2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சமயத்தில் பேஸ்புக் நிறுவனம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டது ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. ரிலையன்ஸின் நிதியில் இயங்கும் டிஜிட்டல் ஊடகம் ஒன்று பேஸ்புக்கில் போலிச் செய்திகளை பகிர்ந்து பரப்புரை மேற்கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட அரசியல் சார்ந்த விளம்பரங்கள் குறித்து Ad Watch அமைப்புடன் இணைந்து The Reporters Collective ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல்களில் அரசியல் விளம்பர பரப்புரைகள் மற்றும் பேஸ்புக் அரசியல் விளம்பரக் கொள்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதே இந்த ஆய்வின் நோக்கம். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2020 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் பதிவிடப்பட்ட 5 லட்சத்து 36 ஆயிரத்து 70 அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த சமயத்தில் நடைபெற்ற 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பயன்தரும் வகையில் பேஸ்புக் செயல்பட்டது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி 687 பக்கங்களை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரேயொரு பக்கத்தையும் 14 கணக்குகளையும் மட்டுமே நீக்கியது. அதுவும் சில்வர் டச் என்ற பெயரில் இயங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணக்குகள். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் News J என்ற பக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரையிலான 3 மாதங்களில் சுமார் 170 விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 தேர்தல்களை உள்ளடக்கிய 22 மாதங்களில் 718 அரசியல் விளம்பரங்கள் இந்த பக்கத்தால் பகிரப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை புகழ்ந்தும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவுமே உள்ளன. மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களின் பரப்புரைகளைக் கிண்டல் செய்யும் காணொலிகளும் பகிரப்பட்டிருந்தன. பாகிஸ்தானுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பல பதிவுகள் இடம்பெற்றுள்ளன. சிறிதும் உண்மைத் தன்மை இல்லாமல் போலிச் செய்திகளே அதில் இடம் பெற்றிருந்தன.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போபால் தொகுதி வேட்பாளராக மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா தாக்கூர் அறிவிக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே News J பக்கத்தில் போலிச்செய்தி என்று பகிரப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்புக்கு தனது வாகனத்தை கடன் வழங்கிய குற்றச்சாட்டில் இருந்து பிரக்யா தாக்கூர் விடுவிக்கப்பட்டதாக வெளியான இந்த செய்தி , ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இப்போதும் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை.

அதேபோல 2019 ஏப்ரல் 11ஆம் தேதி ராகுல் காந்தியின் பிரசார வீடியோ ஒன்று News J பக்கத்தில் வெளியிடப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாஜக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது, 1990ஆம் ஆண்டில் பாஜக ஆட்சியில்தான் மசூத் ஆசார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் ராகுல் காந்தி பேசிய உரையில் இருந்து, ‘ஆசார் ஜி’ என ராகுல் காந்தி கிண்டலாக பேசிய பகுதியை மட்டும் வெட்டி, தீவிரவாதியை மரியாதையோடு ராகுல் காந்தி பேசியதாக வீடியோ எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டது. இந்த காணொலி நான்கே நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது.

2019 ஏப்ரலில் தேர்தல் பரப்புரையில் அணு ஆயுத இருப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, “பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு பயப்படும் கொள்கையை இந்தியா நிறுத்திவிட்டது. எங்களிடம் அணு ஆயுத பொத்தான் இருக்கிறது, எங்களிடம் அணு ஆயுத பொத்தான் இருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் சொல்வார்கள் (பாகிஸ்தான்). அப்படியானால் நம்மிடம் (இந்தியாவிடம்) என்ன இருக்கிறது? தீபாவளிக்கு வெடித்து விட்டோமா?” என பாகிஸ்தானுக்கு எதிராக தேச உணர்வுகளை தூண்டும் வகையில் மோடி பேசியிருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்த காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, “தீபாவளிக்கு இந்தியா அணுகுண்டு வெடிக்கவில்லை என்றால், ஈத் பண்டிகைக்கு பாகிஸ்தானும் வெடிக்கவில்லை. பிரதமர் மோடி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி அரசியல் பேச வேண்டுமென தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

மோடியின் பேச்சை தவிர்த்துவிட்டு மெகபூபா முப்தியின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்ட News J விளம்பரம், "மெகபூபா முப்தி பாகிஸ்தானுக்காக சிலிர்க்கிறார், மெகபூபாவின் பாகிஸ்தான் மீதான காதல் இரண்டாவது முறையாக அம்பலமானது. மெகபூபா முப்தி மீண்டும் பாகிஸ்தானின் பக்கம் திரும்பினார்" என்று வன்மத்தோடு பதிவிட்டது.

இந்த News J நிறுவனமானது ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். ரிலையன்ஸ் குழுமத்தின் நிதியிலேயெ இந்நிறுவனம் இயங்குவதும் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஷலப் உபாத்யாய் என்பவர் இந்த News J நிறுவனத்தின் நிறுவனர். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தோடும், பாரதிய ஜனதா கட்சியோடும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர். இவரது தந்தையான உமேஷ் உபத்யாய் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஊடக இயக்குநராக உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் ஊடகப் பிரிவான நெட்வொர்க்-18 குழுமத்திற்கும் இவர்தான் தலைவர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில் பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சதிச் செயல்கள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இம்முறையேனும் எதிர்க் கட்சிகள் விழிப்போடு இருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வறிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.          

- ர.பிரகாஷ்

Pin It