அமெரிக்கா, இந்தியா இரண்டும் உலகில் முதன் மையான மாபெரும் சனநாயக நாடுகள் என்று ஊடகங்களில் அடிக்கடி எழுதப்படுகிறது. அரசமைப்புச் சட்டப்படி அமெரிக்காவில் குடியரசுத்தலைவர் அதிக அதிகாரம் வாய்ந்தவர். மக்களால் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படுபவர். ஆனால் இந்தியாவில் நாடாளு மன்றம்தான் அதிகாரம் பெற்றதாகும். ஆயினும் நடப்பில் பலவற்றில் அமெரிக்க நாடாளுமன்றம் அதிக அதிகாரம் வாய்ந்ததாகச் செயல்படுகிறது.

காட் (GATT) ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கையொப்பம் இட்டார். அது அமெரிக்காவில் உள்ள நடைமுறை; இந்தியாவிலோ, நாடாளுமன்றத் தின் ஒப்புதலைப் பெறாமலேயே கையொப்பம் இடப்பட்டது. பன்னாட்டு ஒப்பந்தங்களுக்கு இந்தியா வில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று நடுவண் அரசு இதற்கு விளக்கம் கூறியது. இதேபோன்று அமெரிக்கா - இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்துக்கும் குடியரசுத் தலைவர் புஷ் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றார். அமெரிக் காவின் நலன்களையும் மேலாண்மையையும் காக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் இதில் திருத்தங் களைச் செய்தது. இந்தியாவிலோ தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு, அதை வெறும் அறிவிப்பாக நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.

2013 அக்டோபர் மாதத்தின் முதல் நாளன்று அமெரிக்க அரசு, கூடுதலாகக் கடன் வாங்கிட நாடாளு மன்றம் அனுமதி மறுத்ததால், நிதிப் பற்றாக்குறை யைக் காரணம்காட்டி, ஒபாமா அரசு முதன்மை அல்லாத அரசு அலுவலகங்களை மூடிவிட்டது. எட்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஊதியம் இல்லா விடுப்பில் வீட்டுக்கு அனுப்பியது.

ஆனால் இங்கிலாந்து, சீனா போன்ற பல நாடுகளில், தவிர்க்க முடியாத குறைபாடுகளும் குளறுபடிகளும் கொண்டது - தனிமனித இரகசியக் காப்புரிமைக்கு எதிரானது என்கிற காரணங்களால் கைவிடப்பட்ட ‘ஆதார்’ திட்டத்தை, ரூ.70,000 கோடி செலவில் நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலே மன்மோகன்சிங் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராகத் தொடுக்கப் பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் 23.9.2013 அன்று தன் இடைக் காலத் தீர்ப்பின் மூலம் ஒரு முட்டுக் கட்டை இட்டுள்ளது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அடையாளப் படுத்துவதற்காகத் தனித்துவமான 12 இலக்க அடையாள எண் அளிப்பதே ஆதார் திட்டமாகும். இந்தத் தனித்த அடையாள எண் (Unique Identification Number - UID) ‘ஆதார்’ என்ற இந்திச் சொல்லால் குறிக்கப்படுகிறது.  

இந்த ஆதார் திட்டம் நந்தன் நிலகேணி என் பவரின் ‘ஞானோதயத்தில்’ தோன்றியதாகும். நந்தன் நிலகேணி என்பவர் இந்தியாவின் பன்னாட்டு நிறுவன மான ‘இன்போசிஸ்’ நிறுவனர்களுள் ஒருவர். மன்மோகன் சிங், நந்தன் நிலகேணி, திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகிய மூவர் உருவாக்கிய சூழ்ச்சித் திட்டமே இந்த ‘ஆதார்’. ஆதார் என்றால் அடையாள எண் என்பது பொருள். ஆனால் வழக்கில் ஆதார் அடையாள அட்டை என்று கூறப் படுகிறது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பதன் நோக்கம், நாட்டின் சந்தையை - பொருளாதாரத்தை முற்றிலுமாக இந்தியப் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் கையில் ஒப்படைத்து, அவர்கள் தங்கு தடையின்றி இயற்கை வளங்களையும் மக்களையும் சுரண்டிக் கொள்ளையடிப்பதற்கு வழிவகுப்பதே யாகும். இதுதான் இந்திய அரசின், மாநில அரசுகளின் கொள்கை. இதற்காக, உணவு தானியங்கள், சர்க் கரை, மண்ணெண்ணெய், சமையல் எரிவளி உருளை, இரசாயன உரங்கள் முதலானவைகளுக்கு அரசு அளித்துவரும் மானியத் தொகையை அடியோடு நீக்க வேண்டும் என்று உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும், கடன்தரும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் இந்திய அரசைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. இதைச் செயல்படுத்துவதற்கான ஒரு குறுக்கு வழிதான் ஆதார் திட்டம்.

“அரசு அளிக்கும் மானியம் உரியவர்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை. இடையில் தவறான வழிகளில் 40 விழுக்காடு அளவுக்குக் கொள்ளையடிக் கப்படுகிறது. எனவே ஆதார் எண் அடையாள அட்டை யுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படும்.

அந்த மானியத் தொகையைப் பெறுபவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகத் தான் புகைப்படம், பத்து விரல்களின் கைரேகை, கண்களின் கருவிழித்திரை ஆகியவை பதிவு செய்யப் படுகின்றன” என்று, நடுவண் அரசு கூறுகிறது. மேலோட்ட மாகப் பார்த்தால், இது நியாயமான நல்ல திட்டம் போலத் தோன்றும். ஆனால் இதன் உள்நோக்கம் படிப்படியாக எல்லாவகையான மானியங்களையும் ஒழிப்பதேயாகும்.

முதல்கட்டமாக, 2013 சூன் முதல் 19 மாவட்டங்களில் சமையல் எரிவளி உருளையில் ஆதார் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி, சமையல் எரிவளி உருளையை முழுவிலை கொடுத்து வாங்க வேண்டும். இதற்கான மானியத் தொகை உரியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

பிறகு அம்மானியத் தொகையை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள வேண் டும். “தற்போது 97 மாவட்டங்களில் ஆதார் திட்டம் செயல்படுகிறது. 2013 திசம்பர் இறுதிக்குள் 265 மாவட்டங் களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று, பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி 9-10-13 அன்று கூறியிருக்கிறார். தலையைச் சுற்றிக் கையால் மூக்கைத் தொடுகின்ற முட்டாள்தனமான திட்டமல்லவா இது என்று நமக்குக் கேட்கத் தோன்றும். ஆனால் மக்களை அலைக்கழித்து அல்லல்படுத்தி, மக்களே, “போதுமடா சாமி, இந்த மானியமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்” என்று கூறி, முழு விலையில் வாங்கும் நிலைக்கு அவர்களை ஆளாக்குவதே இதன் உள்நோக்கமாகும். எரிவளி உருளை முகவரிடம் முழுவிலை கொடுத்து வாங்கியவரின் பட்டியல் மாவட்ட அளவிலான அதிகாரிக்கு அனுப்பப்படும்.

அவர் அதை ஆய்வு செய்து உரிய தொகையை உரிய வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். நம் நாட்டில் நிர்வாகத்தில் நிலவும் காலத் தாழ்ச்சியையும் முறைகேடுகளையும் பொறுப்பற்ற தன்மையையும் ஊழலையும் கருத்தில் கொண்டால், ஆதார் திட்டம் மூலம் மானியத்தைப் பணமாக வங்கிகள் மூலம் வழங்குதல் என்பது கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்து அதைப் பிடிப்பது போன்றதே யாகும்.

இந்தியாவில் உள்ள 24 கோடி குடும்பங்களில் 8 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவளி உருளையைப் பயன்படுத்துகின்றன். மானிய விலையில் இவற்றை அளிப்பதால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி செலவாகிறது என்று நடுவண் அரசு சொல்கிறது. எனவே முதலில் எரிவளி உருளையை மானிய விலை யில் வழங்குவதில், ஆதார் எண் அட்டை மூலம் மானியத்தை வங்கிகள் மூலம் பணமாகத் தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முனைந்துள்ளது. அதன்பின் அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் முதலானவற்றையும் முழுவிலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை அரசு உண்டாக்கும். மானியத் தொகை என்பது நிலையாக இருக்குமாறு செய்துவிட்டு, முழுவிலையை மட்டும் உலகச் சந்தையின் விலை யைக் காரணம் காட்டி அரசு உயர்த்திக் கொண்டேயிருக்கும். மானியத்தைப் பொருளாகத் தராமல் பண மாகத் தருவது உழைக்கும் மக்களை மேலும் ஏழ்மை யிலும், பசி, பட்டினியிலும் தள்ளும் வஞ்சகச் செயலாகும்.

இந்த ஆதார் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 2009 சனவரியில் நந்தன் நிலகேணி தலைமையில் ‘தனித்த இந்திய அடையாள எண் ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI)என்பதை நடுவண் அரசு அமைத்தது. குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம், வருமான வரி அட்டை, கடவுச்சீட்டு முதலான 15 வகையான அடையாள ஆவணங்கள் நடைமுறை வாழ்வின் தேவைகளுக்குப் போதுமானவைகளாக உள்ளன. புதியதாக அடையாள எண் - ஆதார் என்பது ஏன்? ரூ.70,000 கோடிக்கு மேல் செலவு செய்து அளிக்கப்படும் அடையாள எண்ணால் மக்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கப் போகும் பயன் என்ன? மேலும் புகைப்படம் எடுப்பதற்கு மட்டுமே சட்டம் அனுமதிக்கிறது. பத்து கைவிரல்களின் ரேகை, கண்ணின் கருவிழித்திரை ஆகியவற்றை ஊடுகதிர் படக்கருவி (Scan) மூலம் பதிவு செய்வதற்குச் சட்ட ஏற்பு இல்லை என்று பல தரப்பினரிடமிருந்து கண்டனக்கணைகள் தொடுக்கப்பட்டன.  

எனவே நடுவண் அரசு 2010 திசம்பரில் நாடாளுமன்றத்தில், ‘இந்தியத் தேசிய அடையாள ஆணையச் சட்ட வரைவை’ முன்மொழிந்தது. இச்சட்ட வரைவு நிதித்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 2011 திசம்பரில் இந்த நிலைக்குழு அறிக்கை அளித்தது. ‘நாடாளு மன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் ஆதார் திட்டத்தைச் செயல்படுத்தியது கண்டிக்கத்தக்கது. எல்லாவகை யிலும் குறைபாடுகள் உள்ள - நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த - பெருந்தொகை செலவாகும் ஆதார் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்’ என்று நிலைக்குழுவின் அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற 88 அகவையினரான கே.எஸ். புட்டாசாமி என்பவர், உச்சநீதிமன்றத்தில் ஆதார் திட்டத்தை எதிர்த்துப் பொதுநல வழக்குத் தொடுத்தார். மற்றும் சிலரும் இதேபோல் வழக்குப் போட்டுள்ளனர். இதற்கிடையில் சில மாநிலங்களில், எரிவளி உருளை, திருமணப் பதிவு, நிலப் பதிவு, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் ஒருபடி மேலே சென்று நீதிபதிகளும், நீதிமன்றத்தின் பணியாளர்களும் ஊதியம் பெறுவதற்கு ஆதார் அட்டை தேவை என்று உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எஸ்.ஏ. பாப்டே அமர்வு, 23.9.2013 அன்று, ஆதார் அட்டை கட்டாயம் என்பது கூடாது என்று இடைக்காலத்தீர்ப்பு வழங்கியது. ஆயினும் 8-10-13 அன்று இதை மறு ஆய்வு செய்யுமாறு நடுவண் அரசு கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. எனவே அதேநாளில் நடுவண் அமைச்சரவையில், நாடாளுமன்ற நிலைக்குழுவால் புறக்கணிக்கப்பட்ட இந்தியத் தேசிய அடையாள ஆணையச் சட்ட வரைவுக்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதை நிறைவேற்றப் போவதாக அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமாக்கிவிட்டால் உச்சநீதி மன்றத்தால் தலையிட முடியாது என்று அரசு கருது கிறது. முதன்மையான எதிர்க்கட்சியான பா.ச.க. ஆதார் திட்டத்தை எதிர்க்கவில்லை. ஏனெனில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என் பதில்-இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் நிலவுவதை ஒழிப் பதில் - காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் ஒரே கொள்கைதான்.

முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் உற்பத்தி வரி, வருமான வரி, விற்பனை வரி, ஏற்றுமதி-இறக்கு மதி வரி ஆகியவற்றில் விலக்குகள் - தள்ளுபடிகள் என்ற பெயரில் ஆண்டுக்கு 5 இலட்சம் கோடி உருபாவை அளித்துவரும் நடுவண் அரசு, உழைக்கும் மக்களின் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் மானியங் களை ஒழித்துக்கட்டவே ஆதார் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும் பொய்யான இந்தியத் தேசியம் என்கிற முத்திரையை ஆதார் எண் என்கிற சூட்டுக் கோலால் மக்களின் முதுகில் குத்துகிறது. எனவே, ஆதார் திட்டத்தை ஒழித்திட ஒன்றுதிரண்டு போராடுவோம், வாருங்கள்!

Pin It