ambedkar 337இன்று, கல்வி அறிவென்பது பார்ப்பனர்களின் முற்றுரி மையாக உள்ளது. ஆனால், தம்மை உருவாக்கிய கத்தோலிக்க ஆலய வழிமுறைக்கு எதிராகப் போர் தொடுத்த அறிவு நாணயமுள்ள வால்டேரைப் போல, கெடுவாய்ப்பாக, தான் சார்ந்துள்ள மதத்தை எதிர்க்க எந்தவொரு பார்ப்பானும் இன்றுவரை முன்வரவில்லை. எதிர்காலத்திலும் எவனாவது ஒருவன் அப்படித் தோன்றுவான் என்றும் தெரியவில்லை.

ஏகபோக கல்வி மான்களான பார்ப்பனர்களிடையே ஒரு வால்டேர் தோன்றவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்க தாகும். “பார்ப்பனர்கள் படிப்பாளிகளே தவிர, அறிவாளிகள் அல்லர்” என்பதை நினைவில் கொண்டால் அது வியப்பாய் இருக்காது. ஒரு அறிவாளிக்கும்-படிப்பாளிக்கும் உள்ள வேறு பாடு, மலைக்கும்-மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது.

படித்தவன் வர்க்க உணர்வோடு அவன் சார்ந்த வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவான். ஆனால் ஒரு அறி வாளியோ வர்க்கக் கண்ணோட்டங்களுக்கு அப்பாற்பட்டு, விடுதலையடைந்தவனாகவும், முழு உரிமையுடன் சிந்தித்துச் செயல்படுவான். பார்ப்பனர்கள் படிப்பாளிகளேயொழிய அறி வாளிகளல்ல. எனவேதான் அவர்களிடையே ஒரு வால்டேர் உருவாகவில்லை.

பார்ப்பனர்கள் ஏன் ஒரு வால்டேரை உருவாக்கவில்லை? இந்தக் கேள்விக்கு, வேறொரு கேள்வியின் மூலமே விடையளிக்கமுடியும். முகமது நபி தோற்றுவித்த இஸ்லாம் மதத்தை, துருக்கியை ஆளும் சுல்தான் ஏன் அழித்தொழித்திட வில்லை?

எந்தவொரு போப்பாண்டவரும் ஏன் கத்தோலிக்க மதத்தைப் புறக்கணிக்க முன்வரவில்லை? நீலநிற கண்களை உடைய குழந்தைகளை எல்லாம் கொன்றிட பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் தீட்டாதது ஏன்? துருக்கியை ஆளும் முகமதிய சுல்தான், கிறித்துவ போப்பாண்டவர் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் எந்தக் காரணங்களுக்காக அந்தச் செயல்களைச் செய்யவில்லையோ, அதே காரணத்திற் காகவே பார்ப்பனர்களும் ஒரு வால்டேரை உருவாக்கவில்லை.

தனி ஒருவனின் தன்னலனே அல்லது அவன் சார்ந்த வர்க்க நலனே எப்போதும் அவனுடைய அறிவாற்றலைக் கட்டுப்படுத்தி, வழி நடத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பார்ப்பனர்கள் அடைந்துள்ள ஆளுமையும்-அதிகாரமும் இந்து வாழ்வியலின்படி அளித்துள்ள மேலாதிக் கமும், தாழ்ந்த பிரிவினரை வன்முறை மூலம் வலிமையற்ற வர்களாக்கியுள்ள நிலையும், பல்வகை இன்னல்களுக்கு இலக்காகியுள்ள பார்ப்பனர் அல்லாத பிரிவினர் என்றுமே நிமிர்ந்து நிற்கவோ, எதிர்த்துப் போராடவோ, பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை அச்சுறுத்தவோ கூட முடியாத நிலைக்கு இந்து நாகரிகமே காரணமாகும்.

ஒரு பார்ப்பான் வைதீகனானாலும் அல்லது வைதீகன் அல்லாதவன் ஆனாலும், புரோகிதனானாலும், குடும்ப அளவில் இருப்பவனாயினும், கற்றவனானாலும், கல்லாதனானாலும் பார்ப்பனியப் பெருமையைத் தாங்கிப் பிடிப்பதிலே ஒவ்வொரு பார்ப்பானும் இயல்பாகவே அக்கறை கொண்டிருக்கிறான்.

எப்படி இந்தப் பார்ப்பனர்கள் வால்டேர்களாக முடியும்? பார்ப்பனர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது என்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக உருவாக்கியுள்ள, ‘பார்ப்பனிய ஏகபோக நாகரிகத்தை’ப் பேணிக்காப்பதிலிருந்து விலகிப் போகும் ஆபத்தினைக் கொண்டதாகும். பார்ப்பனக் கற்றி வாளன் ஒருவனுடைய அறிவுத்திறமை, அவனுடைய தன்ன லத்தைப் பேணிக்காக்கும் போரார்வத்துக்குப் கட்டுப்பட்டது என்பதை கவனித்தில் கொள்ளவேண்டும். நாணயம் மற்றும் நேர்மைக்கு ஏற்றவாறு தன் அறிவாற்றலைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் பார்ப்பனர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள். நாணயத்துடன் நேர்மையுடன் சிந்திப்பதும் செயல்படுவதும் தங்களுடைய வர்க்க நலனுக்கும், தம் சுயநலனுக்கும் கேடு விளைவிக்கும் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

(1948 ஆம் ஆண்டில் மேதை அம்பேத்கர் எழுதிய “தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டது ஏன்?” என்ற நூலுக்கு அம்பேத்கர் எழுதியுள்ள முன்னுரையில் உள்ள ஒரு பகுதி இது)

Pin It