கல்வி கற்பதினால் மக்களுக்கு அறிவு வளரும்; அறிவு வளருவதினால் மக்கள் வாழ்வு உயரும்; மக்கள் வாழ்வு உயர்வதினால் நாடு சிறப்புறும். இதைத்தான் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். உலகில் எந்த நாடு இன்று சிறப்புற்று விளங்குகிறதோ அதற்கு எது காரணமாக இருந்தது என்று எண்ணிப் பார்த்தால், அந்நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சியென்பதே புலனாகும்.

அதுபோலவே, உலகில் எந்த நாடு இன்று பின்ன ணியிலிருந்து வருகிறதோ, அது முற்போக்கடைய வேண்டு மென விரும்பினால், அந்நாட்டின் கல்வி வளர்ச்சிய டைய வேண்டும். ஒரு நாடு கல்வியில் வளர்ச்சிடைய வேண்டுமானால், அது அந்நாட்டின் தாய்மொழியி னால்தான் முடியும்.

பிறநாட்டின் அறிவு நுட்பங்களை அறிந்து வந்து, தங்கள், தங்கள் தாய்மொழியின் வாயி லாக எழுதி, தங்கள் நாட்டு மக்களை அறிவு பெறச்செய்து, இன்று ஒப்புயர்வற்றவர்களாகச் செய்திருப்பதைத்தான் உலகில் பார்க்கிறோம். தாய்மொழியொன்றிருக்கப் பிற மொழியினால் அறிவைப் புகட்டுவதோ அல்லது தாய் மொழியின் மூலமாக அறிவை புகட்டுவது கஷ்டமான காரியமென்றோ எந்த நாடும் கருதி, தாய்மொழி மூலமாக அறிவை வளர்க்கத் தயங்கினதில்லை.

இந்நாட்டில்தான், தாய்மொழி மூலம் அறிவை புகட்டுவது அவ்வளவு எளிதல்லவென்றும் அவசரப் படக் கூடாதென்றும் கூறப்படுகிறது. உண்மையிலே இது விசித்திரமான வாதமாகும். உலகில் எல்லா நாடு களிலும் 100க்கு 60, 70, 90 என்ற விகிதத்தில் கல்வி கற்றவர்களாக இருக்க, இந்நாட்டில் மட்டும் 100க்கு 8 அல்லது 10 விகிதம் கல்வி கற்றவர்களாக இருக்கக் காரணம், தாய்மொழி மூலம் கல்வி புகட்டப்படாததே யாகும். தாய்மொழி மூலம் கல்வி புகட்டப்பட்டிருந் தால், இன்று இந்நாட்டின் மக்களின் அறிவு வளர்ச்சி இந்நிலையிலா இருக்கும்?

உண்மை அவ்வாறு இருக்க, “ஆரம்பக் கல்வி யிலிருந்து பாடங்களைத் தாய்மொழியில் போதிப்பது என்பது முடியாது. இது மிகவும் அவசரமான காரிய மாகும். தேசியக் கல்விக்குப் பாதகம் விளையாத விதத் தில் இந்த சீர்திருத்தத்தைப் படிப்படியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று மகாகனம் வி.எஸ். சிறீனிவாச சாஸ்திரியார் லயோலா காலேஜ் தர்க்கக் கூட்டத்தில் 28ஆம் தேதி மாலை பேசியிருக்கிறார்.

ஆரம்பக் கல்வியிலிருந்து பாடங்களைத் தாய்மொழி யில் கற்பிப்பது முடியாதென்று இந்நாட்டில் இவரைப் போன்றாரைத் தவிர வேறு நாடுகளில் யாரேனும் வெட்கமின்றி சொல்லத் துணிவாரா? பாடங்கள் எனப் படுவது அறிவு. அறிவு வளர்ச்சி தாய்மொழியின் மூல மல்லாமல் வேறு எந்த மொழியின் மூலம் புகட்டுவது? இதை அறிஞர் எவரும் ஒப்புக் கொள்ளார் என்றே கருதுகின்றோம்.

கனம் சாஸ்திரியார் இவ்வாறு கருதுவதற்குக் காரணம் அவரது பேச்சிலே அடுத்தபடியாகக் காணப்படுகிறதை யாவரும் அறியலாம்.

அதாவது தேசியக் கல்விக்குப் பாதகம் விளையாத விதத்தில் இந்தச் சீர்திருத்தம் படிப்படியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதே யாகும். இதனால், தாய்மொழியில் எல்லாப் பாடங்களும் கற்பிக்க ஆரம்பித்துவிட்டால், தாய்மொழியின் மூலமாக மக்கள் அறிவைப் பெற்றுவிட்டால், ஆரியர்கள் காணும் கனவாகிய தேசியக் கல்விக்கு இடமேயில்லாது போய் விடும் என்பதுதான், இவரது அச்சத்திற்குக் காரணமாகும்.

‘தேசியம்’ என்ற பெயரால், பல காலமாக சுதந்தரத்துடன் விளங்கிய மக்களை, தனி கலை, மொழி, நாகரிகம் முதலியவைகளில் தலைசிறந்து விளங்கும் தனி இன மக்களை ஆரியத்திற்கும் இந்து ஆதிக்கத்திற்கும் அடிமைப்படுத்தி வைக்க முயற்சிப்பது போல், தேசியக் கல்வியின் பெயரால் அந்தந்த இன மக்கள் அவரவர்களுடைய தாய் மொழியில் அறிவுபெற்று வாழ்க்கை உயர்வடைந்து நாடு சிறப்புறுவதைத் தடுத்து ஆரிய ஆதிக்கத் திற்கு அடிமையாயிருந்து வந்தது போல் இனியும் பல காலம் இருந்து வரட்டும் என்பதைத் தவிர இதில் வேறு என்ன அர்த்தமிருக்க முடியும்?

தாய்மொழியின் மூலம் எல்லாப் பாடங்களை யும் கற்பிக்காத நாடு ஒரு நாளும் முன்னேற முடியாது. உதாரணத்திற்கு சீனாவையும் சப்பா னையும் எடுத்துக் கொள்ளுங்கள். சப்பான், அய் ரோப்பிய நாட்டு அறிவை, தனது தாய்மொழியில் கற்பித்துத் தனது மக்களை அறிவு பெறச் செய்ததினால் தான் இன்று ஒரு வல்லரசாக விளங்கு கிறது.

சீனா அதனைச் செய்யாததனால் வல்லரசு களின் தயவை நாடி நிற்க வேண்டிய நிலையி லிருக்கிறது. தாய்மொழியை உயிருடன் பெற்றி ருக்கும் எந்த நாட்டு மக்களும் சாஸ்திரியார் வாதத்தை ஒப்புக்கொள்ளார். தமிழகம் தனி நாடாகப் பிரிக்கப்படாதவரை தாய்மொழி வளர்ச் சிக்கு மட்டுமல்ல-எடுத்ததற்கெல்லாம் தேசியத் தைக் குறுக்கே கொண்டுவந்து போட்டு முட்டுக் கட்டையிடுவார்கள் என்பதை இதிலிருந்தாவது தமிழர்கள், திராவிடர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

- “விடுதலை, 1.2.1943

Pin It