madurai 600

நாகரீகமடைந்துவரும் நகரங்களில் மதுரையும் ஒன்றெனப் பெருமிதமாகப் பேசப்படுகிறது. ஆனால் அடிப்படையில் மதுரை பல கிராமங்களின் கூட்டுக் கலவைப் பண்பாட்டால் உருவானது. பல கிராமங்களின் தாய்க்கிராமம் என்றுகூடக் கூறலாம்.

சிலப்பதிகாரத்திலும், மதுரைக் காஞ்சியிலும் வணிகச் சிறப்புடைய நகரமாகப் பேசப்படும் மதுரையில் நாளங்காடி எனும் பகல்நேரக் கடை களும், அல்லங்காடி எனப்படும் இரவு நேரக் கடை களும் இன்றும் உள்ளன. இரவும் பகலும் உயிர்ப் புடன் இருப்பதாலேயே மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் உண்டு. இன்று அல்லங்காடியில் புரோட்டா கடைகள் தான் அதிகம்.

முதல் நாள் இரவு பத்து மணிக்கு திருமணத்தைப் பேசி முடித்துவிட்டு மறுநாள் காலை எட்டுமணி அளவில் தாலி உட்பட அனைத்தும் வாங்கி 9.00 மணிக்கு திருமணத்தை முடித்துவிடக்கூடியது மதுரை நகர் வாழ்க்கை என்பர்.

மதுரையின் ஒவ்வொரு வீதிகளும் ஒவ்வொரு வகையில் வணிகச் சிறப்புடையவை. மீனாட்சி அம்மனின் நேரடிப் பார்வை வீதி என வழங்கப் படும் அம்மன் சன்னதி விட்டவாசல் பகுதியி லிருந்து தொடங்கி வடக்கும் தெற்குமாக நீள வாக்கில் விரிந்து காணப்படும் வீதியாகும். அரிசி, புளி, எண்ணெய் முதல் மகப்பேறுப் பொருட்கள். அந்தணர்களின் வேள்விக்கான தர்ப்பை, சந்தனம் குங்குமம் வரையிலும் விற்கப்படுகிற விரிவான மதுரைச் சந்தை வீதி கீழமாசி வீதி. எந்நேரமும் நெருக்கடியான மதுரைத் தெருக்களில் மாசி வீதி முதலிடம் வகிக்கிறது.

புதுமண்டபம் தொடங்கி கீழ வெளிவீதி வரை யிலான சுவாமி சன்னதி எழுகடைத் தெருவில் மலிவுவிலையில் தரமாகக் கிடைக்கும் ஆடைகள் கிராம மக்களின் ‘ஷாப்பிங்மால்’ ஆகும். பாய் தலையணைகளும் விற்கப்பட கிராமமக்கள் கல்யாணத்திற்கு வாங்குகின்றனர்.

இறந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கான மூங்கில், அஸ்திக்கலசம், பத்தி முதலான பொருட்களுடன் இறந்தவரைப் போர்த்தி கால்கை - நாடிகளில் கட்டிப் போடுவதற்கான வெள்ளைத்துணியும் ஆயத்தமாகக் கிடைக்கும் பகுதி சுவாமி சன்னதி.

அழகர் திருவிழாவின் போது அணியப்படும் சல்லடம், ஜரிகைக் குல்லாய்களுடன் நூற்றுக் கணக்கான தையற்காரர்கள் புது மண்டபத்தின் மையத்தில் கடை விரித்துக் காத்திருக்க வடபுறம் பள்ளிப் பிள்ளைகளின் பயிற்சிக் குறிப்பேடு முதல் கல்லூரி மாணவர்க்கானப் புத்தகங்களும் இங்கு மட்டும்தான் கிடைக்கும், தென்புறம் பாத்திரக் கடைகள் கிராம மக்களின் தேவைகளை நிறை வேற்றுகின்றன.

கீழே ஆவணி மூலவீதியில் பள்ளி, கல்லூரி வணிக நிறுவனங்களுக்கான குறிப்பேடுகள், பென் சில பேனா, ஜியாமட்ரிபாக்ஸ் உபகாரணங்களுடன் உடனுக்குடன் செய்துதர ரப்பர்ஸ்டாம்ப் கடை களும் உள்ளன. வங்கிகளும் இப்பகுதியில் உள்ளன.

தெற்கு மாசி வீதியில் பாரம்பரியமான விளக்குத் தூண், பத்துத் தூண் தெருக்கள் தொடங்கி முழு வதும் ஜவுளிக்கடைகள், ரெடிமேட் ஆடைகள் விற்பனை, புகழ்பெற்ற தேவாங்கர் மடத்தில் விற்கப் படும் மதுரையின் புகழ்பெற்ற சுங்கடிச் சேலைகள் விற்கப்படுகின்றன.

இவ்வீதியின் பின்புறமுள்ள தெற்கு ஆவணி மூலவீதி நூற்றுக்கணக்கான தங்கம் வெள்ளி அங்காடிகள் நிறைந்த பகுதியாகும். பல கோடி ரூபாய் வணிகம் இந்த நகைக்கடைகளில் நடை பெறுகின்றன. நகைப்பட்டறைகள் ஒரே தெருவில் நூற்றுக்கணக்கில் காணப்படுவது இதன் சிறப்பு.

மதுரையின் வடக்கு மாசி வீதி யாதவர்கள் மிகுதியும் வாழும் பழைமை வாய்ந்த பகுதியாகும். சரக்குகளைக் கையாளும் லாரிகள், வேன்கள் என எந்த நேரமும் பரபரப்பாக இருக்கும். இந்தியா முழுமையிலும் இருந்து கொணரப்படும் சைக்கிள், உதிரி பாகங்கள் மற்றும் விளை பொருட்கள் இங்கு ஏற்றி இறங்க போக்குவரத்து ‘விழிபிதுங்க’ வைக்கும்.

வடக்கு ஆவணி மூலவீதியிலும் இதே நிலை தான். வடக்கு வெளிவீதியில் அலைபேசிக் கடைகள் நிறைந்த விற்பனை நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு நடைபெறுகிறது.

வடக்கு ஆவணி மூலவீதியில் மதுரை வரும் சுற்றுலா வாகன நிறுத்தங்கள் இங்கு உள்ளன. எந்த நேரமும் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இப்பகுதியில் சுற்றுலா தொடர்பான பொருட்கள் விற்பனையாகின்றன.

மதுரை மேலமாசி வீதியின் நிலமதிப்பு மதுரையின் பிற பகுதிகளை விடவும் அதிகம். எலக்ட்ரானிக் பொருட்கள், கணிப்பொறி மின் சாதனங்கள், இரும்புக்கடைகள் அதிகம். இதன் மேற்கு வீதியான டவுன்ஹால் சாலை மதுரையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை. இங்கு வெளியூர் சுற்றுலா, விற்பனைப் பிரதிநிதிகள் தங்குவதற்கான தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. வட மாநில மக்கள் அதிகம் வருவதால் ராஜஸ் தான், குஜராத்தி, மும்பை போஜனாலாயாக்கள் எனப்படும் உணவு விடுதிகள் நிறைய உள்ளன. டூரிஸ்ட் கைடுகளும் இங்கு உள்ளனர்.

இதன் எதிரில் உள்ள மேலக்கோபுரத் தெருவில் விளையாட்டு சாமான் கடை, சினிமா திரையரங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பழனி யப்பா, மீனாட்சி புத்தக நிலையங்கள் உள்ளன. ராஜஸ்தான் வணிகர்களின் வளையல்கள் அதிகம் விற்பது இதன் அருகில்தான்.

மதுரை என்பது அண்டைய மாவட்டங் களுக்கும், கிராமங்களுக்கும் விரிந்த ஒரு நகர் சார்ந்த சந்தையாகும். தாயைத் தவிர எல்லா வற்றையும் விலை பேசி வாங்கிவிடலாம் என்று மதுரையின் வணிகச் சிறப்பைப் பற்றி விரிவாகப் பாராட்டுகின்றனர்.

மதுரையில் வாங்குகிறார்களோ இல்லையோ? எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் நின்ற படியே பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். மதுரையைச் சுற்றிய கழுதையும் போகாது என்பது பழமொழி.

மதுரை நகர வளர்ச்சிக்கு மதுரையைச் சுற்றி உள்ள கிராமங்களே மூலாதாரம் என்பது ஆதி நாள் முதல் நிலவிவரும் உண்மையாகும்.

மதுரைக்கு வரலாற்றுப் பெருமை உள்ளது போல சுற்றியுள்ள கிராமங்களும் பெருமை பெற்றவை. இக்கிராம மக்கள் சேற்றில் கால் வைப்பதால்தான் மதுரை மக்கள் சோற்றில் கைவைத்து சுகம் பெற முடிகிறது.

மதுரையின் அருகே உள்ள கிராமங்களின் அன்றாட வரவான காய்கறிகள் பழங்கள்தான் மதுரைக்கு ஆக்சிஜனாக உள்ளன. ஒருநாள் இக்கிராமங்கள் பொருட்களை அனுப்ப மறந்து விட்டால் மதுரை மக்களுக்கு உணவு வெறும் கஞ்சி தான். பயன்படும் உப்புகூட தூத்துக்குடி இறக்குமதி தான்.

அலங்காநல்லூர்:

மதுரையின் வாழ்வில் உயிர் நாடி என்றால் அலங்கா நல்லூர்ப் பகுதியில் விளையும் அரிசியும், காய்கறி பழங்களும்தான். இளநீர், பப்பாளி பழங்கள் தென்னை விளக்குமாறுகளும் இங்கே இருந்து, வருகின்றன.

உலக சுற்றுலா மகிழ்விடங்களில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடக்கும் இந்த ஏறுதழுவல், மாடுபிடித்தல் எனும் வீர விளையாட்டைக் காண வெளிநாட்டு மக்கள் நிறைய வருகின்றனர். இதற்கென்றே ஊரின் மையத்தில் அரங்கமும் உண்டு;

மதுரையில் சித்திரைத் திருவிழாவை திரு மலை நாயக்கர்தான் நடத்த முடிவெடுத்தார். இதற்கு முன் அலங்காநல்லூரின் அருகில் உள்ள தேனூரில்தான் இவ்விழா நடந்தது.

பொய்கைகரைப்பட்டி, கல்லம்பட்டி, சத்திரப் பட்டி வழியாக வரும் கள்ளழகருக்கு அலங்கா நல்லூரில்தான் அலங்காரம் செய்யப்படும். இதனால் இதற்கு அலங்காரநல்லூர் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முனியாண்டி கோவில் ஜல்லிக்கட்டு விழாவில் முதற்காளையை அனுப்பிவைக்கும். அதன்பிறகே வாடி வாசல் திறக்கப்படும்.

வைகை பேரணை வழங்கும் பெரியாறு பிரதான வாய்க்கால் ஊருக்கு வளமை தருகிறது. இங்கு நெல், வாழை, மாம்பழம், காய்கறிகள், கரும்பு விளைய மதுரைக்கு வருகின்றன. இங்குள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழகத்தில் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு கரும்பி லிருந்து பிழிந்து பெறப்படும் ஜீனி, வெல்லம் தென் மாவட்ட ரேஷன்கடைகள் மதுரை நகரக் கடை களுக்கு வருகின்றன. வெல்லம் காய்ச்சுதல் இவ் வூரின் பிரதான தொழிலாகும்.

.புதுப்பட்டி

தனிச்சியம், குட்டிமேய்க்கிப்பட்டி, செம்புகுடி பட்டி என்று பட்டிகளின் உள்ளடக்கமான அலங்கா நல்லூரை ஒட்டிய அ.புதுப்பட்டியில் இந்த நாகரீக டாஸ்மாக் காலத்திலும்கூட ஊருக்குள் புகை பிடித்தாலோ, மதுவருந்தினாலோ, வெற்றிலை புகையிலை பயன்படுத்தினாலோ ஊர்க் கூட்டத்தில் நிறுத்தி அபராதமும் தண்டனையும் வழங்கப் படுவ தென்பது முன்னாளில் மட்டுமல்ல, இன்னாளிலும் நடப்பதாகக் கூறுகின்றனர்.

சேந்தமங்கலம்:

அலங்காநல்லூர் அருகில் உள்ள இவ்வூரில் முருங்கை, புளி, மாம்பழம் விளைச்சல் அதிகம். இவைகள் அனைத்தும் மதுரையின் தெருக்களுக்கு காலை ஐந்து மணிக்கே வண்டி கட்டி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின் முக்கிய விளைபொருள் கொய்யா, முருங்கை என்பது முக்கியமானது. பப்பாளிப் பழங்கள், காய்கறிகள் விளைச்சல் அதிகமான ஊர்களில் இதுவும் ஒன்று.

ஆயத்தப்பட்டி

மேலூரை ஒட்டி உள்ள இவ்வூர் அழகர் திருவிழாவுடன் சம்பந்தப்பட்டது. அழகர் திரு விழாவின்போது கிராமங்கள் கூடித் தேர் இழுக்க முடிவு செய்யும் கூட்டம் இங்குதான் நடக்கும்.

கவுண்டர் மரபின் பாளையப்பட்டியாரும் தெற்குத் தெரு, வடக்குத் தெரு, மேலத்தெரு, மூன்று ஊர் கள்ளர் மரபினரும், தெற்குத் தெரு என்பது நான்கு ஊர்களிலும் வாழும் பத்துக் கரைக்காரரைக் குறிக்கும். வடக்குத் தெருவில் அ.வாள பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம் மேலத்தெரு. இதற்கு நடுவளவு என்ற பெயரும் உண்டு.

நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, சுத்தப் பட்டி, ஆயத்தப்பட்டியில் அடங்கும்.

மீனாட்சிபுரம் கல்வெட்டு வரலாற்றுப் புகழ் மிக்கது அ.வல்லாளபட்டி- சிட்டம்பட்டி இடையே உள்ள மீனாட்சிபுரத்தில் தமிழ் பிராமிக் கல் வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. கழுகுமலை என்ற இவ்வூர் மலைக்கு ஓவாமலை என்ற பெயரும் உண்டு. இம்மலைமீது மயிலாடும் செடிகள் (குநசளே) நிறைய உள்ளன. இது ஒரு அபூர்வச் செடிவகை யாகும்.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் பாண்டியன் நெடுஞ் செழியனால் பொறிக்கப்பட்ட தமிழகத்திலேயே பழமையான கல்வெட்டு உள்ளது. கழுகுகளின் எச்சம் இருந்ததால் கழுகு மலை என்றும் அழைக்கப் படுகிறது.

மதுரையின் கிரானைட் கொள்ளையர்கள் இம்மலையையும் பாழ்படுத்தி சிதைத்துவிட்டது கொடுமைதான்.

மதுரை மேலூர் பகுதியில் உள்ள தொல்லியல் பெருமை வாய்ந்த கோவில்களும் மலைகளும் கிரானைட் வேட்டைக்கு இலக்காகி அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளாங்குடி:

மதுரை திண்டுக்கல் சாலையில் உள்ள விளாங்குடிக்கு வேளாண்குடி என்ற பழம்பெயர் உண்டு. கோனேரி நின்னடிகொண்டான் என்ற விக்கிரமபாண்டியனுக்கு விளாங்குடி நாயனார் கோயில் எழுப்பியுள்ளார். இவ்வூரில் இருந்த மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிற்பங்கள் வைணவ எழுச்சிக்குப் பயந்து, மதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறுகின்றனர்.

கூத்தியார்குண்டு:

மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில் கிழக்கே உள்ள இவ்வூரின் முன்னைப்பெயர் சதுர் வேதி மங்கலம். நாயக்கர்கள் காலத்தில் கூத்தியார் குண்டு என மாறியது.

திருமலை நாயக்கரின் முதல் அமைச்சரான தளவாய் இராமப்பய்யர் இவ்வூரில் தான் பிறந்தார். இவர் கட்டிய சிவன் கோயில் இப்பகுதியில் உள்ளது. மைசூர் மன்னரோடும் சேதுபதி மன்ன ரோடும் திருமலை நாயக்கருக்காகப் போரிட்டார். இவரது வீரத்தைப் பாராட்டிப் பாடப்பட்ட நூல் இராமப்பய்யர் அம்மானை என்பதாகும். இவ்வூரில் அகத்தியமுனிவர் மணலால் வடித்த விநாயகர் கோயிலும் பெரிய கண்மாயும் உள்ளன. நெல் கரும்பு இவ்வூரில் விளைந்து மதுரையின் பசியைத் தீர்க்கின்றன.

அரிட்டாபட்டி:

மேலூர் அழகர்கோயில் இடையே உள்ளது பெருமலை எனும் குடைவரைக் கோயில்மலை. இங்கே கிடைத்த “தமிழ் வரிவடிவில் அமைந்த கி.மு. 3ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் ஆதியில் தமிழ்மொழி எவ்வாறு வரிவடிவம் கொண்டிருந்தது என்று தெரிகிறது. இங்கு பல மலைக்குன்றுகள் உள்ளன. கிழக்கே இடைச்சி மண்டபம் குடை வரை, கருவறையில் லிங்கமும் நந்தியும், இளமை நாயகி அம்மனும் அமைந்துள்ளன. நடுவயலில் ஒரே கல்லால் ஆன தேர் போன்ற அழகிய பீடமும் உள்ளது.

அரிட்டர் என்ற புத்த பிட்சு வாழ்ந்ததால் இவ்வூர் அவராலேயே வழங்கப்படுகிறது.

செக்கானூரணி

இவ்வூர் பெயர் செக்கனூர் என்பதே மாறி செக்கான் ஊரணியானது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி நடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு விளக்கெரிக்க இலுப்பை எண்ணெய் இங்கிருந்து தான் சென்றது.

இந்த எண்ணெய் ஆட்ட 601 இலுப்பை மரங்கள் இவ்வூரில் நடப்பட்டன. இலுப்பை கொட்டைகள் பொறுக்கவும், எண்ணெய் ஆட்டவும் மானியங்கள் விடப்பட்டன. இங்கு ஆட்டப்பட்ட செக்கு மதுரைஆடிவீதி வன்னிமரத்தடி விநாயகர் சன்னதி எதிரில் வைக்கப்பட்டுள்ளது என்பது செய்தி, வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி இவ்வூரில் விளையும் பயிர்களாகும்.

பேரையூர்

தெலுங்கு தொட்டிய நாயக்கர் மரபின் வழி வந்தவர்கள் ஜமீன்தார்களாக அப்பகுதியை ஆண்டு வந்தனர்- இந்த ஜமீன்தார்களில் ஒருவரின் பெயரில் தும்பிச்சி நாகையாபுரம் என்று இவ்வூரின் பெயர் விளங்கியது.

ஆனால் ஜமீனின் குடி படைகளான மக்கள் ஜமீன்தாரைப் பெயர் சொல்லி அழைப்பதுபோல் இப்பெயர் இருப்பதாகக் கருதினர். எனவே இவ் வூரின் பெயரைச் சொல்லும் போது ஜமீன்தாரின் “பெயரே ஊர்” என்று கூற நாளடைவில் பெயரே ஊர் என்பது பேரையூர் என்று மருவியதாகக் கூறு கின்றனர்.

கூ.கல்லுப்பட்டி சாலையில் வடமேற்கே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள இவ்வூரில் வேப்பமரங்கள் இருப்பதால் வேப்பெண்ணெய் பிழிவது, வேப்பம் புண்ணாக்கு தயாரிப்பது என வேம்பு சார்ந்த தொழில்கள் இருப்பது காணலாம்.

வேப்பமூடு என்ற ஒரு இடம் திருமங்கலம் அருகே உள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் ஆயிரம் வேப்பமரங்கள் உள்ள இவ்விடத்தில் திருக்குறளின் மீது பற்றுடைய ஆர்வலர் ஒருவர் ஆண்டுதோறும் சனவரி 26 ஆம் நாள் மாநிலம் தழுவிய அளவில் கருத்தரங்கு நடத்தி நூல்களை வெளியிடுவது என்பது சிறப்பான செய்தியாகும்.

தேனூர்:

மதுரையின் வடமேற்கே உள்ள தேனூர் கிராமம் பாண்டியர் காலந்தொட்டுப் பழம் புகழ் மிக்க ஊராகும். வைகையின் கரையில் உள்ள இவ்வூரில் நெல், தென்னை, கரும்பு, பயிர்கள் மிகுந்த அளவில் விளைந்து மதுரைக்கு அனுப்பப் படுகின்றன. செங்கல் சூளை இவ்வூருக்கு வருவாய் ஈட்டித்தருகிறது.

பாய் முடைதல் இவ்வூரின் சிறப்பான பெருந் தொழிலாகும். இஸ்லாம் மதத்தவர்கள் இப்பாய் முடையும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வெளி யிடங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எலி, பெருச்சாளி கடித்தால் இவ்வூரில் மந்திரிக்கப் படுகிறது என்பதால் கடிபட்டவர்கள் நிறைய வருகின்றனர்.

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகள் அழகர்கோயில் சுந்தரராசப் பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு இவ்வூர் ஆற்றில்தான் இறங்கி மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்து வந்தார்.

பின்னர் தான் இத்திருவிழா மதுரைக்கு மாற்றப் பட்டது. இஸ்லாமியப் படை எடுப்பின்போது பாதிக்கப்பட்ட ஊர்களில் இவ்வூரும் இவ்வூரின் கண் உள்ள சிவன் கோயிலும் ஒன்று.

மதுரைக்கு அருகில் உள்ள இவ்வூரில் புகை பிடித்தல், புகையிலை, மது அருந்துதல் ஆகிய செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. மீறு வோர்க்கு இவ்வூரில் ஊர்ச்சபை கூடி தண்டனை யாக அபராதம் விதித்தல் இப்போதும் தொடர் கிறது. இவ்வூர்க்கடைகளும் சிகரெட், பீடி, மதுபானங்கள் விற்பதில்லை. டாஸ்மாக் வாடை படாத கிராமம் தேனூர்.

உசிலம்பட்டி

மதுரைக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரில் கள்ளர் இனமக்கள், நாடார்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். செட்டியார், அரிஜனங்கள் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.

சிகைக்காய்க்குப் பதிலாக ஆதியில் மக்கள் உசிலை எனும் மரத்தின் இலைகளைப் பொடி செய்தே தலைக்குக் குளித்து வந்தனர். இந்த உசிலை மரங்கள் இப்பகுதியில் நிறைய இருப்பதால் இப்பகுதிக்கு உசிலம்பட்டி எனப் பெயர் வந்தது.

இவ்வூரில் பிஸ்கட், ரொட்டிகள் தயாரிப்புக் கேற்ற சூழ்நிலையும் பொருள் விளைச்சலும் உள்ளதால் இத்தொழில்கள் இங்கு அதிகம். சங்க காலத்திலிருந்து பழமை மாறாதது இவ்வூர். ஆங்கிலேயர் காலத்தில் கைரேகைச் சட்டம், குற்றப்பரம்பரைச்சட்டம் இவைகளை எதிர்த்து இப்பகுதி கள்ளர் மரபினர் நடத்திய பெருங்காம நல்லூர் போராட்டம் பிரசித்தி பெற்றதாகும். இவ்வூரில் நினைவுச் சின்னமும் இது தொடர்பாக உள்ளது. ஆண்டிபட்டி கணவாய் உசிலம்பட்டியின் மேற்கு எல்லையாகும்.

ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த சிலர் மரபுவழிப் பழக்க வழக்கங்களை இவ்வூரில் ஆய்வு செய்த போது இவ்வூரில் உள்ள சில மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தங்களோடு ஒத்துப் போனதாக எழுதி உள்ளனர்.

மதுரையின் அன்றாட வாழ்விற்கு அடிப் படையாகத் தேவைப்படும் பொருட்கள் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து தான் வருகின்றன.

சோழ வந்தான்

வெற்றிலை, வாழை, வெள்ளை மிளகாய் மிகவும் புகழ்பெற்றவை. கும்பகோணம் வெற்றிலைக்கு ஈடாக சோழவந்தான் வெற்றிலை புகழ்ந்து பேசப் படுகிறது. மதுரையின் வெற்றிலை புகழ்ந்து பேசப் படுகிறது. மதுரையின் மணவிழாக்களில் இவ் வூரின் ‘வெற்றிலை பயன்பாடு அதிகம்’ பழம் பெரும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் இவ்வூரின் மைந்தராவார்.

அழகர் கோயில்

தாகத்தோடு மலைப்பாதையில் நடந்துவந்த ஒளவையாரின் தாகந்தணித்தது அழகர் மலை நாவல் பழங்கள்தான். சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டபடியே முருகன் நாவல் மரத்தை உதிர்த்து நின்றது அழகர் கோயில் மலைதான்.

அழகர் கோயில் பகுதிகளில் நாவல், மாம் பழம், ஊறுகாய்க்குப் பயன்படும் (மாவடு) மாம் பிஞ்சுகள், நெல்லிக்காய், அருநெல்லிக்கனி அதிகம் விளைகின்றன. இவை மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் விற்பனையாகின்றன. இதேபோல சிறுமலை என்னும் அழகர் மலைத் தொடரில் ஒன்றான சிறுமலையில் மலை வாழைப்பழம் புகழ்பெற்றதாகும். இம்மாதிரி மலைப்பகுதிகளில் பதநீர், நுங்குகள் அதிகம் பெறப்பட்டு நகர்ப்புற மதுரைக்கு வருகின்றன. கொடைக்கானல் கேரட், பீன்ஸ், பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் வாடிப்பட்டி வழியே மதுரை வருகின்றன.

திருப்பரங்குன்றம், வரிச்சியூர், காரியாபட்டி மற்றும் செக்கானூரணிப் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளரிக்காய், கத்தரி, வெண்டைக்காய்கள். சோளம், கம்பு, செல்லம்பட்டி, கோவிலாங்குளம் விக்கிரமங்கலம், திடியன் பகுதிகளிலிருந்து வரும் பருத்தி, கரும்பு, கேப்பைப் பனங்கிழங்குகள் அதிகம் மதுரை காய்கறி அங்காடிகளில் விற்பனையா கின்றன.

மதுரை மல்லிகை உலகப்புகழ் பெற்றது. மண் சார்ந்த குறியீடு பெற்றது. சிங்கப்பூர், இலங்கை நாடுகளுக்குத் தினம்தோறும் விமானமேறி விற்பனைக்குச் செல்பவை. இவைகள் கப்பலூர், வலையங்குளம், பள்ளபட்டி, நிலக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் விளைந்து மதுரைக்கு வருகின்றன.

எண்ணெய் வகைகள், புண்ணாக்கு, துவரை, எள், உளுந்து போன்றவை விருதுநகர், அருப்புக் கோட்டை பகுதிகளில் விளைந்து மதுரைக்கு வருகின்றன. தட்டைப்பயறு, மொச்சை போன்றவை களும் இப்படியே.

மதுரை அசைவப்பிரியர்களுக்கான இறைச்சி, ஆடு, மாடுகள் கிராமங்களிலிருந்தே வருகின்றன.

மேலூர்

மதுரை மாவட்டத்தில் பெரிய கிராமம். அம்பலகாரர் அதிகமுள்ள வெள்ளலூர் நாடு என்பது இப்பகுதியில் உள்ளது. வீரபாண்டியக் கட்டபொம்மனை புதுக்கோட்டையில் கைது செய்தபோது மேலூர் நீதிமன்றத்தில்தான் “ஆஜர் படுத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்” என ஆவணம் உள்ளது. அம்பலகாரர் இனம் அதிகமாக வாழும் கிராமிய மணம் மாறாத மேலூரைச் சுற்றி விளையும் மாம்பழம், நெல்லிக் காய், அருநெல்லிக்காய், வெண்டைக்காய், தண்டுக் கீரை, வல்லாரக்கீரை வகைகள் போன்றவைகள் மதுரை மார்க்கெட்டை வளப்படுத்துகின்றன. இலந்தைப் பழம், அத்திப்பழம், களாக்காய் போன்ற வையும் வருகின்றன.

அவனியாபுரம்

மதுரையுடன் இணைந்து தெற்கே பேரூராகக் காட்சிதரும் அவனியாபுரத்தில் தான் கழிவுநீரில் கால்நடைகளுக்கான புற்கள் விளைகின்றன. கினியா புல் இங்கு அதிகம் விளைகிறது.

மதுரை காரியாபட்டி நெடுஞ்சாலையில் இரு புறமும் மதுரை மக்களுக்கு சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் உடலில் சேர்க்கும் கீரைப் பயிர்கள் நூறு ஏக்கர்களுக்குமேல் விளைவிக்கப் பட்டு வருகின்றன.

அகத்தி, அரைக்கீரை, சிறுகீரை, முடக்கற்றான் கீரை, பாலாக்கீரை, முள்ளு முருங்கை, வெந்தயக் கீரை, மணத்தக்காளி, வல்லாரைக்கீரை, பசலிக் கீரைகள் இங்கு விளைந்து வியாபாரிகள் மூலம் மதுரைக் கீரை மார்க்கெட்டை வளப்படுத்து கின்றன.

பாலமேடு:

அலங்காநல்லூரை அடுத்த பெரிய கிராமம் பாலமேடு. உலக சுற்றுலாத் தலங்களில் பாலமேடு ஜல்லிக்கட்டு விளையாட்டும் காணவேண்டிய வையாகக் கூறப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டுகளைக் காணவரும் வெளிநாட்டவர் இவ்வூர் மக்களின் விருந்தோம்பலை பாராட்டுகின்றனர்.

மதுரை மக்களின் சமையலில் அன்றாடம் இடம்பெறும் புளி இவ்வூரில் மிகுந்த அளவில் கிடைக்கிறது. சீசன் காலத்தில் மதுரையிலிருந்து மக்கள் திரளாகச் சென்று ஓராண்டுக்கு வாங்கி வீட்டிற்கு வந்து மண் பானைகளில் பாதுகாக் கின்றனர். சொந்தமாகப் புளிய மரங்களை வைத் திருப்பவர்கள் வீட்டு வாசலில் வைத்து விற்கின்றனர்.

பாலமேடு பால் பண்ணைகள் மிகவும் பெயர் பெற்றவை. வேன்களிலும் சைக்கிள் கேன்களிலும் கட்டி மதுரைக்கு வருகின்றனர். நாடார்கள் சொந்தமாக பத்திரகாளி பால் பண்ணை நடத்து கின்றனர். பாலமேடு பால்கோவா மதுரையில் கிடைக்கும்.

இவ்வூரிலும், சுற்றியுள்ள வலையங்குளம் போன்ற கிராமங்களிலும் முருங்கை மரங்கள் பெரும் அளவில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படுகின்றன. வேளாண் துறையினர் இந்த விளைச்சலுக்கு இப்பகுதி மண்வளமே காரணம் என ஆய்வுகள் நடத்தியுள்ளனர். இங்கு விளையும் முருங்கைக்காய்கள் மிகவும் ருசியாக இருப்பதால் அதிகம் விற்கப்படுகின்றன. முருங்கை தொடர் பான தொழிற்சாலை வேண்டுமென்பது இவ்வூரின் ஆசை.

மதுரையின் வளம்:

மதுரை நகர் என்பது நான்கு வெளிவீதி களுக்குள் அடங்கிய ஒரு சதுரமான வடிவ நகரம். வயல்களெல்லாம் 20 கி.மீ. சுற்றளவிற்கு வீட்டு மனைகளாகி மக்கள் குடியேறி மாநகராட்சியாகி விட்டதால் அன்றாட உணவுப் பொருட்களுக்குக் கூட அண்டையிலுள்ள கிராமங்களை எதிர்பார்க் கின்றனர்.

மாறாக எவர்சில்வர் பட்டறைகள், அப்பளம் இடும் கைத்தொழில்கள் சுற்றிலும் உள்ளன. பி.சி. பெருங்காய, உற்பத்தி, சேற்றுப்புண்களைக் குணப் படுத்தும் சைபால் பூசுமருந்து, ஜீரணசக்தி உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் மருந்து, இந்தியாவிலும் இலங் கையிலும் விற்பனை என்று கூறப்படும் கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி போன்றவைகள் மதுரையில் உற்பத்தியாகி கிராமங்களில் பயன் படுத்தப்படுகின்றன. தலைவலி போக்கும் என்று கூறப்படும் ஆர்.எஸ். பதி தைலம் இவைகளெல்லாம் கிராமங்களுக்கு மதுரை வழங்கும் கைம்மாறு களாகும்.

பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் படிப்புக்களை மதுரைக்கு வந்துதான் கிராமஇளைஞர் பயிலு கின்றனர்.

மதுரையில் நெய்து தரப்படும் வேட்டி, கைத் தறித் துண்டுகள், சுங்கடிச்சேலைகள், கிராம மக்களின் புத்தாடைகளாக மானம் காக்கின்றன. செல்லூர் கீழவாசல், கிருஷ்ணாபுரம் மகால் பகுதி களில் நெசவுத் தொழில் சிறந்து விளங்குகின்றன. மதுரை சுங்கடிச் சேலைகள் மண் சார் குறியீடு பெற்று வெளிநாட்டுப் பெண்களாலும் வாங்கப் படுகின்றன.

மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல் களும், சௌராஷ்டிர மக்களின் புளியோதரை, கோனார் மெஸ்களின் ருசியான சிக்கன் கறிகள் மதுரையின் உணவுக்கலாச்சாரத்திற்கு அடையாளமாகும். முன்பு போல பிராமணாள் சைவ ஹோட்டல், சைவாள் கிளப்புக் கடைகள் இப் போது காணப்படுவதில்லை. தேநீர்க்கடை ‘முட்டைக் கோஸ்’ மதுரையின் சிறப்பு ஆகும்.

மாறாக மண்பானை சமையல், கொத்து புரோட்டா, செட்டி நாட்டுச் சிக்கன் குழம்புகள் மண்ணின் வாசனையைப் பரப்புகின்றன. சனி, ஞாயிறுகளில் கிராமத் தம்பதிகள் சாப்பிட மதுரைக்கு வருகின்றனர்.

மதுரையில் தயாராகும் பிளாஸ்டிக் குடங்கள் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் கொள்முதலில் முக்கிய இடம் வகிக்கின்றன. கேரள மக்கள் இக் குடங்களை வாங்குவதற்காகவே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை பிளாஸ்டிக் குடங்கள், கேன்கள் வடமாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.

நெல்லும் கரும்பும் காய்கறிகளும் புஞ்சைப் பொருட்களும் கொடுத்து கிராமங்கள் மதுரையை வளப்படுத்துகின்றன என்றால் கைமாறாக மதுரை சில்வர் பட்டறைகள், பிளாஸ்டிக் தயாரிப்புகள், அப்பள தொழில்களில் கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிக் களிக்கிறது. மதுரை மெடிக்கல், ஜவுளிக் கடைகளில் கிராம இளைஞர்களும் பெண்களுமே அதிக அளவில் பணிபுரிகின்றனர். விற்பனைப் பிரதிநிதிகளில் கிராமப்பட்டதாரிகள் ஏராளம்.

கிராமப்புறத் திருமணங்களுக்கு மதுரைப் பொற்கொல்லர்களே தாலி தயாரித்துக் கொடுக் கின்றனர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்; மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலோர் கிராமத்தவரே!

Pin It