வர்க்க-வர்ண ஆதிக்க ஒழிப்பு மாநாடும் செஞ்சட்டைப் பேரணியும் மதுரையில் மே 29 அன்று நிகழ இருக்கிறது. மதுரை காளவாசல் பகுதியிலிருந்து செஞ்சட்டைப் பேரணி பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங் கிணைக்கும் இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள், பெண்களும் ஆண்களுமாய் செஞ்சட்டை அணிந்து தமிழ் நாட்டின் தனித்துவத்தை வர்க்க-வர்ண ஆதிக்க சக்திகளுக்கு உணர்த்தப் போகிறார்கள்.

ஏற்கனவே கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணியை நடத்தி முடித்து இப்போது நிறைவாக செஞ்சட்டைப் பேரணி புறப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து, பங்குகளைத் தனியாருக்கு வேகம் வேகமாக விற்கிறது ஒன்றிய ஆட்சி. பொன் முட்டையிடும் வாத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை அடி மாட்டு விலையில் விற்கிறது.

காப்பீடு என்றால் அது பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற கருத்தை உடைத்து,வெறும் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.அய்.சி., சந்தை மதிப்பில் 32 இலட்சம் கோடி ரூபாயையும் காப்பீட்டு சந்தையில் 70 விழுக்காடு பாலிசிதாரர்களையும் கொண்டு அரசுக்கு வற்றாத ஊற்றாக அரசுக்கு செல்வத்தை வாரி வழங்கி வரும் நிறுவனம். அரசுத் துறையின் மேம்பாட்டுக்கு இது வரை 24,01,456.60 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த மாபெரும் மக்கள் சொத்தை தனியாருக்கு ஈவிரக்கமின்றி விற்கப் போகிறது - இது வர்க்க ஆதிக்கம்!

  • ஏர் இந்தியா நிறுவனத்தை 2013இல் காங்கிரஸ் ஆட்சி தனியாருக்கு விற்க முற்பட்டபோது பொங்கி எழுந்த பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தவுடன் 2019இல் நூறு சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்றது. 1953இல் டாட்டா பெருமுதலாளியிடமிருந்து காங்கிரஸ் ஆட்சி மீட்டெடுத்த இந்த நிறுவனத்தை மீண்டும் டாட்டா வுக்கே தாரை வார்க்கிறது ஒன்றிய ஆட்சி! இதன் சொத்து மதிப்பு ரூ. 50,000 ஆயிரம் கோடிக்கு அதிகம். வேலை செய்யும் ஊழியர்கள் 10,000 பேர். இப்போது விற்கப்பட்டதோ வெறும் ரூ. 18,000 கோடிக்கு மட்டும்! இப்போது ஒன்றிய ஆட்சியிடம் ஒரு விமானக் கம்பெனிகூட இல்லை. உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு வர வாடகைக்கு விமானங்களை எடுக்க வேண்டிய நிலையில் தான் ஒன்றிய ஆட்சி இருந்தது. - இது வர்க்கச் சுரண்டல்.
  • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றப்பட்டு, ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள் மீது சுமையை ஏற்றும் ஒன்றிய ஆட்சி, பெரும் பணக்கார, பனியா கும்பலுக்கு பல்லாயிரம் கோடி வங்கிக் கடனை இரத்து செய்கிறது. மோடி ஆட்சி யின் முதல் 7ஆண்டுகளில் வங்கிகளில் பெரும் பணக்காரர்கள் வாங்கி திருப்பிச் செலுத்தாத கடன் 10.72 இலட்சம் கோடி. அவர்கள் சொகுசாக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். ஒட்டகத்தை ஏமாற்ற அதன் முதுகுச் சுமையில் ஒரு மயில் இறகை எடுப்பதுபோல் ஒன்றிய ஆட்சி அவ்வப்போது பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு நாடகமாடுகிறது.
  • 2020-2021 நிதியாண்டில் அய்ந்து ஸ்டேட் வங்கிகள் மட்டும் திரும்பி வராது என்று தள்ளுபடி செய்த கடன் 89,688 கோடி. பயனடைந்தவர்கள் ஏழை பாழைகள் அல்ல; பெரும் பணக்காரர்கள். - இது வர்க்கச் சுரண்டல்!

கொரனா காலத்தில் 40 இலட்சம் பேர் இந்தியாவில் மரணித்தார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உண்மையை மறைத்து மனித உயிர்களுடன் விளையாடியது மோடி ஆட்சி. தடுப்பூசிக்கு கட்டணம் கேட்டது; நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகு பணிந்தது. சொந்த ஊர் திரும்புவோருக்கு இரயில்வே கூடுதல் கட்டணம் கேட்டது. மனிதாபிமான மற்ற ஏழை மக்களின் வர்க்கச் சுரண்டலுக்கு இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

இந்தியைப் படி; சமஸ்கிருதமே நமது பண்பாட்டு மொழி; இராமபகவானே தேசிய அடையாளம்; இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை; குடியுரிமைப் பதிவு சட்டத்தில் இஸ்லாமியர்களை குடிமக்களாக ஏற்க மறுப்பு; ‘இந்தியா’ இந்துக்களின் நாடு என்று மதச்சார்பின்மையைக் குலைக்கும் வெறுப்புப் பேச்சு; மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்துக் கொலை; பார்ப்பனியத்தை உயர்த்தி இஸ்லாமியரை தனிமைப்படுத்தி ஏழை எளிய விளிம்பு நிலை மக்களை மதத்தின் பிடிக்குள் திணித்து அவர்களின் வாழ்வுரிமைக்கு வேட்டு வைக்கும் வர்ணாஸ்ரம ஆட்சி நடக்கிறது.

ஜாதி எதிர்ப்பு பேச மாட்டார்கள்; ஆனால் பிற்படுத்தப்பட்டோர் காவலர் என்று பசப்பு காட்டுவார்கள். மருத்துவக் கல்லூரி பிற்படுத் தப்பட்டோர் ஒதுக்கீட்டை மறுத்தார்கள். தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி மீட்டது. ‘நீட்’ தேர்வைத் திணித்து, கிராமப்புற ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறார்கள்; அரசுப் பள்ளி மாணவர்களும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வரவும் எதிர்ப்பு. - இது வர்ணா ஸ்ரம ஆதிக்கம்.

தேசிய கல்வித் திட்டம் என்ற பெயரில் புதிய கல்வித் திட்டத்தைப் புகுத்தி, தமிழ்நாடு தனக்காகக் கட்டமைத்த சமூகநீதிக் கல்வியை குலைக்க திட்டம்; ஆளுநர்களை கைப்பாவை யாக்கி மாநிலங்களின் உரிமைகளை கொள்கைகளை முடக்கத் துடிப்பு; நான்கு வர்ணத்தை நியாயப்படுத்தும் கீதையை கட்டாயப் பாடமாக்குகிறார்கள்; குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாட்டின் மதிப்பு மிக்க தலைவர்கள் வ.உ.சி., மருதுபாண் டியர்கள், வேலுநாச்சியார், அலங்கார ஊர்தி களுக்கு தடை; மாறாக அனுமான், ராமன், வேதக் கல்விச் சாலை, ஊர்திகளுக்கு அனுமதி. - இது வர்ணாஸ்ரம வெறி.

சமஸ்கிருதம் பரப்ப கூடுதல் நிதி

இந்து மதத்துக்குள் உயிர்த் துடிப்பாக இருக்கும் ஜாதியை எதிர்த்து வாய் திறக்க மாட்டார்கள். ஜாதி எதிர்ப்பாளர்களையும் ஜாதிக்கு ஊற்றான மனுசாஸ்திரம், வேத இதிகாசப் புராணங்களைக் கண்டித்தால் தேசத் துரோகி பட்டம்.

இப்படி வர்ணாஸ்ரம காவலர்களின் ஆட்சியே ஒன்றிய ஆட்சி என்பதற்கு ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

சிந்தனை கொள்கை செயல் திட்டங் களைக் கொண்ட அமைப்புகள் செயல்படும் பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு. பொதுவுடைமை முகாமிலிருந்து ஜாதி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் பெரியாரிய அம்பேத்கரிய முகாமிலிருந்து பனியா - பெரு முதலாளிகள் சுரண்டல் எதிர்ப்புக் குரல். - நாடு-நமது தமிழ்நாடு!

இந்தியாவில் ஒற்றையாட்சி என்ற பார்ப்பன இராமராஜ்யத்தை நோக்கி வேக வேகமாக நடைபோடும் ஒன்றிய ஆட்சிக்கு எதிராக வலிமையான எதிர்ப்புக் குரல ஒலிக்கும் மாநிலங்களின் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.

‘திராவிட மாடல்’ என்ற ஆரிய எதிர்ப்பு மாடலுக்குள் வர்க்க-வர்ண ஆதிக்க எதிர்ப்பு உள்ளடங்கியிருப்பதை நாம் புரிந்து கொண்டோம்; புரிந்து ஒன்றிணைகிறோம்; ஒன்றிணைந்து போராடுகிறோம்.

இளைஞர்களின் மாபெரும் வரலாற்று அணியைக் கட்டமைக்க நாம் தயாராக வேண்டும்;

வன்முறைக் கும்பலையும் விலைக்கு வாங்கப்பட்டவர்களையும் சமூக விரோதி களையும் கட்சி உறுப்பினர்களாக்கிக் கொண்டு பா.ஜ.க. தலைமை மிரட்டிப் பார்க்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் ‘பூஜ்ய’ மதிப்பு பெற்ற பா.ஜ.க.வின் தலைவர் ஏதோ மக்கள் தலைவர்களைப்போல் கோமாளி வேடம் போட்டு மேடை நாடகங்களை அரங்கேற்றும் அரைவேக்காட்டு உருட்டல் மிரட்டல் பேச்சுகளை ஒரு பொருட்டாகவே சமூகநீதி மண் மதிக்காது என்பதை துரோகக் கோடரிக்காம்புகளுக்கு உணர்த்துவோம்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் களே! நடந்து முடிந்த பேரணிகளில் கழகத் தின் வலிமையை கருஞ்சட்டையோடும் நீலச் சட்டையோடும் அணி வகுத்து நமது வலிமையை வெளிப்படுத்தி னோம்.

சிவப்பு சட்டைப் பேரணியிலும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முத்திரையைப் பதிப்போம்.

குடும்பம் குடும்பமாக திரளுவோம்; கழகக் கொடி ஏந்தி வருவோம்; கருப்பும் நீலமும் சிவப்பும் எங்களுக்கு சனாதனத்தை வீழ்த்தும் ஆயுதங்கள் தான் என்பதை ஓங்கி - உரத்து முழக்கமிடுவோம்.

மே 29 - மதுரையை செஞ்சட்டைக் கடலில் நீந்த வைக்க கருப்புச் சட்டை நெஞ்சங்களே! சிவப்புடையுடன் வாருங்கள்! வர்க்க-வர்ண ஒழிப்பை முன்னெடுக்க வாருங்கள்!

Pin It