புதுச்சேரி. இந்த ஊர்ப் பெயரைக் கேள்விப்பட்ட வுடன் இந்தியாவில் பரவலாக எல்லோருக்கும் புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதற்கான முழுத் தகுதி இவ்வூருக்கு உண்டு. ஆந்திரத்தின் 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஏனாம். கேரளத்தின் 9 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாஹே. தமிழகத்தின் 160 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட காரைக்கால், 293 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட புதுச்சேரி ஆகிய பகுதிகளின் ஆட்சிக்குட்பட்டதும்; கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் ஆகிய எவ்விதத்திலும் வளர்ச்சியடையாத தமிழக மாவட்டங்களுக்கு நடுவில், வங்கக் கடலோரத்தின் மேற்கில் இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக (யூனியன் பிரதேசம்) 492 சதுர கி.மீ. பரப்பளவும், ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் தொகையும் கொண்டதுதான் புதுவை, பாண்டிச் சேரி என்கிற பெயர்களைக் கொண்ட புதுச்சேரி.

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சுக்காரர் களின் ஆட்சியில் இருந்த புதுச்சேரியில் பிரெஞ்சு சொற்களும், அவர்களின் பண்பாடும் அடித்தட்டு மக்கள் வரையில் இன்றளவும் புழக்கத்தில் இருக்கின்றன. புதுச்சேரியின் நகரமைப்பு, பிரான்சிய வரைமுறை வடிவமைப்பும் ஒன்றையொன்று வெட்டும் நேர்கோட்டுச் சாலைகளையும் உடையது.

நகரம் இரண்டு பிரிவுகளாக பிரெஞ்சுப் பகுதி (வில்ஸ் பிளாஞ்ச்சே அல்லது வெள்ளையர் நகர்) மற்றும் இந்தியப் பகுதி (வில்ஸ் நோய்ர் அல்லது கறுப்பு நகர்), என்று பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பல தெருக்களுக்கு இன்றளவும் பிரெஞ்சு மொழியிலேயே பெயர்கள் உள்ளன. வீடுகள், மாளிகைகளின் வடி வமைப்புகள் எல்லாம் பிரெஞ்சு கட்டடக் கலையைப் பறைசாற்றும். கடற்கரையை ஒட்டியுள்ள நகரத் தெருக் களில் நடந்து வந்தால் ஃபிரான்சு தெருக்களில் நடப்பது போன்ற உணர்வு இருக்கும்.

1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டுச் செல்லும் போது அவ்வரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி, பிரெஞ்சு குடிமக்களாக நீடிக்க விரும்பிப் பதிவு செய்து கொண்டவர்கள், பிரெஞ்சு நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்று, சாதி வேறுபாடின்றி புதுச்சேரியில் வளமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தலித்துகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் வெள்ளைக்காரர்களைப் பிரதி பலிக்கிறார்கள். இந்தியாவிலும்கூட ஆங்கிலேய வெள் ளைக்காரர்க்ள் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டார்கள். அவர்களில் எத்தனை தலித் மக்கள் இங்கிலாந்து பண்பாடு, பொருளாதாரத்தில் கலந்தார்கள்? என்று பார்த்தால், ஒருவர் கூட இருக்காது.

பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், பிரெஞ்சு புதுச்சேரிக்கும் ஏன் இந்த வேறுபாடு?

மாட்டுக்கறிதான் காரணம். அதிர்ச்சியாக இருக்கும். இதுதான் உண்மை. ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளை யருக்கும் இந்தியருக்கும் இடையில் பார்ப்பனர்கள் இருந்தார்கள். வெள்ளையருக்கு அடுத்த அதிகாரம் பார்ப்பனரிடமே இருந்தது. அவர்கள் மற்ற சமூகத்தின ரைக் காட்டிலும் தலித்துகளை வெள்ளையரிடம் நெருங்கவிடவில்லை. பார்ப்பனர்களின் கருணையால்(?) மற்ற சமூகத்தினர் ஓரளவுக்கு வெள்ளையர்களிடம் நெருங்க முடிந்தது; பலன் பெற்றனர். தலித்துகளுக்கு அக்கருணை (?) கிடைக்கவில்லை. அதனால் பலன் பெறவும் முடியவில்லை.

ஆனால், புதுச்சேரியில் நிலை வேறு மாதிரி இருந்தது. பிரெஞ்சு வெள்ளைக்காரர்களின் வீட்டு வேலைக்காரர் களாக தலித்துகள் இருந்தார்கள். பிரெஞ்சு அதிகாரி களுக்கு அவர்கள் விரும்பியபடி மாட்டுக்கறி சமைத்துக் கொடுத்தார்கள். இருவரும் நேரிடையே பழகினார்கள். தலித்துகளின் பிரச்சனைகளை பிரெஞ்சு அதிகாரிகள் ஓரளவுக்குப் புரிந்துகொண்டார்கள். அதனால் ஆரம்பக் கல்வியைக் கொடுத்தார்கள். இராணுவத்தில் சேர்த்துக் கொண்டார்கள். கால ஓட்டத்தில் நகர்ப்புறம் மட்டுமல் லாமல், கிராமப்புற தலித் மக்களும் ஓரளவு பலன் பெற்றார்கள். அதன் தாக்கம் புதுச்சேரியில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாட்டிறைச்சிக் கடைகள் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஒதுக்குப்புறத் தில்தான் இருக்கும், சேரிகள் போல! ஆனால் புதுச் சேரியில் நகரின் மையப் பகுதியிலேயே அனைவரும் வசதியாக வந்து வாங்கிப் போவது போல் கடைகள் இருக்கும். அதற்குக் காரணம் பிரெஞ்சுக்காரன்தான்.

புதுச்சேரியில் மதங்கள் வாரியாக மக்கள் தொகையை பார்த்தால் இந்துக்கள் 86.77%, இசுலாமியர் 6.09%, கிருஸ்துவர் 6.95% இருக்கிறார்கள். சாதிவாரியாகப் பார்த்தால், எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப் பட்டோர் 80%, தலித்துகள் 16%, எஞ்சியோர் பார்ப்பனர் மற்றும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இதில் இந்துக்களில் பெருவாரியான மக்களாக வன்னி யர்கள் 67% பேரும், தலித்துகள் 16% பேரும், மீனவர்கள் 7%, இசுலாமியர் 6%, போக எஞ்சியிருக்கும் 4% பேரில் முதலியார், செட்டியார், பார்ப்பனர் எல்லாம் சேர்த்து 3% பேரும், ரெட்டியார் வெறும் 1% மட்டுமே வாழ்கின்றனர். புதுச்சேரியில் இருக்கும் நிலங்களில் பெரும் பகுதி யாருக்குச் சொந்தம் என்றால், வெறுமனே 1% பேர் மட்டுமே இருக்கிற ரெட்டியார்களுக்குத்தான் சொந்தம்.

புதுச்சேரியில் வாழும் பார்ப்பனர்கள் எல்லாம் வளம் கொழிக்கும் கோயில்களில் அர்ச்சகர்களாகவும் அரசாங்கத்தில் அதிகாரிகளாகவும், எஞ்சியோர் முதலாளி களாகவும் இருக்கிறார்கள். செட்டியார், முதலியார்மார் களெல்லாம்; வணிக நிறுவனங்களை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். அரசியலிலும் மறைமுகமாக நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டிருப்பார்கள். ரெட்டியார்களும் அதேபோல்தான். புதுச்சேரி அதிகார மையத்தைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் மேற்சொன்ன சமூகத்தைச் சார்ந்தவரே என்றால், அது மிகையன்று. இவர்களெல்லாம் மக்கள் தொகையில் வெறுமனே 4% பேர்தான்.

ஆனால் மீதியிருக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கிறது? 7% பேர் உள்ள மீனவர்கள், சமூகத்தில் ஒட்டாமல் தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். அது ஒரு தனி வரலாறு. எஞ்சியிருக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெறாத 66% வன்னியரும், 16% தலித்து களும் எப்படி வாழ்கிறார்கள் என்றால் - படித்தாலும், படிக்காவிட்டாலும், அமைச்சராக இருந்தாலும், அதி காரியாக இருந்தாலும், கையில் பணவசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உயர்சாதியினருக்கு அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, கிராமங்களில் ரெட்டியார்களுக்குக் கொத்தடி மைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் இந்த இரு சமூகத்தாரும் ஈன வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிலவுடமையற்றி ருக்கும் இவ்விரு சமூகத்தாரும் யாரை எதிர்க்க வேண்டும்? பார்ப்பனரையும், இதர மேல்சாதிக்கார ரையும் எதிர்க்க வேண்டும். அதற்காக ஒன்று சேர்ந் தார்களா? இவர்கள் ஒருவரோடு ஒருவர் அடித்துக்கொள் வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கிறது. ஆடுகள் இரண்டு முட்டி மோதிக்கொண்டால் குள்ளநரிக்குக் கொண்டாட்டம்தானே! ஆடுகள் எல்லாம் ஒன்றுகூடி னால் குள்ளநரிக் கூட்டம் என்ன ஆகும்?

உயர்சாதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள், ரெட்டியார், முதலியார், செட்டியார் போன்ற சாதிகளில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் வன்முறைகளில் பொது இடங்களில் ஈடுபடுவது கிடையாது. ஏன்? இவர்கள் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடாதவர்களா? இல்லை யேல் பண்பட்ட சிந்தனையில் இருப்பவர்களா? இரண்டுமே இல்லை. இவர்களின் வாழ்க்கையில் அல்லல்படக் கூடிய தன்மைகளில் பிரச்சனை இருக்காது. போராட்டக் குணம் இவர்களுக்கு இருக்காது. எனவே இவர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டிய அவசிய மில்லை; காவல்துறையில் சிக்கவேண்டிய தேவை இருக்காது. இவர்களின் தாய்மார்கள் சிறைச்சாலை வாயிலில் ‘குய்யோ’ ‘முறையோ’ என்று குமுற வேண்டிய தில்லை. அவர்களுக்குத் தொழில் போட்டியைத் தவிர, சொத்து சேர்க்கிற பிரச்சனைகள் தவிர, வேறு பிரச்சனை என்ன இருக்கிறது?

ஆனால் தாழ்த்தப்பட்டவனான தலித்துக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவனான வன்னியருக்கும் உள்ள பிரச்சனை என்பது வாழ்வாதாரம் சம்பந் தப்பட்டது; கூலி சம்பந்தப்பட்டது. இரண்டு சமூகங் களின் பிரச்சனைகளும், தீண்டாமையைத் தவிர மற்றபடி ஒரே தன்மையுடையதுதான். ஒரே மாதிரி யான வலி உள்ள இவர்கள் ஏன் மோதிக்கொள்ள வேண்டும்?

இப்போதெல்லாம் ஒவ்வொரு சாதிக்காரரும் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ள, ஏதாவது ஒன்று கிடைக்காதா என்று அலைகின்றனர். அதற்குக் குப்பை மேட்டைக் கிளறினால்போல் புராணங்களையும், இதி காசங்களையும் தோண்டி எடுத்து ஒருவன் “நான் நெருப்பிலிருந்து பிறந்தவன்” என்கிறான். மற்றொருவன். “நான் ஆண்ட பரம்பரை” என்கிறான். இரண்டு பேரை யுமே இந்த அரசு காலங்காலமாகச் சுரண்டி, கஞ்சிக்கு வழியில்லாத பரதேசிக் கூட்டமாகவும், கூலிப் பட்டாள மாகவும் வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. இவர்களுக்கு அது தெரியவில்லை. அரசியல் கட்சிகள் தொடங்குகிறவன் யாரை நம்பித் தொடங்குகிறான்? இந்த இரண்டு பிரிவு மக்களை நம்பித்தான். இதை இவர்கள் உணருவார்களா? கண்டிப்பாக உணரமாட் டார்கள்.

புதுச்சேரி தனிப் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இந்தியாவில் “மாநில அரசு” என்பதே ஒரு பொய்யான சொல். எல்லா அதிகார மும் டெல்லிக்குக் கட்டுப்பட்டதுதான். அதேபோல் புதுச்சேரிக்கென்று தனியாக அம்மக்களின் நலன் காக்கும் கட்சிகள் எதுவுமில்லை. அப்படியே இருந்தா லும் அது ‘சீசன்’ கட்சியாகத்தான் இருக்கும். தற்போது ஆளும் மாண்புமிகு ந. ரங்கசாமி கட்சி கூட ஒரு அனைத் திந்தியக் கட்சிதான். புதுச்சேரியில் பெருவாரியான சாதியான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் அவர். அவரைத் தேர்ந்தெடுத்த வன்னியரல்லாத மக் களுக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை; வன்னியர் களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. காரணம் அவரிடம் நல்ல அரசியல் இல்லை. இது அவருக்கு மட்டும் இல்லை. புதுச்சேரியிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுக் கும் பொருந்தும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தான் புதுச்சேரியில் எப்போதும் இயக்கிக் கொண்டிருக் கின்றன. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இங்கே இருக்கின்றன. ஓட்டு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், ஓட்டு அரசியலை நிராகரிக்கின்ற கட்சிகளும் இயங்கிக் கொண்டிருக் கின்றன.

உலகத்தார்க்கு புதுச்சேரியைப் பொறுத்தவரை நல்ல ஊர், அழகான ஊர், அமைதியான ஊர், மக்க ளெல்லாம் நாகரிகமாக இருப்பார்கள். உலகப் புகழ் பெற்ற அரவிந்தர் ஆசிரமம் இருக்கும் ஊர், பாரதியார் தங்கிக் குயில் பாட்டெழுதிய பெருமைக்குரிய மண், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியிலும், ஆயுத வழி யிலும் போராடியவர்கள் பயிற்சி எடுத்த மண், உலக நாடுகளிலிருந்து வெள்ளைக்காரர்களெல்லாம் வந்து தங்கிப் போகும் “ஆரோவில்” இருக்கிறது. தெருக்குத் தெரு சிவன் கோயில், விஷ்ணு கோயில் என்று பக்திப் பரவசத்துடன் இந்துக்கோயில்கள், மேகத்தைத் தொடும் உயரத்துடன், ஃப்ரான்சில் இருப்பதுபோல் கிருஸ்துவ தேவாலயங்கள், அழகான பிரம்மாண்டமான முஸ்லிம் பள்ளிவாசல்கள், நேரான வீதியின் இருபுறங்களிலும் நிழல்தரும் மரங்கள், அமைதியான முறையில் இளைப் பாறும் அழகிய கடற்கரை, எடுப்பான தோற்றத்துடன் ஆளுநர் மாளிகை, பண்டைய பிரெஞ்சு கட்டடக் கலை கொண்ட பெரிய பெரிய மாளிகைகள், சாலைகளின் இருபுறங்களிலும் நடப்பதற்கு நடைபாதைகள், மலிவான விலையில் மதுபானங்கள், குறைவான விலையில் பண்டங்கள், மகிழ்ச்சியாகத் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள், தலைமை தபால்-தந்தி அலுவலகம், அருகிலேயே சட்டமன்றக் கட்டடம், ஒட்டினாற்போல் பெரிய பொது மருத்துவமனை, நடக்கும் தூரத்தில் இரயில் நிலையம், ஐந்து ரூபாய் பேருந்துச் செலவில் விமான நிலையம், நாகரிகமாக உடையணிந்து புன்சிரிப்புடன் இணையருடன் வலம் வரும் உள்ளூர் மக்கள், இவையனைத்தும் நடந்துபோகும் தூரத்தி லேயே இருப்பவைகள். இவ்வளவுதான் புதுச்சேரியா? இன்னும் இருக்கிறது. அதை ‘பழையசேரி’ என்றும் சொல்லலாம்.

மேற்சொன்னவைகள் எல்லாம் புதுச்சேரிக்கு மட்டும் பொருந்துவனல்ல. இந்து மதம் கோலோச்சுகிற அனைத்து இடத்திற்கும் பொருந்தும். அப்படியானால் இந்து மதம்தான் நம் எதிரியா? இந்தியாவைப் பொறுத்த வரை சாதிக்கொரு வீதியும், சாதிக்கொரு நீதியும் இருப் பதற்குக் காரணம் இந்து மதம் தானே! இதை ஒழிப் பதற்கு, ஒடுக்கப்பட்டோர்க்கு விடுதலை கிடைப்பதற்கு, தனியுடைமை ஒழிக்கப்படுவது ஒன்றுதான் வழி. இதை நோக்கிச் சிந்திப்போம்!

Pin It