பீகார் மாநிலம், ஜகனாபாத் மாவட்டம், சங்கர் பய்கா ஊரில் 1999ஆம் ஆண்டு நடத்தப்பட்ட படுகொலையின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப் பதை, சனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People Union for Democratic Rights - PUDR) வன்மையாகக் கண்டிக்கிறது. 2015 சனவரி 14 அன்று ஜகனாபாத் மாவட்ட விசாரணை நீதிமன்றம் சங்கர் பய்கா படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரண்வீர் சேனாவின் 24 பேரையும் ‘போதிய ஆதாரம் இல்லை’ ((Lack of Evidence) என்ற அடிப்படையில் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தது.

சங்கர் பய்காவில் படுகொலை செய்யப்பட்ட 23 பேர்களில் பத்து மாதக் குழந்தை உட்பட ஏழு சிறுவர் கள், 5 பெண்கள், 11 ஆண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களான தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். நிலக்கிழார் களான மேல்சாதி பூமிகார்களின் குண்டர் படையான ரண்வீர்சேனா, 1999இல் குடியரசு நாளுக்கு முன் இரவில் - சனவரி 25 அன்று சங்கர் பய்கா தலித் மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று 16 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். ஆனால் நீதிமன்றமோ கொலை காரர்களை விடுதலை செய்துவிட்டது. சங்கர் பய்கா கொலை வழக்கின் அநியாயமான இத்தீர்ப்பு, 1980 களிலும் 1990களிலும் பீகாரில் நடத்தப்பட்ட படுகொலை களையும் அதன்பின் நடந்த நிகழ்வுகளையும் மீண் டும் நினைவூட்டுகிறது.

கங்கைச் சமவெளியில் செழிப்பான வேளாண் மையே பெருந்தொழிலாக உள்ள பீகார் மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில், பெரு நிலவுடைமையாளர் களாகவும், மேல்சாதியினராகவும் இருக்கும் இராச புத்திர, பூமிகார் ஆதிக்கச் சாதியினர் உருவாக்கிய ‘கதி ரொளி சேனா’, ‘சவர்னா விடுதலை முன்னணி’, ‘ரண்வீர் சேனா’ போன்ற குண்டர் படைகள் தங்கள் நிலவுடைமை - சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுகின்ற எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிந்து, ஒடுக்கப் பட்ட மக்களை அச்சுறுத்தின. அதன் தொடர் நிகழ்வு களில் ஒன்றுதான் சங்கர் பய்கா படுகொலை ஆகும்.

ரண்வீர் சேனா இவ்வாறு நிகழ்த்திய 27 தாக்கு தல்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 400க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். 1980களிலும் 1990களிலும் இந்திய மார்க்சிய - லெனி னிய விடுதலை அமைப்பு, மார்க்சிய-லெனினிய அய்க் கியக் கட்சி, மாவோவிய கம்யூனிஸ்ட் நடுவம் ஆகிய நக்சல்பாரி இயக்கங்களின் தலைமையில் நிலமில் லாத வேளாண் கூலித் தொழிலாளர்கள், இராசபுத் திரர்கள் - பூமிகார்களின் நிலக்கிழாரிய - மேல்சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டங்களின் போதுதான் இப்படுகொலை கள் நிகழ்த்தப்பட்டன. இப்போராட்டங்களில் நிலமற்ற தலித் துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஏழை உழவர்கள் பங்கேற்றனர்.

1997இல் இலட்சுமன்பூர் பதேவில் 58 தலித் விவசாயத் தொழிலாளர்களைப் படுகொலை செய்த ரண்வீர் சேனாவின் 23 குற்றவாளிகளைப் பாட்னா உயர்நீதிமன்றம் 2013 அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. அதேசமயம் கயா மாவட்டம் பாரா என்ற இடத்தில் மேல்சாதியினரான பூமிகார்களில் சிலரைக் கொன்ற மாவோவியக் கம்யூனிஸ்ட் நடுவத்தினர் 1992 முதல் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏனெ னில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் தலித்துகளாக - பிற்படுத்தப்பட்ட சாதியினராக இருப்பதே காரணமாகும். ‘ஒரு குலத்துக்கொரு நீதி’ என்பது நீதிமன்றத் தீர்ப்புகளில் இருப்பதைக் காண லாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்தச் சாதியைச் சார்ந்த வர் என்பது நீதித்துறையிலும் கருத்தில் கொள்ளப் படுகிறது என்பதைப் பல தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

‘போதிய சான்று இல்லை’ அல்லது சாட்சியமளித் தவரின் கூற்று நம்பும்படியானதாக இல்லை என்ற அடிப்படையில் குற்றவாளிகள் அண்மைக்காலத்தில் விடுதலை செய்யப்பட்ட பட்டியலில் சங்கர் பய்கா தீர்ப்பு அய்ந்தாவதாகும். விசாரணை நீதிமன்றங்களில் கொலைக் குற்றவாளிகள் என்று தண்டிக்கப்பட்ட மேல்சாதியினர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். பாட்னா உயர்நீதிமன்றம் 2012 ஏப்பிரலில் பதானி தோலா வழக்கின் குற்றவாளிகளை யும், 2013 மார்ச்சு மாதம் நகரி பசார் குற்றவாளி களையும், 2013 மியான்பூர் குற்றவாளிகளையும், 2013 அக்டோபரில் இலட்சுமன்பூர் பதே குற்றவாளி களையும் விடுதலை செய்தது. இவர்கள் அனைவரும் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று உறுதி செய்து தண்டனை வழங்கப்பட்ட மேல்சாதி யினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர் பய்கா வழக்கில் மட்டும் விசாரணை நீதிமன்றமே குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. ஏனெனில் சாட்சியமளித்த 49 பேரும் பின்னர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். குற்றவாளிகளை அடை யாளங்காண முடியவில்லை என்று பல்டி அடித்து விட்டனர். ஆதிக்கச் சாதிகளின் கடுமையான அச்சுறுத் தலே பிறழ் சாட்சிகளாக மாறியதற்குக் காரணமாகும்.

high court dalit 600

சங்கர் பய்கா படுகொலையைச் செய்தது நாங்கள் தான் என்று ரண்வீர் சேனா வெளிப்படையாக ஒத்துக் கொண்டது. மிகுந்த அக்கறையுடன் திறமையாகப் புலனாய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டுவதற்குக் காவல் துறையும், புலனாய்வுத் துறையும், அரசு நிருவாகமும் முயலவில்லை. ஏனெனில் கொலை யுண்டவர்கள் தலித்துகளும் கீழ்ச்சாதி மக்களும் தானே என்கிற சாதி ஆதிக்க மனப்பான்மை எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்து செயல்படுகிறது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளில் மேல்சாதி யினரான கொலையாளிகள் விடுதலையானதற்கும் சாதியப் பாகுபாட்டு - ஆதிக்க மனப்போக்கே காரண மாகும்.

நீதித்துறையும் சில வழக்குகளில் சட்டத்திற்கு விளக்கமளிப்பதில் சாதியப் பாகுபாடு காட்டுகிறது. 1992இல் பாராவில் மேல்சாதி நிலவுடைமையாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கீழ்ச்சாதியினர் மீது உடனடி யாகத் தடாச் சட்டம் பாய்ந்தது. அப்போது ரண்வீர் சேனா சட்டப்படித் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சங்கர் பய்காவில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரும் தலித்துகளாக இருந்தநிலையிலும் குற்றவாளிகள் மீது, 1989ஆம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மீதான வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம் எல்லாக் கொலை வழக்குகளிலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ப தன்று. மாறாக, சிறப்பு அதிகாரம் கொண்ட அனைத்துச் சட்டங்களும் அடிப்படையிலேயே சனநாயக நெறி முறைகளுக்கு எதிரானவை; தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பளிப்பவை என்று சனநாயக உரிமைகளுக் கான மக்கள் கழகம் (PUDR) உறுதிபட நம்புகிறது. நாங்கள் கோருவது என்னவெனில், நடுநிலையான முறையில் துல்லியமான - முழுமையான புலனாய் வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; நேர்மையான, நியாயமான முறையில் வழக்குகள் நடத்தப்பட்டு அனைத்துத் தரப்பினருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதேயாகும்.

சங்கர் பய்கா (தலித்) படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வும் வழக்கு நடத்தப்பட்ட முறையும் பாரா (மேல்சாதியினர்) கொலை வழக்கு டன் ஒப்பிடும்போது குற்றவியல் நீதித்துறை எளியோ ருக்கு எதிராகவும் வலியோர்க்கு ஆதரவாகவும் செயல் படுகிறது. தண்டனை வழங்குவதிலும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு கருத்தில் கொள்ளப் படுகிறது என்பது திட்டவட்டமாகப் புலனாகிறது. காவல் துறையினரும், நீதித்துறையினரும் தங்களுக்குரிய கடமையைச் செய்யும் போது, அவர்கள் பிறந்து வளர்ந்த சாதியச் சமூகக் கட்டமைப்பின் விருப்பு வெறுப்புகளும் அவர்களின் கண்ணோட்டத்தில் ஊடுருவி நிற்கின்றன.

இந்தியாவில் மக்கள் தங்களுக்குரிய நியாயம் கிடைக்க வேண்டுமென்பதற்காக நடத்திய நெடிய போராட்ட வரலாற்றைப் பார்த்தோமானால், நீதித் துறையும் ஆளும்வர்க்கமும் எப்போதும் அநீதிக்குச் சார்பாகவே வளைந்து கொடுத்து வந்திருப்பதைக் காணலாம்.

இப்போது சங்கர் பய்கா தலித்துகள் படுகொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இதில் தலையிட்டு இதுபோன்ற வழக்குகளில் வேண்டுமென்றே இழைக் கப்பட்ட அநீதிகளைக் களைந்து, படுகொலை செய்யப் பட்டவர்களுக்குரிய நீதி கிடைக்கச் செய்யவேண்டும்; எவ்வகையிலும் குற்றவாளிகளைத் தப்பவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஷர்மிலா புர்காயSதா, மேகா பால்

செயலாளர்கள்

சனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUDR) , புதுதில்லி

(நன்றி : Economic and Political Weekly, பிப்பிரவரி 14, 2015; தமிழாக்கம் : க. முகிலன்)

Pin It