உருவத்தில் மட்டும் நல்ல தேங்காய்போல இருந்து; இயல்பான தன்மையில் இருக்க வேண்டியன எதுவுமில்லாமல் ஊள்ளீடற்று இருப்பதை ‘ஊமத் தேங்காய்’ என்று சுட்டும் வழக்கம் நம்மிடமுள்ளது. தேங்காய்களுள் வெகு அரிதான சில அப்படிக் காய்த்து விடுவதுண்டு. ‘ஊம வெயில்’ என்ற வழக்கும் இயல்பான நிலையில் இல்லாத வெயிலைக் குறிக்கின்றது.

பேச வேண்டிய இடத்தில் பேசாது இருக்கும் ஒருவரை ‘ஊமக் கோட்டான்’ என்று அழைப்பார்கள். பறவை இனத்துக் கோட்டான் நன்றாகக் கத்தும் தன்மை யுடையது. அது கத்தாமல் இருப்பது இயல்புநிலைக்கு மாறானது. இதனால்தான் இயல்பிற்கு மாறாகப் பேசாதிருக்கும் ஒருவரை ‘ஊமக் கோட்டான்’ எனும் வழக்கம் ஏற்பட்டிருக்கும். இவர்கள் பேச முடிந்தும் பேசாதிருப்பவர்கள். வாய்ப் பேசவே முடியாத ஒருவரைச் சமூகத்தில் ‘ஊமை’ என்று அழைப்பது, பாலினத்தைப் பொறுத்து ‘ஊமையன்’, ‘ஊமைச்சி’ எனச் சுட்டுவது உண்டு. இன்றைக்கு அரசு ஆவணங்கள் இவர்கள் உள்ளடங்கிய உறுப்பு, புலன்குறைவுற்ற அனைவரையும் ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று குறிப்பிடுகின்றன. ‘மாற்றுத் திறனாளிகள்’ என்பது இன்றைக்கு ஏற்பட்டுள்ள புது வழக்காகும். சமூகத்தில் இவர்களுக்கான அடையாளப் பெயர் என்பது பல்வேறு வகையினதாக உள்ளன. இலக்கிய வழக்கு இவற்றிற்கு முற்றாக வேறுபட்டிருக்கின்றது.

நமது பழைய சங்க இலக்கியங்களில், அதற்கும் பின் தோன்றிய இலக்கியங்களில் ‘புலன் குறை’, ‘உறுப்புக் குறை’ உள்ளவர் ‘ஊமன்’ என்று சுட்டி அழைக்கப் பட்டுள்ளார். (ஊம் - ஊமன் - ஊனன்).

தலைவன் ஒரு பெண்மீது கொண்ட காதலைப் பாங்கன் கேலிசெய்து இடித்துரைத்திருக்கின்றான். தலைவன் அதை மறுத்துத் தன் காதலை நியாயப் படுத்தும் வகையில் அமைந்தது குறுந்தொகையின் 58ஆம் பாட்டு.

‘என்னை இடித்துரைக்கும் நண்பரே! நுமது வேண்டுகோளை நிறைவேற்று முகமாக இத்துன்பத்தை யான் நிறுத்தி ஆற்றியிருப்பேனாயின் மிக நல்லது; அதுவே என் விருப்பமும்! ஆனால் இயலவில்லையே, சூரியன் காயும் வெப்பம்மிக்க பாறையின்மேல், கைகள் இல்லாத ஊமை ஒருவன், தன் கண்ணெதிரே பார்த்துக் காக்கின்ற, உருகும் வெண்ணெயைப் போல, இத்

துன்பம் என்னுள் பரவி அதிகமாகிவிட்டது; என்னால் பொறுத்துக் கொள்ளுதற்கு அரிதாக இருக்கின்றது (மடாலய உரை, ப. 92)’. இப்பொருளமைந்த அந்தப் பாட்டு,

இடிக்கும் கேளிர்! நும்குறை ஆக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல

பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே

(குறு. 58.)

என வருகின்றது. இங்குக் ‘கை’ உறுப்புக் குறை

உள்ள ஒருவர் ‘ஊமன்’ எனச் சுட்டப்பட்டுள்ளார். புறநானூற்றுப் பாடலொன்று ‘கண்’ புலன் குறைவுற்ற ஒருவரைக் ‘கண் இல் ஊமன்’ என்று சுட்டுகின்றது.

மன்னன் வெளிமானிடம் பரிசில் பெற எண்ணி வருகிறார் புலவர் பெருஞ்சித்திரனார். வந்தபின்னரே புலவர்க்குத் தெரிகிறது; மன்னன் இறந்த செய்தி. அப்பொழுது, தான் அறியாது வந்த நிலையை எண்ணி வருந்திப் பாடுகிறார். அப்பாடலில்,

...................................................

மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின்,

ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஓராங்குக்

கண் இல் ஊமன் கடற் பட்டாங்கு,

வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து

அவல மறு சுழி மறுகலின்

தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே

(புறம். 238: 15 - 20)

என்றொரு செய்தி வருகின்றது. மன்னன் இறந்ததை எண்ணி,

‘பிணத்தை இட்டுப் புதைத்து மூடிய தாழியின் குவிந்த மேட்டுப் பகுதியில், சிவந்த காதையுடைய ஆண் கழுகுகளும், பொகுவல் என்னும் அதன் பெட்டை களும் அஞ்சாதிருக்கவும், குரலெடுத்துக் கரையும் காக்கைகளும் கோட்டான்களும் கூடியிருக்கவும், பேய் தன் கூட்டத்துடன் தாம் விரும்பியவாறெல்லாம் சுற்றித் திரியவும் ஆகிய சுடுகாட்டினை விரும்பி, வீர அமுதை விரும்பும் வெளிமான் சென்றான்.

அவன் பிரிவால் வளையல்கள் நீக்கப்பட்டுப் பொலிவிழந்த அவன் மனைவியரைப் போலப் பாடும் புலவர்தம் சுற்றமும் பழைய அழகற்றுப் பொலிவிழந்தது. தொகுதியாக அமைந்த முரசின் கண்ணமைந்த பகுதிகள் தம்மை முழக்குவாரின்றிக் கிழிந்தன. மலை போன்ற யானைகளும் தம்மைக் காக்கும் பாகனின்றித் தந்தங்களை இழந்தன. கொடிய கூற்று இவ்வாறு பெரிய துன்பத்தைச் செய்ய, எம் தந்தை போன்ற என் தலைவன் வெளி மானும் அதனால் இறந்தது அறியாது நான் அவனை நாடி வந்தேன்; நான் இரங்குதற்குரியவன்; என்னைச் சேர்ந்த சுற்றம் இனி என்னாகுமோ?

‘மழை பொழிகின்ற இரவில் (கடல் நடுவே செல் கையில்) மரக்கலம் கவிழ்ந்துவிட, நீங்குதற்கு அரிய பெரும் துன்பத்துடன் கண்ணிழந்த ஊமையன் கடலில் விழுந்து துயரப்படுவதுபோல் ஆனேன். எல்லை அறியப் படாததும் பேரலையுடையதுமாம்! அக்கடலினும் கொடிய துயரில் பட்டுச் சுழல்வதில் இறப்பது நல்லது; நமக்குத் தக்கதும் அதுவேயாகும்’ (மடாலய உரை, ப. 380) என்று வருந்திப் பாடியிருக்கிறார்.

இந்தப் புறநானூற்றுப் பாட்டில் ‘கண்’ புலன் குறையுற்றவர் ‘ஊமன்’ என்று சுட்டப்பட்டுள்ளனர். ‘கை’, ‘கண்’ போன்ற உறுப்பு, புலன் குறைவுற்றவர் மட்டுமின்றி ‘வாய்ப்பேச முடியாத’ ஒருவரையும் ‘ஊமன்’ என்று சுட்டுகின்றது சங்க இலக்கியம்.

தலைவன் பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்றுவிடுகிறான். அதனால் தலைவி வருந்தித் துன்பப் படுகின்றாள். அன்றாடம் தலைவியின் நிலையை அருகிலிருந்து கவனித்திருக்கும் தோழி, தலைவியின் நிலை கண்டு ஆற்றியிருக்க முடியாதவளாகி அவளும் வருந்தித் துன்பப்படுகின்றாள். தோழியின் இந்த நிலையைக் கண்டு தலைவி இப்படிப் பாடுகிறாள்,

கவலை யாத்த அவல நீள்இடைச்

சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா

நோயினும் நோய் ஆகின்றே - கூவற்

குரால் ஆன் படுதுயர் இராவில் கண்ட

உயர்திணை ஊமன் போலத்

துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே (குறு. 224)

கிணற்றில் விழுந்த பசு படும் துயரத்தை இரவு நேரத்தில் கண்ணால் பார்த்த ஊமை மனிதனைப்போல, தோழி எனக்காகப் படும் துன்பத்தைப் பார்த்து, யான் என் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவள் ஆனேன். துன்பமுள்ள நீண்ட வழியில் சென்ற தலைவரின் கொடுமையை நினைந்து, யான் உறங்காது படும் துயரைவிட, கூடுதல் துன்பம் ஆனது தோழி எனக்காகப் படும் துயரம்.

தலைவன் பிரிந்துசென்ற துயரத்தைத் தோழியிடம் கூறி ஆற்றிக்கொள்ள முடியாதபடி, அவளும் துயருறு வதால், கிணற்றில் விழுந்த பசுவைப் பார்த்த ஊமனின் கதையாயிற்று எனப் புலம்புகிறாள் தலைவி (மடாலய உரை, ப. 271). அஃறிணை பசு கிணற்றில் விழுந்ததை ஊராரிடம் எடுத்துச்சொல்ல இயலாத வாய்பேச முடியாத மனிதர் ‘உயர்திணை ஊமன்’ எனப்பட்டுள்ளார். திரிகடுகப் பாட்டொன்றும் வாய்பேச முடியாதவரை ‘ஊமன்’ என்று சுட்டியிருக்கின்றது.

வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்

செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள்

அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்

துஞ்சூமன் கண்ட கனா   (திரிகடுகம், 7)

‘எங்ஙனம் வாய்பேச முடியாத ஊமையன் தான் கண்ட கனவைப் பிறருக்கு எடுத்துரைத்துப் பயன்படுத்த முடியாதவனாகின்றானோ, அதுபோல உள்ளான் என்னும் சிறு பறவை வாளை மீனைப் பிடிக்க முயற்சி செய்தலும், திறமையில்லாதவன் செல்வமுள்ள குடியில் பிறந்து அதனை ஆளக் கருதுதலும், கற்றார் பலர் கூடிய சபையில் அஞ்சும் இயல்புடையவன் கற்றுள்ள நல்ல நூலுணர்ச்சியும் ஆகிய இம்மூன்றும் பயன்படாதவைகள், (பு.சி. புன்னைவனநாத முதலியார் உரை, ப. 8)’ என்கின்றது அந்தத் திரிகடுகப் பாடல்.

உடல், புலன் உறுப்புகளுள் ஏதாவது ஒன்று குறைவுற்றுள்ள ஒருவரை ‘ஊமன்’ என்று சுட்டுவது பண்டைய வழக்கு என்பதைச் சங்க இலக்கியத்தில் உள்ள சில தரவுகள் காட்டுகின்றன. நம் காலத்தில் வாய்ப்பேச முடியாத ஒருவரை ‘ஊமையன்’ என்று சுட்டுகின்ற வழக்கு இருக்கின்றது. உடல், புலன் உறுப்புகளுள் ஒன்று குறைவுற்றோரைச் சுட்டிய ‘ஊமன்’ எனும் சொல்லிலிருந்தே ‘ஊமையன்’ எனும் சொல் வந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் பல கூறுகளை உள்ளடக்கி வழங்கிய ஒரு சொல் இன்றைக்கு ஒரு பொருளை மட்டும் சுட்டி நிற்கின்றது. அந்தச் சொல்லும் பிற்காலத்தில் வழக்கிழந்து போகும் என்பதற்கு மாற்றுக் கருத்தில்லை. ‘மாற்றுத் திறனாளி’ என்ற பொதுச் சொல்லை இன்றைக்கு உச்சரிக்கத் தொடங்கிவிட்டோம்.

துணைநின்ற நூல்கள்

1.புன்னைவனநாத முதலியார், பு.சி. (உரையும் பதிப்பும்). 1962 (மறு அச்சு). நல்லாதனார் இயற்றிய திரிகடுகம், மூலமும் விருத்தியுரையும், சென்னை: தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

2. தமிழண்ணல், அண்ணாமலை, சுப. (ப.ஆ.). தமிழண்ணல் (உ. ஆ.) 2002. குறுந்தொகை, மக்கள் பதிப்பு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

3.தமிழண்ணல், அண்ணாமலை, சுப. (ப.ஆ.). இரா. இளங்குமரன் (உ. ஆ.) 2002. புறநானூறு, மக்கள் பதிப்பு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

Pin It