தாய் பேசும் மொழியை குழந்தை தன் தாயிட மிருந்தே அனுபவம் சார்ந்து கற்றுக் கொள்வதால் அம்மொழி தாய்மொழி ஆகிறது.

students 350தாய்மொழியை ஆங்கிலத்தில் மதர் டங்க் (Mother Tongue) என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ஏன் மதர் டங்க் என்று அழைக்கிறோம்? இதற்கு உளவிய லாளர்கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள். பிறந்த குழந்தை முதன்முதலாய் தாயின் உடல்சூட்டையும், மார்பையும் தனது உலகமாக உருவாக்கிக் கொள்கிறது. பசித்து குழந்தை அழும்போதும், வளரும் போதும் பசிக்கிறதா என தாய் தன் குழந்தையை முத்தமிட்டுக் கேட்கிறாள்.

தாயின் நாக்கு அசைவதையும் குழந்தை பார்க்கிறது. அதிலிருந்து ஒலிக் குறிப்புகள் வெளிப்படுவதையும் உணர ஆரம்பிக்கிறது. தாயின் நாக்கு அசைவிலிருந்து தனது மொழியை குழந்தை பேசக் கற்றுக் கொள்வதால் தாயினுடைய ((Mother)) நாவின் (Tongue) அசைவி லிருந்து கற்கும் மொழி தாய்மொழி ஆகிறது. இங்கு தாயின் அன்பும், குழந்தை பெறும் அனுபவமும் மொழியாக உருமாறுகிறது...

இந்திய தேசிய இனங்கள் ஒவ்வொன்றிற்குமான மாநிலம் மற்றும் வட்டாரம் சார்ந்த மொழிகள் 216க்கும் மேல் உள்ளன. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதாக 22 மொழிகள் உள்ளன. அசாமி, வங்காளி, ஹிந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அந்தந்த மாநிலத்து மக்கள் பேசும் தாய்மொழியாக வடிவம் பெற்றுள்ளன. இருளர்கள், முதுவர்கள் போன்ற பழங்குடி மக்களின் வரிவடிவம் பெறாத மொழிகளும் உள்ளன.

கற்பிக்கும் நுட்பங்களை வெவ்வேறு முறையியல் களிலிருந்து தருவிக்கலாம். இவற்றில் ஒன்று காட்சிப் பொருளிலிருந்து கருத்துப் பொருளை கற்பித்தல் (concrete to Abstract). இரண்டாவது தெரிந்ததிலிருந்து தெரியாதது (known to unknown). மூன்றாவது முழுமையிலிருந்து பகுதி (whole to part). நான்காவது எளிமையி லிருந்து கடினம் (simple to complex) என அமைப்பாக்கம் பெற்றுள்ளது.

துவக்கக் கல்வியின் அடிப்படை என்பதே மொழி அடிப்படையில் தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றினைக் கற்றுக்கொள்வது. ஒரு குழந்தை அம்மா வோடு வாழ்கிறது, அம்மா அரவணைக்கிறாள், பாலூட்டுகிறாள், அம்மா என்று எழுத்தை சொல்லிக் கொடுக்கும் போது அக் குழந்தை அனுபவத்தின் அடிப் படையிலேயே அச்சொல்லைப் புரிந்து கொள்கிறது. தமிழ்வழிக் கல்வியில் அம்மா, ஆடு, இலை என எல்லா சொற்களும் இப்படித்தான் கிராமப்புறம் சார்ந்த ஒரு வாழ்வியலோடு இணைந்து இருக்கிறது. எனவே தாய் மொழியில் கல்வி கற்கும் போது ஒரு படைப்பாற்றல் மிக்க குழந்தை உருவாகும். தேர்வுக்காக மனப்பாடம் செய்யும் குழந்தைகளையும் இந்த திசைவழிப் பயணத்தி லேயே உருவாக்க வேண்டியது இருக்கிறது.

ஆங்கில வழியில் A for Apple என்று சொல்லிக் கொடுக்கும் போது ஒரு பழங்குடி கிராமத்துப் பிள்ளைக்கு ஆப்பிளைத் தெரியாது. தின்று ருசி பார்த்திருக்காது. ஆனால் மாம்பழம் தெரியும். கொய்யாப்பழம் தெரியும்... எனவே துவக்க நிலை தாய்மொழி வழிக் கல்வியிலும் பாடத்திட்ட முறையை வாழ்விலிருந்து உருவாக்கும் முறையியலாக மாற்றவேண்டும்.

தாய்மொழியில் கற்கும்போது அது குழந்தை களிடத்தில் மிகுந்த படைப்புத் திறனை (creative skill) உருவாக்குகிறது. இதன் அடிப்படையிலேயே மொழியையும் அறிவையும், மொழி அறிவு (Knowledge of language) மற்றும் மொழிவழி அறிவு (Knowledge through language) என இருமாதிரிகளாக நாம் புரிந்து கொள்ளலாம்.

தமிழை தாய்மொழியாகக் கொண்ட குழந்தை மொழிவழி அறிவு என்ற வகையில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிவழியைத் தேர்வு செய்து கற்பது ஒரு முறையியல் (Methodology) என்றே நாம் கருதவேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் குழந்தை சிந்திக்க முடியாது. தமிழ் வழியாகத்தான் சிந்திக்க முடியும். தாய்மொழி வழி சிந்திக்கும்போது ஏற்படும் படைப்புத்திறன் ஆற்றல் மிக்கதாகவே திகழ்கிறது.

ஒரு படைப்பின் உருவாக்கம் என்பது அனுமானம், தரிசனம், அனுபவம் என்கிற வகையில் புனைவின் மொழியாக நிகழ்கிறது. 

தொடர்புபடுத்தி கற்றல் (Learning by Association), உற்றுநோக்கி கற்றல் (Learning by Observation), அறிவு சார்ந்த கற்றல் (cognitive Learning) உள்ளிட்ட கற்பித்தல் முறையியல்களை படைப்புத் திறன் உருவாக்கத்தோடு கூட ஒப்பிட்டு நோக்கலாம்.

கற்றல் என்பது எழுத்துக்களை அ,ஆ,இ,ஈ என வாசிப்பதற்கும், எழுத்துக்களைக் கூட்டி சொற்களைச் சொல்வதற்கும், எழுதுவதற்கும் தெரிந்து கொள்ளுதல் என்பது ஒரு வகை. ஆனால் இந்த கற்றலை நமது நடத்தையில் (Behaviour) பல நேரம் நமது அனுபவத்தில் (Experience) ஏற்படும் ஒரு மாறுதலைக் குறிப்பதாகவும் சொல்லலாம். தெரியாத ஒரு கலையான நீச்சலை ஒரு சிறுமி கற்றுக் கொள்வதும் கற்றலில் அடங்கும். ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதும் கூட கற்றலின் விரிந்த பொருள் பரப்பில் இடம் பெற்று விடுகிறது.

நமது நாட்டார் வழக்காறுகளில் விடுகதைகள், (சொலவடை), பழமொழிகள், கதைப்பாடல்கள் என பல வடிவங்கள் உள்ளன. இந்த வகைப் படைப்புகளில் படைப்புக் கற்பனை (Creative imagination) அற்புதமாக வெளிப்படுவதைக் காணலாம். ஒரு குப்பியில் (பாட்டில்) ரெண்டு தைலம் (எண்ணெய்)அது என்ன? என நமது வீட்டின் பாட்டி விடுகதை போடும்போது அந்த வரிகளுக்கான பதிலை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறோம்.

ஒரு குப்பியில் ரெண்டு தைலம், நமது கற்பனைக்கு சவால் விடுகிறது. இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கான பதிலை ஒவ்வொன்றாக சொல்லிப் பார்த்து கண்டு பிடிக்க முயல்கிறோம். கடைசியாக இதற்கான பதில் முட்டை என்று கண்டடைந்தவுடன் நமது உணர்வு வியப்பால் உந்துகிறது. முட்டைக்குள் வெள்ளைக் கருவும், மஞ்சள்கருவும் ஒன்றாக இருக்கிறது. ஒன்றி லிருந்து மற்றொன்று வேறுபட்டும், ஒரே தருணத்தில் இணைந்தும் பிரிந்தும் இருப்பது ஒரு அதிசயத்தின் முடிச்சை அவிழ்க்கிறது.

குழந்தைக்கு தாய்மொழி வழி கற்பிக்கும் போது உருவாகும் படைப்புத்திறனை கவனத்திற் கொள்ளலாம். ஒரு குழந்தைப் பாடலை சொல்லிக் கொடுக்கிறோம்

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா

குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா

கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா

கிளியே கிண்ணத்தில் தேன் கொண்டு வா

இந்தக் குழந்தைப் பாடலின் வரிகளை கவனித்துப் பாருங்கள். இந்த வரிகளிலிருந்து சில பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன. காகம், குருவி, கொக்கு, கிளி என அந்த பறவைகள் குழந்தைக்கு அறிமுகம் ஆகிறது. அந்த பறவைகளின் நிறங்கள் நினைவலைகளுக்குத் தாவுகிறது. கறுப்புநிறம் (காக்கா), தவிட்டு நிறம் (குருவி) வெள்ளை நிறம் (கொக்கு), பச்சைநிறம் (கிளி) என இது நிறங்களின் உலகமாக மாறுகிறது. இவ்வகையில் புலன் உணர்ச்சிகளில் ஒன்றான ருசித்தல் (பால், தேன்), நுகர்தல் (பூ), உடல் உறுப்புகளும் பாடலின் வழியாக உணர்த்தப்படுகிறது.

ஒரு பாடலின் வரிகளிலிருந்து உருவாகும் விசித்திரங்களாகவும் இவற்றைக் கருதலாம். இத்தகையதான அறிதல்முறையே குழந்தைகளின் படைப்புத் திறனை வளர்த்தெடுக்கும் வழியை உருவாக்கும்.

Pin It