music 350உலகின் இயக்கம்யாவும் இசைமயமானது.  இதயத்துடிப்பும், எடுத்து வைக்கும் காலடிகளின் ஓசையும் கூட இசை வடிவமாகும்.  வீழும் மழையும், அழும் ஒலியும், தொழும் பாடலும் ஒலியை உருவாக்கும். 

மதுரை தோன்றிய காலந்தொட்டு இசை வளர இசைவுடன் இயங்கியே வந்திருக்கிறது.  சிற்றிலக்கியங்களில் பாணரின் யாழும் விறலியரின் பாட்டும் மதுரையை மதுரமாக்கியே வந்துள்ளது. 

நாயக்கர்கள் காலத்தில் மெட்டுக்காரர்களுக்கும் நவபத்கானா என்று பதினெட்டு வகை இசைகளாலும் மதுரை ஒலித்தே வந்துள்ளது.  மேள காரத்தெரு, சங்கீத விநாயகர் கோவில் தெரு என்ற பெயர்கள் மதுரையில் மட்டுமே காணமுடியும்.

புரியாத தெலுங்கு கீர்த்தனைகளையும், விளங்காத சமஸ்கிருத சாகித்தியங்களையும் மட்டுமே இசையெனச் சொல்லிவந்த பார்ப்பனிய இசைகளைப் புறம் தள்ளி ராகசக்கரம் எழுதி பூர்வீக சங்கீத உண்மை நூல் எழுதிய நாதசுர மேதை பொன்னுச்சாமி பிள்ளை பிறந்ததும் புகழோடு விளங்கியதும் மதுரையேயாகும்.  இடைப் பாரி நாயனத்தை உருவாக்கியவரும் இவரேயாம்.

இவரது பெயரர்களே தில்லானா மோகனாம் பாள் புகழ் எம்.பி.என் சேதுராமன், பொன்னுச் சாமி ஆகியோர்.

தம் வாழ்வில் நிகழ்ந்தவைகளையும் அறிந்தவை களையும் 1917 முதல் 1951 ஆம் ஆண்டு முடிய நாள்விடாது நாட்குறிப்புக்களைப் பதிவு செய்த மதுரகவி பாஸ்கரதாஸ் “முத்தமிழ் க்ஷத்ர மதுர பாஸ்கரதாஸ்” என சேதுபதி மன்னரால் செப்பரிய புகழ் விருது பெற்றவர்.

பெரும் பெரும் புலவர்களாலும், சங்கீத மேதைகளாலும் ‘நீ நல்லா வருவே!’ என ஆசீர் வாதம் பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமி மதுரையின் வீணை இசை சிகரமான மதுரை சண்முக வடிவின் மகளாவார்.  குஞ்சம்மாள் என இயற்பெயருடைய எம்.எஸ். சுப்புலட்சுமி மகாத்மா காந்தியாலும்.  நேருவாலும் போற்றப்பட்ட பெருமிதமுடையவர்.

பெயரைச் சொல்லும்போதே மண்ணதிரக் கைதட்டல்கள் எழுந்ததென்றால் அது சோழ வந்தான் டி.ஆர். மகாலிங்கம்தான்.  ‘நந்தகுமார்’ படத்தில் அறிமுகமாகினார் என்றாலும், இவரை உச்சத்தில் வைத்தது ‘ஸ்ரீ வள்ளி’தான்.  வேல

னாகவும் வேடனாகவும் விருத்தனாகவும் தோன்றி

இசைப் பாடல்களை அருவியெனப் பொழிந்த டி.ஆர்.மகாலிங்கம் மதுரையில் பிறந்த மகத்துவ மான இசைப்பாடகர்.

மதுரை நாடகக் கலை வளர்ச்சிக்குச் செய்த தொண்டு எண்ணிலடங்காதது.  மதுரையில் இறைவன் சிவபெருமானே விரும்பி ஏற்ற வேடம் பாணபத்திரருக்காக யாழேந்திப் பாடிய வேடம் தான் எனப் புராண உணர்வுள்ளர்கள் புகழு கின்றனர்.

மதுரையில் பிறந்த இசைவாணர்கள்தான் நாடக உலகிலும் கோடம்பாக்கத்திலும் ஓங்கிய புகழ் பெற்று விளங்கி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.  டி.எம்.சௌந்திரராஜன் இதற்கு உதாரணம்.

மதுரை மணி அய்யர், மதுரை புஷ்பவனம், பாடகர் சுப்பிரமணிய பிள்ளை, வேலனாக வேட மிட்டாலும் வெள்ளையரைச் சாடியே பாடிய திருமங்கலம் எஸ்.எஸ். விசுவநாத தாஸ், பன்னி ரண்டு வயதிலேயே நடிக்க வந்து பாட்டுடன் நாட்டுணர்வும் ஒலிக்கச் செய்த திருமதி

கே.பி.ஜானகியம்மாள், இவர்களெல்லாம் இசை வளரச் செய்வதற்காக மதுரையில் அவதரித்த இசைவாணர்கள்.

மதுரை சோமு, ஹார்மோனியம் குருசாமி பிள்ளை, இசைக்கென நூல்கள் எழுதிய பேரா சிரியர் வீ.ப.கா. சுந்தரம், மேடையில் பாடவும் செய்த நடிகர் பேராசிரியர் ஆ.சிவக்கண்ணன், அருட்பா வே.மகாலிங்கம் போன்றவர்களெல்லாம் இசைப்பயிர் வளர்த்த இனியவர்கள்.  சீர்காழி கோவிந்தராசன் இவரோடு முன்னணியில் நின்றவர்.

இவர்களுக்கெல்லாம் சிகரம் என நின்ற பெருமைக்குரியவர் தமிழிசைச்சுடரென உலகோர் போற்றும் மதுரை மாரியப்ப சுவாமிகள்.  இரண்டாம் தமிழான இசைப்பயிர் வளர நாளும் உழைத்த சங்கீத நாயகர்.

தியாகையரும் முத்துத் தாண்டவரும், முத்துச் சாமி தீட்சிதரும் மட்டுமே இசைப் பெரும் புலவர்கள் எனப் பார்ப்பன வட்டாரம் பறைசாற்றி வந்தபோது நிலைத்திருப்பதும், நீடு புகழ் தர வல்லதும் இசைத்தமிழே; தமிழிசை மட்டுமே தரணியில் புகழ்தரும் எனத் தமிழ்ப்பாடல்களால் புகழ் பெற்றவர் மதுரை மாரியப்ப சுவாமிகள்.

பேசவும், பாடவும், சங்கீத பிர்க்காக்களை சரம் சரமாகப் பொழியவும் ஒரு பாடகருக்கு நாக்கு வளம் தேவை.  இந்த நாவையே இவர் திருச் செந்தூர் முருகன் முன் அறுத்தெறிந்து பின் குமரனருளால் அறுந்த நாவை மீண்டும் பெற்றவர்.

மதுரை உணவுக் கலாச்சாரமிக்க மண்.  மதுரையின் இட்லியும் பொங்கலும், சமையல் கலையும் பெயர் பெற்றவைகள்.  அருமையான சாப்பாட்டுக்கு மதுரையே என்பதால் நாடகக் கலைஞர்கள் பக்கத்து ஊர்களில் நாடகம் போட்டாலும் உணவருந்த வருவதென்னவோ மதுரை உடுப்பி ரெஸ்டாரெண்ட்தான்.  இந்த உணவகத்தில் சாப்பிட மதுரகவி பாஸ்கரதாஸ், மாரியப்ப சுவாமிகள், டி.கே.எஸ். சகோதரர்கள் அடிக்கடி வருவார்கள்.

இன்று இந்த உணவகம் மறைந்து போத்தீஸ் நிறுவனமாகி விட்டது, மதுரை உணவுச் சுவைஞர் களுக்கு இழப்பாகும்.

மாரியப்ப சுவாமிகள் முகவை மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் மண்டலமாணிக்கம் ஊரை ஒட்டிய சிற்றூரான ‘பல்லி முட்டை’ எனும் ஊரின் கண் பிறந்தவர்.  1902 ஆனித்திங்கள் எட்டாம் நாள் வண்டியூர் மாரியம்மன் அருளால் பூச்சன் செட்டியார் அலமேலு இணையருக்கு மூன்றாம் மகனாய் உதித்தனர்.  மாரியருளால் பிறந்ததால் மாரியப்பனானவர்.  “ஆவேட்டி மடலார் லு’ எனும் மட்பாண்டம் செய்யும் குலாலர் மரபில் தோன்றி முகம்மதியப் பெரியார் ஒருவர் மூலம் கல்வி கற்றவர்.

சண்முகானந்த நாடக சபையில் தூத்துக் குடியில் தோன்றிய நாடகத் தந்தை டி.டி. சங்கர தாஸ் சுவாமிகளிடம் தம் ஏழாம் வயதில் மாரியப்ப சாமிகள் மாணாக்கரானார்.  சேர்ந்த சின்னாட் களிலேயே சாமிகள் சட்டாம் பிள்ளையானார்.  இங்கே பயிற்சி பெற்றவர்கள் எஸ்.ஜி. கிட்டப்பா, யதார்த்தம் பொன்னுச்சாமி, எம்.வி. மணி, நவாப் டி.எஸ். இராஜமாணிக்கம், பின்னாளில் நடிக வேளாக அறியப்பட்ட எம்.ஆர். இராதா,

பி.டி.சம்பந்தம் முதலிய ஜாம்பவான்களாவார். மாரியப்ப சாமிகள் இந்துஸ்தானி இசையில் கவாய் இசை கைவரப் பெற்றதால் கவாய் மாரி யப்பன் என்று அழைக்கப்பட்டவர்.  இவரோடு ஈடுகொடுத்து நடித்தவர்கள் பின்னாளில் பிரபல மான நடிகைகளான பாலாமணி, மதுரை டி.டி. தாயம்மாள், பாலாம்பாள் முதலிய பெண்மணி களாவர்.

மாரியப்பசாமிகள் நாடக உலகில் பிறர் துயரம் காணப் பெறாதவர்.  எவரையும் எளிதில் நம்பும் எளிமைத் தன்மையுடையவர்.  இதனால் பல நாடக காண்ட்ராக்டர்கள் நாடகங்களை நடத்தி முடிந்ததும் வசூல் பணத்தைத் தராமல் ஏமாற்றினர்.

அக்காலத்தில் இது அதிகமாக இருந்தது.  கலையைத் தவிர வேறெதும் தெரியாத கலைஞர்கள் வாழ்வில் வறுமை இதனால்தான் எழுந்தது.

கேரளாவில் நடந்த சம்பவங்கள் இதை உறுதி செய்தன.  பாதி நாடகம் நடந்த போதே ஒப்பந்தக் காரர் பணத்துடன் ஓடிவிட சாமிகள் மனக் கலக்க மடைந்து நடந்தே திருச்செந்தூர் வந்தடைந்தார்.

கடற்கரையில் அமர்ந்து தன் கதி நினைத்து கலங்கிய சாமிகள் கால்கள் செல்லும் பாதையில் நடந்து திருச்செந்தூர் அருகே அம்மன்புரம் சென்று அங்கு திருக்கியம்மாபேட்டை எனும் மகாகாளி கோவிலில் அமர்ந்தார்.  என்ன நினைத் தாரோ கீழே கிடந்த இரும்புத் தகட்டைக் கொண்டு தனது நாவை அறுத்துக்கொண்டார்.

தகவலறிந்த மக்கள் இவரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றபோது அவரே மறுத்ததால் திருச்செந்தூர் கோவிலில் அமர வைத்தனர்.  தகவலறிந்த சங்கரதாஸ்சாமிகள் செந்தூர் வந்து தேற்றினார்.  பின் முருகனிடம் “வகர இல்லில் வளரும் கந்தனே” எனும் பாடல் பாடி வணங்கி மாரியப்ப சாமிகளைக் குணப்படுத்த வேண்டி நின்றார்.

‘மூன்று ஆண்டு கோவில் வாசத்திற்குப் பின் நாக்கு வளர்ந்த மாரியப்ப சாமிகளின் வயது அப்போது பத்தொன்பது’ என்று அவருடைய பேரன் அரங்க கிரிதரன் கூறுகிறார்.

‘செந்திலாண்டவன் கீர்த்தனை’ எனும் அரிய நூல் பாடிய மாரியப்ப சாமிகள் வாழ்க்கை அதன் பின் கொடிகட்டிப் பறந்தது.  எல்லா இடங் களிலும் சொந்தப் பாடல்களையே பாடினார்.  தமிழகம் முழுவதும் கால் பாவாத இடமில்லை எனுமளவு சங்கீதக் கொடி நாட்டினார்.  பல இசைக் கலைஞர்கள் குறிப்பாக நாதஸ்வரக் கலைஞர்கள் இவரது பாடலையே பாடி இசை முழக்கம் செய்தனர்.  இவரைப் பின்பற்றி பலபேர் பாடத் தொடங்கினர்.

தமிழத்திரைப்பட உலகில் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா போன்ற படங்கள் இவரது பாடல்களைத் தாங்கி வந்தன.  ஜோதி அல்லது ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் (1939) படத்தில் மாரியப்பசாமிகள் இசை அமைத்தார்.  பிரபல மான பாடலாசிரியர் கம்பதாசன் இவரது மருமகனாவார்.

இவரது மூத்த மகன் மா.முருகேசன் மறைந் தாலும் இரண்டாவது மகன் மா. வீரபாகு இன்று மதுரை கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.  பேரன் அரங்க கிரிதரன் இரயில்வேயில் பணி புரிகிறார்.

வாழும் காலத்தில் பெரும்புகழோடு தமிழிசை உலகில் சிகரத்தில் நின்ற மாரியப்ப சாமிகள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.  பாவேந்தர், எம்.கே.டி. பாகவதர்.  திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை, கலைவாணர் என்.எஸ்.கே. தமிழவேள்.  பி.டி. ராஜன், தி.மு.க. தலைவர்

சி.என். அண்ணாதுரை, எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றவர்களின் இதயக்கனியாகத் திகழ்ந்தார்.  தன் தமிழ்ப் பாடல்களால் வாழ்நாள் இறுதிவரை தமிழை வளர்த்தவர்.

மதுரைக்குப் பெருமை சேர்த்த மகோன்னத மனிதரான இசைச் சித்தர் மாரியப்ப சுவாமிகள் 1967 சூன் 19 இல் மூத்த மகள் வீட்டில் தான் வணங்கும் முருகனிடம் தன்னுயிரை ஒப்படைத் தார்.

மதுரையின் மணியான மாரியப்ப சுவாமிகள் மரணம் மதுரையை உலுக்கியது.  மக்களின் கண்ணீர்தான் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயாக மாறியதோ? என நினையும் வண்ணம் மதுரை கண்ணீர் சிந்தியது.

21.6.1967ல் திருப்பரங்குன்றம் மலையின் பின்புறமுள்ள நிலையூரில் உடல் அடக்கம் செய்யப்பட நிலையூர் நிலைத்த புகழ் பெற்றது.

மதுரையின் பண்பாட்டு வளர்ச்சி தானாக வரவில்லை.  அது மாரியப்ப சுவாமிகள் போன்ற மனிதப் புனிதர்களின் அருளாலும்தான் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய நிஜம்.

தகவல்: அரங்க கிரிதரன்

(சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரன்)

Pin It