இந்திய மண்ணில் திருமறை பரப்ப வந்த இறைப் பணியாளர்களுள் பலர் சமயப் பணி மட்டுமே தமது முதற்பணி எனக் கருதாது, இந்திய மொழிகளின் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள். அவர்களுள் கால்டுவெல்லின் பங்களிப்புக்கு இணையாக எதையும் குறிப்பிட இயலாது. திருநெல்வேலியில் அவர் ஆற்றிய பணிகளை இறைப்பணி, மொழிப்பணி, இனப்பணி என மூன்று நிலைகளாகப் பகுத்துணரலாம். அளப்பற்கரிய அப்பணிகளை அவரது சுயசரிதைப் படைப்பான மலரும் நினைவுகள் (Reminiscences of
Bishop Caldwell)) வாயிலாக உற்று நோக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
 
கால்டுவெல்லின் மலரும் நினைவுகளில் பரிணமிக்கும் முப்பரிமாணங்களாக,
1. முதன்மைப் பணியாக ‘இறைப்பணி’.
 
2. இறையியல் கல்வியினூடே ஏற்பட்ட ‘மொழி ஆராய்ச்சி’
 
3. சமூக மாற்றத்திற்கு அடிகோலிய ‘இனப்பார்வை’ விளங்குகிறது 
 
இறைப்பணிக்கு அடித்தளமிட்ட இளமைக் கல்வி:
 
அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் தனது பத்தாவது வயதில் தன் மூதாதையரின்  சொந்த நாடான  ஸ்காட் லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் தன் வாழ்வைத் துவக்கினார். சிறு வயது முதலே ஆங்கில இலக்கியங் களையும் அரிய நூல்களையும் அக்காலத்திய புகழ்பெற்ற நூற்களையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இறைநம்பிக்கை மிக்க குடும்பத்தில் பிறந்தபடியால், ஆலய வழிபாடுகளில் தவறாது கலந்துகொள்ளவும் இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் திருமறை வசனங்களை மனப்பாடமாகக் கற்கவும் உதவியாக அமைந்தது.  ஆலயத்தில் அளிக்கப்படும் இறைச் செய்தியைக் கேட்பது மட்டுமே இவரது சமயத் தொடர்புகளின் எல்லையாக இருந்தது. அன்றைய சூழலில் இறையியல் மற்றும் சமய நூற்களைக் கற்கும் ஆர்வம் அவரிடத்தில் காணப்படவில்லை.
 
caldwell 403அங்கிருந்து டப்ளின் நகருக்குச் சென்ற கால்டுவெல் கலைப் பள்ளியில் சேர்ந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு பரிசுகள் பலவும் பெற்றதால் கலை மீதிருந்த ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதே சமயம் அயர்லாந்திலுள்ள இறையடியவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் நிமித்தம் ஆன்மீக வாழ்வைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க நேர்ந்தது. தொடரவேண்டிய துறை கலையா அல்லது ஆன்மீகமா என்பதில் ஏற்பட்ட பெரும் மனக்குழப்பத்திற்குப் பின் ஆன்மீக வழியில் பயணிக்கத் தன்னை அர்ப்பணம் செய்தார் கால்டுவெல். மீண்டும் கிளாஸ்கோ நகருக்கு 1833ஆம் ஆண்டு சென்ற கால்டுவெல், அறிவர் அர்விக் ((Dr.Urwick)) அவர்களின் பரிந்துரையின்பேரில் கிரவெல் யூயின்ங் (Greville Ewing)  தலைமையிலான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். திருமறையில் ஆழ்ந்த புலமையுடைய வராக கிரவெல் இருந்த காரணத்தினாலும், கிறித்தவ ரல்லாத மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நற்செய்திப் பணியில் ஈடுபடுவதே இச்சபையின் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்த காரணத்தினாலும் கால்டுவெல்லின் திருமறைப் புலமையும் நற்செய்திப்பணி பற்றிய ஆர்வமும் மேலோங்கத் தொடங்கியது. இந்த உந்துதல் தனது இறைப்பணியை எளிய மக்களிடையேயும் ஞாயிறு பள்ளி வாயிலாகவும் துவக்க அடித்தளமிட்டது எனக் குறிப்பிடுகின்றார்.
 
இலண்டன் இறைப்பணி இயக்கத்துடன் இணைதல்:
 
நற்செய்திப் பணியில் அடுத்த நிலைக்குச் செல்ல எண்ணிய கால்டுவெல் 1834-ஆம் ஆண்டு இலண்டன் இறைப்பணி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நாடுகடந்த நற்செய்திப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வியக்கத்தாரால் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்க அனுப்பப்பட்டார். பட்டப்படிப்பு முடிந்ததும் வெப்பமண்டலப் பகுதியான தென்னிந்திய மண்ணில் இறைப்பணியாற்ற இலண்டன் இறைப்பணி இயக்கம் தமது சென்னைக் கிளையில் பணியமர்த்தியது.
 
இங்கிலாந்திடமிருந்து பிரியாவிடை நாட்டையும் வீட்டையும் பெற்றோரையும் நண்பர் களையும் விட்டுப் பிரிந்து இறைவனின் வழிநடத்தலுக்குத் தன்னை அர்ப்பணித்தார். இறுதியாக, உடல்நலக் குறைவால் படுக்கையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த வயது முதிர்ந்த தனது தாயிடமிருந்து விடைபெறும் போது கால்டுவெல்லின் உள்ளம் உருகியது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தாயின் அரவணைப்பிலிருந்து விடுபட்டுத் தனது பயணத்தை தொடரலானார்.‘அதற்குப் பின் எனது பெற்றோரை நான் பார்க்கவே இல்லை’ என கால்டுவெல் குறிப்பிடும் போது படிப்பவர் கண்களும் குளமாகி நிற்கின்றன. இந்த உலகப்பற்றுகளிலிருந்து விடுபடும் துணிவைத் தந்ததன் மூலமாக அவரிடம் எழுந்த இறைப்பற்று எத்தகையதாய் இருந்திருக்கும்? என உணர முடிகிறது.
 
இந்தியாவிற்கான பயணம்
 
1837-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30-ஆம் நாள் மேரி-ஆன் கப்பலில் தொடங்கிய பயணம் பழுது, விபத்து, உயிரிழப்பு போன்ற பல இன்னல்களுக்கிடையே தொடர்ந்தது. பயணத்தின்போது சி.பி.ப்ரௌன் என்பவரின் நட்பினைப் பெற்றுக்கொண்டார். இவர் சென்னை மாநிலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், நீதிபதி போன்ற உயர் அரசுப் பணியில் பணியாற்றி வருபவர். மராத்தி, பாரசீகம், அரபி, சிரியா, எபிரேயம், இத்தாலி சமஸ்கிருதம், தெலுங்கு, இந்துஸ்தானி, கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவரிடமிருந்து இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொண்டார். சிறுவயது முதலே இதுபோன்று கல்விப்புலமையுடையோரின் நட்பு கிடைக்கும் போதெல்லாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய நுண்ணறிவை வளர்த்துக் கொள்ளும் நற்பண்புடையவராக கால்டுவெல் விளங்கினார். 1838ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8ஆம் நாள் சென்னை வந்தடைந்த கால்டுவெல் 1841-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் திருநெல்வேலியை அடைந்தார். இந்தியாவிலுள்ள வெப்பமான பகுதிகளுள் ஒன்றான திருநெல்வேலியில் மூன்று மாதங்கள் கோடைக்காலமாகவும் ஒன்பது மாதங்கள் கடுங்கோடைக் காலமாகவும் வெப்பநிலை உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். இவ் வெப்பத்தின் நிமித்தம் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தவில்லை கால்டுவெல்.
 
திருநெல்வேலி சபை வளர்ச்சியின் புள்ளி விவரங் களை விக்டோரியா பேரரசியின் பொன்விழா மலரில் வெளிடப்பட்டுள்ளதை கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். இதை ஆழமாகச் சிந்திக்கும்போது திருநெல்வேலி கிறித்தவ வளர்ச்சியின் மீது பேரரசியார் கரிசனை கொண்டுள்ளார் என்பது புலனாகிறது.
 
திருநெல்வேலி ஒரு கிறித்தவக் களம்
 
சமயப்பணி மட்டுமன்றிக் கல்விப் பணிக்காகவும் கால்டுவெல் ஆற்றிய பணி அளப்பரியது. இலண்டன் இறைப்பணி இயக்கத்தினரின் பணித்தளங்களுள் தென்னிந்தியாவிலேயே முதன் முதல் பெண்கள் விடுதிப் பள்ளியைத் துவக்கியவரும் பின்னற்கலையை அறிமுகப் படுத்தியவரும் திருமதி கால்டுவெல் அம்மையாரே. திருநெல்வேலி திருச்சபையின் தந்தை ஸ்வார்ட்சு  என்றும் இரண்டாம் தந்தை இரேணியசு என்றும் குறிப்பிடும் கால்டுவெல், விக்டோரியா பேரரசியின் காலத்தைத் திருநெல்வேலியின் முன்னேற்றக் காலம் என்று குறிப்பிடுகிறார். இடையன்குடிப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு வேகமான கிறித்தவ வளர்ச்சிக்கு கால்டுவெல் ஆற்றிய பணிகளும் அடைந்த இன்னல்களும் அவரது தியாகத்திற்குச் சான்று பகர்கிறது. சமயப்பரப்புதலோடு நின்றுவிடாது, திருநெல்வேலி சபையின் ஆரம்பகால வரலாறு ((Records of the Early History of the Tinnevelly Mission)) என்னும் நூலையும் 1881-இல் வெளியிட்டுள்ளார்.
 
இறையியல் கல்வியினூடே ஏற்பட்ட  மொழி ஆராய்ச்சி
 
கிளாஸ்கோ நகரில் அறிவர் சார்ல் மார்ஸ் போன்ற அறிஞர்களின் அருளுரைகளில் பொதிந்து கிடந்த அழகிய மொழிநடை, கருத்துச் செறிவு, கற்பனை வளம் ஆகியன மொழி மீதான கவனத்திற்கு அடிகோலியது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, மொழியியல் பேராசிரியர் டேனில் சான்ஃபோர்டு அவர்களின் மொழியியல் புலமையைக் கண்டு வியப் படைந்ததாகவும், அதுவே தனக்கு  ஒப்பு மொழியியலின் ஆர்வத்திற்கு வித்திட்டது எனவும் குறிப்பிடுகின்றார். இதன் விளைவாக 1856ஆம் ஆண்டு “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” ((A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages)) என்னும் நிகரற்ற நூல் வெளிவரக் காரணமாக அமைந்தது. தமிழ் மொழி செம்மொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளது என உலகிற்குப் பறைசாற்றியதும் அதைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுந்த தொடர் முயற்சிகளின் பலனாகத் தமிழ் மொழி செம்மொழி என்னும் உயர் நிலையை அடைய நேர்ந்ததும் கால்டுவெல்லையே சாரும்.
 
சமூக மாற்றத்திற்கு அடிகோலிய இனப்பார்வையும் ஒடுக்கப்பட்ட நாடார் இன மக்களோடு ஏற்பட்ட ஈர்ப்பும்
 
இந்திய சமயத்தை சாதிய அடிப்டையில் எழுந்த சமயமாகக் கருதலாம். வருண அமைப்பில் உயர்நிலையில் இருந்த மக்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க சமயத்தைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டு, மற்றவர்களை அடிமைப்படுத்தி, தொடர்ந்து மேல்நிலையில் அமர்ந் திருக்க எண்ணினர். அதன்படி சமயச் செயல்களிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு ஆலய மறுப்பு, வழிபாடு, திருமண முறை, பண்பாடு, நீர் போன்றவற்றில் விலக்கினை அடைந்து துயருற்றிருந்த இனங்களுள் ஒன்றான சாணார் (நாடார்) இனமக்களை முதன்முதல் மதுரையில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார். அண்மையில்தான் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்த அவர்கள் திருநெல்வேலியி லிருந்து வந்திருந்ததாகக் குறிப்பிடுகின்றார். அவர்களுடைய நீண்ட காதுகள், நீண்ட கடுக்கன்கள், பெண்களைப் போல நீண்ட கொண்டையுடைய புறத் தோற்றமும் அவர்கள் அன்போடு அளித்த பனங்கள் கண்டு, இருகரங்களையும் கூப்பி நளினமாக வணக்கம் செலுத்திய முறை, அடக்கமான ஒடுக்கமான பேச்சு போன்றவற்றைக் கண்டு வியந்துவிட்டதாகவும் அவர்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். வடக்கே உள்ளவர்களின் கனிவற்ற, முரட்டுத்தனமான பேச்சில் பழக்கப்பட்டிருந்த தனக்கு நாடார் இன மக்களின் பணிவான, கனிவான பேச்சு முற்றிலும் மாறுபட்டிருந்ததாகவும் இந்த அடையாளங்கள் அனைத்தும் இந்த இன மக்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உறுதியாகக் காட்டுவதாக உள்ளது எனக் குறிப்பிடுகின்றார். கடுமையாக உழைக்கும் திறனுடைய உடலமைப்பும் வேகமாய் முன்னேறக்கூடிய செயல்திறன் கொண்ட உள அமைப்பும் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
சமுதாயத்தில் நாடார்களின் நிலைகளாக கால்டுவெல் கூறியவை
 
திருநெல்வேலிப் பகுதிகளில் சாணார்களும் பள்ளர்களும் பறையர்களும் தீண்டத்தகாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். உயர் சாதியினருக்கு இச்சாதியினர் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். நாடார்கள் சாணார்கள் என்றழைக்கப்பட்டனர். பனைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தினர். செய்யும் தொழிலின் தன்மையாலும் பொருளாதாரத்தில் தன்னிறைவு நிலையின்றிப் பிறரைச் சார்ந்து எதிர்நோக்கி நிற்றலாலும், மேல்மட்டத்தினரை அண்மி நிற்கும் தகுதி பெறாமையாலும் இப்பிரிவினர் சாதித் தட்டுகளின், கடை நிலைக்குள் அமிழ்த்தப்பட்டனர். எனினும் சூத்திர வருணத்தில் இடம்பிடித்திருந்தவர்களின் பட்டியலில் மேல்நிலையில் காணப்பட்டார்கள். நாட்டார் வழி பாட்டு மரபுகளைப் பின்பற்றி வந்தவர்கள். சமுதாய ஒடுக்கு முறைக்கு ஆளானவர்கள். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆகவேதான் சாதியக் கட்டுகளை உடைக்க சமயப் பரப்புதலை மட்டுமே கையில் எடுக்காது அடிப்படைத் தேவைகளான கல்வி, பொருளாதாரம் போன்றவற்றை  அளிக்கவும் கால்டுவெல் முனைந்தார். தொழில் திறனும், கடின உழைப்பும் இருந்தபோதிலும், உழைப்புக்கேற்ற ஊதியமும் வாழும் வழியும் பெறாதிருந்தனர். மேலைநாடுகளின் உதவி கொண்டு இவர்கள் வாழ்வு வளம்பெற  1849-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலே ‘திருநெல்வேலி சாணார்’ என்னும் நூலாகும்.
 
குழும சமயத்தழுவல் (Mass Conversion)
 
ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள, நாடார் சமூகத்தினர் கையாண்ட போராட்ட வடிவங்களுள் ஒன்றே கிறித்தவ சமயத் தழுவலாகும். சமய மாற்றத்திற்கு ஆன்மீகத் தேடல்களின் விளைவு மட்டுமே காரணமாக அமையாது. குழும மதமாற்றத்திற்குப் பின்னால் பல்வேறு சமூகக் காரணிகளும் அமைந்திருந்தன. சமூக, சமய, அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் சூழலில் பிற இனத்தவரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் நலன்களை வளர்த்துக் கொள்ளவும், தங்களிடையே வலுவான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், திறத்துடன் எதிர்த்துப் போராடவும் இச்சமுதாயம்  விரும்பி எடுத்துக்கொண்ட முடிவே கிறித்தவ குழும சமயத் தழுவலாகும். சமூக உயர்நிலையின் அடை யாளமாகத் திகழும் பண்பாட்டினைப் பெறுவதின் நிமித்தம் தங்களைச் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம் என்ற உணர்வு ஏற்பட கிறித்தவ சமயமே காரணமாயிருந்தது.
 
1785-இல் கால்டுவெல் கண்ட ‘முதல் திருநெல்வேலி கிறித்தவப் பதிவேட்டில்’ கிளாரிந்தா உட்பட 40பேர் இடம்பெற்றிருந்த பட்டியலில் ஒருவர்கூட நாடார் இனத்தவர் அல்ல. சீர்திருத்தக் கிறித்தவ ஆவணப் புத்தகத்தின்படி 1880-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் சீர்திருத்தக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டவர்கள் 50000 பேர்களாவர்.
 
அவற்றுள் 95 விழுக்காட்டினர் நாடார் குலத்தைச் சார்ந்தவரே ஆவர். 2013-ஆம் ஆண்டு கணக்கின்படி, 736 கிறித்தவ கிராமங்களும், 695 சீர்திருத்த கிறித்தவ ஆலயங்களும் 119 அருட்பணியாளர்களும் 3,30,858 பேர்கள் அங்கத்தினர்களாகவும் கொண்டு பரந்து விரிந்த திருநெல்வேலித் திருச்சபை 6 மருத்துவமனைகளையும் 350 கல்வி நிறுவனங்களையும் தன்னகத்தேகொண்டு நிகரில்லாச் சேவை மனப் பான்மையுடன் சமுதாயப் பணியாற்றி வருகிறது.
 
தொகுப்புரை:
 
1. திருநெல்வேலியில் கிறித்தவத்தின் வளர்ச்சி யானது எண்ணிக்கையிலும் ஆன்மீகத்திலும் தொடர்ந்து வேகமாகப் பயணிக்கிறது. 
 
2. தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாகப் பரிணமிக்கிறது.
 
3. நாடார்களின் குழும சமயத்தழுவலுக்கு கால்டுவெல்லின் அணுகுமுறைகளும்   முக்கிய காரணமாகும். சமயத்தழுவல் வாயிலாகக் கிடைத்த கல்வியும் பொருளாதார உயர்வும், சாதிய அடக்குமுறைகளுக்கும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உணர்வினை வெளிப்படுத்தும் துணிவைப் பெற்றதோடு சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையும் இலக்கினில் வெற்றியும் பெற்றனர்.
 
தான் மேற்கொண்ட முப்பணிகளையும் தொய்வின்றி ஒரு சேரச் செய்யும் திறனையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலையும் கால்டுவெல் பெற்றிருந்தார். தான் கண்ட மூன்று கனவுகளுமே பிற்காலத்தில் புகழின் உச்ச நிலையை அடைந்தன.
 
மலரும் நினைவுகளில் காணக்கிடக்கின்ற அரிய தகவல்களுள் நினைவை விட்டு நீங்க மறுப்பவைகள்:
 
இங்கிலாந்து முதல் இந்தியா வரையுள்ள கப்பற் பயணங்களில் எழுந்த அனுபவங்கள், சம்பவங்கள், கடற்கொள்ளை போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
 
நீலகிரியிலிருந்து திருநெல்வேலி வரையுள்ள கால்நடைப் பயணக்குறிப்புகள் வியப்பை அளிக்கின்றன. உயர்குலத்தைச் சார்ந்தவர்கள் ஓய்வெடுக்க அரசு செலவில் கட்டப்பட்ட சத்திரங்களும், பிற பயணிகள் தங்க பராமரிக்கப்படாத கொட்டகைகளும் சாலை யோரங்களில் இருந்த வரலாற்றுக் குறிப்பை அறிய முடிகிறது.
 
திருநெல்வேலியில் நிலவிய தட்பவெப்பநிலை, இயற்கை அழகு, வயல் வெளிகள், மக்கள் வாழ்க்கை முறை, பண்பாடு, நடைமுறையில் இருந்த வருண அமைப்பு போன்றவை காணக்கிடக்கின்றன.
 
விவிலிய மொழியாக்கம், வழிபாட்டுப் புத்தகம், கிறித்தவ கீர்த்தனைகள், இறையியல், இலக்கிய வளர்ச்சி, இன வளர்ச்சி, கிறித்தவ வரலாறு, திருநெல்வேலி வரலாறு போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுந்த பல அரிய நூல்களைப் படைக்கும் சிறந்த களமாக திருநெல்வேலி இருந்திருப்பதை அறிய முடிகிறது.
 
சுருங்கச் சொல்லின் ‘கால்டுவெல்லின் மலரும் நினைவுகள்’ ஒரு வரலாற்றுப் புதையல்.
Pin It