அவளுக்குப் பழைய துணி பேப்பர் பொறுக்கும் வேலை-அன்றாட வேலை. கருகருவென மேனி; ஒல்லிக்குச்சி; ஒடிந்து விழுந்துவிடுபவள் போல நெடுநெடுவென வளர்ந்து நிற்கிறாள். கண்களிலே ஒளி இல்லை. மேனியிலே மினுக்கு இல்லை, தளுக்கும் இல்லை. ஏனெனில் அன்றாடம் வாழ்க்கையைத் தள்ளுகிறவளுக்குத் தளுக்கு எங்கிருந்து வரும்? மிலேச்ச வாழ்வை நடத்துகிறவளுக்கு மினுக்கு ஏது? ஒடிந்துவிடும் உலர்ந்த குச்சிக்கு ஒய்யாரம் ஏது?

அவளைப் பார்த்தால் சாப்பாடே இறங்காது. அவ்வளவு அழுக்கு மேனி முழுதும்! கிழிந்த புடவை-உடலைச் சுற்றி! ரவிக்கையும் போட்டிருக்கிறாள். அதில் அங்கும் இங்குமாக பொத்தல்கள்! எட்டூரு நாற்றம் அதிலிருந்து வீசும்! அவள் வாழ்க்கையை வாழ வில்லை. என்றாலும் சாகவில்லை. இருக்கிறாள் ஏதோ உயிரைப் பிடித்துக்கொண்டு!

அவள் வாழ்க்கையே போகிற உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போலத்தான்! ஏக்கமெலாம் தினக்கஞ்சி பற்றிதான்! குழந்தைகள் பரட்டைத் தலையினர் எண்ணெய்ப் பசையே இல்லை. மூக்கு ஒழுகும். காதில் சீழ் வடியும். காணாமல் போன குழந் தையைப் பற்றி வீணான நினைப்பு இல்லை, தாய்க்கு! பெற்றவளுக்குப் பாசம் இல்லை என்பதில்லை. அதனைப் பாசி ஏறி மறைத்துவிட்டதோ? மிச்சமிருக்கும் இரு குழந்தைகளையும் கொஞ்சுகிறாள். தாய்மை இருக் கிறது; தெரியத்தான் செய்கிறது. தொலைந்து போன கடைக்குட்டியைப் பற்றி மனம் பதறியதாகத் தெரிய வில்லையே! விட்டது சனியன் என்ற நினைப்போ! எங்கே தேடுவது என்ற சலிப்போ! பணமா இருக்கிறது. தொலைக்காட்சியின் தொலைந்தவர் பட்டியல் அறிவிப்பில் சேர்க்க! இப்படியெல்லாம் வழிகள் உண்டு. தொலைந்துவிட்ட சின்னஞ்சிறுசினைக் கண்டுபிடிக்க என்ற விவரம் - வீதியோரத்தில் விழுந்து கிடக்கும் பராரிக்குத் தெரியுமா என்ன! அவளுக்குத்தான் உள் ளுக்குள் என்ன.. என்ன... உணர்வுப் பேதலிப்பு களோ! என்ன தாய்மையோ!

பிழைப்பு... அவளும் அவள் கணவனும் மிக ஒற்று மையான ஜீவனம், தாள் பொறுக்குவதும்.. அவற்றை வகைப்படுத்துவதும்... இராசாயனக் கழிவுகளை-மெழுகுகளை உலர வைப்பதும், அவற்றை சுமந்து சென்று விற்பதும்... இவ்வாறாக வயிற்றைக் கழுவுவதே ஜீவனம். பற்றாக்குறைக்கு, அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுப்பதும் உண்டு. தெரு ஓரத்தில் தானே ஓரிரு சாக்குப் படுதாக்களை வைத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளோடு புருஷனுடன் குடியும் குடுத்தனமும் நடத்துகிறாள். சுவர்கள் இல்லாத, ஆகாயமே கூரையாக... திறந்தவெளியில், வாழ்க்கை. இது வாழ்க்கையா? வயிற்றுக்கும் வாய்க்குமான இழுபறி வாழ்க்கையில் நேர்மை இருந்தது. அமைதி இருந்தது. மவுன நிலையில் சோகமும் இருந்தது. மறைப்பானேன்?

அவள் வாழத்துடிக்கிறாள். சருகு, குச்சி, கம்பு, இலை, தழை, தென்னங்கீற்று, சணல், கயிறு... இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கிறாள். தெருவிலும், குப்பைத் தொட்டிகளிலும் தேடித் தேடி... பொறுக்கிப் பொறுக்கிச் சேர்க்கிறாள்! எல்லாம் குடிசை ஒன்று எழுப்பத்தான்! இது அவளுடைய மாளிகைக் கனவு! எழுப்பிவிட்டாள், குனிந்து தான் உள்ளே செல் வாள். உள்ளேயும் குனிந்துதான் இருக்க வேண்டும். குடும்பமே குனிந்து போய் உள்ளே முடங்கும். அண் ணாந்து பார்த்தால் அங்கும் இங்கும் ஓட்டைகள்! பொத் தல்கள்! சூரிய கதிர்கள் கொடுமையாக உள்ளே பாயும். மனிதக் கொடுமையைவிட இது அவ்வளவாக நெஞ்சைச் சுடுவதில்லை. இரவிலோ நிலாவின் ஒளி ஊடுறுவல் சுகந்தானே! கலவரம் நிறைந்த வறுமையில் புழுவென நெளியும் கூட்டத்திற்கு நிலா தரும் குளிர். சுகந்தானே! ஆமாம் சும்மா கிடைத்திடும் சுகுமாரி, நிலாவின் ஒளிக் கோடு! பொத்தல் குடிசையைச் சுற்றிலும் கட்டுப்பாடில் லாது வளர்ந்து கிடக்கும் செடி, கொடிகள்; எனினும், அவள்... அவள்தான் தன்னைக் கட்டுப்படுத்தியே இருந்தாள். வெய்யில் கொடுமை தாங்காமல் வெட்ட வெளியில் அவள் படுத்தாலும் தன் மனக் கதவுகளை அடைத்தே வைத்திருந்தாள். வாட்டும் வறுமையில் - குனியவைக்கும் குடிசையில் - அச்சம் ஊட்டும் திறந்த வெளியில் வாழ்ந்தாலும், தன்னைச் சுற்றி சுவர் எழுப் பியே வாழ்ந்தாள். ஆமாம். அவளிடம் எளிமையான அழகு இழையோடியது.

‘ஏம்புள்ளே! இம்புட்டு பாடுபட்டு பொறுக்கிக்கிட்டு இருக்கியே... என்னாது,” என்று பேச்சு கொடுத்தான் ஒரு பேமானி.

“ரசாயனக் கழிவு, பிளாஸ்டிக், பேப்பர்.. இதான் பொறுக்கிறேன் என்னாவாம்?” என்றாள் அவள்.

“ஒன்னுல்லே. இதில உனக்கு எம்மாங் காசு கிடைக்கும்...?”

“அஞ்சோ பத்தோ தான்!”

“குழந்தை குட்டியோட ஓங்குடும்பத்த எப்படி நடத்துவ அஞ்சும் பத்தும் வச்சுக்கிட்டு.”

“வேற என்ன வேலை கிடைக்குது எனக்கு. இதான் எனக்கு ஜீவனம்.”

“ஓளக் குடிசைலே சாராயம் வித்துப் புழைப்ப நடத்தேன். நான் உதவறேன்.”

“போலீசு புடுச்சிக்கிட்டுப் போயிடாதா?”

“அதால்லாம் நான் பாத்துக்கிறேன். வந்து பட்டைச் சாராயம் வாங்கிக்க. சைக்கிள் டியூப்ல எடுத்துக்கிட்டுப்போ. ஒன் குடிசைலே வைத்து வித்துப் புழச்சுக்க.”

கள்ளச் சாராய வியாபாரம் கன ஜோராக நடை பெறுகிறது. சொல்லிக் கொடுத்தவன் அவளுக்கு எல்லா முமே சொல்லிக் கொடுக்கிறான். பழகிவிட்டாள். குடிக் கவும் காசு சேர்க்கவும், படுக்கை விரிக்கவும்! இரவு நேரம், மணி ஏற ஏற, யார் யாரோ - எவர் எவரோ குடிசைக்கு வருகின்றனர். முதலில் வாங்கிச் சென்று குடித்தனர். பிறகு குடிசைக்கு வெளியிலேயே அமர்ந்து குடித்தனர். காசு சேரச்சேர, மீன் வறுத்து வைத்து வியாபாரமும் செய்தாள். அந்தத் தெருவில் ஒரு ஓரப் பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கு இடையிலே உள்ள அந்தக் குடிசையில். இரவு ஏற ஏற, மினுக் மினுக்கென்று எரியும் விளக்கு வெளிச்சத்தில், அவள் நடத்தும் வியாபாரம் அமோகம்! கிளாஸ் டம்ளர்கள்! பட்டைச் சாராய நெடி! மீன் வறுவல் கமகமவென! பலர் பலப்பலர்... வயது முற்றியவர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்கள், மூட்டை தூக்குவோர், ஏன் பெரிய இடத்துப் பிள்ளைகள் கூட! சில்லறைக் காசுகளின் சத்தம். பத்து ரூபா, இருபது ரூபா நோட்டுகளின் சலசலப்பு. அவளிடத்தில் பணப்புழக்கம் பெருகிவிட்டது. கடன் கூடக் கொடுத்து, சாராயம் ஊற்றுகிறாள்.

அவள் மேனியில் மெருகேறுகிறது. உடம்பு ஊதுகிறது, பூசி விட்டாற் போல! உயரத்திற்கேற்ற பருமன். முகத்தில் ஓர் கவர்ச்சி; சீவிமுடித்து, சிங்காரித்து; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கத்தகாம்பு சகிதம் வாயில் நாசுக்காக மென்று-உதட்டை இளஞ் சிவப்பாக்கி, அவள் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது... போதையில் இருப்போர்க்கு நல்ல தூண்டுதல்.

கழிவுப் பொருள் வியாபாரத்தில் தொடங்கி, சாராய வியாபாரமாக வளர்த்து... அதற்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தொக்கும் செய்து, மென்று தின்ன மீன் வறுவலும் செய்து சாப்பாட்டு வியாபாரமும் நடத்தி, உண்ட மயக்கம் சிவத்தொண்டர்களுக்கே இருக்கும் போது சாராய மயக்கமும் மீன் வறுவல் சுவையும் வயிற்றை நிரப்பி... நிற்கிற குண்டர்களுக்கு பாயும் விரித்துத் தன் முந்தானியையும் விரித்துச் சுகம் தந்து சுகம் பெறும் அந்தக் குரு நிறக் குயிலாள்... பண மெத்தையில் புரளத் தொடங்கினாள்! கள்ளச் சாரா யத்தில் தொடங்கிக் கள்ளக் காதலர்கள் வரை... அவளுக்கு அனுபவக் குவியல்!

சொந்தப் புருஷன் அவளுக்கோர் தடங்கல்! அவளைக் கொத்திச் சுவைத்திடும் ஆணினக் கழுகுகளுக்கு அவனோர் நியூசன்ஸ்! ஒரு நாளிரவு... நள்ளிரவு! குடிசையில் தகராறு, புருஷனுக்கும் பொஞ்சாதிக்கும். சாராய ரவுடி அவனை நையப்புடைத்து வெளியேற்று கிறான். நிரந்தரமாகவே புருஷன் அவளை விட்டு ஓடி விடுகிறான். திறந்த கதவு! இருட்டுக் குகையினுள் ஒளிவீச்சு! ஓட்டைக் குடிசையில்... குடிசையினுள் மழையின் ஒழுகல்! ஊற்றுப் பெருக்கம்! சாராய வாடை! உளரும் வாய்களிலிருந்து வரும் காம ஒலிகள்! மார்புகளின் விம்மல்கள்! மரக்கிளைகளின் உராய்தல் சத்தம்! கொண்டாட்டம்... கோலாகலம்.. இடம் மாறிவிட்டாள்! குடிசையிலிருந்து மாடி வீட்டிற்கு. ஷிப்டு ஆனாள். இன்னும் சில நாள்களில், வியாபாரம் அதிகரித்தது. பெரிய மனிதர்கள் எனும் கள்ள மனிதர்கள் சகவாசம் அதிகரித்தது. இந்தக் கருநிற மேனியாளுக்கும் செல்வாக்கு வளர்ந்தது.

ஏழையாக இருந்தாள். சாராயத்தை ஊற்றி, பாய் போட்டு, முந்தானை விரித்து வர்க்க ஏணியில் ஏறி, மேல் தட்டுக்கு வந்துவிட்டாள். சமூகத்தில் அவளுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது. உழைப்பிற்கும் நேரிய வாழ்க்கைக்கும் கிடைக்காத அங்கீகாரத்தை... இப்போது சாராய விற்பனையும், உடல்தானமும் அவளுக்குத் தந்துவிட்டது.

சமூக விஞ்ஞானி ஏழ்மையைக் காரணப்படுத்தினர். பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்வு என்றனர். அவ்வளவு எளிதான விஷயமல்ல இது என்றுணர்ந்த, சமூக அறிவு வேலைக்காரர்கள் இந்தச் சமூகத்தைச் சாம்பலாக்கினால் தான் தீர்வு கிடைக்கும் என்றனர், பெரியார் அங்குதான் நிற்கிறார்.

Pin It