நமது நாடு மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று, நமது அரசாங்கமும், அரசியலாரும் கூறிக் கொள்வதில் பெரிதும் பெருமை கொள்கின்றனர். ஏனென் றால் மக்கள் பல மதங்களைப் பின்பற்ற அனுமதிக்கப் படுகின்றனர், இந்தியாவில். ஆகவே இந்திய அரசுக்கு எம்மதமும் சம்மதமே என்றாகிறதல்லவா? இந்நிலையில் மத மாற்றத்திற்குத் தடை விதிக்கும் சட்டம் தேவையா? இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது நியாயமாகுமா?

இந்துமதத்திலுள்ள இந்துக்கள்தான் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் (SC) எனப்படுவோர்தான் கிறித்துவ மதத்திற்கு, ஒரு சில சமயங்களில் இஸ்லாம் மதத்துக்கும் மாறுகிறார்கள். பெரும்பாலும் கிறித்துவர்களாக மதம் மாறுகிறவர்களையும், மதம் மாறியவர்களைக் கிறித்துவர்களாக அங்கீகரிக்கும் கிறித்துவ குருமார்களையும், மதமாற்றத்துக்குத் தூண்டினார்கள் என்று குற்றம் சுமத்திச் சட்டத்தின் பேரால் தண்டிக்க, மதச் சார்பற்ற இந்திய நாட்டில், இந்திய அரசு முற்படலாமா?

ஏன் இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறுகிறார்கள்? எந்த வகுப்பினர் மாறுகிறார்கள்? இதை நமது அரசு சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டாமா?

நாடோடிகளாக வந்து நமது நாட்டில் குடியேறிய அன்றைய ஆரியர்களால், அவர்களின் சுகபோக வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட மதம்தான் ஆரியர்களின் மதம் என்று சொல்லப்படும் இந்து மதம்! இந்து மதத்திலே எண்ணற்ற தெய்வங்கள்; கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும்படி தெய்வங்களுக்கேற்ற வாறு மாறுபடும் வழிப்பாட்டு முறைகள்; இந்து மதத் திலேயே வைணவம், சைவம் எனும் பெரிய பிரிவுகள்; புலால் உண்ணும் இந்து, புலால் உண்ணாத இந்து இப்படிப் பலப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும் அவைகளின் காமக் களியாட்டக் கதைகள், ஒவ்வொரு தெய்வத்திற்கும் மனைவிமார்கள், பிள்ளைகள் எனக் குடும்பங்கள், கள்ளத்தனமான உறவுகள் எனும் சீர்கேடான நடத்தையைக் கற்பிக்கும் கடவுள்கள், மனித மண்டை ஓடுகளை மாலையாகக் கொண்டு மகிழும் தெய்வம், மிருகத்தின் தலைகள், பல கைகள், பல முகங்கள் கொண்ட தெய்வங்களாக, கற்காலத்துக் கற்பனை உருவகங்களைத்தான், நாகரிகம் முதிர்ந்த - பகுத்தறிவு விரிந்து வளர்ந்துள்ள இக் காலத்திலுமா வணங்க வேண்டும்? ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெட்டிப் பிரித்தெடுக்கும் இந்தக் காலத்திலும், அறுவெறுப்பான அறிவுக்குப் பொருந்தாத உருவங்களிலேதான் இந்துக் கடவுள்கள் வணங்கப்பட வேண்டுமா?

உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனும் சாதிப் பாகு பாடுகளை வலியுறுத்தும் மதம் இந்துமதம். சாதியின் பெயரால் தீண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டு, மனிதநேயமோ, சமத்தவமோ, எந்தச் சிறு சலுகையோ தராது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட (S.C.) மக்கள், எத்தனை காலம் இந்துக்களாக இழிவுப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? எனவே தான் மனிதநேயமும், சமத்துவமும் நிறைந்த, உயர்வு தாழ்வு எனும் பாகுபாடற்ற கிறித்துவ மதத்தை ஏழையெளிய தாழ்த்தப்பட்ட மக்கள் தழுவுகிறார்கள்.

தமிழகமெங்கும் நடைபெறும் மானக்கேடான ஆன்மீக நிகழ்ச்சி : தமிழகத்தில் மேல் சாதியில் வாழும் பகுதி ஊர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் (S.C.) வாழும் பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டு, சேரியென்றும் அழைக்கப்படுகிறது. ஊரிலே உள்ள அம்மன், சிவன், முருகன் போன்ற தெய்வங்களுக்கு ஊரிலே ஆலயங்கள் உள்ளன. வருடந்தோறும் நடைபெறும் திருவிழாக் காலங்களில் இந்தத் தெய்வங்களை அலங்கரித்துத் தேரிலே வீதி உலா கொண்டு வருவார்கள். வீதி உலாவரும் தேர், சேரிக்குள் போகாது; சாலையில் ஓர் ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்படும். காரணம் தேர் சேரிக்குள் நுழைந்தால் தெய்வத்திற்குத் தீட்டாகி விடுமாம். ஆனாலும் சூடு சுரணையில்லாத, தாழ்த்தப் பட்ட மக்கள், தங்களை ஒதுக்கிவிட்டு ஒதுக்குப்புறத் திலேயே நின்றுவிட்ட தெய்வத்திற்கு தீப ஆராதனை செய்து வணங்கி வருவார்கள். இவ்வித நிகழ்ச்சி கிறித்துவ விழாக்களில் நடைபெறுவதில்லை. தாழ்த்தப் பட்டவர்களை ஒதுக்கும் தெய்வத்தை அவர்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்து மதத்திலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறுவதில் என்ன தவறிருக்கிறது?

கிறித்துவத்திலே ஒரே தெய்வம் ஏசு கிறிஸ்து எனும் தெய்வம். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு அல்லா என்று ஒரே கடவுள். இந்த மதத்தாரிடையே சகோதரத்துவம் நிறைந்த மனிதநேயம் விளங்குவதற்கும், பிரிவினை இல்லாது ஒற்றுமை நிலவுவதற்கும் ஒரே கடவுள் தத்துவம்தான் உதவும். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று எப்போது இந்துக்கள் உணர்ந்து வாழப் போகிறார்கள்?

தாழ்த்தப்பட்ட ஒருவன் கிறித்துவனாக மாறினால், இந்திய அரசு சட்டென அவனது சாதியை (S.C.) உயர்த்தி விடுகிறது மட்டுமல்லாமல், முன்னர் அரசு வழங்கி வந்த சலுகைகளை நிறுத்திவிடுகிறது. இந்த நடவடிக்கை எப்படி நியாயமாகும்? தாழ்த்தப்பட்டவன் என்றுமே தாழ்த்தப்பட்டவனாகவே இருக்க வேண்டுமென்று அரசு விரும்புகிறதா? அரசியல்காரர்கள் அடிக்கடி கட்சி மாறுகிறார்கள். அதேபோல்தான் மதம் மாறுவதும். கட்சி மாறுவதோ, மதம் மாறுவதோ தனிப்பட்டவரின் பிறப்புரிமை; அது விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்ட தாகும்.

ஒருவன் மதம் மாறலாம். அப்படி மதம் மாறினால் அவனின் சாதி எப்படி மாறும்? மதம் உள்ளதைப் பற்றியது - பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தையைப் பற்றியதாகும். ஆனால் சாதி என்பது ஒருவனின் பிறப்பால், பெற்றெடுத்த பெற்றோரால் வந்தது. அதை எப்படி மாற்ற முடியும்? கிறித்தவனாக மதம் மாறிய தாழ்த்தப்பட்டவன் (S.C.) பொருளாதாரத்தில் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்துவிட்டதாகக் கூறி அரசாங்கம், சாதியை மாற்றுகிறது. கிறித்துவத்தை இந்தியாவில் பரப்புவதற்கென்றே வந்த மேல்நாட்டார், சீர்கேடான நிலையிலே இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு உணவு, உடை, கல்வி, சுகாதாரம் எனப் பல உதவிகளோடு பொருளு தவிகளும் கொடுத்து, அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்தி, மதம் மாற்றினார்கள். இப்போது வெளி நாட்டுக் கிறித்துவ மிஷினரிகள் யாரும் முன்போல் வருவதில்லை. மதம் மாறிய ஹரிஜனங்களுக்குக் கிறித்தவமோ, கிறித்துவ ஆலயத்தாரோ எந்தவித உதவிகளைச் செய்தும் ஏமாற்றுவதில்லை. உளப் பூர்வமாக விரும்பியே தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பதை நமது அரசு உணர வேண்டும்.

மதமாற்றத்தை நமது அரசு சட்டத்தின் மூலம் தடுக்குமேயானால் நமது நாடு மதச்சார்பற்ற நாடு (Secular State) என்பது உண்மையில் பொய்த்துப் போகும். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உண்மையான அக்கறையும் அனுதாபமும் அரசுக்கு இருக்குமானால் மதமாற்றச் சட்டத்தை நீக்க வேண்டும். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்டவர்களாகவே (SC) கருதி, நடத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் அவர்களுக்குத் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்பவையே ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டோரின் - தாழ்த்தப்பட்டோரின் வேண்டுகோளாகும்.

Pin It