காரிருள் வண்ணம்; வெள்ளிக்
    கம்பிபோல் நுரைத்த கேசம்
பாரினை ஆழ்ந்து கற்ற
    பகுத்தறி ஞானக் கண்கள்
தூரிகை தோயும் சாந்தின்
    குளிர்வெனப் பனிப்பூம் பேச்சு
ஊரினில் இவரைப் போன்று
    உள்ளவர் எவரோ இன்று?

மண்மகள் அதிர்ந்தி டாத
    மலர்நடை; உள்ளந் தன்னில்
உண்மைகள் அன்றி வேறு
    உணர்ச்சிகள் அற்ற சிந்தை;
கண்களாய்க் கொள்கை தன்னைக்
    கருதிடும் திட்பம்; தீங்கை
எண்ணியும் பார்த்தி டாத
    எங்களின் தங்கச் செம்மல்!

சிந்தனை யாள னுக்கும்
    சிவஇ ளங்கோ வுக்கும்
உந்தனைப் போல்ந டந்தார்
    ஒருவரும் இல்லை என்பேன்
குந்தகம் இன்றி ஏடு
    குறித்தநாள் வருவ தற்கு
முந்திய உன்உ ழைப்பை
    முற்றிலும் எண்ணிப் பார்ப்பேன்!

கோலூன்றி னாலும் தந்தை
    கொள்கையில் தளர வில்லை
காலூன்றி நடந்த நீயும்
    கருத்தினில் மாற வில்லை
ஆலூன்றி வளர்தல் போல
    அனைவரும் குடும்பத் தோடு
நூலூன்றிப் படித்த உந்தன்
    நுழைபுலம் பின்தொ டர்ந்தார்!

ஊறிடும் உந்தன் நெஞ்சில்
    உழவரின் நல்முன் னேற்றம்;
கூறிடும் எழுத்தும் பேச்சும்
    குடியான வர்க்கே; என்றும்
போரிடும் வேளாண் மக்கள்
    பொலிவுற வாழ்ந்த உந்தன்
தூரிகை வணங்கி வாழ்த்தி
    துயருடன் துதியே செய்வோம்!

காரினைப் போலப் பெய்யும்
    கட்டுரை இழந்தோம்; கட்டும்
வாரினை இழந்து எங்கள்
    வாத்தியம் முழக்க லானோம்;
தேரினை இழந்தோம்; நல்ல
    தெம்பினை இழந்தோம்; ஈழப்
போரினில் தமிழர் போல
    புலம்பிதான் நிற்கின் றோமே!

Pin It