மூளையின் நெகிழும் தன்மை

நாலாபுறமும் இருந்து வரும் உள்ளீடுகளுக்கு ஏற்றவாறு குழந்தையின் மூளை தன்னை மாற்றிக் கொண்டே வளரும் தன்மையுடையது. இதை மூளையின் PLASTICITY அல்லது நெகிழும் தன்மை என்கிறோம். முதல் மூன்று வருடங்களில் குழந்தையின் மூளை ஒவ்வொரு நொடியும் பத்து லட்சம் புது கனெக்க்ஷன்களை உருவாக்குவதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. அனைத்தும் குழந்தைகளின் கேட்டல், கற்றல், மற்றும் அறிவு வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.

தகவல் தொழில் நுட்பமும் எலெக்டிரானிக் சாதனங்களும் இன்றைய குழந்தைகளின் மூளை, உள்ளீடுகளைப் பகுத்தறிந்து சிந்தித்து செயலாற்றும் முறையையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம். இன்றைய இளைஞர்கள் இணையம் வழியாக வந்து கொட்டும் தகவல்களை உள்வாங்கி பிறரின் உதவியின்றி முடிவு எடுத்து செயலாற்றும் சமூகமாக மாறிவிட்டார்கள். நாம் குழந்தைகளாக இருந்தபோது சென்ற உள்ளீடுகளுக்கும் இன்றைய குழந்தைகளுக்கு செல்லும் உள்ளீடுகளுக்கும் இமாலய வேறுபாடுகள். இன்றைய குழந்தைகளின் மூளையைத் தூண்டும் காரணிகளுக்கு ஏற்ப மூளையின் புதுப்பகுதிகள் வளர, நாமும் நம் முன்னோர்களும் உபயோகித்த மூளையின் சில பகுதிகளுக்கு வேலை குறைந்து நாளடைவில் அந்தந்தப் பகுதிகள் சிறியதாகப் போய்விடும் என்று சொல்லுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் அடுத்த பரிணாம வளர்ச்சி நடக்கிறது!

டிஜிட்டல் யுகக் குழந்தை

இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் DIGITAL NATIVES என்று அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கல்வியாளரான மார்க் பிரென்ஸ்கி (MARC PRENSKY) அழைக்கிறார். இந்த டிஜிட்டல் நேடிவ்களுக்கு இணையமும் சோஷியல் மீடியாவும், கணிணியும், மொபைலும் உமிழும் தகவல்களை உள்வாங்கிக் கிரகித்து திறமையுடன் வாழத் தெரியும்.boy with mobileஇவர்கள் முந்தைய தலைமுறையினரின் படிப்புக்கு உதவிய கரும்பலகையையும்,  புத்தகத்தையும் காலாவதியாகிவிட்டதாக நினைக்கிறார்கள். ஸ்மார்ட் போர்டும், டேபும், கணிணியும் முப்பரிமாணத்தில் மிகவும் சிக்கலான கருத்தைக்கூட இவர்களுக்கு எளிதில் புரியவைத்து விடுகிறது. ஆசிரியர்களும் அதற்குத் தகுந்தாற்போல் டிஜிட்டல் யுகத்திற்கு மாறினால்தான் இன்றைய குழந்தைகளின் மூளைக்குள் எந்த கருத்தையும் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை வந்து விட்டது.

இண்டர்னெட் வருவதற்கும் முன்னர் பிரிண்ட் மீடியா யுகத்தில் பிறந்த நாம் இப்போதுதான் மெல்ல மெல்ல இந்த டிஜிட்டல் யுகத்திற்குக் குடியேறிக் கொண்டிருக்கிறோம். நம்மால் இந்த புதுயுக தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் கலந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டத் தெரியவில்லை, முடியவும் இல்லை. நமக்கு புதியதைக் கண்டு தயக்கமும் பயமும் வேறு.

வயது வித்தியாசத்தை வைத்து தலைமுறை இடைவெளி என்று சொல்லி வருகிறோம். இப்போது உள்ள தகவல் தொழில் நுட்ப அறிவை வைத்து சொல்வோமானால் நம் குழந்தைகள் நவீன டிஜிட்டல் உலகத்திலும் நாம் அங்கே செல்ல முடியாமல் தவிக்கும் பழைய உலகத்திலும் இருந்துகொண்டு ஒரு வகையான தலைமுறை இடைவெளியில்தான் பிரிந்து நிற்கிறோம்.

தற்போது குழந்தை வளர்ப்பது எளிதா?

இன்று பெரும்பாலான சிறுவயதுக் குழந்தைகள் நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்வதற்கு முன்னரே தொலைக்காட்சிக்கும், ஸ்மார்ட் ஃபோனுக்கும் பரிச்சயம் ஆகி விடுகிறார்கள். கழிப்பறை உபயோகிக்கத் தெரிந்து கொள்வதற்குள் ஸ்மார்ட் ஃபோனில் யூடியூப் வீடியோவை சரியாகக் கண்டுபிடித்துப் பார்க்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து புத்தகங்களுக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னரே காட்ஜெட்டுக்கு அறிமுகம் ஆகி விடுகிறார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது குழந்தை வளர்ப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கப் பெற்றோர்கள் கூறுவதாக ஒரு ஆய்வறிக்கை சொல்லுகிறது. காரணம் இன்றைய டெக்னாலஜி முன்னேற்றத்தினால் உண்டாக்கப்பட்டுள்ள எலெக்டிரானிக் கருவிகளுக்கு மத்தியில் குழந்தை வளர்க்க மிகவும் சிரமப்படுவதாகச் சொல்லுகிறார்கள்.

எலக்டிரானிக் கருவிகளின் செயற்கைச் சத்தங்களும், தொலைக்காட்சியும், தொடுதிரைக் கைபேசிகளும் மனிதனின் பேச்சுக்களையும், உணர்வுகளின் வெளிப்பாடுகளையும் ஓரம் தள்ளிவிட்டு மையத்திற்கு வந்து குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களுக்கு உதவ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அழுகிற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டிற்குப் பதில் தொட்டிலை ஆட்டவும் தாலாட்டுப் பாடவும் காட்ஜெட்டுகள் நிறைய வந்து விட்டன.

டிஜிட்டல் பிரிவினைகள்

இந்த டிஜிட்டல் யுகத்தில் வசதியுள்ளவர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. ஒரு சாராருக்கு இணையம், தகவல் பரிமாற்றம், காட்ஜெட்டுகள் என அனைத்தும் எளிதாகக் கிடைக்கும்போது, வசதியற்றவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு இந்த டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் குழந்தை வளர்ச்சியில் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் நாட்டில் சமீபத்திய ELEMENTARY EDUCATION IN RURAL INDIA என்ற கணக்கெடுப்பின்படி, கிராமங்களில் 49.3 சதவீதம் குழந்தைகளுக்குதான் ஸ்மார்ட்ஃபோன் வசதி இருக்கிறது என்றும், அதை அவர்கள் பெரும்பாலும் (76.7 சதவீதம்) வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கும் சினிமா பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் தெரிகிறது. மீதம் உள்ள 34 சதவீதம் குழந்தைகள்தான் அதைப் படிப்புக்கு உபயோகப் படுத்துகிறார்கள். அதே சர்வேயில் 40 சதவீதம் கிராமத்துக் குடும்பங்களில்தான் குழந்தைகளுக்கு, பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற பொது அறிவு, கதைப் புத்தகங்களைப் படிப்பதற்கு வசதி உள்ளது எனவும், மேலும் தினம் 40 சதவீதம் பெற்றோர்களுக்குத்தான் தங்கள் குழந்தைகளிடம் இன்று பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

டிஜிட்டல் சாதனங்கள்

யூ டியூப் மீடியாக்களில் பலவகை இருந்தாலும் குழந்தைகளின் விருப்பம் யூ டியூப்தான். உலகம் முழுவதிலும் இருந்து ஒவ்வொரு நிமிடமும் சுமார் 400 மணி நேரத்திற்கான வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். இவைகளில் இருந்து குழந்தைகளுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டும் தனியாகப் பிரித்து யூடியூப் கிட்ஸில் போடுவதே பெரிய வேலை. அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஏற்றவையா என்றும் சொல்லமுடியாது. அதிலும் சில கிரிமினல்கள் ஆபாசம், வன்முறை கலந்த வீடியோ காட்சிகளைச் செருகி குழந்தைகள் மீது பாயும் வல்லூறுகளாக இருக்கிறார்கள்.

இம்மாதிரி வீடியோக்களை குழந்தைகள் பயமும், பதட்டமும் கலந்து பார்க்கும்போது வளர வேண்டிய வயதில் மூளையின் தேவையில்லாத பகுதிகள் தூண்டப்பட்டு, மனவியல் அளவில் பாதிப்படைகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் வயதுக்குப் பொருந்தாத படங்களையும் வீடியோக்களையும் பார்த்து பிஞ்சிலேயே பழுக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்மார்ட்ஃபோனை ஒரு ஆராய்ச்சியாளர் DIGITAL HEROIN என்று சொல்லுகிறார். அவ்வளவு போதையைக் கொடுக்கிறதாம். ஒவ்வொரு முறை ஃபோனைக் கையில் எடுக்கும்போதெல்லாம் மூளையில் ஆக்சிடோசின் என்னும் சந்தோஷ உணர்வைத் தூண்டும் ஹார்மோன் சுரந்து விடுகிறது. நமது நாட்டில் உள்ள குழந்தைகள் 2 மாதத்திலேயே ஃபோனுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள்.

வீடியோ கேம்ஸ்

உலக சுகாதார நிறுவனம் 2018 ல் INTERNATIONAL CLASSIFICATION OF DISEASEல் GAMING DISORDER என்ற மனவியாதியைச் சேர்த்துள்ளது. தொடர்ந்து வீடியோ கேம்கள் விளையாடி அதுவே போதையாகி வாழ்பவர்களை கேமிங் வியாதியால் பாதிக்கப்பட்டவராகச் சொல்லலாம். விபத்துக்கள், வன்முறைகள் அனைத்தையும் திரையில் பார்த்துப் பார்த்து மரத்துப்போன மனம் கொண்ட இவர்கள் நிஜ வாழ்க்கையில் அவைகளைப் பார்க்கும்போது உதவும் எண்ணம் கூட வராமல் மனம் இறுகிப்போய் நிற்கிறார்கள். உலகத்தோடு சேர்ந்து வாழத் தெரியாமல் தனிமை விரும்பிகளாக ஆகி விடுகிறார்கள்.

எலெக்டிரானிக் திரை

எலெக்டிரானிக் திரைகளில் இருந்து வரும் நீலக்கலர் வெளிச்சம் கண்களைப் பாதிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எலெக்டிரானிக் திரை தேவையில்லை என்றும், இரண்டிலிருந்து 4 வயது வரையிலும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மட்டுமே போதும் என்று சொல்லுகிறது. ஆனால் யாராலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

குழந்தைகள் அதிக நேரம் எலெக்டிரானிக் திரையைப் பார்க்கும்போது கீழே கொடுத்துள்ள கோளாறுகள் வந்து விடுகின்றன.

1. கண் இமைக்காமல் திரையைப் பார்க்கும்போது கருவிழி உலர்ந்து போய் கண் எரிச்சல், தலைவலி,கண் சோர்வு என உண்டாகின்றன.

2. வளரும் குழந்தைகள் அவ்வப்போது தூரத்தில் உள்ள பொருள்களையும் பார்த்து பழகும்போதுதான் கண்ணின் பாப்பா விரிந்து சுருங்கி பார்வைக்கோளாறுகள் வராமல் கண்ணின் வளர்ச்சி இருக்கும். திரையை அருகிலேயே வைத்துக்கொண்டு பழகும் குழந்தைக்கு சிறுவயதிலேயே கிட்டப்பார்வை வந்து விடுகிறது. எலெக்டிரானிக் திரை வந்தபின் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு அதிகமான அளவில் கிட்டப்பார்வை வருவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

3. எலெக்டிரானிக் திரையை இரவிலும் தொடர்ந்து பார்க்கும்போது அதிலிருந்து வரும் கதிர்களின் தாக்கத்தால் நம் உடலில் இயல்பிலேயே இருக்கும் இரவு பகல் மாற்றங்களை உணரும் சக்தி குறைந்து விடுகிறது. அதனால் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனும் நேரம் தெரியாமல் வேலை செய்ய, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லை. டிஜிட்டல் யுக நன்மைகள்.

இந்த டிஜிட்டலிலேயே பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் தன்னம்பிக்கையோடு இந்த உலகை எதிர்நோக்குகிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இந்த டிஜிட்டல் உலகம் ஆகி விட்டது. பெற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகள் இந்த சாதனங்களையெல்லாம் கையாளும் விதத்தைப் பார்த்து மிகவும் பெருமிதம்!

காட்ஜெட்டுகளை உபயோகிக்கத் தெரியும் குழந்தைகளின் லாஜிக்கல் திறனும் படைப்பாற்றலும் திறம்பட இருப்பதாகச் சொல்லுகிறார்கள். மேலும் அவர்களுக்கு மற்றவர்களூடன் சேர்ந்து ஒத்துழைத்து எடுத்த காரியத்தை முடிக்கும் திறமை அதிகமாக இருக்கும். அதனால் புதுப்புது தளங்களில் தங்களின் திறமைகளினால் சாதிக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு உண்டாகும் பிரச்சினைகள்

இணையத்தின் வழியாக வந்து கொட்டும் தகவல்களில் பெரும்பாலானவை குழந்தைநேயத் தன்மையற்றும், வயதுக்கு ஏற்ற தகவல்களாக இல்லாமலும் இருக்கின்றன. நல்லொழுக்கத்தைக் கற்க உதவுவதில்லை.

ஒரு சில இணையவழி செயலிகள் குழந்தைகளைக் கண்காணித்து வக்கிர எண்னங்களைச் செயலாக்கவும் உபயயோகப்படுத்தப்படுகின்றன. அனைத்து சாதனங்களின் மூலமும் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்கலாம் என்ற வசதி இருக்கும்போது அவர்களைப் பின் தொடர்ந்து வன்முறை, பலாத்காரம் என ஆபத்துக்கள் பல.

தொடர்ந்து எலெக்டிரானிக் சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகளிடம், புரிந்து கொள்ளும் திறனும் அறிவு வளர்ச்சியும் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். காது கேட்கும் திறன் குறைந்து, நிறைய குழந்தைகள் தாமதமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். எலெக்டிரானிக் காட்ஜெட்டுகள் வந்த பிறகு குழந்தைகளுக்கு, அழகிய கையெழுத்தும் வரவில்லை: கடிதம் எழுதும் பழக்கமும் வரவில்லை.

சில பெற்றோர்கள் எலெக்டிரானிக் சாதனங்களை குழந்தைகள் அடம் செய்யும்போது ஆறப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒரு பயனும் ஏற்படாமல் மேலும் அடம்தான் அதிகமாகிறது. உட்கார்ந்த இடத்திலேயே குழந்தையின் விளையாட்டுகள் எல்லாம் திரையிலேயே போவதால் உடல் பருமனும் வந்து விடுகிறது. தலைவலி, கழுத்து வலி, கூன் முதுகு என ஏற்பட்டு விடுகிறது.

பெற்றோர்கள் என்ன செய்யலாம்?

அனைத்து வகையான எலெக்டிரானிக் சாதனங்களும் மனித மனத்திற்கு ஒருவகையான மகிழ்ச்சியை, கிளர்ச்சியை உண்டு பண்ணி போதை போன்ற உணர்வைத் தூண்டுவனதான். பெற்றோர்களின் அனுமதியோடு குழந்தைகளை காட்ஜெட்டுகளுக்கு அனுமதிக்கும்போது வரும் பாதிப்புகளை ஓரளவு குறைக்கலாம். பெற்றோர்களின் அனுமதி தேவையில்லாமல் தொடர்ந்து உபயோகிக்கும்போதுதான் குழந்தைகள் தடம் மாறிவிடுகிறார்கள்.

எப்படி ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குழந்தைக்கும் வயதுக்கு ஏற்றவாறு பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து, அவர்களின் செயல்பாடுகளை அவ்வப்போது கவனிக்கவும் வேண்டும்.

குழந்தைகளை சிறுவயதில் இருந்தே வெளியில் போய் விளையாட அனுமதிக்கும்போது அவர்களின் உடல் ஆரோக்கியம், பிறருடன் பழகும் திறன், நல்ல தூக்கம் முதலியன கிடைக்கின்றன. அவர்களும் திரையிலும் வீடியோ கேம்ஸிலும் பொழுதைக் கழிப்பதைக் குறைத்துக் கொள்வார்கள்.

கண்களுக்குப் பாதுகாப்பு எப்படி?

அறிவியல் முன்னேற்றத்தில் எலெக்டிரானிக் உபகரணங்களும் தொடு திரைகளும் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கூடியவரையிலும் அவைகளின் உபயோகத்தைக் குறைத்துக்கொண்டு வாழ்ந்தால் நல்லது. இதற்கு அமெரிக்க பிலடெல்ஃபியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, 20 அடிகளுக்கு மேல் தூரமாக உள்ள ஒரு பொருளின் மீது ஒரு 20 செகண்டுகளுக்கு பார்வையைச் செலுத்து என்கிறார்கள். மேலும் அடிக்கடி கண்ணை இமைக்கச் செய்யுங்கள் என்கிறார்கள்.

அடுத்து குறைந்தது ஒரு ஐந்து வயதிலிருந்தாவது பாடப் புத்தகங்கள் இல்லாமல் மற்ற, குழந்தைகளுக்கான பொது அறிவு, கதைப்புத்தகங்கள் என படிக்கும் பழக்கத்தை உண்டு பண்ண வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் குழந்தைக்கு நாளடைவில் ஸ்கிரீன் டைமும் குறைந்துவிடும்.

- ப.வைத்திலிங்கம், குழந்தை மருத்துவ நிபுணர்

Pin It