பவுத்தம் - ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்  - 6

 தன் 29ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சித்தார்த்த புத்தர், அடுத்த 7 ஆண்டுகள் உலகியல், மக்களின் வாழ்வியல் உண்மைகளை அறிவதற்காகச் சுற்றித்திரிந்தார். சில சமயம் பெரியவர்களையும் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

37ஆம் வயது தொடக்கம், அவர் மரணமடைந்த 80ஆம் வயது வரையிலான 43 ஆண்டுகள், ஆரியத்திற்கு எதிரான அவரின் கருத்தியல் சமூகப் போராட்டமே பவுத்தமாக உருப்பெறுகிறது.

புத்தர் தன் கருத்தியல் கோட்பாடுகளைப் பவுத்தம் என்று சொன்னதில்லை. “தம்மம்” என்றே பேசி இருக்கிறார். இங்கே புரிதலுக்காகப் “பவுத்தம்” என்றே தொடர்ந்து பேசுவோம்.

புத்தர் நான்கு சிந்தனைகளில் இருந்து பவுத்தத்தை உருவாக்குகிறார். இதை நான்கு உண்மைகள் என்று பவுத்தர்கள் சொல்வார்கள். அவை:

1. மக்கள் வாழ்வில் துன்பம் இருக்கிறது

2. அத்துன்பம் தோன்றக் காரணம் இருக்கிறது

3. அதை நீக்க வழியும் இருக்கிறது

4. துன்பத்தை நீக்கி விடுதலை பெறவேண்டும் மக்கள்

இந்த நான்கும் பவுத்தத்தின் அடிப்படை. இதில் இருந்துதான் பவுத்தம் உருவாகிறது.

இந்நான்கு உண்மைகளில் முதல் உண்மை பற்றிய விளக்கத்தை வினயபிடகத்தின் 5 பிரிவுகளில் ஒன்றான மகாவக்கம் இப்படித் தருகிறது, “முதலாவது உண்மை, துன்பம். பிறப்பு துன்பம், முதுமை துன்பம், நோய் துன்பம், மரணம் துன்பம், அன்பில்லாதவர்களின் தொடர்பும், அன்புள்ளவர்களின் பிரிவும், விரும்பிய பொருள் கிடைக்காமல் போவதும் எல்லாம் துன்பமயமானது”.

இத்துன்பங்களின் தோற்றம் ஆசை என்றும், ஆசையை விட்டொழித்தலே துன்பவிடுதலைக் கான வழி என்றும், இறுதியில் மறுபிறப்பு எடுக்காமல் இருப்பதே துன்பத்தை அழிப்பதற்கான வழி என்றும் பவுத்த நூல்கள் சொல்கின்றன.

இந்த விளக்கம் ஏறத்தாழ ஒரு துன்பமயமான கோட்பாடாக மனிதனை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் கோட்பாடாகக் கொண்டு நிறுத்துகிறது.

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் என்ன சொல்கிறார்? அவர் வாழ்மொழியாகவே கேட்போம், “இவைகள் புத்தரின் உண்மையான போதனைகளின் பகுதிகளாகவா அமைந்துள்ளன. இந்து சமய மரபு முறை பவுத்தத்தின் ஆணிவேரையே அறுத்து எறிவதாக உள்ளது. வாழ்க்கை துன்பமாயின் மரணம் துன்பமாயின் மறுபிறப்பும் துன்பமாயின் அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்கு மதமோ, தத்துவமோ ஒருக்காலும் உதவாது. துன்பத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியும் இல்லையயன்றால், பின் மதம் என்ன செய்ய முடியும்? பிறப்பிலேயே துன்பம், அது எப்போதும் இருக்கும் என்றால் அத்தகைய துன்பத்தில் இருந்து மனிதன் விடுபட புத்தர் என்ன செய்ய முடியும்? பவுத்தர் அல்லாதவர்கள் பவுத்தத்தை ஏற்றுக்கொள்ள இந்த நான்கு உண்மைகளும் பெரும் தடையாக இருக்கின்றன. 

ஏனென்றால் இந்த நான்கு உண்மைகள் மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாய் இருக்கின்றன. இந்த நான்கு உண்மைகளின் விளக்கம் புத்தரின் போதனைகளை விரக்திப் போதனைகளாக ஆக்கிவிடுகின்றன. இவைகள் ஆதியில் புத்தரால் போதிக்கப்பட்ட உண்மையான போதனைகளின் பகுதிகளா அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கித் திணிக்கப் பட்டவைகளா?”

டாக்டர் அம்பேத்கரின் இந்த விளக்கமும் வினாக்களும் சிந்தனைக்குரியன. பவுத்தத்தின் அடிப்படையான நான்கு கோட்பாடுகளை ஆரியம் சிதைக்க முற்பட்டிருப்பதை அம்பேத்கரின் விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

புத்தரின் பேச்சுகள், உரைகள், விவாதங்கள், அவரின் செயல்பாடுகள் இவைபற்றி எல்லாம் புத்தரோ அன்றி அவரின் சமகாலத்தவர்களோ யாரும் எழுதிவைக்கவில்லை.

புத்தர் மறைந்து ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவைகள் “திரிபிடகம்” என்ற பெயரில் நூல்களாக எழுதப்பெற்றன. இந்த இடைப்பட்டக் காலங்களில் பவுத்தத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆரியவாத பவுத்தக் குழுக்கள், புத்தரின் போதனைகளை, தத்துவங்களைச் சிதைத்துத், திருத்தி, மாற்றிச் சேர்த்திருக்க அல்லது திணித்திருக்கப் பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

அதனால்தான் அம்பேத்கர் இவை புத்தரின் உண்மையான போதனைகளா அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கித் திணிக்கப்பட்டவையா என வினவுகிறார்.

எப்படியோ, பவுத்தத்தின் நான்கு அடிப்படை உண்மைகளின் சரியான விளக்கத்தை நாம் தேடிப்பிடித்தாக வேண்டும்.

புத்தர் தன் முதற் பேருரையை வாரணாசியில் நிகழ்த்தினார். இதைக் காசிப்பேருரை என்பார்கள். இந்த உரையின் போதுதான் முதன் முதலாக, மக்களிடம் துன்பம் இருக்கிறது. அத்துன்பம் தோன்றக் காரணம் இருக்கிறது. அத்துன்பத்தை நீக்க வழி இருக்கிறது. அதை நீக்கினால் துன்பத்தில் இருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள் என்று கூறினார் புத்தர்.

இங்கே “துன்பம்” என்று புத்தர் எதைச் சொன்னார் என்பது முக்கியமான கேள்வி.

மக்களிடம் துன்பம் இருக்கிறது - இது புத்தர் சொன்னது.

இப்பொழுது துன்பம் என்ற சொல்லை மட்டும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் வர்ணம் என்ற சொல்லைப் போடுவோம்.

மக்களிடம் வர்ணம் இருக்கிறது

வர்ணம் என்ற சொல்லை எடுத்துவிட்டு சாதி என்ற சொல்லைப் போடுவோம்.

மக்களிடம் சாதி இருக்கிறது.

சாதி என்ற சொல்லை எடுத்துவிட்டு வர்க்கம் என்ற சொல்லைப் போடுவோம்

மக்களிடம் வர்க்கம் இருக்கிறது.

வர்க்கம் என்ற சொல்லை எடுத்துவிட்டுச் சுரண்டல் என்ற சொல்லைப் போடுவோம்

மக்களிடம் சுரண்டல் இருக்கிறது.

சுரண்டல் என்ற சொல்லை எடுத்துவிட்டு மதம் என்ற சொல்லைப் போடுவோம்.

மக்களிடம் மதம் இருக்கிறது.

துன்பம் என்ற ஒரு சொல்லுக்குள் எத்தனை பொருள்கள் பொதிந்துள்ளன என்பதை புத்தரின் பார்வையில் பார்த்தால் மட்டுமே அறிய முடியும்.

ஆரியர்களின் முதல் நூலான ரிக்வேதம் திராவிடர்களைச் சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வர்ணங்களால் பிரித்துப் போட்டது.

இவ்வர்ணங்களின் படிநிலையில் ஆரியர் மிக உயர்ந்தவர்கள், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமத்துவமற்ற ஓர் அடிமைச் சமூகத்தை உருவாக்கி விட்டது. அதனால் வர்ணம் மக்களின் துன்பம் என்றார் புத்தர்.

வர்ணத்தின் வளர்ச்சிப் பிரிவுகளால் சாதிகள் தோன்றின. கீழ்ச் சாதி, மேல் சாதி என்றும், தீண்டாமை என்றும் சாதியம் ஒரு சாதிய அடிமைமுறையை உருவாக்கிவிட்டது. அதனால் சாதி மக்களின் துன்பம் என்றார் புத்தர்.

உடைமையில்லா மக்கள் உழைக்கும் வர்க்கம். பிறர் உழைப்பில் வாழும் உடைமையாளர்கள் உழைக்கா வர்க்கம். பாட்டாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் இவை இரண்டும் இந்தியாவில் சாதியத்துள் அடங்கிக் கிடக்கிறது. அதனால் வர்க்கம் மக்களின் துன்பம், சுரண்டல் மக்களின் துன்பம் என்றார் புத்தர்.

ஆரிய மதம் ஒழுக்கக் கேடானது, மக்களின் சமத்துவத்திற்கு எதிரானது, அடிமைத்தனத்தை உருவாக்கும் நிறுவனமே மதம் என்பதனால் தான் மதம் மக்களின் துன்பம் என்றார் புத்தர்.

இவையல்லாமல் புத்தரின் காலத்தில் வடகிழக்கு இந்தியாவில் இனக்குழுக்கள் கொடூரமாக அழிக்கப்பட்டன. அங்கே மக்கள் வதைபட்டு மாண்டார்கள். கொடுமையான அடக்கு முறைகள் காணப்பட்டன. ஆட்சியாளர் களின் பேராசை, வெறித்தனமான காம இச்சை, பொதுச் சொத்துக்களைச் சூறையாடல், மக்கள் மீது வரிமேல் வரிகள், ஊதாரித்தனமான வாழ்க்கை, அடிமைத்தனம் இவைபோன்ற ஆட்சியாளர்கள், அரசர்களின் பேராசைச் செயல்களால் மக்கள் அடைந்த துன்பங்களையும் புத்தர் பார்த்தார்.

மக்கள் அடையும் இந்தத் துன்பங்களுக் கெல்லாம் எது காரணம்? எது மூலம்?

வர்ண பேதத்தை ரிக்வேத நூலின் மூலம் உருவாக்கியவர்கள் - ஆரியர்கள்.

சாதியத்தை உருவாக்கியவர்கள் - ஆரியர்கள்.

மதத்தை உருவாக்கியவர்கள் - ஆரியர்கள்

வர்ணம் - சாதி - வர்க்கச் சுரண்டல், மதம் இவைகளை மக்களின் வாழ்வியல் துன்பமயமாக ஆக்கியது ஆரியம். அரசர்களையும், ஆட்சிகளையும் தம் கைப்பாவையாக மாற்றி மக்களை வாட்டி வதைத்தது ஆரியம். ஆரியத்தின் கூறுகள் மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தின.

ஆரியம் மக்களுக்குத் துன்பமாகும்.

ஆரியக் கருத்தியல் அதன் தோற்றமாகும்.

ஆரிய எதிர்ப்பு துன்பம் நீங்க வழியாகும்.

ஆரியம் வீழ்ந்தால் துன்பம் வீழும்.

- இதுவே சமத்துவத்திற்கான வழி!

காசிப் பேருரையின் நான்கு உண்மைகள் குறித்த புத்தரின் முழக்கம், ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் - பவுத்தம், என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டது!

- மீண்டும் சந்திப்போம்

Pin It