kovilpatti odaikadaiதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கோவில்பட்டி நகராட்சி எல்லைக்குள் நகரின் மையமாய் அமைந்திருந்தன ஓடை கடைகள். பழைய பேருந்து நிலையம் செல்லும் ஒவ்வொரு மனிதனின் பார்வையும் ஓடை கடைகளை ஸ்கேன் செய்தவாறே இருக்கும்.

கழிவுநீர், மழைநீர் செல்லும் பிரதான வடிகாலாக உள்ளது கடைகளின் கீழ் அமைந்திருந்த ஓடை. கடைகளின் கீழ் ஓடையா? கடை என்ன அந்தரத்திலா இருக்கிறது என்ற கேள்வி மனித மனங்களில் எழுவது இயல்பு. கடைகளின் கட்டமைப்பு வியக்கத்தக்கது. சுற்றுப்புறங்களில் எங்கும் காணமுடியாத காட்சியாக இருந்தது அது.

ஓடையின் மேல்பகுதியில் சிலஅடி உயரத்தில் தூண்கள் எழுப்பப்பட்டு, அதன் மேல் அடிப்புற கட்டுமானம் அமைக்கப்பட்டு, எழுப்பப்பட்ட கோவில்பட்டி கட்டிடக்கலையின் அதிசயம் ஓடைக்கடைகள். கீழே செல்லும் ஓடைநீருக்கு எவ்வித தடங்களும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தது அந்த கடைகள்.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 28 -ம் தேதி அதிகாலை வேளையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன ஓடை மீது அமைந்திருந்த அந்த கடைகள்.

என்னதான் நடந்தது?

மெட்ராஸ் எஸ்டேட் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றும் சட்டம் 1948-ன்படி, மெட்ராஸ் வருவாய் குழுமம் உத்தரவு எண்: 573, நாள்;: 14.9.1960-ன்படி, கோவில்பட்டி பூவனநாதசுவாமி தேவஸ்தானத்திற்கு நிரந்தர அடிப்படையில் உத்தரவு ஒன்று அன்றைய தமிழக அரசால் வழங்கப்பட்டது.

அதாவது ஓடை நீர் பாய்ந்துச் செல்லும் நகரின் முக்கியப்பகுதியில் சில நிபந்தனைகளுடன் ஓடையின் மேல்பகுதியில் ஓடை கரையிலிருந்து தூண் அமைத்து நிரந்தரமாக கட்டுமானம் அமைத்துக்கொள்ள மெட்ராஸ் வருவாய்க்குழு தேவஸ்தானத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது.

கோவில்பட்டி நகரில் உள்ள செவல்குளம் என்ற பெயருடைய குளத்திற்கு மழைநீரைக் கொண்டுச் செல்லும் ஓடையாக அக்காலத்தில் இருந்தது அந்த ஓடை. ஓடையின் வழியாக மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல எவ்வித தடையுமின்றி பராமரிக்கவும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சில பத்தாண்டுகள் கழித்து, ஓடையின் கரைகளில் தூண் அமைத்து அதன் மேல் கட்டப்பட்டிருந்த கடைக்கும், ஓடைநீர்ச் செல்லும் பகுதிக்கும் இடையில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மனித செயல்பாடுகளால் மணல், கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்குகளால் அடைப்பு ஏற்பட்டிருந்தது.

ஓடைநீர் செல்லும் இடைவெளிப்பகுதியில் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறி பிரதான சாலையில் தேங்க ஆரம்பித்தது.

இந்நிலை தொடரவே, ஓடையின் மேல் கட்டுமானத்தில் அமைந்திருந்த கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கும் நிலைக்கு காரணமாக அமைந்தது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கடைகளை இடிப்பதில் மட்டும் தீவிரம் காட்டிய சூழலில், சில தோழர்களின் குரல் மட்டுமே அங்கு கடைவைத்திருந்த உழைக்கும் வர்க்க மக்களின் நலன்சார்ந்து ஒலித்தது.

ஓடையின் மேல்புறத்தில் கடைவைத்திருக்கும் மக்களுக்கு, மாற்றுக்கடைகள் ஏற்பாடு செய்த பின்னரே கடைகளை இடிக்க வேண்டும் என்பதே தோழர்களின் கோரிக்கை.

ஆனால், நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக வந்த புயல் மழை எச்சரிக்கை செய்திகளின் எதிரொலியாக கடைகளை அகற்றினால் மட்டுமே ஓடைநீர் செல்ல வழிகிடைக்கும் என்ற ஒரே நோக்கில் 28.11.2020 அன்று அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டன.

இடித்தபின், ஓடைநீர் (சாக்கடை) செல்லும் வடிகால் சிறிதளவு மட்டுமே தூர்வாரப்பட்டது. இன்றளவும் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஓடை என்னும் தகப்பன் தன் கைகளை மேலே உயர்த்தி தன் குழந்தையை தாங்கிக் கொண்டிருந்தது போன்ற தோற்றத்துடன் கூடிய ஓடை கடைகள் கோவில்பட்டியின் பிரதான சாலையோரத்திலிருந்து அகற்றப்பட்டன. இத்தோடு எல்லாம் முடிந்துவிட்டதா என்றால் இல்லை.

இன்னும் சில கேள்விகள் எஞ்சி நிற்கின்றன

1. ஓடை கடைகளில் கடன் வாங்கி முதல் போட்டு வியாபாரம் செய்த பல குடும்பங்களின் நிலை என்ன?

2. நீதிமன்றங்கள் சாதாரண வியாபாரிகளுக்கு என்ன வாழ்வாதார தீர்வை தரப்போகின்றன?

3. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் எதன்மேல் அமைந்துள்ளது?

4. மதுரை உயர்நீதிமன்றக்கிளை எதன் மேல் கட்டப்பட்டுள்ளது?

5. குஜராத்தில் குடிசைகளை மறைக்க சுவர் கட்டினால் மட்டும் அது வளர்ச்சியா? கோவில்பட்டியில் ஓடையின் மேல் ஓடையைத் தொடாமல் பலஅடி உயரத்தில் கட்டுமானம் அமைத்தால் அது ஆக்கிரமிப்பா?

6. கோவையில் சாமியார் ஜக்கி வாசுதேவ் வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளாரே அதனை எப்போது அகற்ற?

7. மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் அம்பானி கட்டியிருக்கும் 27 மாடி கட்டிடத்திற்கு (57அடி உயரம்) அனுமதி வழங்க சுற்றுச்சூழல் நகரமைப்பு விதிகள் சரிபார்க்கப்பட்டதா?

கேள்விகள் தொடரட்டும். சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கட்டும்.

- சுடலைமாடன்

Pin It