பிறப்பால் கிறித்துவராக இருப்பவர், இந்துவாக மாறினால் அவர் ஆதிதிராவிடர் சாதிச் சான்றிதழ் பெறவோ இடஒதுக்கீட்டுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவோ தகுதி இல்லை'' (கடிதம் நகல் எண். 81 / 19.9.2000) என்றொரு ஆணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கோலப்பன் மூலம், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வெளியிட்டிருந்தது.
இந்த ஆணையால் மதம் மாறும் உரிமை, தலித் மக்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெற்ற பிறகும்கூட, இந்த ஆணை உயிர்ப்புடன் இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி, ஏப்ரல் 2002இல் வேலூர் ஊரிசு கல்லூரியின் பேராசிரியரும், "டாக்டர் அம்பேத்கர் மய்ய'த்தின் தலைவருமான அய். இளங்கோவன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் "டிவிஷன் பெஞ்ச்' 4.10.2002 அன்று, இந்த ஆணைக்கான இடைக்காலத் தடையை வழங்கியது.
இந்த ஆணையை ரத்து செய்யக் கோரி, பல்வேறு கோரிக்கைகள் மூலம் பல வழிகளிலும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. "தலித் முரசி'லும் இந்த ஆணை சட்டவிரோதமானது என்றும், இதை ரத்து செய்தால்தான் மதமாற்றத் தடைச் சட்டம் முழுமை பெறும் என்றும் தொடர்ந்து சுட்டிக்காட்டி, இவ்வாணையை திரும்பப் பெறக் கோரி இருந்தோம். இருப்பினும், தலித்துகளின் இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், பேராசிரியர் அய். இளங்கோவன் தொடுத்த வழக்கு, 13.4.2007 அன்று விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் யசோத் வரதன் வாதாடினார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முகோபாத்தியா மற்றும் நீதிபதி தனபாலன் ஆகியோர், அரசு செயலாளர் கோலப்பன் அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினர். அரசு செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கை, உச்ச நீதிமன்றம் சில முக்கிய வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் 2 மாதங்களில் புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இச்சுற்றறிக்கை குழப்பமான முறையில் இருப்பதால், இதை ரத்து செய்வதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக, தலித் மக்களுக்கு முற்றிலும் எதிரான ஓர் ஆணையை எதிர்த்துப் போராட, எந்த தலித் இயக்கமும் முன்வரவில்லை என்பதையும் சேர்த்தே வரலாறு பதிவாகும்.
தீண்டாமை கூட்டுச் சதி தகர்ந்தது!
தீண்டாமை பல நூற்றாண்டு காலமாக காலத்திற்கேற்றவாறு தன் வடிவங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசதிகாரமும் அதற்கு துணை நின்றிருக்கிறது. இன்றளவிலும் நம் கண்ணெதிரில் இந்தக் கூட்டு அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இக்கூட்டுச் சதியை முறியடித்து, நியாயத்தை நிலை பெறச் செய்ய, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் போராடிக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை குறிப்பிடலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் அருகில் உள்ள ஒரு சிற்×ர் சிவந்திப்பட்டி. சாதி இந்து தேவர்கள் அதிகம் குடியிருக்கும் அச்சிற்×ரிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு காமராஜ் நகர். திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் நகரப் பேருந்து, 1996 வரையில் காமராஜ் நகர் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் நெல்லைக்கு சிவந்திப்பட்டி வழியாகச் சென்றது. 1996இல் நடந்த சாதிக் கலவரத்தை அடுத்து, அப்பேருந்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தோடு நிறுத்தப்பட்டÐ.
சிவந்திப்பட்டி மக்களும், காமராஜ் நகர் மக்களும் சிவந்திப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து பேருந்தில் ஏறினர். இந்த மாற்றத்திற்கு காவல் துறை கூறிய காரணம்தான் கொடுமையானது. "காமராஜ் நகரிலிருந்து பேருந்து கிளம்பினால், காமராஜ் நகரைச் சேர்ந்த தலித் மக்கள் பேருந்து இருக்கைகளை நிரப்பி விடுவார்கள்' என்றும், "அதனால் சிவந்திப்பட்டியைச் சேர்ந்த தேவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது' என்றும், "அப்படி ஏற்பாடு செய்தால் சாதிக்கலவரம் ஏற்படும்' என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதனை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ஆர். கிருஷ் ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவர் சார்பாக டி. அரிபரந்தாமன் வாதாடினார். இவ்வழக்கினை 13.3.2007 அன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தர்மராவ் எலிப்பி மற்றும் நீதிபதி கே. சந்துரு ஆகியோர், ஒரே வரியில், பேருந்து முன் போலவே காமராஜ் நகர் வரை சென்று, அங்கிருந்தே கிளம்ப வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் சாதி இந்துக்கள் அரசு எந்திரம் ஆகியவற்றின் கூட்டுச் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.