ஜனசக்தியின் தொடக்க காலம் முதல் அதில் பணியாற்றி வந்த வி.ராதாகிருஷ்ணன் என்னும் ‘ஜனசக்தி’ ராதா ஜூன் 13ஆம் தேதி 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
லண்டனில் படிக்கச் சென்று கம்யூனிஸ்ட்டாக மாறி 102 வயது வரை வாழ்ந்த சி.எஸ். சுப்பிரமணியம், 1942லிருந்து 1947வரை ஜனசக்தி வார இதழுக்கு பொறுப்பேற்று இருந்த போது அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தவர் ராதாகிருஷ்ணன். அம்பத்தூர் நியூ செஞ்சுரி காலனியில் வசித்து வரும் அவர், பத்திரிகையாளர் மட்டுமல்ல, நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பாலதண்டாயுதம் பிறந்த பொள்ளாச்சியில் 1922 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி வி. ராதாகிருஷ்ணன் பிறந்தார். தந்தையின் பெயர் வாசுதேவன். தாயார் பெயர் செல்லம்மாள். பள்ளியில் படிக்கின்ற காலத்தில் தொடக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே பாலதண்டாயுதத்தின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட பாலர் சங்கத்தில் அவரும் இணைந்து செயல்பட்டார்.
ஜீவானந்தத்தின் மேடைப் பேச்சுகளைக் கேட்டும் அவரது ஜனசக்தி கட்டுரைகளைப் பார்த்தும் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாலர் சங்கத்தின் பெயரை தீவிர வாலிபர் சங்கம் என்று பெயர் மாற்றி இருக்கிறார்கள். 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அன்றைய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் பள்ளியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றார் ராதாகிருஷ்ணன். ஆனால், கல்லூரிப் படிப்பைப் படிக்க வசதியில்லாததால், அவரது மாமாவின் மளிகைக் கடையில் வேலைபார்த்து வந்தார்.
1942லிருந்து ஜனசக்தி இதழில் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், 1967இல் சோவியத் பலகணி வார இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து அங்கு 23 ஆண்டுகள் பணியாற்றினார்.
அரசியலில் தீவிர ஆர்வம் கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சித் தடை செய்யப்பட்டதை அடுத்து, 19 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி 1941ஆம் ஆண்டிலேயே தலைமறைவாக இருந்து கட்சிப் பணிகளைச் செய்து வந்தார். இரண்டாவது உலகப் போர் நடந்த போது ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பதினாறு வயதிலேயே களம் இறங்கியவர். 1942இல் கோவை கம்யூனிஸ்ட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் இரு மாதங்கள் சிறையில் இருந்தவர்.
1942இல் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ இதழாக தொடங்கப்பட்டதும். தனது 20வது வயதில் ஜனசக்தியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1949இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. சென்னை அலுவலகத்தில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் பாதுகாப்புக் கைதியாக இருந்தார்.
1942லிருந்து ‘ஜனசக்தி’ இதழில் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், 1967இல் ‘சோவியத் பலகணி’ வார இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து அங்கு 23 ஆண்டுகள் பணியாற்றினார். ஜனசக்திக்காகக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தீர்மானங்களை மொழிபெயர்க்கும் வேலையையும் திறம்படச் செய்தவர் அவர்.
ரோசலிண்ட் மைல் எழுதிய World History of Womens Movement என்ற நூலை உலக வரலாற்றில் பெண்கள் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர். தனது அரசியல் அனுபவங்களை வாழ்க்கைத் திருப்பங்கள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் ராதாகிருஷ்ணன்.
ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ஹனுமந்தராவ், சி.எஸ். சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் அவர். எஸ்.ஏ. டாங்கே, பி.சி.ஜோஷி, அஜய் கோஷ் போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் மேடைப் பேச்சை ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவர்.
“ராதாகிருஷ்ணன் அடக்கமானவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடியவர். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவரும் ‘டெய்லி வொர்க்கர்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தவருமான ரஜினி பாமிதத் முதல் லண்டனில் படித்து கம்யூனிஸ்ட்டாக இந்தியா வந்த மோகன் குமாரமங்கலம் வரை அனைவருக்கும் தமிழ்நாட்டு மேடையில் மொழிபெயர்ப்பு செய்தவர். பொருள் பிசகாமலும் சொல் சுத்தமாகவும் சரளமாக மொழிபெயர்ப்பு செய்தவர்” என்கிறார் நல்லகண்ணு.
"மாணவப் பருவத்தில் முதல் மாணவராக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறைந்த தோழர் அஜய்கோஷ், ஆறு அடி உயரமுள்ளவர். எனவே, ஒலி பெருக்கி அமைப்பாளர் அவருக்காக ஒலிபெருக்கியை உயர்த்தி நிறுத்துவார். பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவன் உருவத்தில் ராதாகிருஷ்ணன் இருப்பார். மொழிபெயர்ப்பு சரியாகவும் அழகாகவும் இருக்கும்” என்பார் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்.
“மனிதரின் மறக்காத ஆசைகளில் ஒன்று, நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது. எத்தனைதான் முயன்றாலும் விரல் விட்டு எண்ணத்தக்கவர்கள் மட்டுமே நூறு வயதை எட்டியிருக்கிறார்கள். பல்வேறு கொடிய அடக்குமுறைகள், சிறைச்சாலை, ஆயுள் தண்டனை என்று இளமைக் காலத்தில் துயரங்களை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நூறு வயதைக் கடந்தும் வாழ்வது வியப்பை அளிக்கத்தான் செய்கிறது. இது குறித்து மனநல மருத்துவர் ஒருவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் அளித்த பதில் எனக்கு திருப்தியை அளித்தது. "தனக்கென்று வாழாமல் பிறருக்கென்று வாழும் மனமும், தனி மனித ஒழுக்கமும் நீண்ட காலம் வாழ வகை செய்கிறது" என்று குறிப்பிடுகிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
பாப்பா உமாநாத் மூலம் அறிமுகமான திருச்சி பொன்மலையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகளான மோட்சம் மேரியை, அனந்த நம்பியார் தலைமையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர் ராதாகிருஷ்ணன். மோட்ச மேரி 2012இல் காலமானார்.
இவர்களது மகள்கள் கீதா, சாந்தி, பாரதி ஆகியோரின் திருமணங்களும் சாதி மறுப்புத் திருமணங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 2 மாத காலம் பொள்ளாச்சி துணைச் சிறையில் இருந்தது குறித்து 1982இல் தமிழக அரசிடம் விண்ணப்பித்து தியாகிக்கான பென்ஷன் வாங்க ராதாகிருஷ்ணன் பட்டபாடு தனிக்கதை.
நன்றி: இன்மதி.காம்
- பொன்.தனசேகரன்