.10.2016 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு பெருந் தொகையான முதலீட்டில் தொடங்கப்பட்ட முதலாவது திட்டம் ஜியோ தான் என்று முகேஷ் அம்பானி பெரு மிதத்துடன் கூறுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கி.மீ. தொலைவுக்குக் கண்ணாடி இழைக்கம்பிகள் (Fibre Optic Cables) பதிக்கப்பட்டதுடன், 30,000 கோபுரங்கள் (Towers) அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொல்லைப்புற வழியாகக் கள்ளத்தனமாக நுழைதல்

தற்போது கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங் களும் அவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் அளவும் கீழே தரப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்  மொத்த வாடிக்கையாளர்களில் இவற்றின் பங்கு விழுக்காட்டில்

1.            ஏர்டெல்           24.71

2.            வோடா ஃபோன்         19.26

3.            ஐடியா செல்லுலர்       17.03

4.            ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

                (அனில் அம்பானி நிறுவனம்)

                + ஏர்செல்         18.13

5.            பி.எஸ்.என்.எல்.

                (BSNL + MTNL) 9.00

6.            டாடா  5.74

7.            மற்றவை         6.13

                                --------

                                100.00

                                --------

அனில் அம்பானியின் கம்யூனிகேஷன் குழுமம் 2015 சூலையில் ஏர்செல் நிறுவனத்தை வாங்கியது. இலட்சுமி மிட்டலின் ஏர்டெல், வோடா ஃபோன், ஐடியா செல்லுலர் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் 61 விழுக் காடு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். செல்பேசித் தொழிலின் மொத்த வருவாயில் 75 விழுக்காடு இம்மூன்று நிறுவனங்களிடம் இருக்கிறது. மேலும் இந்திய செல்பேசி நிறுவனங்களின் சங்கம் (Cellular Operators Association of India - COAI) இம்மூன்று நிறுவனங்களின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது.

கைப்பேசிச் சந்தையில் 90 விழுக்காட்டைக் கைப் பற்றுவதே ஜியோ திட்டத்தின் நோக்கம் என்று முகேஷ் அம்பானி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ஜியோ மூலம் குரல் அழைப்புகள் இலவசம் என்ற அறிவிப்பு வெளியான அடுத்தநாளே பங்குச்சந்தையில் ஏர்டெல் ரூ.13,000 கோடியும், ஜியோ நிறுவனம் ரூ.3,000 கோடியும் இழந்தன. முதலாளியம் ஏகாதிபத்தியமாக உருப்பெற்றபோது, சிறிய முதலாளிகளைப் பெரிய முதலாளிகள் உயர் தொழில்நுட்பத்தின் துணையுடன் விழுங்கினர். நவீன தொழில்நுட்ப யுகத்திலும், அதே போன்று புதிய உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெரிய முதலாளிகளை மற்ற மிகப்பெரிய முதலாளி களே விழுங்க முயல்கின்றனர். எனவே உண்மையில் முகேஷ் அம்பானியின் ஜியோ அறிமுகம், செல்பேசித் துறையில் மாபெரும் கழுத்தறுப்புப் போட்டியைத் தொடக்கி வைத்துள்ளது.

ஜியோ மூலமான இலவச அறிவிப்பால் - இணைய இணைப்புக்கான விலைக்குறைப்பால் மற்ற போட்டி நிறுவனங்களை அழித்தொழித்துவிட்டு மொத்தச் சந் தையையும் தானே கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில், “இன்னும் ஓராண்டிற்குள் பத்துக் கோடி இணைப்புகள் வழங்கவும், அடுத்த சில ஆண்டு களில் 90 விழுக்காடு சந்தையைக் கைப்பற்றவும்” ஜியோ உயர் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித் திருப்பதாக முகேஷ் அம்பானி கூறுகிறார்.

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையைக் கைப்பற்ற முகேஷ் அம்பானி செய்துவரும் முயற்சிகளின் முழுப் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் 2010 மே மற்றும் சூன் மாதங்களில் நடுவண் அரசின் தொலைத்தொடர்புத் துறை நடத்திய மூன்றாம் மற்றும் நான்காம் அலைக்கற்றை (3G, 4G) ஏலம் என்கிற கண்ணாமூச்சி ஆட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை ஏலம் எடுப்பவர்கள் அதனை இணைய இணைப்பு (Data) - அதாவது தரவுகளைப் பரிமாறிக் கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; செல்பேசி இணைப்புகள் (Voice) வழங்கப் பயன்படுத்தக்கூடாது என்று ஏல அறி விக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

3ஜி அலைக்கற்றை ஏலம் எடுப்பதற்கே ஏர்டெல், வோடாஃ போன், ஐடியா போன்ற நிறுவனங்கள் தம் நிதியிருப்பின் பெரும்பகுதியைச் செலவிட்டன. 4ஜி என்பது இணைய சேவைக்கு மட்டுமானது என்று கூறப்பட்ட காரணத்தால் 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் இந்நிறுவனங்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆயினும் மொத்தம் உள்ள 22 சேவை மண்டலங்களில் (Service Circles) ஏர்டெல் 15 மண்டலங்களி லும், வோடா ஃபோன் 5 மண்டலங்களிலும் 4ஜி உரி மத்தை ஏலம் எடுத்தன.

இந்நிலையில் முன்பின் கேள்விப்பட்டிராத இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் லிமிடெட் (Imfotel Broadband Services Private Limited - IBSPL) என்கிற தனியார் நிறுவனம் இந்தியாவின் அனைத்துச் சேவை மண்ட லங்களிலும் 4ஜி அலைக்கற்றைக்கான உரிமம் கோரி விண்ணப்பித்தது. 4ஜி ஏலத்தில் பங்குபெறும் நிறுவனங் களுக்கான குறைந்தபட்சத் தகுதி மிகவும் தளர்வாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், வெறும் ரூ.2.5 கோடி ரொக்க மதிப்பும், 14 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமான மும் கொண்ட இன்ஃபோடெல் நிறுவனம் 22 டெலி காம் மண்டலங்களிலும் ஒரு வட்டத்தை (block) ரூ.12,847 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிறுவனத் துக்குச் செல்பேசி சேவை வழங்கிய முன்அனுபவ மோ, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லை. ஆயினும் 4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது.

இதற்குமுன் 2ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் தகுதியற்ற நிறுவனங்களுக்கு உரிமம் தரப்பட்டதாக ஆ. இராசா மீது கடுமையான குற்றம் சாட்டப்பட்டது என்பது இங்கே நினைவுகூரத்தக்கதாகும். மேலும் 2ஜி அலைக்கற்றையைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததால் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG) மதிப்பீடு செய்தது. தி.மு.க.வின் ஆ. இராசவே இவ்வளவு பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதுபோல் ஊடகங்களில் ஊதிப்பெருக்கிக்காட்டப்பட்டது. ஆனால் 2ஜி வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுத் துறை ஏல முறைகேட்டால் ஏற்பட்ட இழப்பு ரூ.22,000 கோடி என்று மதிப்பிட்டது. பிறகு இத்தொகையை ரூ.30,000 கோடி என்று உயர்த்தியது.

2010 சூன் மாதம் 4ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற இன்ஃபோடெல் நிறுவனத்தின் யோக்கியதை யைப் பார்ப்போம். இதன் தாய் நிறுவனம் ஹிமாச்சல் புயூச்சரிஸ்டிக் கம்யூனிகேசன்ஸ் என்பதாகும். 1990 களில் சுக்ராம் என்பவர் தொலைத்தொடர்பு அமைச் சராக இருந்தபோது நடந்த முதலாவது பெரிய தொலைத் தொடர்பு ஊழலில் கையும் களவுமாகப் பிடிபட்ட நிறுவனம் இது.

மேலும் இன்ஃபோடெல் நிறுவனம் 4ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்காகக் கொடுத்த வங்கி உத்தர வாதப் பத்திரமே மோசடி செய்யப்பட்ட ஒன்றாகும். வங்கி, வேறொரு நிறுவனத்துக்காக அளித்திருந்த உத்தரவாதப் பத்திரத்தில் அந்நிறுவனத்தின் பெயரை வெள்ளை மையால் அழித்துவிட்டு, அதன்மீது இன்ஃபோ டெல் தன் பெயரை எழுதிக்கொண்டது. இந்த மோசடி - போர்ஜரி-தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவல கத்தின் 2014ஆம் ஆண்டின் வரைவு அறிக்கையில் திட்டவட்டமாக அம்பலமாயிற்று.

இத்தகைய உத்தமபுத்திரனான இன்ஃபோடெல் நிறுவனம் - 4ஜி அலைக்கற்றை ஏலம் எடுத்த அடுத்த நாளே-2010 சூன் 17 அன்று தன்னுடைய 95 விழுக் காடு பங்குகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. அதாவது முகேஷ் அம்பானி தன்னுடைய பினாமியாக இன்ஃபோடெல் நிறுவனத்தைச் செயல்பட வைத்தார். முகேஷ் அம்பானி யின் ரிலையன்சு நிறுவனம் 4ஜி ஏலத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்தால், மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தொகையை உயர்த்தி இருக்கும் என்ப தால், மரத்துக்குப் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டு வாலியைக் கொன்ற இராமனைப் போல, இன்ஃபோ டெல் எனும் பினாமிக்குப் பின்னால் நின்றுகொண்டு, அரசுக்கு வரவேண்டிய சில இலட்சம் கோடி உருபாயை ஏப்பம் விட்டார் முகேஷ் அம்பானி.

2013 சனவரி 22 அன்று இன்ஃபோடெல் என்கிற பெயர் ரிலையன்ஸ் ஜியோ என்று மாற்றப் பட்டது. இது நடந்த பிறகு, மன்மோகன் சிங் அரசு, 2010இல் 4ஜி அலைக்கற்றையை இணைய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை, செல்பேசி சேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று 2013இல் அறிவித்தது. இச்சலுகையை ரிலையன்ஸ் ஜியோ பெற்றதால், அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டதாக 2014ஆம் ஆண்டின் வரைவு அறிக்கை யில் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

2015 மே மாதம் 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில் 4ஜி ஏலம் குறித்த இறுதி அறிக்கையை நடுவண் அரசு முன்வைத்தது. ஆனால் அந்த அறிக்கையில் அரசு ரிலையன்சுக்கு அளித்த சலுகை அறிவிப்பால் அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் வரைவு அறிக் கையில் கூறப்பட்டிருந்த செய்தி மூடிமறைக்கப்பட் டிருந்தது. பொத்தாம் பொதுவாக தொலைத்தொடர்புத் துறையின் சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளை அடைக் கத்தவறிவிட்டது என்று மட்டும் குறிக்கப்பட்டிருந்தது. மேலும் 2010ஆம் ஆண்டில் 4ஜி அலைக்கற்றை ஏலம் எடுத்ததை அய்ந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று ஏல அறிவிக்கையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது. இந்த அய்ந்தாண்டுக் காலக்கெடு 2015 ஆகத்து 31ஆம் நாளுடன் முடிந்துவிட்டது. அய்ந்து ஆண்டுகளுக்குள் 4ஜி அலைக்கற்றைச் சேவையை வழங்காத ரிலையன்சுக்கு அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம் (Spectrum Usage Charges)) விதிக்கப்படுகிறது. இன்ஃபோடெல் எனும் பினாமி நிறுவனத்தின் மூலம் ரிலையன்சு நிறுவனம் கைப்பற்றிய BWA/4G (Broadband Wireless Access - BWA) என்பது இணைய இணைப்புக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்பதால், அகன்ற அலைப் பயன்பாட்டுக்கான கட்டணம் 2010இல் ஒரு விழுக் காடாக விதிக்கப்பட்டது. 2013இல் BWA/4G வசதியைப் பேசுவதற்கும் (Voice Call) பயன்படுத்தலாம் என்று நடுவண் அரசின் தொலைத்தொடர்புத் துறை அறிவித்த போது, அதற்கேற்ப அகன்ற அலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை ரிலையன்சுக்கு உயர்த்தவில்லை. அதனால் ரிலையன்சு செலுத்த வேண்டியது ஒரு விழுக்காடாகவே நீடிக்கிறது. ஆனால் ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் முதலான நிறுவனங்கள் குரல் அழைப்புகளுக்கு (Voice Calls) அதைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத் திறனுக்கு ஏற்ப அவற்றின் வருவாயில் 5 விழுக்காடு முதல் 8 விழுக்காடு வரை வரி செலுத்துகின்றன. இந்தக் கணக் கீட்டின் அடிப்படையில் ரிலையன்சுக்கு வரி விகிதத்தை உயர்த்தாததால் அரசுக்கு ரூ.22,842 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் வரைவு அறிக்கை மதிப்பீடு செய்தது.

எனவே தலைசிறந்த வழக்குரைஞரான பிரசாந்த் பூஷன் தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவல கத்தின் வரைவு அறிக்கையின் அடிப்படையில் அலைக் கற்றை ஏலத்தில் ரூ.40,000 கோடி ஊழல் நடந் திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, ரிலையன்சு செய்த முறைகேடுகளை விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத் தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். 2014 தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்பதற்காக 2ஜி ஊழலைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய சனதா கட்சி, இந்த 4ஜி ஊழலில் காங்கிரசுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் வாதாடி யது. பெருமுதலாளிகளின் நலன்களைக் காப்பதில் காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை.

2016 ஏப்பிரல் 8 அன்று இந்த வழக்கில் தீர்ப் பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பினாமி நிறுவனத் தைப் பயன்படுத்தி அலைக்கற்றையைக் கைப்பற்றியது, வங்கி உத்தரவாதப் பத்திரத்தில் மோசடி செய்தது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளு படி செய்தனர். 2ஜி வழக்கில் பாரபட்சம் காட்டப்பட்டது என்ற காரணத்தைக்காட்டி 122 உரிமங்களை இரத்து செய்து மறு ஏலம் நடத்தச் சொன்ன உச்சநீதிமன்றம், அம்பானிக்குக் கட்டணத்தில் பாரபட்சமாகச் சலுகை காட்டப்பட்டிருப்பது பற்றி, தான் முடிவு எடுக்க முடியாது என்றும், அதை விசாரிக்க வேண்டியது நடுவண் அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம்தான் என்றும் தீர்ப்புக் கூறி அம்பானிக்காக வாலையாட்டிக் கொண்டு நிற்கிறது. மேலும் வங்கி உத்தரவாதப் பத்திரத்தில் செய்யப்பட்டுள்ள மோசடி பற்றி நிதி அமைச்சகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறி பிரசாந்த் பூஷனின் வழக்கை ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்தது. தனிச்செல்வாக்கு இல்லாத தலித்தான ஆ. இராசாவுக்கு ஒரு நீதி; பனியாவான - நாட்டின் முதல் நிலைப் பணக்காரனாக உள்ள முகேஷ் அம்பானிக்கு வேறொரு நீதி. மனுசாத்திரத்தின் சாதிக்கொரு நீதி இன்றும் தொடர்கிறது என்பதற்கு, இது நல்ல சான்று.

ரிலையன்சு ஜியோ தனது செல்பேசி சேவையை 4ஜி அலைக்கற்றையில் செயல்படும் VOLTE (Voice Over Long-Term Evaluation) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் இணையம் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் அனைத்துமே இணைய நெறிமுறையின் (Internet Protocol - IP) அடிப்படையில் செயல்படும். சுருக்கமாகச் சொன்னால், ஜியோவின் செல்பேசி சேவை மூலம் நாம் பேசுவது, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்புவது, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளச் செயல்பாடுகள் அனைத்தும் மின்தரவுகளாக (Data Packets) மாற்றப்பட்ட பின் னரே கடத்தப்படுகின்றன. இவற்றைப் பதிவு செய்து சேமிப்பது எளிது. வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தி ரிலையன்ஸ் பணம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. அரசின் பொறுப்பில் இருப்பினும் ஆதார் அட்டைப் பதிவுகள் ஒருவரின் தனி உரிமையை (Right to Privacy) எப்படி மீறுகிறதோ அதைவிடப் பன்மடங்கு ஜியோ நம் தனிஉரிமைகளை மீறுகிறது. தனிமனித உரிமை மீது ஒரு முதலாளியப் பெருங்குழுமம் தொடுக்கும் கொடிய தாக்குதல் இது.

முகேஷ் அம்பானி தன்னுடைய ஜியோ திட்டத்தை அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புகூட, நடுவண் அரசு ரிலையன்சுக்கு ஆதரவாகவும் ஏர்டெல், வோடா ஃபோன், ஐடியா போன்ற மற்ற நிறுவனங்களுக்கு எதிரானதாகவும் ஆன ஒரு நடவடிக்கையை எடுத்தது. 2016 ஆகத்து மாதம் நடுவண் அரசின் தொலைத் தொடர்புத் துறை, 2015 பிப்பிரவரி முதல் நடப்பில் இருந்த ஒரு நிறுவனத்தின் இணைப்பு வசதியைப் பயன்படுத்துவதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும் (Interconnect Usage Charges - IUC) என்று இருந்ததை நீக்கியது. ஒரு கட்டண அழைப்பு முடியும்போது 14 காசு - எந்த நிறுவனத்தின் இணைப்புச் சேவை (Network) பயன்படுத்தப்பட்டதோ அந்த நிறுவனத் துக்கு அதைப் பயன்படுத்திக்கொண்ட நிறுவனம் அளிக்க வேண்டும். இத்தன்மையில் ஓராண்டில் எல்லா டெலிகாம் நிறுவனங்களுக்கும் சேர்த்து ரூ.20,000 கோடி வரு வாய் கிடைத்தது. இந்தக் கட்டணத்தை இரத்து செய்ததன் மூலம் 2016 செப்டம்பரில் இயங்கத் தொடங்கிய ஜியோ மற்ற நிறுவனங்களின் இணைப்பு வசதியைப் பயன்படுத்துவதற்காக ஒரு காசும் தரவேண்டியதில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. மேலும் ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் நிறுவனங்கள் ஏறக்குறைய ஆண்டிற்கு இதன்மூலம் பெற்றுவந்த ரூ.5,000 கோடி வருவாயை இழக்கின்றன. இதன்மூலம் சந்தையில் ஜியோ தன் போட்டியாளர்களின் நிதி வலிமையைக் குறைக்கிறது. இதற்கு நடுவண் அரசு ஆதரவாகச் செயல்பட்டது கடைந்தெடுத்த கயமைத்தனதாகும்.

ஜியோவின் இலவச அழைப்பின் அறிவிப்பால் ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் நிறுவனங்கள், ஜியோவின் இலவச அழைப்புகள் சுனாமி போல் வருவதால் தங்கள் இணைப்பு வலைத்தளங்களில் (Network) பெரும் நெரிசல் ஏற்படுகிறது; அவற்றைப் பராமரிக்கும் செலவு அதிகமாகிறது என்று ஜியோ மீது குறை கூறின. ஜியோவோ இப்போட்டி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மூலமான குரல் அழைப்புகளுக்கு வேண்டுமென்றே இணைப்புத்தர மறுக்கின்றன என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத் தில் (TRAI) முறையீடு செய்தது. ஒழுங்காற்று ஆணையம் முகேஷ் அம்பானியின் ஜியோவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. ஜியோ அழைப்புகளுக்கு உரிய இணைப்பு செய்து தரவில்லை என்று கூறி, ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களுக்கு ரூ.1,050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம் விதித்துள்ளது (The Hindu, 22.10.2016).

ரிலையன்சின் ஜியோ அறிவிப்பை நுணுகி ஆராய்ந்த இத்துறை சார்ந்த வல்லுநர்கள், ஜியோ அறிவித்துள்ளதை அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது என்று கருத்துரைத்துள்ளனர். குரல் அழைப்புகள் (Voice Calls) இலவசம் என்று ஜியோ அறிவித்திருந்தாலும் அதைவிட தற்போது ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் போன்றவை இணையதளம் மூலம் அல்லாமல் 2ஜி, 3ஜி மூலம் பேச்சின் ஒலியை அனுப்புவதால் கட்டணம் குறைவாக இருக்கும். மேலும் குரல் அழைப்புகள் இலவசம் என்று கூறினாலும் ஜியோவின் இணைய இணைப்புக் கட்டணம் மற்ற நிறுவனங்களைவிட அதிகமாக இருக்கும். அதாவது பேசுவதற்கு இலவசம் என்று பீற்றிக் கொண்டாலும், வலது கையால் கொடுத்து, பின்னர் இடது கையால் அதைப் பறித்துக் கொள்வதுபோல் ஜியோ இணைய இணைப்புக் (data) கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும்.

2016இல் 22 கோடிப் பேர் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை கைப்பேசி வைத்துள்ள னர். ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் நிறுவனங் களும் தொடுதிரை (டிஜிட்டல்) கைப்பேசி சேவையை அளிக்கின்றன. 2019ஆம் ஆண்டிற்குள் தொடுதிரை கைப்பேசிகள் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜியோவின் BWA/4G முறையின்கீழ் தொடுதிரை செல்பேசிகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே முகேஷ் அம்பானியின் சூழ்ச்சித் திட்டம். ஆனால் BWA/4G வசதி கொண்ட தொடுதிரை செல்பேசி ரூ.10,000க்கும் மேற்பட்ட விலை யில் விற்பதால் செல்பேசி பயன்படுத்தும் பெரும்பா லோரால் அதை வாங்க முடியாது. எனவேதான் முகேஷ் அம்பானி இளைய தலைமுறையினருக்கானது ஜியோ என்று கூறி இளைஞர்களை ஈர்க்கப் பார்க்கிறார்.

ஏர்டெல், ஐடியா, வோடாஃபோன் போன்ற நிறு வனங்கள் 2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் மூலம் ஜியோவைவிட மலிவான விலையில் குரல் அழைப்பு மற்றும் இணையதள சேவைகளை வழங்குவதால் முகேஷ் அம்பானியின் ஜியோ புரட்சி வெற்றி பெறாது.

தொடக்கம் முதலே தில்லுமுல்லுகளையும், பித்த லாட்டத்தையும் தன் வழிமுறையாகக் கொண்டு உரு வான முகேஷ் அம்பானியின் ஜியோ திட்டத்தையும், இதற்கு ஆதரவாகச் செயல்படும் மோடி ஆட்சியையும், காங்கிரசுக் கட்சியையும் மக்கள் முன் அம்பலப்படுத்து வோம். முகேஷ் அம்பானி கூறுவதுபோல், ஜியோ திட்டம் ஒரு புரட்சி அல்ல; அது ஓர் இமாலயப் புரட்டு!

இக்கட்டுரை எழுதத் துணை செய்தவை :

1.            Economic and Political Weekly, 2016 September 10 and 2016 October 8.

2.            ஃபிரண்ட்லைன், செப்டம்பர் 30, 2016.

3.            புதிய ஜனநாயகம், அக்டோபர் 2016.

Pin It